Published:Updated:

எட்டடி டீச்சர்ஸ்...16 அடி பசங்க !

செம ஜாலி ஆசிரியர் தினம்பா.குமரேசன், சி.சந்திரசேகரன் படங்கள் : அ.நவீன் ராஜ், ந.ராஷமுருகன்

''எங்களுக்கு, ஆசிரியர்கள் மேலே ரொம்பவே மதிப்பு, மரியாதை இருக்கு. அவங்க பாராட்டுற மாதிரிதான் நடந்துக்கிறோம். அதுக்காக, ஆசிரியர் தினச் சிறப்பைச் சொல்ல, சீரியஸான ஒரு கட்டுரை, எதுகைமோனையோடு ஒரு கவிதை எனக் கேட்காதீங்க'' என்றார்கள் மதுரை, மீனாட்சி மெட்ரிக் பள்ளி மாணவர்கள்.

''அடடா... சுட்டி விகடனுக்கு ஆசிரியர் தினத்துக்காக கட்டுரை கொடுக்கிறதா சொல்லிட்டு வந்திருக்கோமே. வேற எப்படி கொண்டாடலாம்னு நீங்களே சொல்லுங்க'' என்றோம்.

''பெஸ்ட் ஃப்ரெண்டு மாதிரி பழகும் அவங்களோடு ஜாலியா கலாட்டா பண்றோம். அதையே போடுவீங்களா?'' என்று கேட்டார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சம்மதம் சொன்னதும், ''இதோ எங்களுக்கு பிடிச்ச ஆசிரியர்களைத் தூக்கிட்டு வர்றோம்'' என்றபடி உற்சாகமாக ஓடினார்கள். சில நிமிடங்களில் சில ஆசிரியர்களுடன் வந்தார்கள்.

எல்லோரும் ஒரே நேரத்தில் தங்கள் நெஞ்சைத் தொட்டு, ''இங்கே என்ன சொல்லுது... இங்கே என்ன சொல்லுதுனா, இந்த கணேஷ்பாபு சார் எங்க கணக்கு ஆசிரியர். கானாவுக்கு கானா மாதிரி, பெயரிலும் எவ்வளவு பொருத்தம் பார்த்தீங்களா. இதில் இருந்தே இவர் எங்களோடு எவ்வளவு பொருத்தமா இருப்பார்னு புரிஞ்சுக்கங்க'' என்றார்கள்.

எட்டடி டீச்சர்ஸ்...16 அடி பசங்க !

''பாடம் நடத்துறப்ப அடிக்கடி, 'கான்செப்ட் புரிஞ்சா, ஃபார்முலா தெரிஞ்சா’ எனச் சொல்லுவார். வாரத்துக்கு எத்தனை முறை இந்த வார்த்தையை யூஸ் பண்றார்னு கண்டுபிடிக்க முடிவு செய்தோம். இதுக்காக, இவர் போகிற ஒவ்வொரு கிளாஸிலும் ஒரு புள்ளிவிவரப் புலியை நியமிச்சு, கணக்கு எடுக்கவெச்சோம். ஒருநாள், அதை அவர்கிட்டே காட்டினதும், 'அடப் பாவிகளா’ எனத் தலையில் அடிச்சுக் கிட்டார்'' என்றார்கள்.

''அந்தப் புள்ளிவிவரத்தைப் பார்த்ததில் இருந்து வீட்டுல ஏதாவது பேசுறதா இருந்தாலும், யாராவது பக்கத்துல நோட் பண்றாங்களானு கண்கள் தானாகவே தேடுது'' என்று பரிதாபமாகச் சொன்னார், ஆசிரியர் கணேஷ்பாபு.

''இவருக்குப் போட்டியா, இன்னொரு கணக்கு ஆசிரியர் இருக்கார். புலிப்பாண்டி... ஸாரி, ஸாரி ராஜபாண்டி. 'நான் கிளாஸ்ல இருக்கிறப்ப சேட்டை செய்யுங்க. ஆனா, கிளாஸ்ல இல்லாதப்ப அமைதியா இருக்கணும்’ இதுதான் எங்களுக்கு இவர் சொன்ன முக்கிய விஷயம். ஆசிரியர் சொல்லே வேத வாக்கு. இன்றைக்கு வரைக்கும் அதைக் கடைபிடிச்சு சேட்டைக்காரங்களா இருக்கோம். சேட்டையோடு ஜாலியா கணக்குகளையும் மனசுல இறக்கிடுவார்'' என்ற மாணவர்கள், அவருடன் சேர்ந்து 'மான் கராத்தே’ ஸ்டைல் காட்டினார்கள்.

அறிவியல் டீச்சர் ஹேமலதா, தமிழ் அம்மா லட்சுமி, சகோதரிகளான விஜி மற்றும் சங்கீதப் பிரியா என வரிசையாக அழைத்துவந்து அதகளம் செய்தார்கள். கடைசியாக, வைஸ் பிரின்ஸிபால் தமிழ்ச்செல்வி அவர்களையும் அழைத்துவந்து கலாட்டாக் கச்சேரியில் சேர்த்தார்கள்.

எட்டடி டீச்சர்ஸ்...16 அடி பசங்க !

''இவங்க வைஸ் பிரின்ஸிபால். மத்தவங்ககிட்டே பண்ற மாதிரி சேட்டை பண்றது ரொம்பத் தப்பு. இவங்களுக்கு நாங்க எந்த அளவுக்கு தூணா, துணையா இருக்கோம்னு வார்த்தைகளால சொல்றதைவிட, இமேஜாகக் காட்ட விரும்புறோம். அதை போட்டோவா எடுத்துக்கங்க'' என்று சொன்னார்கள்.

''மேம்... இப்படி வந்து நில்லுங்க'' என்று சொல்லி நிற்கவைத்துவிட்டு அங்கும் இங்கும் ஓடினார்கள். ஸ்கேல், புத்தகம் எனப் பலவற்றை எடுத்துவந்தார்கள்.

''ஏய்... என்னை வெச்சு காமெடி ஏதும் செய்யப்போறீங்களா?'' என்று கேட்டார் தமிழ்ச்செல்வி.

அவரை நிற்கவைத்து, அவருக்குப் பின்னால் பல கைகளை உருவாக்கி, ''இப்படித்தான் இந்த ஸ்கூலில்  பம்பரமா சுத்திவந்து பல வேலைகளைச் செய்வாங்க. இவங்களுக்கு இருக்கிறது ரெண்டு கைகளா, 20 கைகளா என எங்களுக்கு சந்தேகமாவே இருக்கும்'' என்றார்கள்.

''இன்னும் சில டீச்சர்ஸ் வெட்கப்பட்டுக்கிட்டு, அங்கே இங்கே ஒளிஞ்சு எஸ்கேப் ஆகறாங்க. கொஞ்சம் வெயிட் பண்ணினா, அவங்களையும் கூட்டிட்டு வருவோம்'' என்றார்கள்.

இப்பவே நம்ம காதுகளில் 'கொய்ய்ங்’ சத்தத்தைத் தவிர, வேற எதுவும் கேட்கலை. அதனால், 'போதும் போதும்’ என்று சொல்லிவிட்டு ஓடிவந்துட்டோம்.

இதேபோல, திருப்பூர் ஸ்ரீ விக்னேஷ்வரா உயர்நிலைப் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவர்களிடம் சிக்கியவர், ஷெகினா டீச்சர்.

எட்டடி டீச்சர்ஸ்...16 அடி பசங்க !

''பரமார்த்த குருவும் சீடர்களும் மாதிரி இவங்களுக்கு நாங்க ஏழு பேரும் சீடர்கள். மேம் சூப்பரா டான்ஸ் ஆடுவாங்க, செமையா கேட் வாக் பண்ணுவாங்க, பாடம் நடத்தும்போது, அவங்க முகத்தைப் பார்க்கணுமே. அடடா... முகம் மட்டும் பரத நாட்டியம் ஆடும்'' என்று சொன்ன ஷர்மிளாவின் காதுகளைப் பிடித்துச் செல்லமாகத் திருகினார் டீச்சர்.

டீச்சரின் பல்வேறு ரியாக்ஷன்களை நடித்துக் காட்டச் சொன்னார்கள். பிறகு, ''மேம், உங்க பெருமைகளை நாங்க சொல்லிட்டோம். எங்களைப் பற்றி நாங்களே சொல்ல, தன்னடக்கம் தடுக்குது. நீங்களே சொல்லுங்க'' என்று கைகளைக் கட்டிக்கொண்டு பணிவாகச் சொன்னான் சதீஸ் ரோஷன்.

''சொல்றேன். உங்க அட்டகாசம் சுட்டி விகடன் மூலமா பெற்றோருக்குத் தெரியட்டும்'' என்ற டீச்சர், ஒவ்வொருவர் செய்யும் சேட்டைகளையும் அடுக்கினார்.

''மதுமிதா இங்கிலீஷ் பேசினா, யாரா இருந்தாலும் மிரண்டுடுவாங்க. ஒருமுறை செமினாரில் திணறித் திணறிப் பேசிவிட்டு, 'நான் பேசினது யாருக்காவது புரியலைனா உங்க ஆங்கிலத் திறமையைக் குறைவா நினைச்சு ஃபீல் பண்ணாதீங்க. ஏன்னா, எனக்கே நான் பேசினதுல பாதி புரியலைனு சொல்லிக் கடுப்பேத்தினா'' என்றதும், ''எஸ் ஐ யம் மீ'' என்று முன்னால் வந்தார் மதுமிதா.

எட்டடி டீச்சர்ஸ்...16 அடி பசங்க !

''இவர், மிஸ்டர் சதீஸ் ரோஷன். அரிச்சந்திரன் வீட்டுக்கு ஆப்போசிட். ஒருமுறை ஸ்கூலுக்கு லீவ். கேட்டதுக்கு, 'பழனிக்கு பாதயாத்திரை போய்ட்டேன் மிஸ்’னு சொன்னான். இவன், அக்காவைத் தனியாக் கூப்பிட்டு விசாரிச்சேன். தம்பியைக் காப்பாத்த நினைச்சு, 'அவனுக்கு ரொம்ப வயிறு வலி மிஸ்’னு சொல்லி மாட்டிக்கிட்டா'' என்று ஒவ்வொருவரின் சேட்டைகளையும் சொன்னவர், ''ஆனாலும் இவங்க எல்லோருமே படிப்புல புலிங்க. நான் எட்டடி பாய்ந்தால் இவங்க 16 அடி பாய்வாங்க'' என்றார்.

''பார்த்தீங்களா, இதான் ஆசிரியரின் அற்புதக் குணம். எவ்வளவு நெகட்டிவ் சொன்னாலும், கிளைமாக்ஸ்ல திருந்துற வில்லன் மாதிரி, கடைசியில் நல்லபடியா சொல்லி முடிக்கிறாங்க பாருங்க'' என்றவர்களை விரட்டிச் சென்றார் ஷெகினா டீச்சர்.