Published:Updated:

மின்னல் மீன் தனுஷ் !

வி.எஸ்.சரவணன் படங்கள் : ஷெ.வேங்கடராஜ்

மருந்து, ஒருவரை சாதனையாளராக மாற்றுமா?

''ஓ... மாற்றுமே'' என்கிறார், தேசிய அளவு நீச்சல் போட்டியில் நான்கு தங்கப் பதக்கங்களைப் பெற்ற தனுஷ். வேளச்சேரி, அக்ஷயா மெட்ரிகுலேஷன் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கிறார்.

மருத்துவரான தனுஷின் அம்மா விஜயா, ''தனுஷ் நான்கு வயது வரை சுவாசப் பிரச்னையால் அவதிப்பட்டான். அப்போது, 'தனுஷை நீச்சல் பயிற்சிக்கு அனுப்புங்கள். அதுதான்  சரியான மருந்து’ என்று ஓர் இயற்கை மருத்துவர் கூறினார். அதுவே அவனை சாதனையாளராக்கி இருக்கிறது'' என்றார் பெருமையோடு.

நாலரை வயதில் தொடங்கியது நீச்சல் பயிற்சி. ''ஆரம்பத்தில், எங்கள் பயிற்சியாளர் வீரபத்திரன் சாரைப் பார்த்தாலே பயமா இருக்கும். அவர் என் பயத்தைப் போக்கி, அன்பாகப் பழகினார். நான் தேசிய அளவில் சாதனை பெற அவர்தான் காரணம். அப்புறம், தாத்தாவும் பாட்டியும். அதில் அழகான ஃப்ளாஷ்பேக் இருக்கு'' என்று சிரிக்கிறார் தனுஷ்.

மின்னல் மீன் தனுஷ் !

''தனுஷின் அம்மா ஸ்கூல்ல படிக்கும்போது, மாநில அளவு அத்லெட்டிக் போட்டிக்குத் தேர்வானாங்க. அப்போ, சென்னைக்கு அனுப்ப பெற்றோர் மறுத்துட்டாங்களாம். அதுக்குப் பரிகாரமா, இப்ப அவங்களே இவனோட விளையாட்டு விஷயங்களுக்கு  ரொம்ப உதவியாக இருக்காங்க'' என்றார் அப்பா சுரேஷ்.

தனுஷ் வீட்டில் ஒரு வீராங்கனையும் இருக்கிறார். தனுஷின் தங்கை ஜெயந்தவீ, ஜிம்னாஸ்டிக்கில் மாநில அளவில் தேர்வுபெற்றவர். சரி.. தனுஷ் செய்த சாதனையைப் பற்றி இன்னும் முழுசாக சொல்லவில்லையே என்றுதானே கேட்கிறீர்கள்?

''தனுஷ், முழு அர்ப்பணிப்பு உள்ள மாணவர். போபாலில் நடந்த தேசிய நீச்சல் போட்டியில் 50 மீட்டர், 100 மீட்டர், 200 மீட்டர் போட்டிகளில் பிரீஸ்ட் ஸ்ட்ரோக் முறையில் நீந்தி, தங்கப் பதக்கம் பெற்றுள்ளார். இதில் 200 மீட்டர் தூரத்தை 1:07:94 விநாடிகளில் கடந்தார். இது ஒரு தேசிய சாதனை. இதற்கு முன், இந்த தூரத்தை கர்நாடகாவைச் சேர்ந்த லிக்கித் 1:08:66 விநாடிகளில் நீந்திக் கடந்ததை, தனுஷ்  முறியடித்திருக்கிறார்'' என்று பூரிப்புடன் சொன்னார், பயிற்சியாளர் வீரபத்திரன்.

மின்னல் மீன் தனுஷ் !

50 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் போட்டியிலும் தங்கப் பதக்கம் பெற்றுள்ள தனுஷ், இதுவரை 19 முறை சாம்பியன்ஷிப் வென்றிருக்கிறார். 23 முறை அதற்கு முந்தைய சாதனையை முறியடித்திருக்கிறார். இதில், மூன்று முறை தேசிய அளவிலும் ஒருமுறை தென்னிந்திய அளவிலும் 19 முறை மாநில அளவிலும் சாதனைகள் செய்திருக்கிறார்.

''சாதனைனு சொல்லாதீங்க அங்கிள். இன்னும் அந்த வார்த்தையை நான் தொட்டதா நினைக்கலை. என்னோட இலக்கு, காமன்வெல்த் மற்றும் ஒலிம்பிக். அதற்கான பயிற்சியில் இருக்கேன். அதில் ஜெயிக்கும்போது சாதனைனு எழுதுங்க'' என்று சர்ரென நீச்சல் குளத்தில் டைவ் அடித்து, மின்னல் மீனாக நீந்தினார் தனுஷ்.

மின்னல் மீன் தனுஷ் !
அடுத்த கட்டுரைக்கு