FA பக்கங்கள்
Published:Updated:

ஹோம்வொர்க் இல்லாத ஹோம்லி பள்ளி !

வி.எஸ்.சரவணன் படங்கள் : கே.குணசீலன்

ஹோம்வொர்க் கிடையாது...
ரேங்க் கார்டு கிடையாது...
மிரட்டுவதும், அடிப்பதுவும் கிடையவே கிடையாது...

இப்படி எல்லாம் சொல்கிற ஒரு பள்ளி இருந்தால், எப்படி இருக்கும்?

பட்டுக்கோட்டை அருகே, குறிச்சியில் உள்ள ஐ.பி.இ.ஏ. பள்ளிதான் அது. அந்தப் பள்ளியில் எல்.கே.ஜி முதல் 10-ம் வகுப்பு வரை உள்ளது. ''தமிழ்நாடு அரசு, செயல்வழிக் கல்வி முறையைக் கொண்டுவருவதற்கு முன்பே, இந்தப் பள்ளி தொடங்கப்பட்ட 2002-ல் இருந்து செயல்வழிக் கற்றல் முறையில் கற்பிக்கப்படுகிறது'' என்றனர், பள்ளியின் அறங்காவலர் க.கிருட்டிணன் மற்றும் தாளாளர் ரா.சோமசுந்தரம்.

'' 'சைலம் திசு, நீரைக் கடத்தும்’ என்பதை துளசிச் செடி மூலம் சோதனை செய்வது ஏன்? துளசிச் செடியை மட்டும்தான் பயன்படுத்த வேண்டுமா? இப்படி, நிறையக் கேள்விகள் கேட்பார்கள். அவர்கள் கேட்கும் கேள்களுக்குப் பதில் சொல்வதற்காக, நாங்கள் நிறையப் படிக்கிறோம்'' என்கிறார், அறிவியல் ஆசிரியை முத்தமிழ்ச் செல்வி.

''மனப்பாடப் பகுதியைத் தவிர, வேறு எதையும் எங்கள் மாணவர்கள் மனப்பாடம் செய்வது இல்லை.  புரிந்துகொண்டுதான் படிக்கிறார்கள். ஆங்கிலத்தை ஃபோனட்டிக்ஸ் (Phonetics) முறையில் கற்றுத்தருவதால், நாங்கள் தவறாகச் சொன்னாலும் திருத்துவார்கள்'' என்று பெருமையாகச் சொல்கிறார், ஆங்கில ஆசிரியை பாலசுந்தரி.

ஹோம்வொர்க் இல்லாத ஹோம்லி பள்ளி !

இந்த முறையில் கற்ற 4-ம் வகுப்பு மாணவன், 8-ம் வகுப்பு ஆங்கிலப் பாடத்தைச் சரளமாகப் படிக்கிறான். மாணவர்கள் துறுதுறு என்று இருந்தால், ஆசிரியர்களால் சமாளிக்க முடியுமா?

''கற்றலை எளிமையாக்குவதில் தொடர்ந்து செயலாற்றும் கிருஷ்ணமூர்த்தி, மாதவன், அமலராஜன் ஆகியோர், வருடத்துக்கு மூன்று முறை எங்கள் பள்ளிக்கு வந்து, ஆசிரியர்களுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்துகிறார்கள். மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்வது, எளிமையாகக் கற்றுக்கொடுப்பது எப்படி என்பதை, அந்தப் பயிற்சி வகுப்பில் தெரிந்துகொள்கின்றனர்'' என்கிறார், உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை வாசுகி.

ஹோம்வொர்க் இல்லாத ஹோம்லி பள்ளி !

அப்போது, 'ஹோய்...’ என மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் இருந்து சத்தம் வந்தது. அங்கே, ஆசிரியைகளும் மாணவர்களும் சேர்ந்து கண்ணாமூச்சி விளையாடிக்கொண்டிருந்தார்கள். அதன்  தலைமை ஆசிரியர் வினோத் கிருபாகரன், அந்த விளையாட்டுக்கு நடுவர் போல நின்று ரசித்துக்கொண்டிருந்தார். ''தொடர்ந்து 20 நிமிடங்களுக்கு மேல் பாடம் நடத்தினால், கவனிப்பு குறையும். அதனால், இப்படி விளையாட்டு, படிப்பு என்று நடக்கும்'' என்றார்.

அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே, மாணவர்கள், கூட்டமாக அவரை இடித்துக்கொண்டு ஓடினர். கூட்டத்தின் நடுவே கோமாளி வேடத்தில் ஒருவர் ஓடினார். அவரின் முகம், வண்ணங்களால் ஒளிர்ந்தது. கையில் ஒரு கஞ்சிராவைத் தட்டிக்கொண்டே செல்ல, சுட்டிக் குழந்தைகள் அவரோடு ஓடினர். அந்த இடமே மகிழ்ச்சி வெள்ளமாகியது.

முருகு.சரவணன் என்கிற அவர், மாணவர் விடுதியின் வார்டனாக இருக்கிறார். பள்ளியின் ஆண்டுவிழா, சுதந்திர தின விழா போன்ற நாட்களில் கோமாளி அவதாரம் எடுப்பார். அன்று நாம் சென்றிருந்ததால், மேலும் ஒரு சிறப்பு தினமாகிவிட்டது மாணவர்களுக்கு.

ஒரு மரத்தை நோக்கி ஓடிய அவர்கள், சுற்றிச் சுற்றி வந்து, குரங்குகளைப்போல சத்தமிட்டனர். குல்லாவைப் பிடுங்கிக்கொண்டு ஓடும் குரங்குக் கதையை நாடகமாக மாற்றுகிறார் முருகு.சரவணன்.  '' 'ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு கோமாளி வேண்டும்’ என்று சிறுவர் நாடகக் கலைஞர் வேலு சரவணன் சொல்லியிருந்தார். அதனைப் படித்த நான்   கோமாளியாக மாறினேன்'' என்றவரின் தலையில் இருந்த குல்லாவைப் பறித்துக்கொண்டு ஓடுகிறார்கள் மாணவர்கள்.

''இப்படி ஆட்டம், பாட்டம் என இருந்துவிட்டு, படிப்பில் கோட்டைவிட்டுவிடுவார்களோ... என்று யோசிக்க வேண்டாம். இந்த ஆண்டு 10-ம் வகுப்பில் நூற்றுக்கு 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். இந்தப் பள்ளியிலிருந்து வேறு பள்ளிக்கு பெற்றோரால் மாற்றப்பட்ட சிலர், அழுது, அடம் பிடித்து இந்தப் பள்ளிக்கே வந்துள்ளார்கள்'' என்றார், வினோத் கிருபாகரன்.

ஹோம்வொர்க் இல்லாத ஹோம்லி பள்ளி !

'' மாற்றுத்திறனாளி நிர்மல் குமார், இங்கு படித்தவர். வீல் சேரில்தான் வருவார். வினோத் என்கிற பையன், நிர்மலுக்கு எல்லா உதவிகளையும் செய்தான். இதை யாரும் சொல்லாமல் அவனாகவே செய்தான்'' என்றார் ஆசிரியை மலர்விழி.

ராமானுஜம் என்பவர் இங்கு உதவியாளராகப் பணிபுரிகிறார். காது மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. ஆனால், அவர் சொல்வதை மாணவர்களும் மாணவர்கள் சொல்வதை அவரும் சரியாகப் புரிந்துகொள்கின்றனர்.

''நான், ஒருநாள் வேலைக்கு வரவில்லை என்றால், அடுத்த நாள் ஒவ்வொரு மாணவரும் என்னிடம் வந்து ஏன்... ஏன்? என்று அன்போடும் அக்கறையோடும் கேள்வி கேட்கிறார்கள். அடுத்த முறை லீவு போடவே மனசு வராது'' என்று நெகிழ்ச்சியாகச் சொல்கிறார், இந்தப் பள்ளியில் படித்து, இந்தப் பள்ளியிலேயே ஆசிரியையாகப் பணியாற்றும் உஷா ராணி.

ஹோம்வொர்க் இல்லாத ஹோம்லி பள்ளி !

கற்றலை இனிமையாக்கும் இந்தப் பள்ளி மாணவர்களின் சிரிப்பில் கலந்திருக்கிறது, இனிப்பு.