பிரீமியம் ஸ்டோரி
பென் டிரைவ்

அறைக்குள் அடைத்துவைத்து, ஏ,பி,சி,டி மற்றும் ரைம்ஸ் சொல்லித்தருவதுதான் நம்ம ஊர் நர்சரி பள்ளிகளின் வழக்கம். ஆனால், லண்டனில் உள்ள 'குயின்ஸ் வுட் அவுட்டோர் நர்சரி பள்ளி’ வித்தியாசமானது. தினமும் காலையில் மாணவர்கள் வந்ததும், அவர்களுக்கு ஒளிரும் ஒரு வகை ஆடையை அணிவித்து, மரங்கள் நிறைந்த இடத்துக்கு அழைத்துச்செல்கிறார்கள். கீழே இருக்கும் குச்சிகளைக்கொண்டு ராக்கெட், ரயில் உருவாக்கிக் காட்டுகிறார்கள். இலைகளை டிக்கெட் என்றும் கிளைகளில் கயிற்றைக் கட்டி ஊஞ்சல் ஆடியபடியும் விளையாட்டாகப் பாடங்களைக் கற்பிக்கிறார்கள். இதனால், பள்ளி என்றதுமே குழந்தைகள் குஷியாகிவிடுகிறார்கள். குழந்தைகள் பாடும் ரைம்ஸைக் கேட்டு, மரங்களும் குஷியா வளருமே!

பென் டிரைவ்

ஆகஸ்ட் 15-ம் தேதி, இந்தியாவின் 67-வது சுதந்திர தினம். அப்போது, துணி மற்றும் காகிதத்தில் தயாராகும் மூவர்ணக் கொடிகளையே பயன்படுத்த வேண்டும், பிளாஸ்டிக்கில் தயாரான  கொடிகளைப் பயன்படுத்தக் கூடாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. பிளாஸ்டிக் கொடிகளைப் பயன்படுத்துவதால், சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. பிளாஸ்டிக் தேசியக் கொடியை விற்பவர்கள், வாங்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசத்தை மதிப்போம்; சுற்றுச்சூழலைக் காப்போம்!

பென் டிரைவ்

சமீபத்தில் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில், கிராமப்புறப் பள்ளி மாணவர்கள் கழிப்பறைகளைப் பயன்படுத்துவதன் நன்மைகளைப் பற்றி, விழிப்பு உணர்வை ஏற்படுத்தத் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு Swachha Bharat Abhiyan என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. நம் நாட்டில், அதிகமான மக்கள் இன்னும் கழிப்பறைகள் இல்லாமலேயே வாழ்கிறார்கள். திறந்தவெளியில் காலைக் கடமைகளைக் கழிக்கிறார்கள். இதனால், ஏற்படும் சுகாதாரச் சீர்கேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, பல்வேறு திட்டங்களை அரசு செய்கிறது. 2019-ம் ஆண்டுக்குள் எல்லா வீடுகளிலும் கழிப்பறைகள் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதில் ஒரு பகுதிதான் இந்தத் திட்டம். மாநில அரசுகளின் உதவியோடு, கல்வித்துறை மூலம் ஆசிரியர்களுக்கு விழிப்பு உணர்வு பயிற்சி தரப்படும். அந்த ஆசிரியர்கள், மாணவர்களுக்குச் சொல்லித்தருவார்கள். மாணவர்கள் மூலம் பெற்றோர்களுக்கு விஷயம் செல்லும். குழந்தைகள் எடுத்துச் சொல்லும்போது, பெரியவங்க கேட்டுப்பாங்கதானே!

பென் டிரைவ்

ரொட்டி தயாரிக்கவும் ரோபோ வந்துவிட்டது. இந்த ரோபோ ரொட்டி மேக்கர் (Robot roti-Maker),, கலிஃபோர்னியாவில் இருக்கும் ஜிம்ப்லிஸ்டிக் (Zimplistic) என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.  இந்த மெஷினில் மாவு, தண்ணீர், எண்ணெய் ஆகியவற்றை அதற்கான கன்டெய்னர்களில் போட்டு, ஸ்விட்ச் ஆன் செய்ய வேண்டும். தொடு திரையில் எத்தனை சப்பாத்திகள், எவ்வளவு தடிமன் தேவை என்று செலெக்ட் செய்துவிட்டால் போதும். ஆட்டோமேட்டிக்காக மாவு, தண்ணீர், எண்ணெய்க் கலவை சேர்ந்து, இரண்டு நிமிடங்களில் சப்பாத்தி ரெடி. சுடச்சுட சப்பாத்தியைச் சாப்பிட்டுவிட்டு பள்ளிக்குச் செல்லலாம். இந்த ரோபோ ரொட்டி மேக்கர், 2015-ல் விற்பனைக்கு வரவிருக்கிறது. இதன் விலை, இந்திய மதிப்பில் 36,000 ரூபாய். மெஷினின் விற்பனையும் சுடச்சுட நடக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு