Published:Updated:

மை டியர் ஜீபா...

மை டியர் ஜீபா...

மை டியர் ஜீபா...

மை டியர் ஜீபா...

Published:Updated:
மை டியர் ஜீபா...

ஹாசிப்கான்

''ஹலோ ஜீபா... உலகில் அதிகமாக நெல் விளையும் இடம் எது?''  

- எஸ்.ரித்திகா, ருத்திரியம் பாளையம்.

''தென்கிழக்கு ஆசியாவின் காடுகளில் தோன்றியதுதான் Oryza Rufipogan  எனப்படும் காட்டு நெல். பிறகு, ஆசிய நெல் (Oryza sativa) ஆப்பிரிக்க நெல் (Oryza glaberimma)  என ஆதி மனிதர்களால் இரண்டு வகைகளாகப் பயிரிடப்பட்டன. ஆசியாவில், கி.மு.4500-ம் ஆண்டிலேயே நெல் பயிரிடப்பட்டதற்கான குறிப்புகள் உள்ளன. உலகம் முழுக்க பல நெல் வகைகள் தோன்றின. இந்தியாவில், பல வகை சத்தான நெல் உற்பத்தி செய்யப் பட்டன. காலப்போக்கில் அவற்றில் பல மறைந்துவிட்டன. இப்போது, உலக நெல் உற்பத்தியில் சீனா, முதல் இடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளது.''

''ஹலோ ஜீபா... முதன்முதலாக அனிமேஷனைக் கண்டுபிடித்தது யார்?''

 - ரா.வி.தரணி, சிங்காநல்லூர்.

''வேறுபட்ட பல படங்களை அடுத்தடுத்த காட்சிகளாக உருவாக்குவது, இயக்கமூட்டல் (Animation) எனப்படுகிறது. இது, அனிமேட்டோ என்ற லத்தீன் சொல்லில் இருந்து வந்தது. ஆரம்பத்தில் கைகளால் வரையப்பட்ட ஓவியங்கள் மூலம் அனிமேஷன் உருவாக்கப்பட்டது. திரைப்படத் துறையின் அபார தொழில்நுட்ப வளர்ச்சியால், அனிமேஷனில் பல முன்னேற்றம் உருவாகி இருக்கிறது. இதற்கெல்லாம் முன்னோடி, பிரான்ஸ் நாட்டின் சார்லஸ் எமிலி. இவர், 1877- ல் பிராக்ஸினோஸ்கோப் (Praxinoscope) என்ற கருவியைக் கண்டுபிடித்தார். இதில்,  புகைப்படச் சுருள்களைத் துளையிட்டுப் பொருத்தி, ஒன்றன் பின் ஒன்றாக வருவது போல சுற்றவிட்டார். அவை, எதிரே உள்ள திரையில் காட்சிகளாக நகர்ந்தன. Theatre Optique எனப்படும் திரைக்குப் பின்னால் இருந்து திரையிடும் கருவியைக் கண்டுபித்தவரும் இவரே. இதன் மூலம் 1892- ல், பாரிஸ் நகரின் ஒரு திரையரங்கில், 15 நிமிடங்கள் ஓடக்கூடிய உலகின் முதல் அனிமேஷன் திரைப்படத்தை வெளியிட்டார்'

மை டியர் ஜீபா...

'

''டியர் ஜீபா... இந்த உலகில் எத்தனை வகை எறும்புகள் உள்ளன?''

- மெஹ்னாஸ், கீழக்கரை.

''உலகம் முழுக்க 22 ஆயிரம் வகை எறும்புகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவை, வெப்பமண்டலப் பகுதிகளில்தான் அதிகம் காணப்படுகின்றன. பூச்சி வகைகளில் 130 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, எறும்புகள் தனி இனமாக உருவெடுத்தன. சமூக ஒழுக்கத்துடன் குழுவாகச் செயல்படும் உயிரினங்களில் மிகச் சிறந்த எடுத்துகாட்டு, எறும்புகள். இவை, தமக்குள் செய்திகளைப் பரிமாறிக்கொள்ளும் விதம், நமது அறிவியல் தொழில்நுட்பங்களையும் மிஞ்சும்''

''ஹலோ ஜீபா... மூச்சுத்திணறல் (Wheezing)  ஏன் ஏற்படுகிறது? அதைத் தடுப்பது எப்படி?''

- மு.கங்கா யமுனா, திண்டுக்கல்.

''ஆஸ்துமா என்கிற மூச்சுத்திணறலால் பாதிக்கப்படுபவர் களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. குறிப்பாக, குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். சுவாச உறுப்புகளில் ஏற்படும் தொற்றுநோய், புகைப்பிடித்தல், அதிகமாகக் கவலைப்படுவது மற்றும் உணர்ச்சிவசப்படுவது போன்றவை மூச்சுத்திணறலுக்குக் காரணம். இன்றைய துரித உணவுகளும் இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மூச்சுத்திணறல் பிரச்னை இருப்பவர்கள், நார்ச்சத்து மிக்க உணவுப் பொருள்களைச் சாப்பிட வேண்டும். பழங்கள், கீரைகள், காய்கறிகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். மூச்சுப் பயிற்சி, சில யோகாசனப் பயிற்சி ஆகியவையும் மூச்சுத்திணறலைக் கட்டுப்படுத்தும்.''

மை டியர் ஜீபா...

''டிவி-.யைப் பக்கத்தில் சென்றுதான் பார்க்கத் தோன்றுகிறது. அது ஏன் ஜீபா?''

  - த.ராகுல், திருச்சி.

''அதற்கு அகம், புறம் என இரண்டு வகைக் காரணங்கள் இருக்கலாம் ராகுல். அகம் என்றால், மனம் சம்பந்தப்பட்டது. உங்கள் கவனம் முழுக்க டிவி-.யில் வரும் நிகழ்ச்சியில் ஒன்றிவிடுகிறது. ஸ்பைடர்மேன், வில்லனைப் பிடிக்க பறந்து வந்தாலோ, டோனி பேட்டிங் செய்தாலோ, அடுத்து என்ன நடக்குமோ என்ற ஆர்வம் மிகுதியில், தொலைகாட்சிக்கு  அருகில் வந்துவிடுகிறீர்கள். புறம் என்றால், உடல் சம்பந்தப்பட்டது. நீங்களே உணராத அல்லது அலட்சியப்படுத்தும் உடல் குறைகள். ஸ்பைடர்மேன் என்ன பேசுகிறார் என்பது உங்களுக்குச் சரியாகக் கேட்டிருக்காது. ஸ்கோர் போர்டு தெளிவாகத் தெரியாது. அதனால், அருகில் சென்று பார்ப்பீர்கள். எப்படி இருந்தாலும் தொலைக்காட்சியை அருகில் பார்ப்பது தவறு. குறிப்பிட்ட இடைவெளியில்தான் பார்க்க வேண்டும். மனக் கட்டுப்பாடும் முக்கியம். டோனியே நேரில் வந்தாலும் தள்ளி நின்று பார்ப்போம் என நினையுங்கள். கண், காது பிரச்னை என்றால், பெற்றோரிடம் சொல்லி, மருத்துவரைப் பாருங்கள்.''

மை டியர் ஜீபா...

''ஹாய் ஜீபா... பிற விலங்கின் பாலைக் குடிக்கும் பழக்கம் மனிதனுக்கு எப்போது ஏற்பட்டது?''

- எம்.மகேஷ்குமார், விழுப்புரம்.

''கற்காலத்திலேயே, காட்டு விலங்குகளிடம் இருந்து பாலை எடுத்துப் பருகும் பழக்கம் மனிதனுக்கு இருந்திருக்கலாம். என்றாலும் விவசாயம் தோன்றிய பிறகுதான் இந்தப் பழக்கம் அதிகரித்தது. கி.மு.3000-ம் ஆண்டுகளில், தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த மக்கள், பிற விலங்குகளான மாடுகள், ஆடுகளின் பாலைப் பருகினார்கள். அங்கிருந்து இந்தப் பழக்கம் ஐரோப்பாவுக்குப் பரவியது. பிறகு, அரேபியா மற்றும் ஆப்பிரிக்கக் கண்டங்களுக்குப் பரவியது.''