Published:Updated:

மை டியர் ஜீபா !

ஜெயசூர்யா

''ஹாய் ஜீபா... அன்டார்ட்டிகாவில் மழையே பெய்யாது என்கிறார்கள். ஆனால், உலகின் 70     சதவிகித நீர் அங்கேதான் உள்ளது என்கிறார்கள். ஒரே குழப்பமாக உள்ளதே...''

- சு.வே.இலக்கியா, வீரவநல்லூர்.

''நீரையும் மழையையும் ஒன்றாக நினைத்துக்கொண்டதால், உனக்கு இந்தக் குழப்பம் இலக்கியா. நீர் என்பது ஒரு சேர்மம். அதாவது, கூட்டுப் பொருள். இரண்டு ஹைட்ரஜன் அணுக்களும் ஓர் ஆக்ஸிஜன் அணுவும் சேர்ந்தது (H2O). இது, திரவம், திடம் (பனிக்கட்டி), வாயு (நீராவி) போன்ற வடிவங்களில் பூமியில் உள்ளது. பூமியிலிருந்து நீராவியாக மேலே சென்று, மீண்டும் திரவமாக வருகிற ஒரு செயலின் பெயர்தான் மழை. அன்டார்ட்டிகா, பனிக்கட்டியால் ஆன ஒரு பாலைவனம். நீரானது இந்தப் பகுதியை நெருங்கும் முன்பே, ஆவியாகிவிடும். எனவே, இங்கே மழை என்ற நிகழ்வு நடக்காது. அங்கே இருக்கும் நீர், வெப்ப அழுத்தத்தால் உருவாவது.''

மை டியர் ஜீபா !

''டியர் ஜீபா... கரடிகள் தேனை விரும்பிச் சாப்பிடும் என்பது உண்மையா?''

    - வி.சஞ்ஜனா, ஈரோடு.

''உண்மைதான் சஞ்ஜனா. கரடி ஓர் அனைத்துண்ணி. மாமிசம், பழங்கள், கொட்டைகள் என எல்லாவற்றையும் சாப்பிடும். மனிதர்களைவிட அதிகமாகவே தாவரவியல் அறிவு கரடிக்கு உண்டு. எந்தப் பருவத்தில் எந்தப் பழம் கிடைக்கும் என்பதைச் சரியாக அறிந்து, அந்த இடத்துக்குச் சென்று ருசித்துச் சாப்பிடும்.''

''ஹலோ ஜீபா... ராமாயணம் மற்றும் மகாபாரதக் கதைகள், நடந்த சம்பவங்களா, கற்பனைப் படைப்பா?''

- கே.பி.தீப்தி, தூத்துக்குடி.

மை டியர் ஜீபா !

''இதற்கு, உறுதியான பதிலைச் சொல்வது கஷ்டம் தீப்தி. ராமாயணம், கி.மு.400-ம் ஆண்டில் வால்மீகி என்பவரால் இயற்றப்பட்டது. மகாபாரதம், கி.மு.8-ம் நூற்றாண்டில் வியாசர் என்ற முனிவரால் எழுதப்பட்டு, பல்வேறு காலகட்டங்களில் மேலும் சில விஷயங்கள் சேர்க்கப்பட்டு விரிவடைந்தது. உலகம் முழுவதுமே இதுபோன்ற மத நம்பிக்கைப்  படைப்புகள் உள்ளன. அப்போது வாழ்ந்த மன்னர்கள், அவர்களின் பரம்பரைகள் பற்றி எழுதப்பட்டவை. முழுவதும் கற்பனை என்று சொல்ல முடியாது. எழுதியவர்கள், தங்களின் எழுத்தாற்றலைக் காட்டுவதற்காகக் கொஞ்சம் கற்பனைகளைச் சேர்த்திருக்கலாம்.''

''ஹலோ ஜீபா... காளான் சாப்பிடுவதால் என்ன நன்மை?''

- எஸ்.ருக்சானா பானு, அக்காள்மடம்.

''காளான்களில் லட்சம் வகைகள் உள்ளன. இவை, உணவுக் காளான்கள், உண்ணத் தகாதவை, விஷக் காளான்கள் என்று பிரிக்கப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் ஏழைகளின் உணவாக இருந்தது. மற்ற காய்கறிகளைவிட இதில் அதிக அளவு 'வைட்டமின் D’ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது, உலகம் முழுவதுமே பண்ணைகள் மூலம் உணவுக் காளான்கள் பயிரிடப்பட்டு,  விரும்பி உண்ணப்படுகின்றன.''

மை டியர் ஜீபா !

''டியர் ஜீபா... ஜுராசிக் காலம் எப்படி அழிந்தது?''

- டி.சதீஷ் குமார், திருப்பூர்.

''ஜுராசிக் காலம், ஒரே நாளில் அழிந்துவிடவில்லை சதீஷ். அழிந்தது என்பதைவிட மாறியது என்பதே சரியான சொல். பூமி தோன்றியது முதல் படிப்படியாக ஏற்படும் மாற்றங்கள், அப்போது வாழும் உயிரினங்கள், பரிணாம வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில், காலங்களைப் பிரித்துப் பெயர் வைத்திருக்கிறார்கள். ஒரு காலத்துக்கும் இன்னொரு காலத்துக்கும் இடையில் பல மில்லியன் ஆண்டுகள் உள்ளன. ஜுராசிக் காலம் (Jurassic period) என்பதும் அப்படித்தான். ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளின் சந்திப்பு எல்லையாக இருப்பது, ஜுரா மலை (Jura Mountains).அங்கு கிடைத்த சில படிமங்களின் அடிப்படையில் அந்தக் காலம் பற்றி அறிந்துகொண்டதால், ஜுராசிக் என்ற பெயர் வைக்கப்பட்டது.''

மை டியர் ஜீபா !
அடுத்த கட்டுரைக்கு