Published:Updated:

கல்வி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் !

ராகவா லாரன்ஸ் - சுட்டி ஸ்டார்ஸ்படங்கள் : சொ.பாலசுப்ரமணியன்

கல்வி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் !

ராகவா லாரன்ஸ் - சுட்டி ஸ்டார்ஸ்படங்கள் : சொ.பாலசுப்ரமணியன்

Published:Updated:

கோடை முடிந்தும் வெப்பம் குறையாத ஒரு ஞாயிற்றுக் கிழமை. எங்கள் மனம் முழுக்க உற்சாகத் தென்றல் வீசியதால், சூரிய வெப்பம் சுடவே இல்லை.

'பேனா பிடிக்கலாம்... பின்னி எடுக்கலாம்’ நிகழ்ச்சியில் எங்கள் முன்னால் வந்துநின்றார், அந்த சிறப்பு விருந்தாளி. நாங்கள் எவ்வளவு உற்சாகமாக கைகளைத் தட்டினோமோ... அதைவிடப் பலமாக, அரங்கின் பின்வரிசையில் அமர்ந்திருந்த எங்கள் பெற்றோரும் கரவொலி எழுப்பினார்கள்.

'முனி’ என்ற பெயரைக் கேட்டாலே, பயந்த காலம் போய், உற்சாகம் வருகிறது. ஒரு பேய் படத்தை, குழந்தைகள் முதல் தாத்தா-பாட்டிகள் வரை ரசித்துப் பார்க்கவைக்க முடியும் என்பதை நிரூபித்து, பேய் படங்களுக்கு புது டிரெண்ட்டை உண்டாக்கியவர். நடனம், நடிப்பு, இயக்கம் எனத் திரைப்படத் துறையில் அசத்தும்  நம்ம நடிகர், டான்ஸ் மாஸ்டர், டைரக்டர் ராகவா லாரன்ஸ்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கல்வி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் !

''உங்களின் நிஜப் பெயரே ராகவா லாரன்ஸ்தானா?''

''எனக்கு வீட்டில் வைத்த பெயர் லாரன்ஸ். என் அம்மா, ஓர் இந்து. அப்பா, ஒரு கிறிஸ்துவர். நான் சிறுவனாக இருந்தபோது, எனக்கு மூளைக் காய்ச்சல் வந்தது. பாதி நாட்கள் மருத்துவமனைக்குச் செல்வதே வேலை. என் அம்மாவுடன் அடிக்கடி கோயில்களுக்கும் செல்வேன். அப்படிச் சென்றபோது, ராகவேந்திரர் மீது ஈடுபாடு ஏற்பட்டது. அவரை முழுமையாக நம்ப ஆரம்பித்தேன். அவருக்குக் கோயில் கட்ட வேண்டும் என்றும் ஆசைப்பட்டேன். ஒருமுறை, ராகவேந்திரா சாமி, ஒரு குழந்தையைத் தொட்டிலில் ஆட்டுவது போல கனவும் வந்தது. கொஞ்ச நாட்களில் எனது மூளைக் காய்ச்சல் குணமாக ஆரம்பித்தது. மருத்துவர்கள் ஆச்சர்யப்பட்டார்கள். இது ஸ்வாமி ராகவேந்திரரின் அருளால்தான் நடந்ததாக முழுமையாக நம்பினேன். என் பெயரை, ராகவா லாரன்ஸ் என்று மாற்றிக்கொண்டேன்.''

கல்வி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் !

''ராகவேந்திரா கோயில் கட்டினீர்களா?''

''சினிமாவில் நல்ல நிலைக்கு வந்ததும் செய்த முதல் வேலை அதுதான். திருமுல்லைவாயிலில் ராகவேந்திரா கோயிலை ஆறு வருடங்களுக்கு முன்பு கட்டினேன். இன்னும் சில கோயில்களைக் கட்டும் எண்ணமும் இருக்கிறது.''

''நீங்கள் சினிமாவுக்கு வந்தது எப்படி?''

''நான் ராயபுரத்தில் குடிசைப் பகுதியில் பிறந்து வளர்ந்தவன். உடல்நிலை காரணமாக, சரியாக பள்ளிக்கும் போகவில்லை. எங்கள் பகுதியில் யாராவது இறந்துவிட்டால், இறுதி ஊர்வலத்தில் நடனம் ஆடிக்கொண்டே போவேன். அப்படித்தான் நடனம் மீது ஆர்வம் ஏற்பட்டு, கற்றுக்கொண்டேன். ஸ்டன்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயன் அவர்களைச் சந்தித்து சினிமா வாய்ப்புக் கேட்டேன். 'நான் ஸ்டன்ட் மாஸ்டர். நீ டான்ஸ் ஆடுவேன் என்கிறாய். உனக்கு நான் என்ன வாய்ப்பு தருவது?’ என்று கேட்டார். 'உங்களோடு இருக்கிறேன். சொல்லும் வேலைகளைச் செய்கிறேன். அதைச் செய்துகொண்டே வாய்ப்பைத் தேடிக்கொள்கிறேன்’ என்றேன். சேர்த்துக்கொண்டார். படப்பிடிப்பில் சாப்பாடு, டீ வாங்கிவந்து கொடுப்பேன்.''

கல்வி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் !

''நடன இயக்குநராக ஆனது எப்படி?''

''ஒருநாள் படப்பிடிப்பில், நடிகர் சரத்குமார் சார் ஓய்வாக அமர்ந்திருந்தார். அவரிடம் அழைத்துச்சென்ற சுப்பராயன் சார், 'இவன் நல்லா டான்ஸ் ஆடுவான்’ என்றார். நானும் ஆடினேன். சரத்குமார் சார் பாராட்டி, 100 ரூபாய் கொடுத்தார். நேரம் வரும்போது வாய்ப்புத் தருவதாகச் சொன்னார். இன்னொரு முறை ரஜினி சார் முன்னாடி ஆடினேன். அவர் சிரித்து, கைதட்டிட்டுப் போயிட்டார். 'சரத் சாராவது 100 ரூபாய் கொடுத்தார். இவர் எதுவுமே சொல்லலையே’ என நினைத்தேன். ஆனால், அடுத்த நாளே என்னை அழைத்து, சினிமா டான்ஸ் அசோசியேஷனில் நான் மெம்பராகச் சேர்வதற்கு ஒரு கடிதம் கொடுத்தார். அதுதான் இன்று நான் உங்கள் முன் நிற்பதற்கு மிக முக்கியமான காரணம். என் வாழ்க்கையை உயர்த்தியவர்களில் ரஜினி சார் முக்கியமானவர்.''

கல்வி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் !

''உங்களுடைய ரோல்மாடல், இன்ஸ்பிரேஷன் யார்?''

''நிறையப் பேர். சினிமாத் துறையில் கமல், சிரஞ்சீவி, சரத்குமார் எனப் பலரும் பலவிதங்களில் என் ரோல்மாடல்களாக இருந்திருக்கிறார்கள். என்னை உற்சாகமூட்டி, என் வளர்ச்சியில் உறுதுணையாக இருந்தவர்கள் பலர். எல்லோருக்கும் மேலாக என் அம்மா. அவர்தான் எனக்கு எல்லாமே. சிறு வயதில் என்னை அன்போடு கவனித்து, உன்னால் எல்லாம் முடியும் என்று ஊக்கப்படுத்திக்கொண்டே இருப்பார். எல்லோருக்கும் அம்மா என்பவர், இன்னொரு தெய்வம். என் அம்மா, தெய்வத்துக்கு எல்லாம் தெய்வமாக இருந்தார்.''

''முதன்முதலில் நீங்கள் நடனம் ஆடிய படம்?''

''அஜித் நடித்த 'அமர்க்களம்’.''

கல்வி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் !

''நீங்கள் மிகவும் ரசித்துப் பார்த்த படம்?''

''ரஜினி சாரின் 'அண்ணாமலை’ படத்தைப் பல முறை பார்த்தேன்.''

''நீங்கள் நடித்த, இயக்கிய படங்களில் மிகவும் பிடித்த படம் எது?''

'' 'காஞ்சனா’. காரணம், உங்களை மாதிரி குழந்தைகளிடம் என்னைத் தெரியவைத்த படம். அந்தப் படத்தின் மூலம் உங்களின் அன்பைச் சம்பாதித்து இருக்கிறேன்.''

''நீங்கள், ஏழைக் குழந்தைகளின் படிப்புக்கு உதவ ஓர் அமைப்பை நடத்துவதாகப் படித்தோம். அது பற்றி...''

''படிக்க ஆர்வம் உள்ள, வசதியில்லாத குழந்தைகளுக்கு உதவ 'டூ சம்திங்’ என்கிற பெயரில் அந்த அமைப்பை ஆரம்பித்திருக்கிறேன். பலரின் உதவியுடன் இந்த வருடம் 250 குழந்தைகளைப் படிக்கவைக்கிறோம். இதற்கு முன்பு, என் சொந்தச் செலவில் படிப்புக்கான விஷயங்களைச் செய்திருக்கிறேன்.''

''இந்த எண்ணம் உங்களுக்கு எப்படி வந்தது?''

''நானும் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவன். படிப்பு இல்லாமல் வளர்ந்தவன். ஏழ்மையும் கல்வியின்மையும் எவ்வளவு வேதனையான விஷயம் என்பதை உணர்ந்தவன். ஒருவருக்கு சரியான கல்வி கிடைத்தால், அவர் வாழ்க்கை நிச்சயம் உயரும். நீங்களும் உங்களால் முடிந்த வரை அடுத்தவரின் கல்விக்கு உதவுங்கள். நீங்கள் நிச்சயம் செய்வீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஏனென்றால், சமூகப் பங்களிப்பில் பத்திரிகைத் துறையும் முக்கியமானது. படிப்பு மட்டும் போதும் என இல்லாமல், இந்தச் சின்ன வயதிலேயே பத்திரிகையில் கலக்க வந்திருக்கிறீர்கள். நல்ல நிலைக்கு உயர்ந்து, ஒவ்வொருவரும் நான்கு பேரை உயர்த்துங்கள்!''

  - சுட்டி ஸ்டார் டீம்.