Published:Updated:

திருக்குறளுக்காக உண்ணாவிரதம்!

த.க.தமிழ் பாரதன், படங்கள்: ம.பார்த்திபன்

திருக்குறள் மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாக, தனது பெயரையே 'குறள்மகன்’ என்று மாற்றிக்கொண்டு, பல்வேறு விழிப்பு உணர்வு விஷயங்களைச் சத்தமின்றி செய்துவருகிறார் சுபாஷ் சந்திர போஸ்.

திருக்குறளுக்காக உண்ணாவிரதம்!

திருவாரூரில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றால், வரவேற்பறையில் பிரமாண்டமான வள்ளுவர் வரவேற்கிறார். அழகாக இரு கரம் கூப்பி வணக்கம் சொன்ன குறள்மகன், ''நான் எட்டாம் வகுப்பு படிக்கிறேன். என் தந்தை, தாய் இருவருக்கும் தமிழ்ப் பற்று அதிகம். பள்ளியில் சேர்வதற்கு முன்பே, எனக்கு திருக்குறளைக் கற்றுக்கொடுத்தனர். வாழ்வியல் கருத்துக்களை நுணுக்கமாகச் சொல்லும் திருக்குறள் என் மனதில்  பதிந்துவிட்டது. திருவாரூர் மாவட்ட ஆட்சியராக இருந்த சந்திரசேகரன் முன்னிலையில் 1,330 குறட்பாக்களையும் பொருளோடு சொன்னேன். 'உன் திறமையை மக்களுக்குப் பயன்படும் விதமாக செய்’ என்றார். அந்த ஊக்கம்தான், என்னை மேலும் செயல்பட வைத்தது'' என்று தூய தமிழில் பேசுகிறார்.

முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதிமுன்னிலையில், குறட்பாக்களைக் கூறிப் பாராட்டுப் பெற்ற குறள்மகன், திருவாரூர் மாவட்டத்தில் 306 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக திருக்குறள் புத்தகங்களை வழங்கி இருக்கிறார்.

''மொழிகளில் தொன்மையான தமிழ் மொழிக்குப் பெருமை சேர்க்கும் திருக்குறளை

திருக்குறளுக்காக உண்ணாவிரதம்!

அனைவரும்  தொடர்ந்து கற்க வேண்டும். அதற்காக, 'இல்லம் தோறும் வள்ளுவர், உள்ளம் தோறும் குறள்’ என்ற திட்டம் தயாரித்தேன். திருவாரூர் பகுதியில் பல வீடுகளுக்குச் சென்று திருவள்ளுவர் சுவரொட்டி தந்து, திறக்குறளின் பெருமைகளைச் சொன்னேன்'' என்ற குறள்மகன், அடுத்து சொன்னது ஆச்சர்யம்.

7 அடி நீளம், 4 1/2 அடி அகலத்தில் பிரமாண்டமான திருக்குறள் நூல் ஒன்றைத் தயாரித்து, உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் வெளிட்டிருக்கிறார்.

''திருக்குறள் விழிப்புஉணர்வுக்காக சென்னை மெரினா கடற்கரையில் ஒரு நாள் உண்ணாநோன்பு  இருந்தேன். அப்போதுதான் மவுலிவாக்கம் விபத்து நடந்தது. அந்தப் பரபரப்பில் இந்த விஷயம் வெளியாகவில்லை'' என்றவர் குரலில் வருத்தம்.

தமிழ் வளர்ச்சித் துறையின் விருது உட்பட பல விருதுகளை வாங்கி இருக்கும் குறள்மகன், ''தமிழுக்கும் திருக்குறளுக்கும் இன்னும் நிறையச் செய்ய வேண்டும். திருக்குறள் தெரியாத தமிழன் யாரும் இருக்கக் கூடாது என்பதுதான் என் ஆசை'' என்கிறார் குறள்மகன்.

அடுத்த கட்டுரைக்கு