பிரீமியம் ஸ்டோரி

நமக்காக டிஸ்னி பிக்சர்ஸ் உருவாக்கும் உலகம், எப்போதுமே செம ஸ்டைல், செம ஜாலி. அந்த வகையில் ஜூலை 18-ல் வெளியான அனிமேஷன் 3D படம், 'ப்ளேன்ஸ் ஃபயர் அண்ட் ரெஸ்கியூ’

இது, கடந்த ஆண்டு வெளிவந்து ஹிட் அடித்த 'ப்ளேன்ஸ்’ படத்தின் இரண்டாம் பாகம். க்ளே ஹால் (Klay Hall) இயக்கிய இதன் முதல் பாகம்,  21 கோடி டாலர் வசூலை ஈட்டியது. 92 நிமிடங்கள் ஓடக்கூடியது என்றாலும், அட்டகாசமான அனிமேஷன், நகைச்சுவை வசனங்களால், சுட்டிகளைக் கட்டிப்போட்டு வரவேற்பை பெற்றது.

முதல் பாகத்தின் கதையைச் சொல்லிவிட்டு, இந்தப் படத்துக்குச் செல்வதுதான் சரியாக இருக்கும். ஆகவே, 'ப்ளேன்ஸ்...’ ஒரு ஃபிளாஷ்பேக்.

டஸ்டி க்ரோப்ஹாப்பர் (Dusty crophopper) சோள வயல்களில், மருந்து தெளிக்கும் ஒரு விமானம். அதற்கு, பந்தயங்களில் கலந்துகொண்டு சாகசங்கள் செய்ய ஆசை. அதன் நண்பர்களில் மெக்கானிக் விமானமான டாட்டி, எரிபொருள்  வாகனமான சக் ஆகியவற்றின் உதவியோடு பந்தயங்களுக்குத் தயாராகிவருகிறது.

க்ரோப்பரோடு பறக்கலாம் !

அப்போது, கடற்படை விமானமான ஸ்கிப்பர், தொடர்பு கிடைக்கிறது. அதனிடம் பந்தய நுணுக்கங்களை கற்றுக்கொள்ள நினைக்கிறது க்ரோப்ஹாப்பர். ஆனால், 'வயலில் வேலை செய்யும் நீ பந்தயங்களுக்கு சரிவர மாட்டாய்’ என்கிறது ஸ்கிப்பர். பிறகு, அதன் ஆர்வத்தைப் பார்த்து, பயிற்சி அளிக்கிறது.

ஒவ்வொரு விமான நிலையத்திலும் போட்டிகள் நடக்கின்றன. பலவிதமான சதி வேலைகள், சவால்களைச் சந்திக்கும் க்ரோ, தொடர் வெற்றிகள் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது. இஷானி என்ற காதலி விமானமும் க்ரோவுக்கு உதவுகிறது.

இந்த நிலையில், ஒரு சண்டையில் க்ரோப்ஹாப்பரின் பாகங்கள் உடைந்துவிடுகிறது. கலங்கி நிற்கும் க்ரோ, புத்துயிர் பெற, தங்களது உடல் பாகங்களை வழங்குவதாக நண்பர்கள் சொல்வதோடு, முதல் பாகத்தின் கதை முடிகிறது.

இனி, இரண்டாம் பாகம். 'ப்ளேன்ஸ் ஃப்யர் அண்ட் ரெஸ்கியூ’, முதல் பாகத்தைவிட, விறுவிறுப்புப்புடன் நம்மை வேறு கதை களத்துக்கு அழைத்து செல்கிறது.

க்ரோப்பரோடு பறக்கலாம் !

இனி, பந்தயங்களில் கலந்துகொள்ள முடியாது என எல்லோராலும் பேசிக்கொள்ளப்படும் க்ரோப்ஹாப்பர், மீண்டும் உருப்பெற்று வருகிறது. மிகவும் திறன் வாய்ந்த தீயணைப்பு வீரர்களைக்கொண்ட ஒரு குழுவில் இணைகிறது.

தீ தடுப்பு வேலையில் ஜாம்பவானாக இருக்கும் ப்ளேடு ரேஞ்சர் என்னும் ஹெலிகாப்டர், சூப்பர் ஸ்கூப்பர் ஹெலிகாப்டர், அதிக எடை தூக்கி விண்ட் லிஃப்ட்டர் என க்ரோப்ஹாப்பருக்கு வித்தியாசமான நண்பர்கள் கிடைக்கிறார்கள். அவர்களுடன் சேர்ந்து, பல்வேறு பயிற்சி நுணுக்கங்களைக் கற்றுக்கொள்கிறது.

ஓர் அருங்காட்சியகத்தை காட்டுத் தீயிலிருந்து மீட்கும் சவாலான வேலையை இந்தக் குழு ஏற்கிறது. காட்டுத் தீயை அணைத்தார்களா? அதில் சந்திக்கும் சவால்கள் என்ன என்பதுதான் கதை.

இந்தப் படத்தின் இயக்குநர் ராபர்ட்ஸ் கன்னவே (Roberts Gannaway). முதல் பாகம் போலவே, கலகல லகலக வசனங்கள், விறுவிறு சாகசங்கள் என 84 நிமிடங்களும் அசையவிடாமல் இருக்கையில் கட்டிப்போடுகிறது. அமெரிக்காவில் வெளியான ஒரே வாரத்தில் 28 கோடி டாலர் வசூலை ஈட்டியிருக்கிறது 'ப்ளேன்ஸ் ஃப்யர் அண்ட் ரெஸ்கியூ’.

படத்தைப் பாருங்க... டஸ்டி க்ரோப்ஹாப்பரோடு சேர்ந்து பறந்து, சாகசம் செய்யுங்க.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு