Published:Updated:

மை டியர் ஜீபா...

ஜெயசூர்யா

மை டியர் ஜீபா...

ஜெயசூர்யா

Published:Updated:

''டியர் ஜீபா... ராக் இசை எப்போது தோன்றியது?''

    - எம்.எஸ்.ஜோஸ்லின் வெரோனிகா, சாத்தூர்.

''1940 -களில் தோன்றிய இசை வகை, ராக் அண்ட் ரோல் (Rock and Roll). அமெரிக்க மற்றும் ஆப்பிரிக்க இசைக் கலவை. எலெக்ட்ரிக் கித்தார், பியானோ, டிரம்ஸ் போன்றவற்றைப் பயன்படுத்தி உற்சாகமூட்டும் அதிரடி இசையை உருவாக்குவார்கள். அதிலிருந்து சில மாற்றங்களுடன் தோன்றிய இசை வடிவம்தான் ராக். 1960-ம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் நட்சத்திர ஹோட்டல்கள், பெரிய விழாக்களில் புகழ்பெற்றது. இதில், பாப் ராக், ப்ளூஸ் ராக், ஜாஸ் ராக், ரூட்ஸ் ராக், ஃப்லோக் ராக் (நாட்டுப்புற இசை) எனப் பல வகைகளாக உள்ளன.''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ஹலோ ஜீபா... தீக்கோழிகள் எதற்காக மண்ணுக்குள் தலையை நுழைத்துக்கொள்கின்றன?''

    - ஜி.கே.பிரியதர்ஷினி, சூலூர்.

''தீக்கோழி, சற்றுத் தொலைவில் எதிரி இருப்பதைப் பார்த்துவிட்டால், அதன் கண்ணில் தென்படாமல் இருக்க, தனது தலை மற்றும் நீண்ட கழுத்தைத் தரையோடு வைத்துக்கொள்ளும். அப்படிச் செய்யும்போது, அந்த இடத்தில் இருக்கும் மண், அதன் தலையில் படும். அதைத்தான் மண்ணுக்குள் புதைத்துக்கொள்வதாக தவறாகச் சொல்கிறார்கள்.''

மை டியர் ஜீபா...

''ஹலோ ஜீபா... கோதிக் (Gothic)  என்று ஒரு மொழி இருந்ததாமே அதைப் பற்றி தெரியுமா?''

   - ஏ.எஸ்.பிரியா, சி.பிரித்தி, சென்னை.

''கி.பி. 4-ம் நூற்றாண்டில் கிழக்கு ஜெர்மனியில் இருந்த ஓர் இந்திய - ஐரோப்பிய மொழி. 'கோத்’ என்ற இனத்தினர் பேசினர். இவர்களுக்கும் ஃப்ராங்க்ஸ் (Franks) என்ற பழங்குடியினருக்கும் இடையே ஏற்பட்ட போரில், கோத் இனத்தவர்கள் தோல்வி அடைந்து, நாட்டைவிட்டு வெளியேறினார்கள். பலர், ரோமன் கத்தோலிக்க மதத்தில் சேர்ந்தார்கள். இதனால், கி.பி. 8-ம் நூற்றாண்டில் இந்த மொழி அழிந்துவிட்டது. மொழிபெயர்க்கப்பட்ட பைபிள் புத்தகம், கல்வெட்டுகள் போன்ற ஆவணங்கள் மட்டுமே இப்போது இருக்கின்றன.''  

மை டியர் ஜீபா...

''டியர் ஜீபா... உணவு தாளிக்க உதவும் கடுகு, விஷத்தையும் முறிக்கும் என்பது உண்மையா?''

    - ந.அஸ்வின், அய்யூர் அகரம் (விழுப்புரம்).

''உண்மைதான். 'கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது’ என்பது, உணவுக்காக மட்டும் அல்ல. கால்சியம், இரும்பு, புரதம், நார்ச்சத்து என அந்தச் சிறிய உருண்டையில் இருக்கும் விஷயங்கள் எல்லாமே பெருசு. ஒற்றைத் தலைவலி, சைனஸ் பிரச்னை, சிறுநீரகக் கோளாறுகள் எனப் பலவற்றுக்கும் உதவுகிறது. விஷம் குடித்தவர்களுக்கு முதல் உதவியாக, அரைத்த கடுகை நீரில் கரைத்துக் கொடுக்கலாம். வாந்தி உண்டாகி, விஷத்தை வெளியேற்றும்.''

மை டியர் ஜீபா...

''ஹாய் ஜீபா... நாம் எதற்காக ஏப்பம் விடுகிறோம். அதைத் தடுக்க முடியுமா?''

   - ஜி.ஹரிஹரன், தஞ்சாவூர்.

''ஏப்பம் என்பது உடலில் உண்டாகும் ஓர் இயற்கை நிகழ்வுதான். அதைத்  தடுக்கவோ, அடக்கவோ வேண்டியது இல்லை. நாம் உணவையும் நீரையும் சாப்பிடும்போது, அதனுடன் காற்றும் சேர்ந்து இரைப்பைக்குள் செல்கிறது. அந்தக் காற்றின் அளவு அதிகம் ஆகும்போது, இரைப்பையால் வெளியேற்றப்படும். அதுதான் ஏப்பம். இதை, நாகரிகம் கருதித்தான் தடுக்க நினைக்கிறோம். அவசர அவசரமாகச் சாப்பிடுவதைத் தவிர்த்தாலே, ஏப்பம் அதிகம் ஏற்படாது.''

மை டியர் ஜீபா...

''ஹாய் ஜீபா... மனித உடலில் உள்ள செல்களின் எண்ணிக்கை எத்தனை?''

    - எஸ்.ராஜேந்தர், முசிறி.

''உயிரணு (Cell)  என்பது, விலங்கு மற்றும் தாவரங்கள் அனைத்துக்கும் அடிப்படையான கட்டமைவு. ஓர் உயிரின் வடிவம், ஆற்றல், செயல்திறன் அனைத்துக்கும் காரணம் இந்தச் செல்களே. 10 மைக்ரோமீட்டர் 20 மைக்ரோமீட்டர் அளவுகளில் இருக்கும். கருவணுதான்  உயிரினங்களுக்கு முதல் செல். இந்தக் கருவணு, தாயின் வயிற்றில் பெருகி, பிறக்கும் குழந்தைக்கும் அதன் உடலில் கோடிக் கணக்கில் இருக்கும். முழுமையாக வளர்ந்த ஒரு மனிதனின் உடலில், 100 டிரில்லியன் செல்கள் இருக்கும். அதாவது, 100 லட்சம் கோடி செல்கள்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism