Published:Updated:

ஆளே இல்லாத அசத்தல் கடை !

சி.சந்திரசேகரன் படங்கள் : நா.ராஜமுருகன்

‘‘மாணவப் பருவத்தில் மனதில் விதைக்கப்படும் ஒழுக்கம், நேர்மை போன்ற நற்குண விதைகளே, வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கும் சமூகத்துக்கும் பயன்தரும் கனிகளை அளிக்கும். அதற்கான வித்தியாசமான முயற்சிதான் இந்த ஆள் இல்லாத கடை” என்கிறார் தலைமையாசிரியர் வைரமணி.

மதுரை மாவட்டம், செக்கானூரணி அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளிக்குள் அந்தக் காட்சியைப் பார்த்தபோது, அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. பள்ளி மைதானத்தின் ஒரு பக்கமாக, பெரிய டேபிள் போடப்பட்டிருந்தது. அதன் மீது, கடலைமிட்டாய், சாக்லேட், பிஸ்கட் பெட்டிகள் ஒரு பக்கம். சார்ட், பென்சில், பேனா போன்றவை ஒரு பக்கம் என நேர்த்தியாக வைக்கப்பட்டிருந்தது. ‘இங்கு நாணயத்தை விதைத்துள்ளோம்’ என்ற வாசகங்களுடன், பொருள்களின் விலைப்பட்டியலும் வைக்கப்பட்டிருந்தது.

அங்கே வரும் மாணவர்கள், பணத்தை வைத்துவிட்டு தங்களுக்குத் தேவையான பொருளை எடுத்துக்கொள்வதோடு, பொருள்கள் இருக்கும் பாட்டில்களை நேர்த்தியாக வைத்துவிட்டுச் செல்கிறார்கள். 

ஆளே இல்லாத அசத்தல் கடை !

‘‘கடந்த 2013  ஆகஸ்ட் 15, சுதந்திர தினத்துக்கு இனிப்பு கொடுக்கும்போது ஒரு யோசனை வந்தது. நாம் கொடுக்கிறதைவிட, அவங்களே எடுத்துக்கணும்னு டேபிளில் வெச்சுட்டு சொல்லிட்டோம். பள்ளியில் படிக்கிற 900 மாணவர்களும் அமைதியாக வரிசையில் வந்து எடுத்துட்டுப் போனாங்க. இந்த ஒழுக்கத்தை தினமும் மாணவர்கள் கடைப்பிடிக்கிற மாதிரி, ஆளில்லாத கடையை வைக்கலாம்னு நினைச்சோம். கள்ளர் சீரமைப்புத் துறை இணை இயக்குநர், ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் சக ஆசிரியர்கள் இணைந்து ஒரு தொகையை மூலதனமாகப் போட்டு இந்தக் கடையை வெச்சோம்” என்றார் தலைமையாசிரியர்.

‘‘இந்தக் கடையை வெச்சுட்டு, ஹெட் மாஸ்டர் சார் ஒவ்வொரு கிளாஸா வந்து, ‘இது உங்க கடை. இதுக்கு நீங்க ஒவ்வொருத்தரும்தான் பொறுப்பு. என்ன வேணுமோ எடுத்துகிட்டு, அதுக்கான காசை வெச்சுடுங்க. கடையில் யாரும் இருக்க மாட்டாங்க. நீங்க கரெக்ட்டா பணம் வெச்சீங்களானுகூட நாங்க யாரும் கேட்க மாட்டோம்.

ஆளே இல்லாத அசத்தல் கடை !

ஏன்னா, நீங்க எல்லாம் ரொம்ப நல்ல பசங்க. உங்க மேலே எங்களுக்கு நம்பிக்கை இருக்கு” அப்படினு சொன்னார். எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. பணத்தை சரியா வைக்கிறது மட்டும் இல்லாம, அந்த இடத்தையும் சுத்தமா வெச்சுக்கிறோம்.

ஏன்னா, இது எங்க சொந்தக் கடையாச்சே” என்று சந்தோஷமாகச் சொல்கிறார்கள் மாணவர்கள்.
ஆரம்பத்தில், இது சாத்தியமா என்று தயங்கிய சில ஆசிரியர்களும், மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு, நேர்மை மற்றும் நேர்த்தியான அணுகுமுறை இருப்பதைக் கண்டு, கடைக்கான பொருள்களை நிறைய வாங்க உதவி செய்திருக்கிறார்கள்.

ஆளே இல்லாத அசத்தல் கடை !

மாணவர்களின் பங்களிப்புடன் இந்தக் கடையை  வழிநடத்தும் உதவித் தலைமையாசிரியர் பிரபு, ‘‘தினம் 600 ரூபாயில் இருந்து 700 ருபாய் வரை விற்பனை நடக்குது. லாபம் வெச்சு விக்கிறதில்லை. வெளியே வாங்கறதைவிட இங்கே விலை குறைவா இருக்கும். அதைவிட முக்கியம், தரமான உணவுப் பொருளாக பார்த்து வாங்கிவருகிறோம். இதனால், வெளியே மலிவானவற்றை வாங்கிச் சாப்பிட்டு, எங்க மாணவர்கள் உடம்பைக் கெடுத்துக்கிறது இல்லை” என்றார் மகிழ்ச்சியாக.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு