Published:Updated:

வலை உலா - ஜாலியாக ஆடலாம்...வரைபட விளையாட்டு

தி.குமரகுருபரன் படங்கள் : சைபர்சிம்மன்

கூகுள் மேப்ஸ், கூகுள் எர்த் போன்ற வரைபடச் சேவைகளைப் பல வகைகளில் பயன்படுத்தலாம் என்பது தெரிந்திருக்கலாம். கூகுள் வரைபடத்தைக்கொண்டு விளையாடலாம் என்பது தெரியுமா?

வலை உலா - ஜாலியாக ஆடலாம்...வரைபட விளையாட்டு

இது, சுவாரஸ்யமான விளையாட்டு மட்டும் அல்ல, பொது அறிவை வளர்க்கவும் உதவும்.இதைத் தெரிந்துகொள்ள, கூகுள் புதிதாக அறிமுகம் செய்துள்ள ஸ்மார்ட்டிபின்ஸ் (http://smartypins.withgoogle.com/) இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்.

கூகுள் வரைபடம் சார்ந்து உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தளத்தில் நுழைந்ததுமே, 'புதிய விளையாட்டைத் தொடங்கவும்’ என்ற வாசகம் இருக்கும். அதை க்ளிக் செய்தால், ஆட்டத்துக்கு நீங்க ரெடி. கலை, கலாசாரம், விஞ்ஞானம், பூகோளம், விளையாட்டு, பொழுதுபோக்கு எனப் பல தலைப்புகள் இருக்கும். எந்தத் தலைப்பில் நீங்கள் சூரப்புலி என்று நினைக்கிறீர்களோ, அதைத் தேர்வு செய்யுங்கள். ஏனெனில், விளையாட்டில் வரிசையாக கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.

வலை உலா - ஜாலியாக ஆடலாம்...வரைபட விளையாட்டு

இப்போது, கூகுளின் வரைபடம் திரையில் தோன்றும். அதில், பலூன் போல ஒரு பின் செருகப்பட்டிருக்கும். இடது பக்கத்தில் பார்த்தால், ஒரு கட்டத்தில் கேள்வி தோன்றும். அந்தக் கேள்விக்கான பதில்தான், வரைபடத்தின் மீதுள்ள பலூன். ஆனால் அந்தப் பலூன், தவறான இடத்தில் இருக்கிறது. உங்களுக்கான சவால், அந்தப் பலூனை சரியான இடத்தில் சேர்க்க வேண்டும். பலூனை, வரைபடத்தில் நகர்த்திய பின், பதிலைச் சமர்ப்பிக்க வேண்டும். உங்கள் பதில் சரியா, தவறா என்று காட்டும். பெட்ரோல் பங்கில் பெட்ரோலின் அளவு சிறிய கட்டத்தில் எண்களாக ஓடிக்கொண்டே இருப்பது போல இங்கும் சிறிய கட்டத்தில் எண்கள் ஓடிக்கொண்டிருக்கும். இது, உங்கள் பதில், சரியான பதிலில் இருந்து எத்தனை  தொலைவில் உள்ளது என்பதை குறிப்பது. சரியான பதிலாக இருந்தால், '0’ கி.மீ. காட்டும். பிறகு, அடுத்த கேள்விக்கு முன்னேறலாம். தவறான பதில் என்றால், அதற்கான விடையையும் தெரிந்துகொள்ளலாம்.  உதவிக்கான குறிப்பு வசதியையும் பயன்படுத்தலாம்.

வலை உலா - ஜாலியாக ஆடலாம்...வரைபட விளையாட்டு

ஒவ்வொரு பதிலாக சொல்லச் சொல்ல, உங்களுக்கான கிலோமீட்டர்கள் குறைந்துகொண்டே வரும். தவறான பதில்கள் அதிகம் என்றால், அதிக கிலோமீட்டர்களை இழப்பீர்கள். உங்களுக்குக் கொடுக்கப்பட்ட கிலோமீட்டருக்குள் எவ்வளவு சரியான பதில் சொல்ல முடிகிறது என்று பாருங்கள். இல்லை என்றாலும் கவலையில்லை, புதிதாக ஆடத் தொடங்கலாம்.

வரைபடத்தின் மீது பின்களை சரியான இடத்தில் கொண்டுபோய் வைப்பதும், அது சரியா என அறியக் காத்திருப்பதும் சுவாரஸ்யமாக இருக்கும். உலக விஷயங்களையும் தெரிந்துகொள்ளலாம்.

உங்கள் விளையாட்டுத் திறமையை நண்பர்களோடு பகிர்ந்துகொள்ளும் வசதியும் இருக்கிறது. ஸ்மார்ட் போனில் இந்த விளையாட்டை டவுன்லோடு செய்துகொள்ளலாம்.

இதேபோன்ற சுவாரஸ்யமான விளையாட்டுகள் இன்னும் இருக்கின்றன.

வலை உலா - ஜாலியாக ஆடலாம்...வரைபட விளையாட்டு
அடுத்த கட்டுரைக்கு