ஸ்பெஷல்
FA பக்கங்கள்
Published:Updated:

மியாவ் மியாவ் செல்லக்குட்டி

முனைவர் ஆ.குமரவேள் ஓவியம் பாலு படங்கள் : ஓவியா

மியாவ் மியாவ் செல்லக்குட்டி

மியாவ்... மியாவ்... என்றதும் உங்களுக்கு ஞாபகத்துக்கு வர்றது... குட்டிப் பூனையா... பூனைக் குட்டியா? இரண்டுக்கும் என்ன வித்தியாசம்னு கொஞ்சம் யோசியுங்களேன்? விடையைக் கடைசியில் சொல்கிறேன். இப்போ, பூனைகள் பற்றி கொஞ்சம் தெரிஞ்சுக்கலாம்!

மியாவ் மியாவ் செல்லக்குட்டி

உயர் ஜாதி நாய்கள் மாதிரி, தமிழ்நாட்டில் நிறையப் பேர் உயர் ஜாதிப் பூனைகளை வளர்க்கிறாங்க. அப்படி, நான்கு வகைப் பூனைகள் இங்கே இருக்கு. ஒண்ணு, அமெரிக்கன் ஷார்ட் ஹேர் (American Short Hair). . குட்டையான முடிக் கற்றைகள், க்யூட்டான சின்ன உடம்பு கொண்டது. இது, பழகியவர்களோடு நல்லா விளையாடும். அடுத்தது, பர்மீஸ் (Burmese). ரொம்பக் கம்பீரமான பூனை. கூட்டத்தில் எங்கே இருந்தாலும் தனியாகத் தெரியும். மற்ற வகைப் பூனைகளைப் பார்த்தால், மிரட்டும் தாதா இது. மூணாவது, கலிஃபோர்னியா ஸ்பேங்கில்டு (California Spangled).வீரமான பூனை இது. வேட்டையாடுவதில் கிட்டத்தட்ட புலி மாதிரி. நான்காவது, பெர்சியன் வகைப் பூனைகள். இதன் கண்களில் எப்பவும் நீர் வடிஞ்சிக்கிட்டே இருக்கும். வியாதியோனு நினைக்க வேண்டாம். கண்ணுக்குள் 'லேக்ரிமல் க்ளேண்டு’ (Lacrimal Gland) என்ற திரவம் சுரக்கிறதுதான் கண்ணீருக்குக் காரணம். ஏன்னா, பெர்சியாவில் புழுதிப் புயல் அடிச்சுக்கிட்டே இருக்கும். அதனால், கண்களைச் சுத்தமா வெச்சுக்கிறதுக்கு இயற்கை உருவாக்கின விஷயம். இது இல்லாமல், நாட்டுப் பூனைகளும் தமிழ்நாட்டில் நிறைய இருக்கு.

தாய்ப் பூனை, குட்டி மீது ரொம்பப் பாசமா இருக்கும். எங்கே போனாலும் குட்டியை, அதன் பிடரி மேல வாயை வெச்சுக் கவ்விட்டுப் போகும். குட்டி, தானாக இரையைத் தேடும் வரைக்கும் தாய்ப் பூனை இப்படித்தான் செய்யும்.

மியாவ் மியாவ் செல்லக்குட்டி

நம்மில் பலர், வாட்டர் பாக்கெட்டை ஓப்பன் பண்றதுக்கு கோரைப் பல்லைப் பயன்படுத்துவோம். இந்தக் கோரைப் பல்லு, நாயைவிட, பூனைக்கு நீளம். இரையின் உடம்பைக் குத்திக் கிழிக்கிறதில் நாயைவிட, பூனை வேகமாக இருக்கும்.

மியாவ் மியாவ் செல்லக்குட்டி

நாய் மாதிரியே பூனையும் சத்தம் இல்லாமல் நடக்கும். பூனை அப்படி நடக்கிறதுக்குக் காரணம், அதனோட பாதத்தில் குஷன் இருக்கு. சத்தம் இல்லாமல் எலியைப் பிடிக்க, இயற்கை தந்த வரம். யானைக்கும் அடி சறுக்கும். ஆனால், பூனைக்கு இந்த டிஜிட்டல் குஷன் (Digital Cushion) காரணமாக அடி சறுக்காது. இந்த விஷயத்தில் யானையைவிட பூனை கெத்துதான்.

மியாவ் மியாவ் செல்லக்குட்டி

எல்லா வகைப் பூனைகளின் கண்களிலும் டபீட்டம் லூசிடம் (Tapetum Lucidum) என்ற பகுதி இருக்கு. பூனைக்கு ராத்திரியில் கண்கள் நல்லாத் தெரியும். காரணம், இந்த டபீடம் லூசிடம்தான். ராத்திரி நேரத்தில் காரிலோ, பைக்கிலோ போகும்போது, சாலையில் அங்கங்கே வட்ட வட்டமா மஞ்சளாக இருக்கும். வாகனத்தின் வெளிச்சம் பட்டதும் அந்த மஞ்சள் வட்டம் மின்னும். வண்டி ஓட்டுறவங்களுக்கு சாலையின் அமைப்பைத் தெரிஞ்சிக்க அது உதவியா இருக்கும். இந்த மஞ்சள் வட்டத்தை 'கேட்ஸ் ஐ’ எனச் சொல்லுவாங்க. அந்த மாதிரிதான் பூனையின் கண்கள் ஒளிரும்.

மியாவ் மியாவ் செல்லக்குட்டி

பூனையின் நகம் நம் மீது லேசாகப் பட்டாலே ரத்தம் வந்துவிடும். ஆனால், அதன் விரலைக் கவனிச்சீங்கன்னா மொக்கையாக இருக்கும். ஆச்சர்யமாக இருக்கா? அது எப்படினா, பூனையோட நகங்கள் ரொம்பக் கூர்மையா இருக்கும். அதை மடக்கி, விரல் பகுதியில் மறைவாக வெச்சிருக்கும். தேவைப்படும்போது பட்டன் கத்தி (Button Knife) மாதிரி வெளியே நீட்டிச் சீண்டிடும்.

மியாவ் மியாவ் செல்லக்குட்டி

'ரேபிஸ்’ வியாதியைப் பற்றி உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். வெறிபிடிச்ச நாயின் கடி வாங்கின மனுஷங்களுக்கு இந்த நோய் வரும். இந்த ரேபிஸ் வியாதி, பூனைக் கடி வாங்கினவங்களுக்கும் வரும். ரொம்பப் பயப்பட வேண்டும். நாய் மாதிரி, பூனை எடுத்ததுமே கடிக்காது. முன்னங்கால்களால் அடிக்கவோ, பிராண்டவோ செய்யும். அதிசயமாகத்தான் கடிக்கும்.

மியாவ் மியாவ் செல்லக்குட்டி

நீங்க, கோழிக் கறி வாங்க அப்பாவோடு கடைக்குப் போய் இருப்பீங்க. அங்கே கோழியின் இறகு, தோல்களைச் சுத்தம் செய்துகொடுப்பாங்க. பூனைக்கும் கோழியைச் சாப்பிட ரொம்பப் புடிக்கும். ஆனால், அதுக்கு யார் சுத்தம் செய்து தருவாங்க? பூனையின் நாக்கில் 'ஃபிலிஃபோர்ம் பாபிலி’(Filoform Papillae)என்ற அமைப்பு இருக்கு. சின்னக் கத்தி மாதிரி இருக்கும். அதன் மூலம், கோழியின் உடம்பில் இருக்கிற இறகுகளைப் பிடுங்கி எடுத்துரும்.

பூனை குறுக்கேப்போனால் சகுனம் சரியில்லைனு சொல்லி, ரூட்டை மாத்திக்கிறாங்களே இது சரியா? இந்தப் பழக்கம் எப்படி வந்துச்சுனு சொன்னா ஆச்சர்யமா இருக்கும்.

மியாவ் மியாவ் செல்லக்குட்டி

அந்தக் காலத்துல, ஒரு நாட்டின் மீது இன்னொரு நாடு படையெடுத்து வரும். பொதுவாக, மக்கள் குடியிருக்கும் பகுதியில்தான் பூனைகள் இருக்கும். சாப்பாட்டுக்காகவும் அன்புக்காகவும் மனுஷங்களையே சுத்திச் சுத்தி வரும். பூனை குறுக்கே வந்துச்சுனா, அது ரெசிடென்ஷியல் ஏரியான்னு புரிஞ்சுக்கிட்டு, படைத் தளபதி தன் படைகளின் ரூட்டை மாத்திடுவார். எதிரி நாடாக இருந்தாலும் குடிமக்களைத் தொந்தரவு பண்றது பெரிய பாவம்னு நினைச்ச காலம் அது. அப்படி நல்லதுக்காகச் செய்த விஷயம்தான், இன்னிக்கு தப்பா அர்த்தம் பண்ணிட்டு இருக்காங்க. பாவம் பூனைகள்!

முதலில் கேட்ட கேள்விக்கான பதில் இதுதான். பூனைக்குட்டி - வயசுல சிறுசு. குட்டிப் பூனை சைஸ்ல சிறுசு. ஷ்ஷ்ஷ்... சரியான பூனைக் கடியா இருக்கா?