Published:Updated:

தன்னம்பிக்கையின் சிகரம் முகில் !

கு.ஆனந்தராஜ் படங்கள் : அ.நவின்ராஜ்

மனதில் உறுதி இருந்தால், உடல் குறைபாடுகள் சாதனைக்குத் தடைக்கல்லாக இருக்காது என்பதை நிரூபிக்கிறார் முகில். மாற்றுத்திறனாளிகளுக்கான யோகாவில் 7 தங்கப்பதக்கங்களை வென்றிருக்கும் வெற்றித்திருமகன்.

சேலம், நகரவை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் முகில், 11 மாதக் குழந்தையாக இருந்தபோது, ‘மூளைப் பக்கவாதம்’ என்ற நோயினால் பாதிக்கப்பட்டவர். பிறரின் துணை இல்லாமல், நடக்கவே முடியாத முகில், உடலை வில்லாக வளைத்து, 70 ஆசனங்களைச் செய்து அசரவைக்கிறார்.

அழகாகச் சிரித்து, நம் கையைக் குலுக்கி, ‘ஹாய்... ஹலோ... வணக்கம்’ என்று சில வார்த்தைகளே பேசும் முகில், நம் முன் யோகாசனங்களைச் செய்துகாட்டினார்.

தன்னம்பிக்கையின் சிகரம் முகில் !

அவரது அம்மா வாசுகி, ‘‘முகிலுக்கு மூளைப்பக்கவாதம் வந்து உடலும் மனவளர்ச்சியும் பாதித்தது. அன்பான கவனிப்பும் சரியான பயிற்சியும் கொடுத்தால், அவனுக்குத் தன்னம்பிக்கை ஏற்படும். மற்றவர்கள் மாதிரி சாதனை செய்ய முடியும் என நினைத்தோம். அதனால், விளையாட்டுப் போட்டிகள், சிறுவர்களுக்கான நிகழ்ச்சிகள் எங்கே நடந்தாலும் கூட்டிட்டிப்போவோம்.  அப்படித்தான் ஒரு முறை, யோகா பயிற்சி மையத்துக்கு முகிலை அழைத்துச்சென்றோம். யோகாவில் அவனுக்கு இருக்கும் ஆர்வம் தெரிந்து, தொடர்ந்து பயிற்சி அளித்தோம்” என்றார்.

மத்திய அரசு விளையாட்டு சம்மேளனத்தின்  மாற்றுத்திறனாளிகளுக்கான யோகா போட்டியில், சென்ற ஆண்டு தமிழகத்தின் சார்பில் தங்கம் வென்ற ஒரே நபர், முகில்.

‘‘மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கும் ஸ்பெஷல் ஒலிம்பிக் அமைப்பினால் முகில் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறான். தொடர்ந்து சாதனை செய்தால், சர்வதேச மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பான்” என்று நம்பிக்கை ஒளிரச் சொல்கிறார், முகிலின் அம்மா வாசுகி.

இந்தியக் கலாசார மேம்பாட்டுப் பாதுகாப்பு கவுன்சிலின் ‘இளம் சாதனையாளர் விருது’, தமிழ்நாடு மாநில மேம்பாட்டு ஆணையத்தின் சிறந்த சாதனையாளர் விருது எனத் தொடர்கிறது, இவரது விருதுப் பட்டியல்.

நீச்சல் பயிற்சியும் எடுத்துவரும் முகில், கணினியையும் திறமையாக இயக்குகிறார். மைக்ரோசாஃப்ட் பவர்பாய்ன்டில் அனிமேஷன் செய்து, அதற்கு அவரே பின்னணி இசையும் கொடுத்திருக்கிறார்.

‘‘மெக்கானிக்கல் இன்ஜினீயர் ஆவது முகிலின் லட்சியம். வீட்டு உபயோகப் பொருள்களைப் பிரித்து ஆராய்ச்சி செய்வான். தேவையற்ற பிளாஸ்டிக் பொருள்களை வெச்சுகிட்டு ஏதாவது வித்தி்யாசமா செய்வான்” என்று பெருமையுடன் சொல்கிறார் முகிலின் அப்பா.
மீண்டும் நம்மிடம் கைகுலுக்கும் முகிலின் முகத்தில் ஒளிர்கிறது தன்னம்பிக்கை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு