Published:Updated:

நடைவண்டி ஓட்டலாம்...நன்றாக பம்பரம் சுற்றலாம் !

இ.கார்த்திகேயன் படங்கள் :தி.ஹரிஹரன்

நடைவண்டி ஓட்டலாம்...நன்றாக பம்பரம் சுற்றலாம் !

இ.கார்த்திகேயன் படங்கள் :தி.ஹரிஹரன்

Published:Updated:

''உங்களில் எத்தனை பேருக்கு நடைவண்டி பற்றி தெரியும்?'' என்று கேட்டார் அவர்.

''நடைவண்டியா..? அது, எந்த ஊரில் இருந்து எந்த ஊருக்குப் போகும்?'' என்று கேட்டார்கள் அந்தச் சுட்டிகள்.

பிளாஸ்டிக் பொம்மைகள், எலெக்ட்ரானிக் ரிமோட் பொம்மைகள் என, விளையாட்டுப் பொருள்கள் இல்லாத வீடுகளே இருக்காது. இப்போதெல்லாம், எங்கும் நவீன விளையாட்டுப் பொருள்களே பரவி இருக்கின்றன. ஆனாலும், தென்மாவட்டப் பகுதிகளில், நம் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் மரக்கட்டை விளையாட்டுச் சாமான்கள் தயாரிப்பும் இருக்கிறது. திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம், சாராள் தக்கர் கல்லூரியின் நடுநிலைப் பள்ளி மாணவர்களுடன், சரவணன் செப்புச் சாமான்கள் பட்டறைக்குச் சென்றோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''தவழும் குழந்தை, நடக்கும் நிலைக்கு வந்ததும்  'நடைவண்டி’ வாங்கிக் கொடுப்பாங்க. அந்த வண்டியைப் பிடிச்சுக்கிட்டு குழந்தைகள் நடக்கும். வண்டி நகர நகர, குழந்தையின் கால்களும் நகரும். இப்படித்தான் அன்றைய குழந்தைகள் அழகாக நடக்கப் பழகினாங்க. இன்னைக்கு நடைவண்டி மலையேறிப்போச்சு. பட்டறைக்குள்ள கவனமா  செருப்பு போட்டுட்டு வாங்க. தரையில், மரக்குச்சி கிடக்கும்'' என்றார் சரவணன்.

''இங்கே என்னென்ன விளையாட்டுச் சாமான்கள் செய்யறீங்க?'' என்று கேட்டாள், மாணவி சந்திரிகா.

நடைவண்டி ஓட்டலாம்...நன்றாக பம்பரம் சுற்றலாம் !

''பம்பரம், நடைவண்டி, தொட்டில் கம்பு, தேர், விளையாட்டு வீணை இப்படி நிறையச் செய்றோம்'' என்றார்.

''இதையெல்லாம் எந்த மரத்தில் செய்றீங்க?'' என்று கேட்டார் பாத்திமா பர்ஸினா.

''யூகலிப்டஸ் (Eucaliptus) மரத்தில் செய்றோம்.  யூகலிப்ட்ஸ் மரம்தான் ரொம்ப நாள் உழைக்கும், விலையும் குறைவு. தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து இந்த மரங்கள் வருகின்றன. 3 முதல் 5 அடி நீள  மரக் கட்டைகள் வரும். 2 மாதம் வெயிலில் காயவெச்சு, முக்கால் அடி கட்டைகளாகப் பண்ணிப்போம்'' என்றார் சரவணன்.

நடைவண்டி ஓட்டலாம்...நன்றாக பம்பரம் சுற்றலாம் !

விளையாட்டுப் பொருள்கள் செய்யும் பகுதிக்கு அழைத்துச் சென்றார். ''இந்த மெஷினுக்கு பேரு கடைசல் மெஷின். இதில், முக்கால் அடி கட்டையை விடுவோம். உள்ளே இருக்கிற கொக்கியானது, கட்டையைக் கெட்டியாகப் பிடிச்சுக்கும். மெஷினை ஆன் செய்ததும், கொக்கியுடன் சேர்ந்து கட்டை  சுழலும். பிறகு, பம்பரத்தில் ஐந்து வட்டங்கள் போடுவோம். இந்த ஐந்து வட்டங்களில்தான் பம்பரக் கயிறு சுற்றுவாங்க. என்ன டிசைனில் பம்பரம் வேணுமோ, அந்த டிசைனில் செய்வோம். பம்பரம் செய்யும்போதே, பச்சை, மஞ்சள், வெள்ளை, ஊதான்னு என்ன கலர் வேணுமோ, அந்த கலர் சேர்ந்த அரக்குத் துண்டைப் பயன்படுத்துவோம்'' என்றார்.

''அரக்குனா என்ன?'' என்று கேட்டான் கணேசன்.

'அரக்கு, ஒருவகை இயற்கைப் பிசின். அரக்குப்பூச்சிகளில் இருந்து வெளிப்படும் திரவம், காற்றில் உலர்ந்து அரக்காக மாறும். இது தண்ணீர், எண்ணெயில் கரையாது. ஒட்டும் தன்மையும் நீளும். இதை, கொதிக்கும் தண்ணீரில் போட்டு, கசடுகளை நீக்குவாங்க. அதுக்கு, 'மணியரக்கு’ என்று பெயர். இதை தகடரக்கு என்ற பெயரில் தகடு வடிவிலும் தயாரிப்பாங்க. மரச்சாமான்கள், இசைத்தட்டுகள், நெய்ல் பாலிஷ், கைவளையல்கள் எனப் பலவற்றுக்கும் பயன்படுகிறது. இப்படி இயற்கையான அரக்கு கலர் கொடுக்கிறதுதான் நல்லது. சிலர், பெயின்ட் அடிப்பாங்க. அதில், 'லெட்’ என்ற கெமிக்கல் சேர்க்கப்படுது. குழந்தைகள் அந்த விளையாட்டுப் பொருளைக் கடிக்கும்போது, பெயின்ட் வயிற்றுக்குள் போய் நோயை ஏற்படுத்தும்'' என்றார்.

அடுத்தது, பெண் குழந்தைகள் விளையாடும் செப்புச் சாமான்கள்.

''அப்படினா என்ன?'' என்று கேட்டாள் தங்கராணி.

''இப்போ, கிச்சன் செட்னு பிளாஸ்டிக்கில் வருது.  அந்த கிச்சன் செட்டுக்கு அடித்தளமே இந்த செப்பு செட்தான். குடம், பன்னீர் தெளிப்பான், அம்மி, உரல், பானை சட்டி, வட்டப்பானை, உலக்கை என 32 வகையான பொருள்கள் இருக்கும். இதை பனைஓலைப் பெட்டியில் வைத்து விற்பனைக்கு அனுப்புவோம்'' என்றார்.

நடைவண்டி ஓட்டலாம்...நன்றாக பம்பரம் சுற்றலாம் !

''எதுக்கு பனைஓலைப் பெட்டி?'' - கேட்டாள் அகிலா.

''அந்தக் காலத்தில் கருப்பட்டி, மிட்டாய், சேவு இதெல்லாம் பனை ஓலைப்பெட்டியில்தான் விற்பாங்க. இனிப்புப் பண்டம் கெடாது. பனைஓலை வாசனையும் நன்றாக இருக்கும். செப்புச் சாமான்களையும் பாரம்பரிய முறைக்காக, பனைஓலைப் பெட்டியில் விற்கிறோம்'' என்றார் சரவணன்.

''இப்பவும் இதெல்லாம் விற்பனை ஆகுதா?'' என்று கேட்டாள் சரவணப்ரியா.

''முன்பு போல இல்லைன்னாலும் புகழ்பெற்ற கோயில் வாசல்களில் இருக்கும் கடைகள், சுற்றுலாத் தலங்களுக்கு அனுப்புறோம். ஆர்வம் உள்ளவர்கள் வாங்கறாங்க. சிலர், வீடுகளில் அழகுக்காக கண்ணாடி அலமாரிகளில் வைக்கிறாங்க. நீங்க, நவீன பொம்மைகளை வாங்கும் அதேநேரம், அழகும் பாரம்பரியமும் உள்ள இதுபோன்ற மர பொம்மைகளையும் வாங்கி, குழந்தைகளுக்குப் பரிசாகக் கொடுக்கலாம்'' என்றார் சரவணன்.  

''நிச்சயமா அங்கிள். இப்போ, நாங்களே குழந்தைகளாக மாறி, கொஞ்ச நேரம் விளையாடுறோம்'' என்றவர்கள், உற்சாகமாக நடைவண்டியை ஓட்ட ஆரம்பித்தார்கள்.