Published:Updated:

லிம்போ ஸ்கேட்டிங் கின்னஸ் புலி !

பி.ஆனந்தி ச.ஹர்ஜினி

லிம்போ ஸ்கேட்டிங் கின்னஸ் புலி !

பி.ஆனந்தி ச.ஹர்ஜினி

Published:Updated:

''நான்தான் மெட்வின் தேவா, உள்ளே வாங்க'' என்று வரவேற்ற அந்த குட்டிப் பையன் படிப்பது 4-ம் வகுப்பு. செய்த சாதனையோ, 'ஏய்... அப்பு’ என வியக்கும் ரகம்.

லிம்போ ஸ்கேட்டிங் கின்னஸ் புலி !

சென்னை, அண்ணா நகர், சி.எஸ்.ஐ. ஈவார்ட் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மெட்வின் தேவா, லிம்போ ஸ்கேட்டிங் எனும் சாகச விளையாட்டில் கின்னஸ் சாதனை படைத்திருக்கும் குட்டிப் புலி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''இந்த லிம்போ ஸ்கேட்டிங் விளையாட்டுக்கு, யோகாவும் ஜிம்னாஸ்டிக்கும் ரொம்ப முக்கியம். அதில், எந்த அளவுக்கு சிறப்பா பயிற்சி எடுக்கிறோமோ, அந்த அளவுக்கு லிம்போவில் சாதிக்கலாம். மெட்வின்  சின்ன வயதிலிருந்தே அதில் ஆர்வமாக இருந்தான். அந்த ஆர்வத்துக்கும் வேகத்துக்கும் கிடைத்த பரிசுதான் இந்த கின்னஸ் சாதனை'' என்று சொல்லும் அப்பா ராஜூ வார்த்தைகளில், பெருமை ஸ்கேட்டிங் செய்கிறது.

ஒவ்வொரு நாளும் காலை 5 மணிக்கு, நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் பயிற்சி. காலை இரண்டு மணி நேரம், மாலை இரண்டு மணி நேரம் என நான்கு மணி நேரம் பயிற்சி. இரண்டரை வயதில் தொடங்கிய பயிற்சியை இன்று வரை செய்கிறார் மெட்வின்.

லிம்போ ஸ்கேட்டிங், ஆபத்து கலந்த த்ரில் விளையாட்டு. கால்கள் இரண்டையும் இரண்டு பக்கமும் முழுதாக விரித்து, கைகளால் கால் நுனியைத் தொட்டவாறு ஸ்கேட்டிங் செய்ய வேண்டும். உயரம் மற்றும் ஸ்கேட்டிங் செய்யும் தூரம், நேரம் ஆகியவற்றின் அடிப்படையில் வெற்றி முடிவு செய்யப்படும்.

''உடலைத் தரைக்கு இணையாக கவிழ்த்துக்கொண்டு ஸ்கேட்டிங் செய்யணும். இதில் சில நிபந்தனைகள் இருக்கு. கைகளைக் கால்களில் இருந்து எடுத்துடக் கூடாது. தரையின் இரண்டு பக்கமும் கோன்களை வெச்சு, அதுக்கு மேலே குச்சிகளை வெச்சிருப்பாங்க. ஃப்ரேம் எனப்படும் இந்தக் குச்சிகள் உடம்பில் படாமல், அதன் கீழாகக் கடக்கணும். கொஞ்சம் தவறினாலும் முகத்தில் அடிபடும். உதடு கிழியலாம், தலையில் அடிபடலாம். அந்தச் சவால்களை எல்லாம் தாண்டி ஜெயிக்கிறதுதான் த்ரில்'' என்று சிரிக்கிறார் மெட்வின்.

லிம்போ ஸ்கேட்டிங் கின்னஸ் புலி !

மெட்வின் படிக்கும் பள்ளியில், ஒரு மணி நேரத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகளை ஸ்கேட்டிங் செயதபடியே நட்டு சாதனை புரிந்துள்ளனர். அண்ணா நகர், ரோலர் ஸ்கேட்டர்ஸ் க்ளப் சார்பில் 105 ஸ்கேட்டர்கள், 100 மணி நேரம் 2,616 கிலோமீட்டர் தூரத்துக்கு மராத்தான் ஸ்கேட்டிங் செய்துள்ளனர். இவற்றில், மெட்வின் பங்களிப்பும் இருக்கிறது.

லிம்போ ஸ்கேட்டிங்கில், 9 அங்குல உயரத்தில் 45 மீட்டர் தூரத்தைக் கடந்து, ஏசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், தமிழ்நாடு புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகியவற்றில் இடம்பெற்றிருக்கிறார் மெட்வின்.

''அதன் தொடர்ச்சியாக, 9 அங்குல உயரத்தில் 10 மீட்டர் மற்றும் 25 மீட்டர் தூரத்தைக் கடந்தேன். 'லிம்போ ஸ்கேட்டிங்கில் மிகவும் சிறிய வயதில் சாதனை படைத்த இந்தியர்’ என்ற கின்னஸ் சாதனை படைத்திருக்கிறேன்'' என்கிறார் மெட்வின்.

லிம்போ ஸ்கேட்டிங் கின்னஸ் புலி !

முந்தைய சாதனையாக, கர்நாடக மாநிலம், பெல்ஹாம் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவர், 10 அங்குலம் உயரத்தில் 10 மீட்டர் தூரத்தைக் கடந்திருக்கிறார்.

''இது ஆரம்பம்தான். கின்னஸ்ல இப்போ, ரெக்கார்டு 55 மீட்டர். நான் 60 மீட்டருக்கு முயற்சி செய்யப்போறேன். அதை ரெக்கார்டு செய்வேன். அப்போ, திரும்பவும் நீங்க என்னைப் பேட்டி எடுக்க வரவேண்டியது இருக்கும்'' என்றார் உற்சாகமாக.

''மெட்வினுக்கு அப்பாவும் மாஸ்டர் மாதிரிதான். அவர் மனநிறைவு அடையும் வரை பயிற்சி எடுத்துட்டே இருப்பான்'' என்று அம்மா ஜாஸ்மின் சொல்ல, கால்களில் சக்கரம், தலையில் ஹெல்மெட் என வந்தார் மெட்வின்.

''மழைக் காலங்களில் ஸ்டேடியத்தில் தண்ணீர் தேங்கிடும். அதுக்காக, தினமும் செய்யிற பயிற்சியை விட்டுட முடியுமா? வீட்டுக்குள்ளேயே செய்வேன். இப்போ, உங்களுக்காக செய்து காட்டுறேன்'' என்று மெட்வின் சொல்ல, வீட்டின் சோஃபா, நாற்காலி என அனைத்தையும் அப்பா ஒதுக்கினார்.

நிமிடங்களில் தயாரான மைதானத்தில் லிம்போ ஸ்கேட்டிங் செய்து, ஆச்சர்யத்தில் மூழ்கடித்தார் மெட்வின்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism