பிரீமியம் ஸ்டோரி

“ஹாய் ஜீபா... நமது ரத்தம் சிவப்பு நிறமாக இருப்பதன் காரணம் என்ன?”

- கி.ரா.புஷ்பாகரன், தஞ்சாவூர்.

“60 சதவிகித நீர்மமும் 40 சதவிகித திண்மப் பொருள்களும் சேர்ந்த கலவைதான் ரத்தம். நீர்ம நிலையில், ரத்தம் வைக்கோல் நிறத்தில் இருக்கும். இதில், திண்மப் பொருள்களாக, சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள் மற்றும் குருதிச் சிறு தட்டுகள் என்பவை கலக்கும். திண்மப் பொருள்களில் சிவப்பு அணுக்களே மிக அதிகமாக இருப்பதால், ரத்தம் சிவப்பு நிறத்தை அடைகிறது.”

“ஹலோ ஜீபா... சச்சின் எங்கே பிறந்தார்? அவர் எப்போது முதல் சதம் அடித்தார்?”

   - ஆர்.தினகரன், மேட்டுப்பாளையம்.

மை டியர் ஜீபா !

 “சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் என்கிற சச்சின், 1973 ஏப்ரல் 24-ல் மும்பையில் பிறந்தார். மாநிலப் போட்டிகள், முதல் தர போட்டிகள் எனப் பல சதங்களை எடுத்தவர், 1989-ம் ஆண்டு, தனது 16-வது வயதில் இந்திய கிரிக்கெட் அணிக்குத் தேர்வானார். 1990-ல் இங்கிலாந்து அணிக்கு எதிராக, சர்வதேச முதல் டெஸ்ட்டில் சதம் (119 ரன்கள்) எடுத்தார். இவரது சர்வதேச ஒரு நாள் போட்டி சதம், 1994-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எடுக்கப்பட்டது (110 ரன்கள்).”

“டியர் ஜீபா... பூமராங் என்ற ஆயுதம் தமிழர்களின் கண்டுபிடிப்பு என்பது உண்மையா?

-  பிரியதர்ஷினி, பொன்னமராவதி.

மை டியர் ஜீபா !

“இல்லை பிரியதர்ஷினி. இலக்கைத் தாக்கிவிட்டுத் திரும்பிவரும் பூமராங், ஆஸ்திரேலியாவில் வாழ்ந்த ஆதிவாசிகளின் கண்டுபிடிப்பு. அதுபோன்ற வடிவத்திலும் சக்கரம் போன்ற சில வடிவங்களிலும் பண்டைய தமிழகத்தில் பயன்படுத்திய கருவிக்கு, ‘வளரி’ என்று பெயர். ஆரம்பத்தில் மரத்தால் செய்யப்பட்டு, விலங்குகளை வேட்டையாடப் பயன்படுத்தப்பட்டது. பிறகு, இரும்பில் போர்க்கருவிகளாகப் பயன்படுத்தினார்கள். மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் பகுதிகளில்... இவை அதிகமாகப் பயன்படுத்தப்பட்டன. ஓடும் மனிதனின் கால்களுக்குக் குறிபார்த்து வீசி,  நிலைகுலையவைப்பார்கள்.”

“டியர் ஜீபா... வல்லாரு என்று ஒரு விலங்கு இருக்கிறதாமே, அது எப்படி இருக்கும்?”

- இ.கவியரசன், ரெட்டையாம்பட்டி.

“கங்காரு இனத்தில் 65 வகைகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் வல்லாரு (Wallaroo). கங்காருவைவிட உருவில் சிறியவை. ஆஸ்திரேலியாவில் காணப்படும் இவை, அதிகபட்சம் 22 கிலோ இருக்கும். (கங்காரு 90 கிலோ வரை இருக்கும்). இதிலும் நான்கு வகைகள் உள்ளன.”

மை டியர் ஜீபா !

“ஹாய் ஜீபா... ஹிந்தி, ஃப்ரெஞ்சு, ஜப்பானிய மொழிகளைத் தமிழில் குறிப்பிடும்போது, அதே வார்த்தையில் சொல்கிறோம். ஆனால், English என்பதை மட்டும் ஏன் ஆங்கிலம் என்கிறோம்?”

- டி.என்.யோகஜெய், ராசிபுரம்.

“English என்ற வார்த்தையே Angles என்ற வார்த்தையின் திரிபுதான். வட ஜெர்மனியின் ஜூட்லாந்து (Jutland) தீவில் உள்ள ‘ஆங்கல்’ என்ற இடத்தில் வசித்தவர்கள், ‘ஆங்கலஸ்’ எனப்பட்டார்கள். அதையே, தமிழில் ஆங்கிலம் என்கிறோம். பிற மொழிகளிலும் அப்படியான உச்சரிப்புகள் உண்டு. உதாரணமாக, மலையாளத்தில் ஆங்கிலேயம் என்பார்கள்.”

“உலகில் எத்தனை வகையான கொசுக்கள் உள்ளன ஜீபா?”

- முஹம்மது ஹஸன், கீழக்கரை.

“உலக அளவில், சுமார் 3,500 கொசு இனங்கள் உள்ளன. மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா எனப் பல்வேறு நோய்களைப் பரப்பி, மனிதர்களுக்கு எப்போதுமே சவாலாக விளங்குகின்றன. இன்னொரு விஷயம், இந்தக் கொசு இனங்களில் பெரும்பாலும் பெண் கொசுக்களே, மனிதன் உட்பட பிற உயிரினங்களின் ரத்தத்தை உறிஞ்சுகின்றன. ஆண் கொசுக்கள், பெரும்பாலும் காய்கறிகள், பழங்களின் சாற்றையே உறிஞ்சுகின்றன.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு