

அமெரிக்காவின் அட்லான்டிக் நகரத்தில், முதல் உலகக் கோப்பை மணல் சிற்பப் போட்டி (Sand Sculpting World Cup competition) சமீபத்தில் நடைபெற்றது. 2014-ம் ஆண்டுக்கான இந்தப் போட்டியில், பல்வேறு நாடுகளில் இருந்து 20 மணல் சிற்பக் கலைஞர்கள் கலந்துகொண்டனர். சிற்பங்கள் செய்ய 30 மணி நேரம் ஒதுக்கப்பட்டு, 10 டன் மணலும் அளிக்கப்பட்டது. 'சேவ் ட்ரீ, சேவ் தி ஃபியூச்சர்’ என்ற தலைப்பில் நடந்த இந்தப் போட்டியில், மக்களின் தேர்வில் அதிக வாக்குகள் பெற்ற சிற்பத்துக்கு முதல் பரிசு அளிக்கப்பட்டது. இதில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், முதல் பரிசுக்குத் தேர்வு பெற்றர். உலகக் கோப்பையையும் வென்றார். மண்ணுக்கு மரியாதை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அன்டார்ட்டிகாவில் உள்ள ஒரு மலை, இந்திய விஞ்ஞானியின் பெயரைச் சூடிக்கொண்டு, கம்பீரமாக நிற்கிறது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் அகௌரி சின்ஹா (Akhouri Sinha). அமெரிக்காவில் உள்ள மின்னசோட்டா பல்கலைக்கழகத்தில் மரபணுவியல், செல் உயிரியல் துறை இணைப் பேராசிரியர். அன்டார்ட்டிகாவில் உள்ள உயிரினங்கள் குறித்து ஆய்வு செய்யும் அமெரிக்கக் குழுவில் 1972-1974 ஆண்டுகளில் இடம்பிடித்தார். நீர்நாய்கள், திமிங்கிலங்கள் மற்றும் பறவைகள் குறித்து இவர் செய்த ஆய்வுகள், சிறப்பாக இருந்தன. அவரைப் பாராட்டும் வகையில், அன்டார்ட்டிகாவில் உள்ள மலை ஒன்றுக்கு, 'சின்ஹா மலை’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். சிகரம் சூடிய சின்ஹா!

'ஊருக்குச் செல்லும்போது, கஷ்டப்பட்டு சூட்கேஸை தூக்கிச்செல்லும் கவலை எனக்கு இல்லை’ என்கிறார், சீனாவைச் சேர்ந்த ஹீ லியாங்கய் (He Liangcai)தனது சூட்கேஸை பேட்டரியால் இயங்கும் ஸ்கூட்டராக மாற்றியிருக்கும் இவர், ஆட்டோ, டாக்ஸி எதையும் எதிர்பார்ப்பது இல்லை. இந்த சூட்கேஸ் ஸ்கூட்டர் மீது அமர்ந்தே சென்றுவிடுகிறார். ஏழு கிலோ எடை கொண்ட இந்த சூட்கேஸ் ஸ்கூட்டர், மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறது. 'ஒருமுறை சார்ஜ் செய்தால், 20 கிலோ மீட்டர் தூரம் செல்லலாம். இதை உருவாக்க 10 ஆண்டுகள் ஆனது’ என்கிற ஹீ லியாங்கய், ஒரு விவசாயி. பலே விவசாயி!

ராஜஸ்தான் காஸ்மோ அறக்கட்டளை (Rajasthan Cosmo Foundation) என்ற அமைப்பு, சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மாநகராட்சிப் பள்ளிகளைச் சேர்ந்த 1000 மாணவர்களுக்கு,

75 லட்சம் செலவில் 25,000 பள்ளிச் சீருடைகளை இலவசமாக வழங்கியுள்ளது. மேலும், எம்.ஜி.எம். பொழுதுபோக்குப் பூங்காவுக்கும் அழைத்துச்சென்றுள்ளது. இந்த அறக்கட்டளை, இதுவரை சுமார் 2 லட்சம் பள்ளிச் சீருடைகள் வழங்கியிருப்பதோடு, முதியோர்கள், ஆதரவற்றோர்க்கு 'துணி வங்கி’கள் தொடங்கி, ஒரு லட்சம் பேருக்கு புது ஆடைகளை வழங்கியுள்ளது. சல்யூட்!

திரைப்படங்கள், புத்தகங்களில் 3D பார்த்து ரசித்திருப்போம். இப்போது, நாம் பருகும் காபியிலும் 3D ஓவியங்களை வரைய ஆரம்பித்துவிட்டனர். இதனை, லாட்டே ஆர்ட் (Latte Art) என்கிறார்கள். இதில், கசுகி யமமோட்டோ (Kazuki Yamamoto) என்ற 26 வயது ஜப்பானிய கலைஞர் திறமைசாலி. 'சிணீயீமீ 10ரீ’ என்ற கடையில் வேலை செய்யும் இவர், ஒட்டகச்சிவிங்கி, ஏலியன் போன்ற பல உருவங்களை காபி நுரையில் சிற்பங்களாக உருவாக்கி, வாடிக்கையாளர்களை அசத்துகிறார். இதைப் பார்த்து, மற்ற காபி கடைக்காரர்களும் இந்தக் கலையைப் பின்பற்றத் தொடங்கிவிட்டனர். முதலில் ரசி... பிறகு ருசி!

இந்திய விமானப்படை, மொபைல் கேம் ஒன்றை உருவாக்கியுள்ளது. ஜூலை 3-ம் தேதி, புது டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில், இளைஞர்களை ஈர்ப்பதற்காக இந்த 3D மொபைல் விளையாட்டைத் தொடங்கியுள்ளது. இதற்கு, 'கார்டியன்ஸ் ஆஃப் த ஸ்கைஸ்’ (Guardians of the Skies) என்று பெயரிட்டுள்ளது. 'இந்த விளையாட்டை ஒரு முறை விளையாடினால், விமானப் படையின் சேவை நாட்டுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை இளைஞர்கள் தெரிந்துகொள்வார்கள். இது, நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை ஊக்குவிக்கும். இந்திய இளைஞர்களும் இளம் பெண்களும் விமானப் படையில் சேரத் தூண்டுகோலாக அமையும்'' என்று ஏர் மார்ஷல் எஸ்.குமார் தெரிவித்துள்ளார். நல்ல முயற்சி!