Published:Updated:

இசையால் பேசும் இளம் குயில்கள் !

வி.எஸ்.சரவணன் படங்கள் : த.ஸ்ரீநிவாசன்

ஜெர்மனியைச் சேர்ந்த புகழ்பெற்ற இசைக் கலைஞர் பீத்தோவன். சிம்பொனி இசையால் உலகையே கட்டிப்போட்டவரால், அவரது இசையைக் கேட்டு ரசிக்க முடியாது. ஏனென்றால், அவருக்கு கேட்கும் திறன் இல்லை.

திருப்பூர் மாவட்டம், கோதபாளையம் பள்ளிக்குச் சென்றால், நூற்றுக்கணக்கான பீத்தோவன்கள் இசையால் நம்மை வரவேற்கிறார்கள். வட்டமாகச் சுழன்று சுழன்று கோலாட்டம் ஆடுகிறார்கள். அத்தனை பேரின் கைகளிலும் இருக்கும் கம்புகள், நேரம் பிசகாமல் தட்டிக்கொள்கின்றன. பறை வாசித்து, அந்த ஆட்டத்தை இன்னும் சுதி ஏற்றிக்கொண்டிருக்கிறான் ஒரு மாணவன். இவர்கள் யாருக்கும் காது கேட்காது; பேசவும் முடியாது. அப்புறம் எப்படி இவ்வளவு நேர்த்தி?

''இசைக்கும்போது ஒவ்வோர் அசைவுக்கும் ஒரு கணக்கு உண்டு. அதுதான் தாளம் தப்பாமல் வருகிறது'' என்றார் பள்ளி நிர்வாக அலுவலர் சித்ரா.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
இசையால் பேசும் இளம் குயில்கள் !

1997-ல் திருப்பூரில் காதுகேளாதோர் தொடக்கப் பள்ளியாக இதனை ஆரம்பித்தவர், முருகசாமி. இப்போது, முருகம்பாளையத்தில் மேல்நிலைப் பள்ளியாக வளர்த்திருக்கிறது. முருகசாமி, மாநில அளவில் ஃபுட்பால் பிளேயர். இவருக்கும் பேசவும் கேட்கவும் முடியாது. இவர், பள்ளிக்குள் நுழைந்ததுமே மாணவர்கள் ஓடிவந்து சூழ்ந்துகொள்கிறார்கள்.

ஒரு மாணவர், சைகையில் மேல் மாடியைக் காட்டி நம்மை அழைத்துச்சென்றார். அங்கே ஒரு வகுப்புக்குள், ஒரு கண்காட்சி. காய்கறியின் படங்களை சார்ட் அட்டையில் வரைந்து, அவற்றைச் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்களையும் எழுதி, சுவரில் ஒட்டியிருந்தார்கள். பார்த்தவுடனே சிரிக்கும்படி கார்ட்டூனாக வரைந்திருக்கிறார்கள். கத்தரிக்காயைத் தொப்பை உள்ள மனிதர் போல வரைந்திருந்ததில் குறும்பு கொப்பளித்தது.

இசையால் பேசும் இளம் குயில்கள் !

இவர்களைப் புகைப்படம் எடுக்கும்போதே, நம் மீது வெளிச்சம். திரும்பிப் பார்த்தால், கையில் கேமராவோடு இருவர். அடுத்த அறைக்கு அழைத்துச்சென்றார்கள். அந்த அறை முழுவதும் விதவிதமான புகைப்படங்கள்.

''இந்தப் பள்ளியில், 8-ம் வகுப்பு முதல் புகைப்படக் கலையின் அடிப்படைகளைக் கற்றுக்கொடுக்கிறோம். அப்படி 12-ம் வகுப்பு முடித்த ஐந்து மாணவர்களோடு, புகழ்பெற்ற காங்கேயம் மாடுகளைப் படம் எடுக்கச் சென்றோம். அங்கே, மாடுகள் மிகக் குறைந்த எண்ணிக்கையில்தான் இருந்தன. அதனால், காங்கேயத்தைச் சுற்றிவந்து, கற்பனைக்கு ஏற்ப புகைப்படங்களை எடுக்கச் சொன்னோம். அந்தப் படங்களே இவை'' என்றார், புகைப்படக் கலையைக் கற்றுக்கொடுக்கும் குமரன்.

கூரான கொம்புகளோடு பார்க்கும் காங்கேயம் மாடுகள், மந்தையாக நிற்கும் ஆடுகள், கிராமத்துப் பாட்டியின் நடை, என ஒவ்வொரு புகைப்படமும் ஒரு கதை சொல்கிறது. கல் உடைக்கும் தொழிற்சாலையில் அறையே தூசு மண்டலமாக இருக்க, எந்தவித பாதுகாப்புச் சாதனங்களும் இல்லாமல் ஒருவர் வேலை செய்யும் புகைப்படம், தொழிலாளியின் வாழ்க்கையைச் சொல்கிறது. இந்தப் படங்களுக்கு, 'உறங்கும் ஒரு கிராமத்தின் மௌனக் கதை’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள்.

இசையால் பேசும் இளம் குயில்கள் !

''ஐந்து நாட்களில், இரண்டு கேமராக்கள் மூலம் 8,000 படங்களை எடுத்திருந்தனர். அதில், 60 படங்களை சென்ற மாதம், சென்னை டிரேட் சென்டரில் நடைபெற்ற புகைப்படக் கண்காட்சியில் வைத்தோம். திரைத் துறையைச் சேர்ந்த பலரும் பாராட்டினர்'' என்று பெருமையோடு சொன்னார், தலைமை ஆசிரியர் சகாயராஜ்.

அந்தச் சாதனை மாணவர்கள் இடம், சினிமா ஷூட்டிங் போல இருந்தது. ஒரு  மாடலை வைத்து புகைப்படம் எடுப்பது, ஜூனியர்  மாணவர்களுக்கு படம் எடுக்கக் கற்றுக்கொடுப்பது என பரபரப்பு. ஆனால், எல்லாமே சைகையில்தான். கட்டை விரலை உயர்த்திக் காட்டியதும், ஷூட்டிங் முடிந்தது என்று கலைகிறார்கள்.

''படிப்பிலும் எங்கள் மாணவர்கள் சாதனை படைக்கிறார்கள். இவர், சென்ற ஆண்டு 10-ம் வகுப்பில் மாநிலத்திலேயே இரண்டாம் இடம் பிடித்தவர்'' என்று அபிநயாவை அறிமுகப்படுத்தினார் சித்ரா. ''காதுகேளாதோர் பள்ளிகளில் இரண்டாம் மொழி கற்றுக்கொடுப்பது இல்லை. ஆனால், எங்கள் பள்ளியில், ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாகக் கற்றுத்தருகிறோம்'' என்றார்.

இசையால் பேசும் இளம் குயில்கள் !

பள்ளிக்கூடம் என்றதுமே நினைவுக்கு வருவது  பிரேயர். இங்கு நடைபெறும் பிரேயரிலும் வாழ்த்துப் பாடல், அன்றாடச் செய்தி படித்தல், ஆசிரியர் உரை எல்லாம் உண்டு. எல்லாமே சைகையில்தான். தேசிய கீதத்தை நான்கு பேர் பாடிக்காட்டியது, பல மடங்கு தேசிய உணர்வை ஊட்டியது.

தங்கள் கனவுகளை பயிற்சியாலும் முயற்சியாலும் வெல்ல, அவர்களின் கண்களில் மின்னியது நம்பிக்கை மின்னல்.

கனவு ஆசிரியருக்கு மரியாதை !

இசையால் பேசும் இளம் குயில்கள் !

சுட்டி விகடன் 31.03.14 இதழில், 'கல்வி ஒளிதரும் சரஸ்வதி டீச்சர்’ என்ற செய்தியை வெளியிட்டிருந்தோம்.  சென்னை, ஜமீன் பல்லாவரம் நகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் பார்வையற்ற அந்த ஆசிரியரின் சிறப்பான பங்களிப்பை வெளியிட்டிருந்தோம். அதைப் படித்த குரோம்பேட்டை விஸ்வேஸ்வரன் தெரு  குடியிருப்பு நலச் சங்கம் அவருக்கு சிறப்புச் செய்ய, தங்களது சுதந்திர தின நிகழ்ச்சிக்கு அழைத்து, கொடியேற்ற வைத்திருக்கிறார்கள். கனவு ஆசிரியருக்கு சிறப்புச் செய்தவர்களுக்கு ஒரு சல்யூட்!