Published:Updated:

செவ்வாய் தொட்டுவிடும் தூரம்!

த.வி.வெங்கடேஸ்வரன்

மங்கள்யான் நினைவு இருக்கிறதா நண்பர்களே... செவ்வாய் கிரகம் நோக்கி கடந்த வருடம் ஏவப்பட்ட மங்கள்யான் விண்கலத்துக்கு, வரும் செப்டம்பர் 24  முக்கியமான நாள்.

2013 நவம்பர் ஐந்தாம் தேதி விண்ணில் ஏவப்பட்ட மங்கள்யான், செவ்வாய் கிரகத்தை நோக்கி 68 கோடி கிலோமீட்டர் தொலைவு சென்றுவிட்டது. இன்னும் 40 லட்சம் கிலோமீட்டர் பயணித்து, செவ்வாயை அடையும். அந்த சவால் நாள்தான் செப்டம்பர் 24.

பூமியும் செவ்வாயும் வானில் ஒரே இடத்தில் இருக்காது. இரண்டும் சூரியனைச் சுற்றி வருபவை.  செவ்வாயை நோக்கி ஒரு விண்கலத்தை ஏவினால், 10 மாதங்கள் கடந்து அங்கே விண்கலம் செல்லும்போது, செவ்வாய் நகர்ந்துபோயிருக்கும். எனவே, இலக்கை அடையும் நாளைத் தீர்மானித்து, அந்த நாளில்... செவ்வாய் அதன் பாதையில் எங்கே வரும் என்பதைத் துல்லியமாகக் கணித்து அனுப்ப வேண்டும். அப்படித்தான் மங்கள்யான் அனுப்பப்பட்டிருக்கிறது.

செவ்வாய் தொட்டுவிடும் தூரம்!

விண்கலம் செல்லும்போது, அதன் மீது வேறு விண்பொருள்கள் தாக்கம் செலுத்தினாலும் பாதையில் மாற்றம் நிகழ்ந்துவிடும். பல கோடி கிலோமீட்டர் தொலைவில் இருக்கும்போது விண்கலத்தில் ஏற்படும் பழுதை, பூமியில் இருந்தே சரிசெய்ய வேண்டும். இதையும் முன்கூட்டியே திட்டமிட வேண்டும். எனவே, மங்கள்யானின் பயண நேரமான 300 நாட்களில் நான்கு முறை பழுது நீக்கம் செய்யத் திட்டமிடப்பட்டது. இதில், இரண்டு முறைதான் பழுது நீக்கம் தேவைப்பட்டது. மங்கள்யான், அவ்வளவு துல்லியமாக செவ்வாய் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

செவ்வாயை அடைந்த பிறகும் சவால்கள் காத்திருக்கின்றன. மணிக்கு 80,000 கிலோமீட்டர் வேகத்தில் ஏவப்பட்ட மங்கள்யான், செவ்வாயில் மோதக் கூடாது. மாறாக, மெள்ள மெள்ள அதன் ஈர்ப்பு புலத்தில் மிதந்து சென்று, செயற்கைக் கோளாக மாற வேண்டும். எனவே, செவ்வாயின் தரைப்பரப்பில் சுமார் 700 கிலோமீட்டர் உயரத்தில் இருக்கும்போது, மங்கள்யான் வேகம் குறைக்கப்பட வேண்டும். இல்லையென்றால், செவ்வாயின் பிடியில் இருந்து அது நழுவிவிடும்.

செவ்வாய்க்கு அருகில் மங்கள்யான் சென்று அடையும்போது, ராக்கெட்கள் இயக்கப்பட்டு அதன் வேகம் மட்டுப்படுத்தப்படும். மிக மிகத் துல்லியமாக இயக்கப்படவேண்டிய இந்த ராக்கெட் சாகசத்தை, இஸ்ரோ விஞ்ஞானிகள் நடத்தவிருக்கிறார்கள்.

செப்டம்பர் 24 காலை ஏழு மணிக்கு, பூமியில் இருந்து சுமார் 20 கோடி கிலோமீட்டர் தொலைவில் மங்கள்யான் இருக்கும். அவ்வளவு தொலைவில் உள்ள விண்கலத்தை, ரிமோட்டில் காரை இயக்குவது போல, இங்கிருந்து இஸ்ரோ விஞ்ஞானிகள்  இயக்கப்போகிறார்கள்.

என்ன செய்யப்போகிறது மங்கள்யான்? செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக இறங்குமா? இந்திய விஞ்ஞானிகளின் திறமையை நிரூபிக்குமா?

அந்த திக்... த்ரில்... நிமிடங்களை எதிர்நோக்கி உலகமே காத்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு