Published:Updated:

வீரவணக்கம் வெற்றிக் கடிதம் !

என்.கந்தக்குமார்ஆயிஷா.இரா.நடராசன் படங்கள் : கண்ணா

பிரீமியம் ஸ்டோரி

அன்புள்ள என்.கந்தக்குமார்,

சுட்டி இந்தியாவின் வீரவணக்கம். இந்தியத் தாயின் தவப்புதல்வனே, உன்னை நினைத்து நினைத்துப் பெருமைப்படுகிறோம். ‘நல்லோர் குணங்கள் உரைப்பதுவும் நன்றே’ எனும் ஒளவையின் கூற்றுக்கு இணங்க, உன் தியாக குணத்தைப் பற்றி சொல்லிக்கொண்டே இருக்கலாம். நம் தமிழ்நாட்டின் தியாகத்தை, வீரதீரத்தை உலகே அறியும் வண்ணம்... பெரிய பெருமை சேர்த்துவிட்டாய். உன்னைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை.

கரூர் மாவட்டத்தின் கிராமத்தில், ஒரு விவசாயக் குடும்பத்தில் ஒரே மகனாகப் பிறந்தவன் நீ. இந்தியத் திருநாட்டின் நாடித் துடிப்பான விவசாயத்தை உயிராகக் கருதியவர்கள் உன் தந்தையும் தாயும். நீ நன்கு படித்து, பெரிய ஆளாக வர வேண்டும் என்று உன் பெற்றோர் விரும்பியது நியாயமான ஆசையே. ஆறாம் வகுப்பு சென்றபோது, கிராமத்தில் இருந்து கரூரில் உள்ள ஒரு பள்ளியில் உன்னைச் சேர்த்தார்கள். அவர்களுக்குத் தெரியாது, விரைவில் நடக்க இருந்த அந்தப் பயங்கரம்.

ஊரின் மற்ற குழந்தைகளைப் போல ஒரு தனியார் வேனில், தினமும் 14 கிலோமீட்டர் செல்ல வேண்டும். பெரும்பாடுபட்டு அதற்கும் பணம் கட்டி அனுப்பிவைத்தார்கள். உற்சாகமாகப் படிக்கச் சென்றாய் நீ.

ஒரு மாதம் போனது. 2003, ஜூலை 22-ம் தேதி, பள்ளி முடிந்து 23 மாணவர்களுடன் வேனில்் ஊர் திரும்பிக்கொண்டிருந்தாய். வழக்கம்போலவே, உற்சாகமாக ஆடிப் பாடி நண்பர்களுடன் குதூகலமாக வந்துகொண்டிருந்தாய். நீ அழுதோ, சோகமாக இருந்தோ யாரும் பார்த்ததில்லை. எப்போதும் உற்சாகமாகச் சிரித்து, வேடிக்கை காட்டி, மற்றவர்களையும் சிரிக்கவைப்பதே உன் குணம்.

வீரவணக்கம் வெற்றிக் கடிதம் !

வழியில்... இரண்டு இடங்களில் வேன் நின்று, மக்கர் செய்தது. ‘ஐலசா... ஐலசா’ என்று எல்லாச் சுட்டிகளும் சேர்ந்து தள்ளியதும் ஸ்டார்ட் ஆனது. அப்போதாவது, வேன் ஓட்டுநர் வண்டியை நிறுத்தி வேறு வண்டியில் குழந்தைகளை அனுப்பி இருக்கலாம். பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்திருந்தால்கூட போதும். ஆனால், பயணம் தொடர்ந்தது.

ஆமூர் என்ற இடத்தில், ஆளில்லாத ரயில்வே தண்டவாளத்தைக் கடக்கும்போது, வேன் திடீரென்று நின்றுவிட்டது. இதை யாருமே எதிர்பார்க்கவில்லை. அந்தத் தண்டவாளத்தில், சுமார் 500 மீட்டர் தொலைவில் வந்துகொண்டிருந்தது ரயில். அவ்வளவு அருகில் வந்துவிட்ட ரயிலை, பிரேக் போட்டு நிறுத்தினாலும் வேனைக் கடந்துசென்றுதான் நிற்கும். அதைப் பார்த்துவிட்ட வேன் டிரைவர், பயத்தில் வண்டியை விட்டுவிட்டு ஓடிவிட்டார்.

சற்றே பெரிய மாணவர்கள் பலரும் கதவைத் திறந்துகொண்டு இறங்கி ஓடினார்கள். நீயும் அப்படி ஓடி இருக்கலாம். ஆனால், மூன்று குழந்தைகள் இறங்குவதற்கு உதவினாய். பாதுகாப்பான தூரத்தில் அவர்களை நிறுத்திவிட்டு, மீண்டும் வண்டிக்கு ஒடினாய். ரயில் நெருங்கியதையும் பொருட்படுத்தாமல், மேலும் இருவரை வேனில் இருந்து வெளியே தள்ளிக் காப்பாற்றினாய். பயத்தி்ல் செய்வதறியாது இருந்த ஒரு மாணவனை வெளியே தள்ள முயன்றபோது, வேன் மீது பயங்கர சப்தத்துடன் மோதியது ரயில். ஐந்து பேரின் உயிர்களை காப்பாற்றிவிட்டு, உன் உயிரைத் தந்துவிட்டாய்.

தன்னலம் கருதாது, சிலரின் உயிரைக் காப்பாற்றிய உனது தியாகத்துக்கு ஈடு இணை இல்லை கந்தக்குமார். விஷயம் தெரிந்து, ஊரே உனக்காகத் துடிதுடித்து அழுதது. உன் பெயரும் புகழும் நாடு முழுதும் பரவியது.

ஆளில்லா ரயில்வே கிராசிங் இருக்கவே கூடாது என்று நீதிமன்றம் கண்டித்தது. ஆவண செய்வதாக மத்திய அரசும் செயலில் இறங்கியது. உனக்கு வீரதீர விருதுகளிலேயே உயரிய விருதான, ‘பாபு காயத்தானி’ விருது அறிவிக்கப்பட்டது. உன் தாயும், தந்தையும் புதுதில்லிக்கு அழைக்கப்பட்டார்கள். அன்றைய இந்திய ஜனாதிபதி அப்துல்கலாம், குடியரசு தின விழாவில், வீரத்திருமகனான உன்னைப் பெற்றமைக்காக வாழ்த்திப் பாராட்டினார்.

வீரத்தின் விளைநிலமே, தியாகத்தின் உறைவிடமே... உன்னை நினைக்கும்போது கண்கள் குளமாகின்றன. நெஞ்சம் விம்முகிறது. மனம் பெருமைகொள்கிறது.

உனக்கு எங்கள் வீரவணக்கம்...

உன் தியாகத்துக்கு சல்யூட் கந்தக்குமார்!

இப்படிக்கு,
சுட்டி இந்தியா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு