Published:Updated:

மீண்டும் வருவீர்களா ராபின் ?

சுப.தமிழினியன்

சில வாரங்களுக்கு முன்பு, சான்ஃப்ரான்சிஸ்கோ விலங்கியல் பூங்காவில் குழந்தைகளுக்கு கதை சொல்லிக் கொண்டிருந்தார் அவர். கதையின் ஒவ்வொரு வாக்கியத்தை முடிக்கும்போதும் குழந்தைகள் சிரித்து குதூகலித்தார்கள். அதுதான் அவரது வாழ்க்கையின் கடைசி நிகழ்ச்சியாக அமைந்தது.

குழந்தைகளுக்கான கதை சொல்லியாகவும், குழந்தைகளுக்கான பல திரைப்படங்களில் நடித்தவராகவுமே அவர் இருந்தார். கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி இந்த உலகை விட்டு விடைபெற்ற அந்தக் குழந்தைகளின் கதாநாயகன், ராபின் வில்லியம்ஸ். 'ஜுமான்ஜி’ திரைப்படத்தின் நாயகன் என்று சொன்னால், உடனே அந்த உற்சாக முகம் நினைவுக்கு வரும்.

புகழ்பெற்ற கார்ட்டூன் கதாபாத்திரமான பாப்பாய் வேடத்தில் நடித்தவர். 'ஜாக்’, 'ஜூமான்ஜி’, 'ஹூக்’, நைட் அட் த மியூசியம் என்று இவரது பல படங்கள் சுட்டிகளின் ஃபேவரைட். இவரது 'டெட் பொயட்ஸ் சொசைட்டி’ படம் பார்த்தால், ராபின் வில்லியம்ஸ் போல நமக்கு ஆசிரியர் கிடைக்க மாட்டாரா எனத் தோன்றும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மீண்டும் வருவீர்களா ராபின் ?

ராபின் வில்லியம்ஸ், சிறு வயதில் மிகவும் அமைதியான, கூச்ச சுபாவமான சிறுவன். பள்ளியில் நாடகங்களில் பங்குபெறத் துவங்கிய பிறகே, கொஞ்சம் கொஞ்சமாக கூச்ச சுபாவம் விலகியது. பள்ளிப் படிப்பின் கடைசி வருடத்தில், ஒவ்வொருவரும் மற்ற மாணவர்கள் பற்றி கருத்து சொல்ல வேண்டும் என்றபோது, ராபின் வில்லியம்ஸ் பற்றி சிலர் கூறியிருந்தது... இவன் தேற மாட்டான், இவனால் எதையும் சாதிக்க முடியாது.

நடிப்புப் பயிற்சிக்கான கல்லூரியில் ராபின் வில்லியம்ஸ் சேர்ந்தார். படிப்பை முழுதாக முடிப்பதற்கு முன்பே கல்லூரியை விட்டு வெளியேறிவிட்டார். ஏன் தெரியுமா? அந்தக் கல்லூரியின் ஆசிரியர்களில் ஒருவர், ''இந்தக் கல்லூரியில் கற்றுக்கொள்ள ராபினுக்கு இனி எதுவும் இல்லை’ என்றார். இன்னொரு ஆசிரியர், ''ராபின் ஓர் அதிபுத்திசாலி. இங்கே கற்றுக்கொடுக்கும் பழைமையான முறைகள் அவனுக்கு ஏற்றதல்ல'' என்றார்.

மீண்டும் வருவீர்களா ராபின் ?

தேற மாட்டான், எதுவும் சாதிக்க முடியாது என்று கேலி செய்யப்பட்ட ராபின் வில்லியம்ஸ், மேடைப் மேடைகளில் கேட்பவர்கள் வயிறு புண்ணாகும் அளவுக்கு சிரிக்கவைத்தார். திரைத் துறையிலும் சாதித்தார். நகைச்சுவைத் திரைப்படங்கள் மட்டுமே கைவரும் என்று சொல்ல முடியாதபடி பலவித கதாபாத்திரங்களில் நடித்தார். 'குட் வில் ஹன்ட்டிங்’ என்ற திரைப்படத்தில், உளவியல் ஆலோசகராக நடித்து, ஆஸ்கர் விருதைப் பெற்றார்.

இப்படி எல்லோரையும் கவர்ந்த ராபின் வில்லியம்ஸ், மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்டு மறைந்துவிட்டார்.

'ஜுமான்ஜி’ படத்தில் பகடையை உருட்டி, மாய உலக உயிரினங்களை வரவைப்பது போல, ராபினை மீண்டும் வரவைத்துவிட்டால்..?’ என்ற ஏக்கம், உலகச் சுட்டிகளின் மனதில் தோன்றுகிறது.