Published:Updated:

மை டியர் ஜீபா...

ஷெயசூர்யா

மை டியர் ஜீபா...

ஷெயசூர்யா

Published:Updated:

''ஹாய் ஜீபா... சாக்லேட் நம் உடலுக்கு நல்லதா கெட்டதா?''

   - சு.பாரதி மாலா, சென்னை-57.

''சாக்லேட்டில் நன்மை அளிக்கும் சில விஷயங்கள் இருப்பது உண்மைதான். உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் தன்மை டார்க் சாக்லேட்டுக்கு உண்டு. இதனால், இதயத்தின் இயக்கம் சீராக இருக்கும். மன அழுத்தத்தைக் குறைக்கும் 'செரோடொனின்’ (Serotonin) என்ற மூலப்பொருள் சாக்லேட்டில் உள்ளது. அதே நேரம், உடலில் கொழுப்பு சேர்ந்து உடல் பருமன், பல் சொத்தை, நரம்புக் குறைபாடு போன்ற தீமைகளும் உண்டாகின்றன. இப்போது நிலவும் தொழில் போட்டியில், சுவையை அதிகரிக்க, பல வகை ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. எனவே, தினம் தினம் 'ஸ்வீட் எடு... கொண்டாடு’ என்று இல்லாமல், விசேஷ நேரங்களில் மட்டும் ஒன்று, இரண்டு சாப்பிட்டால் நல்லது.''  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மை டியர் ஜீபா...

''மை டியர் ஜீபா... வேங்கையும் சிறுத்தையும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருக்கிறதே, இவற்றின் வித்தியாசம் என்ன?''

  - ம.அக்ஷயா, அரூர்.

''ஆசிய சிறுத்தையே (Asiatic cheetah) தமிழில், வேங்கை என்றும் வேங்கைப்புலி என்றும் சொல்லப்படுகிறது. இது, அழிந்துவரும் உயிரினங்களில் ஒன்று. இந்தியக் காடுகளிலும் இது காணப்பட்டது. மன்னர்கள், ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் ஆங்கிலேய அதிகாரிகளால் வேட்டையாடப்பட்டு, முற்றிலும் அழிந்துவிட்டது. இப்போது, ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் காடுகளில் மட்டுமே காணப்படுகிறது. இதன் எண்ணிக்கை சுமார் 70-க்குள் இருப்பதாகவே சொல்லப்படுகிறது. சிவிங்கிப்புலி எனப்படும் சிறுத்தையின் எண்ணிக்கையும் குறைந்துகொண்டே வருகிறது. ஆசியா, ஆப்பிரிக்கா போன்ற கண்டங்களில் அரிதாகவே காணப்படுகின்றன.''

மை டியர் ஜீபா...

''அலுமினியப் பாத்திரத்தில் சமைத்துச் சாப்பிடுவது நல்லதல்ல என்பது உண்மையா ஜீபா?''

   - ஜி.மஞ்சரி, கிருஷ்ணகிரி.

''உண்மைதான் மஞ்சரி. அலுமினியப் பாத்திரத்தில் சமைக்கும்போது, அந்த உணவுப் பொருளுடன் கலக்கும் அலுமினியம், நம் வயிற்றுக்குள் படிகிறது. இது, சிலருக்கு பெரிய பாதிப்பை உண்டாக்குவது இல்லை என்றாலும் சிலருக்கு வயிற்று வலி, அல்சர் போன்ற பிரச்னைகளை உண்டாக்குவதாக, மருத்துவ ஆராய்ச்சி சொல்கிறது. நமது சிறுநீரகத்துக்குள் சென்று,  பாதிப்பை ஏற்படுத்துகிறதாம். தவிர, ரத்தத்தில் பயணம் செய்து மூளைத் திசுக்களிலும் படிவதாக அந்த ஆராய்ச்சி சொல்கிறது. குறிப்பாக, தக்காளி போன்ற ஆசிட் தன்மை உடைய உணவுப் பொருள்களை அலுமினியப் பாத்திரத்தில் சமைக்கும்போது, அலுமினியத் துகள்கள் அதிகமாகவே உணவில் கலக்கிறதாம்.''  

''ஹாய் ஜீபா... அமேசான் நதியின் நீளம் எவ்வளவு?''

   - எஸ்.அபிநயா, தேவனாங்குறிச்சி.

''உலகின் இரண்டு பெரிய ஆறுகளில் ஒன்று, அமேசான் ஆறு. இதன் நீளம் 6,400 கிலோமீட்டருக்கும் மேல். நைல் நதியின் நீளம் 6,650 கிலோமீட்டருக்கும் மேல் என வரையறுக்கப்படுகிறது. எனவே, உலகின் நீளமான ஆறு, 'நைல்’ என்று சொல்கிறார்கள். ஆனால், பிரேசில் மற்றும் பெரு நாட்டு அறிஞர்கள், இந்தக் கணக்கை ஏற்க மறுத்து, அமேசான் ஆறுதான் நீளமானது என்கிறார்கள். தென் அமெரிக்காவில் உள்ள பெரு, ஈக்குவேடர், பிரேசில் போன்ற நாடுகளில் பாயும் அமேசான் ஆற்றின் துணை ஆறுகள், 1,000-க்கும் மேலே உள்ளன. அமேசான் ஆற்றின் சிறப்புகளில் ஒன்று, இந்த ஆற்றின் குறுக்கே எந்த இடத்திலும் பாலம் கட்டப்படவில்லை. காரணம், இதன் பாதை பெரும்பாலும் காடுகளிலும் நகரின் எல்லைகளிலுமே உள்ளன.''

மை டியர் ஜீபா...

''அன்பு ஜீபா... இந்த உலகில் எத்தனை வகையான உயிரினங்கள் உள்ளன?''

   - கே.சபரீஷ், திருவண்ணாமலை.

''இது, இன்னும் முடிவு தெரியாத கேள்வி சபரீஷ். நீர் வாழ்வன, நீர் - நில வாழ்வன, பாலூட்டி, பறவைகள், பூச்சிகள் என ஒவ்வொன்றிலும் பல ஆயிரம், பல லட்சம் வகைகள் உள்ளன. இதுவரை, 19 லட்சம் உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாகவும் அவற்றில் 12 லட்சம் உயிரினங்களுக்கு பெயர் வைத்திருப்பதாகவும் சொல்கிறார்கள். இவற்றுள் நீரில் கண்டுபிடிக்கப்பட்டது 9 சதவிகிதம்தான். இன்னும் 91 சதவிகிதம் இருக்கலாம் என்கிறார்கள். எனவே, இதற்கான பதில் மாறிக்கொண்டே இருக்கும்.''