காமிக்ஸ் புத்தகங்கள், கதைப் புத்தகங்கள், நாவல்கள் ஆகியவற்றோடு மின்நூல்கள் எனப்படும் இ-புக்ஸ் பற்றியும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். எல்லா வகையான புத்தகங்களும் மின்நூல் வடிவில் கிடைக்கின்றன. டேப்லெட் எனப்படும் பலகைக் கணினிகளும் ஸ்மார்ட் போன்களிலும்கூட மின்நூல்களைச் சுபலமாகப் படிக்கலாம். மின்நூல்களுக்கு என்று பிரத்யேக இணையதளங்கள் இருக்கின்றன. நாம் படித்து மகிழ உருவாக்கப்பட்டுள்ள மின்நூல் இணையதளம், சில்ரன்ஸ் லைப்ரரி (http://en.childrenslibrary.org)உலகச் சிறுவர்களுக்கான சர்வதேச சிறுவர் டிஜிட்டல் நூலகம் இது.
ஆங்கிலம் உள்ளிட்ட எல்லா மொழிகளிலும் இங்கு புத்தகங்கள் உண்டு. என்றாலும், ஆங்கிலத்தில்தான் அதிகம். சித்திரக் கதைகளில் இருந்து சாகசக் கதைகள், நாவல்கள், தேவதைக் கதைகள் என எல்லா வகையான புத்தகங்களையும் படிக்கலாம். இந்த நூலகம், வாசிப்பு ஆர்வத்துக்கு சரியான தீனி.
இந்தத் தளத்தில் புத்தகங்களைப் படிப்பது எப்படி?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்தத் தளத்தில் நுழைந்ததுமே, உங்களுக்கான புத்தகங்கள் பரிந்துரைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். அவை பிடித்திருந்தால், தேவையானதை க்ளிக் செய்து படிக்கலாம்.

உங்களுக்கு விருப்பமான புத்தகத்தைத் தேட வேண்டும் என்றால், இந்தப் பரிந்துரை பகுதிக்கு மேலே, 'புத்தகத்தை வாசிக்க’ எனும் பகுதிக்குள் நுழைந்து, தேவையான புத்தகத்தைத் தேர்வுசெய்யலாம்.
புத்தகங்களைத் தேர்வுசெய்ய பல வழிகள் இருக்கின்றன. பதிப்பு ஆண்டின் அடிப்படையில் தேர்வுசெய்தல், கற்பனைக் கதைகள், சித்திரக் கதைகள், விலங்குகளின் கதைகள் போன்ற வகைகள், புத்தகங்களை அவற்றின் வண்ணங்களுக்கு ஏற்பவும், சிவப்புப் புத்தகங்கள், ஆரஞ்சுப் புத்தகங்கள் எனத் தேர்வுசெய்யலாம். சமீபத்தில் சேர்க்கப்பட்ட புத்தகங்கள், விருது வென்ற புத்தகங்களைத் தேர்வுசெய்யும் வசதியும் இருக்கிறது.
புத்தகத்தின் அட்டையை க்ளிக் செய்ததும், புத்தகத்தின் வகை, பதிப்பாளர், நூலகத்துக்கு வழங்கப்பட்ட விதம் ஆகிய விவரங்கள் இருக்கும். அருகே, புத்தக அட்டை இருக்கும். அதில் க்ளிக் செய்து, ஒவ்வொரு பக்கமாகப் படிக்கலாம். புத்தகம் டவுண்லோடு ஆகும் வரை, சின்னப் புத்தகப் புழு ஒன்று திரையில் காத்திருப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.

இந்த இணைய நூலகத்தில் நீங்கள் உறுப்பினராகச் சேர்வது சுலபமானது. உறுப்பினராகச் சேராவிட்டாலும் எல்லாப் புத்தகங்களையும் படிக்கலாம். உறுப்பினர் என்றால், கூடுதல் வசதிகள் உண்டு. புத்தகத்தைப் பாதி படித்துக்கொண்டிருக்கும்போது வெளியேற நேர்ந்தால், அடுத்த முறை உள்ளே நுழையும்போது, அதே பக்கத்தில் இருந்து தொடர்ந்து படிக்கலாம். உங்களுக்கு என்று புத்தக அலமாரியை உண்டாக்கி, சேமித்துக்கொள்ளலாம்.
இந்த நூலகம், அமெரிக்காவின் தேசிய விஞ்ஞான ஃபவுண்டேஷன் மியூசியம் மற்றும் நூலக அறிவியலுக்கான கழகம் ஆகியவற்றின் கூட்டு ஆய்வு முயற்சி. மைக்ரோசாஃப்ட் ஆய்வுக்கும் இதில் பங்கு இருக்கிறது. மேரிலேட் பல்கலை ஆய்வுக்குழு மற்றும் இன்டர்நெட் ஆர்க்கேய்வ் அமைப்பு இந்த நூலகத்தை உருவாக்கி உள்ளன.
உலகம் முழுவதும் உள்ள சிறுவர்கள், தாங்கள் வாழும் உலகம் பற்றிப் புத்தகங்கள் மூலம் தெரிந்துகொள்ள, இந்த நூலகம் உருவாக்கப்பட்டுள்ளது.