46-வது புத்தகக் காட்சி சென்னை நந்தனத்தில் நடைபெற்று வருகிறது. 900-க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் அமைக்கப்பெற்ற இக்காட்சியில் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்குமான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. சென்னை புத்தக் காட்சியின் ஏற்பாடுகள் பல தரப்பினருக்கும் ஏற்ற வகையில் இருந்தாலும் பார்வை சவால் உள்ளவர்களுக்கு போதிய வசதிகள் செய்துதரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது.

இது குறித்து பார்வை சவால் உள்ள மாணவி சித்ரா பேசுகையில் " மற்றவர்கள் போல எங்களால் வாசிக்க இயலாது என்பதால் எங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்க ஒரு வழிகாட்டி தேவை. எங்களுடன் ஒருவர் இருந்தால் மட்டுமே தேவையான புத்தகங்களை வாங்க இயலும். இதே எந்த புத்தகம் எங்கு உள்ளது என்பது குறித்த துண்டு பிரசுரம் பிரெய்லியில் கிடைக்கப்பெற்றால் உதவியாக இருக்கும்" என்றார்.
பார்வை சவால் உள்ள மாணவர்களுக்கு உதவி செய்து வரும் முனைவர் ராஜா கூறுகையில் " திருநங்கைகள், சிறைக் கைதிகள் ஆகியவர்களுக்கு உதவும் வகையில் பல புத்தக அரங்குகள் இங்கு இருக்கிறன. ஆனால் எங்களைப் போன்ற பார்வைச் சவால் உள்ளவர்களுக்கு உதவும் வகையில் ஒரு அரங்கு கூட இல்லை என்பது வேதனை அளிக்கிறது. எங்களைப் போன்றவர்களுக்கு உதவும் வகையில் ஒவ்வொரு கடைகளிலும் ஒரே ஒரு துண்டு பிரசுரம் பிரெய்லி முறையில் அல்லது புத்தகங்களுக்கு பின்புறம் கின்டில் போன்ற செயலிகளின் QR கோட் இருந்தால் புத்தகங்களை வாங்குவதற்கும் படிப்பதற்கும் எளிதாக இருக்கும்" என்றார். அதேபோல எழுத்தாளர்கள் தங்கள் புத்தகங்களை பிரைலியில் வெளியிட வேண்டும் என்பதும் பார்வைச் சவால் உள்ளவர்களின் கோரிக்கையாக உள்ளது.