பிரீமியம் ஸ்டோரி

''மை டியர் ஜீபா... ராணுவத்துக்கு அதிகமாக செலவழிக்கும் நாடு எது?

   - கே.மணிகண்டன், நாமக்கல்.

''உலக அளவில் ராணுவத்துக்காக மிக அதிகம் செலவழிக்கும் நாடு, அமெரிக்கா. நாட்டின் மொத்த வரவு செலவுத் திட்டத்தில், 600 பில்லியன் டாலருக்கு மேல் ராணுவத்துக்கு ஒதுக்குகிறது. ஒரு பில்லியன் என்பது, 100 கோடி. இந்திய ரூபாயில், ஒரு டாலர் என்பது, கிட்டதட்ட 60 ரூபாய். அதிகமான வீரர்கள், விமானம் தாங்கிக் கப்பல்கள், அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் உலகின் வலிமையான ராணுவமும் அமெரிக்காதான். சீனா, 130 பில்லியன் டாலர்கள் செலவழித்தாலும், வலிமையான ராணுவமாக இரண்டாம் இடத்தில் இருப்பது ரஷ்யா. இதன் ராணுவச் செலவு, 90 பில்லியன் டாலர்கள். இந்தியா செலவிடும் தொகை, 46 பில்லியன் டாலர்கள்.''

மை டியர் ஜீபா...

''ஹலோ ஜீபா... மகேந்திர சிங் தோனி எங்கே பிறந்தார்? அவர் எப்போது முதல் சதம் அடித்தார்?''

  - எஸ்.பாலாஜி, திருச்சி.

''ஜூலை 7, 1981-ம் ஆண்டு ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் பிறந்தவர் மகேந்திர சிங் தோனி. (2000-ம் ஆண்டு பீஹாரிலிருந்து பிரிந்து, ஜார்கண்ட் மாநிலம் உருவானது). ரஞ்சி போட்டி, இந்தியா - ஏ அணி போன்றவற்றில் பல சதங்களை அடித்து, 2004-ம் ஆண்டு சர்வதேச ஒருநாள் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2005-ல் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த போட்டியில் 123 பந்துகளில் 148 ரன்கள் எடுத்தார். இதுவே, அவரின் சர்வதேச முதல் சதம். தவிர, இந்திய விக்கெட் கீப்பர் எடுத்த அதிகபட்ச ரன் என்ற சாதனையையும் படைத்தார். அதே ஆண்டு, இலங்கைக்கு எதிராக 183 ரன்கள் எடுத்து, தனது முந்தைய சாதனையை முறியடித்தார்.''

மை டியர் ஜீபா...

''டியர் ஜீபா... காடுகள் சரி, அது என்ன மழைக்காடுகள்?''

    - செ.தேவராஜ், சென்னை-11.

''ஆண்டுக்கு 250 முதல் 450 சென்டிமீட்டர் மழைப் பொழிவு உள்ள காடுகளை, 'மழைக்காடுகள்’ என்பார்கள். மழைக்காடுகளின் மண்ணில், இரும்பு மற்றும் அலுமினியம் போன்ற தனிமங்கள் அதிகம் இருப்பதால், நிலப் பகுதி சிவப்பு நிறத்தில் காணப்படும். அடர்த்தியான மரங்கள் காரணமாக, சூரியக் கதிர்கள் நிலத்தில் அதிகம் விழாது. அதனால், நிலத்தில் புற்கள், புதர்கள் குறைவாக வளரும். மனிதர்கள் செல்வதற்கு பாதை சுலபமாக இருக்கும். வன விரும்பிகளுக்கு ஏற்றது மழைக்காடுகள்.''

மை டியர் ஜீபா...

''அன்பு ஜீபா... மனிதக் கழிவுகள் தொற்றுநோயை உண்டாக்குகின்றன. ஆனால், விலங்குகள் மற்றும் பறவைகளின் கழிவுகள் உரமாவது எப்படி?''

- தா.நா.யோகஜெய், ராசிபுரம்.

''நல்ல கேள்வி ஜெய்... இரும்பு, கந்தகம், பொட்டாசியம், பாஸ்பரஸ், நைட்ரஜன் போன்ற வேதிப் பொருள்கள் நம் மண்ணில் இயற்கையாகக் கலந்துள்ளன. இவையே, தாவரங்களுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்களை அளித்து, வளர்வதற்குத் துணைபுரிகின்றன. அந்தத் தாவரம்,  ஒளிச்சேர்க்கை மூலம் தயாரிக்கும் இலை, காய், பழம் போன்றவற்றில் மேலே சொன்ன சத்துகள் கலந்திருக்கும். விலங்குகள் மற்றும் பறவைகள், அவற்றை நேரடியாக உண்கின்றன. இதனால், அவற்றின் உடலுக்குத் தேவையான சத்துகள் போக, கழிவுகளிலும் சத்துகள் இருக்கும். இவை, பாக்டீரியாக்களின் உதவியுடன் சிதைக்கப்பட்டு, மீண்டும் மண்ணுக்கு உரமாக மாறுகிறது. இதையே, விலங்குகளின் தொழு உரம் அல்லது எரு (animal manure or farmyard manure) என்கிறார்கள். மனிதர்கள், தாவரங்கள் மூலம் கிடைக்கும் உணவைச் சமைத்தும் செயற்கை விஷயங்களைச் சேர்த்தும் சாப்பிடுவதால், அதன் தன்மை மாறிவிடுகிறது. இதனால், மனிதக் கழிவுகளில் கேடு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் அதிகம் உருவாகி, தொற்றுநோயை உண்டாக்குகிறது.''

மை டியர் ஜீபா...

''ஹலோ ஜீபா... கடல் உயிரினமான இறாலை நாம் சாப்பிடுகிறோம். அந்த இறால் என்ன சாப்பிடும்?''

- வி.ஆஷிகா, நாகர்கோவில்.

''இறாலை, 'கடலின் தூய்மையாளர்’ என்று சொல்லலாம் ஆஷிகா. கடலில் இறக்கும் உயிரினங்களின் சிதைந்த உடல் பகுதிகளைச் சாப்பிட்டு, கடலைத் தூய்மையாக்குகிறது. வாழும்போது கடலுக்கு நன்மை செய்யும் இறால், மனிதர்களுக்கு உணவாகும்போது, அவர்களுக்கு கால்சியம், புரதச் சத்துகளை அளித்தும் நன்மை செய்கிறது.''

மை டியர் ஜீபா...
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு