சபாஷ் தோழிகள் !

பள்ளிக்கூடம் போய் படிச்சோமா, வீட்டுக்கு வந்து விளையாடினோமா என்று இல்லாமல், 'நாம் இருக்கும் இடத்தை மாற்றவேண்டும்’ என்று களம் இறங்கி, விருதுகளைப் பெற்று இருக்கிறார்கள், வேலூரைச் சேர்ந்த தோழி களான சாருமதி மற்றும் வைஷ்ணவி.

சாருமதி 9-ம் வகுப்பும் வைஷ்ணவி 8-ம் வகுப்பும் படிக்கிறார்கள். ''நாங்க இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புப் பகுதிக்கு உபயோகமா ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தோம். பெரியவங்க ஒத்துழைப்போடு 2010-ல் குடியிருப்பைச் சுற்றி மரங்களை நட்டோம். சுற்றுப்புறத்தையும் அடிக்கடி சுத்தம் செய்தோம்'' என்கிறார் சாருமதி.

இது குறித்து, குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள Design for change school contest என்ற அமைப்புக்கு எழுதியிருக்கிறார்கள்.

சபாஷ் தோழிகள் !

''தங்கள் பள்ளி அல்லது சுற்றுப்புறத்தில் மாற்றம் கொண்டுவரும் சிறுவர்களை ஊக்கப்படுத்தும் இந்த அமைப்பின் சார்பாக, ஜூரி ஸ்பெஷல் மென்ஷன் (Jury special mention) விருதும் 5,000 ரூபாய் பரிசும் கொடுத்தனர். இந்தத் தொகையையும் மரங்கள் நடுவதற்கே பயன்படுத்தினோம்'' என்கிறார் வைஷ்ணவி.

இந்த விருது தந்த உற்சாகத்தில், பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிராக விழிப்பு உணர்வுப் பிரச்சாரம், புகைபிடிப்பதைத் தவிர்க்கப் பேரணி என்று பல்வேறு சமூகப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்களைப் பற்றி அறிந்த வேலூர் நகர மேயர், பாராட்டுச் சான்றிதழ் அளித்திருக்கிறார்.

''எங்களின் அடுத்த நடவடிக்கை, மழை நீரைச் சேமிப்பதன் அவசியம் பற்றி மக்களிடம் சொல்வது. வேலூர் என்றாலே, வறட்சிதான் நினைவுக்கு வரும். அந்த நிலை மாறி, பசுமையான பகுதியாக வேலூர் மிளிர வேண்டும் என்பது எங்கள் ஆசை'' என்கிறார்கள்.

சபாஷ் தோழிகளே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு