Published:Updated:

பிரபஞ்சன் எனும் கதை சொல்லி! - வாசகர் பகிர்வு #MyVikatan

எழுத்தாளர் பிரபஞ்சன்
News
எழுத்தாளர் பிரபஞ்சன்

தன் எழுத்துகள் தனித்துவமானவை போலவே தன்னையும் தனிமைப்படுத்திக்கொண்டவர் பிரபஞ்சன்.

"அடுத்த வீட்டுக் குழந்தை மாதிரி, காற்றும் வெளிச்சமும் சுதந்திரமாக உள்ளே நுழைந்தன என எழுதியிருப்பார் பிரபஞ்சன். இதுபோன்று இயல்பான நடையில் எழுதும் சொற்ப எழுத்தாளர்களில் பிரபஞ்சனும் ஒருவர். எழுத்தைப்போலவே அவரின் பேச்சும் அத்தனை சுவாரஸ்யம்.

2013-ம் ஆண்டு, திருப்பூர் புத்தகத்திருவிழாவில் ஆன்டன் செகாவ் எழுதிய `குமாஸ்தாவின் மரணம்' எனும் தும்மல் கதையை முதல்முறையாகக் கேட்டேன். இன்றுவரை அக்கதை மறக்காமலிருப்பதற்கு அவர் சொன்னவிதம்தான் காரணம்.

அவர் பேசி முடித்ததும், அடுத்தது ஒரு பெரிய அரசியல் ஆளுமையின் இலக்கிய உரை. ஆனால் பிரபஞ்சன், அவர் பேச ஆரம்பித்ததும் மேடையிலிருந்து கீழிறங்கி, சிறிது தூரம் தள்ளிச் சென்று சிகரெட் புகைத்துக்கொண்டிருந்தார். அதுதான் பிரபஞ்சன்.

எழுத்தாளர் பிரபஞ்சன்
எழுத்தாளர் பிரபஞ்சன்

#நவீனத்தின் முகம்

பழைமையில் இருக்கும் நடைமுறைக்குப் புதிய பாய்ச்சலாக, இளம் படைப்பாளிகள் ஒன்றிணைந்து, 1970-ல் `வானம்பாடி' என்ற கவிதை இதழை கோவை நகரத்தில் இருந்து வெளியிட்டனர். அக்குழுவில் சாரங்கபாணி வைத்தியலிங்கம் எனும் பிரபஞ்சனும் ஒருவர். தன் 16-வது வயதில், 1961ல் `என்ன உலகமடா' எனும் சிறுகதை மூலம் எழுத்துலகுக்கு அறிமுகமானார். கரந்தை தமிழ்க் கல்லூரியில் முறைப்படி தமிழ் கற்றவர். அக்காலத்திய நாவல்களில் ராஜாக்கள் நாயகர்களாக இருந்த காலகட்டத்தில், பிரெஞ்சுப் பகுதியை மையப்படுத்திய இவரின் `மானுடம் வெல்லும்', `வானம் வசப்படும்' புதினங்கள் முக்கியமானதாகும். 1995-ல், வானம் வசப்படும் நூலுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. புதுச்சேரியின் சுதந்திர வரலாற்றை `கண்ணீரால் காப்போம்' எனும் நூலில் உணர்வுபூர்வமாய் விளக்கியிருப்பார்.

1980-ம் ஆண்டு முதல் 1982 -ம் ஆண்டு வரை குங்குமம் வார இதழிலும், 1985 முதல் 1987 வரை குமுதம் வார இதழிலும், 1989 முதல் 1990 வரை ஆனந்த விகடன் வார இதழிலும் பணியாற்றினார். பின்னர், முழுநேர எழுத்தாளரானார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

#மேன்சன்

தன் எழுத்துக்கள் தனித்துவமானது போலவே தன்னையும் தனிமைப்படுத்திக் கொண்டவர் பிரபஞ்சன். யதார்த்தமும் எள்ளலும் இருக்கும் இவரின் கட்டுரைகளில்.. சென்னை நகர மேன்சன் வாழ்க்கையைப் பற்றி இவ்வாறு விவரிப்பார்..

அறை என்பது படுக்க மட்டும்தான் என்பது, மேன்ஷன்கள் தமக்குள் இயற்றிக்கொண்ட இலக்கணம்"

ஒரு கட்டில் போட்டு அறை எழுப்பிவிடுவார்கள் போல. மேன்ஷன்களில் இருவகையினர் உண்டு. லபோதிபோ அர்த்தமற்ற கூச்சலிடுபவர், இரண்டாவது பழைய ஃபேனிலிருந்து காற்றை சுவாசித்துப் படுத்திருப்பது.

அவர்களின் பறவை எந்த வானில் ஓடும், கண்ணுக்குத் தெரியாத துயர தேவதையோடு ஒன்று சேர்ந்து படுக்கைக்குச் செல்கிறான் என மிகுந்த உணர்வுபூர்வமாய் எழுதியிருப்பார்.

எழுத்தாளர் பிரபஞ்சன்
எழுத்தாளர் பிரபஞ்சன்

#மேற்கோள் கதை

பிரபஞ்சனின் மேற்கோள் கதைகள் அருமையாய் இருக்கும். ஒரு முறை கோவையில் த.மு.எ.க.ச நடத்திய மூன்று நாள் இலக்கிய வகுப்பில் சிறுகதை எழுதுவது குறித்து கூறினார். அப்போது அழகு குறித்த ரஷ்ய கதை ஒன்றை கூறினார்.

``போர்க்களத்தில் பீரங்கியால் காயம்பட்டு முகம் சிதைந்து அடையாளம் மாறி ஊருக்கு வருகிறான் மகன். பெற்றோர்க்கு அடையாளம் தெரியவில்லை. மகனின் நண்பன் எனக்கூறி வீட்டில் தங்குகிறான். பின்பு ராணுவத்துக்கு அதேமுகத்துடன் கிளம்பிச் செல்கிறான்.

சில நாள்களில் தாயிடமிருந்து கடிதம் வருகிறது. உன் நண்பனை பார்த்தால் சந்தேகமாய் இருந்தது. உன்னைப்போல இருந்தான் என உன் காதலி கூறுகிறாள். உண்மையை எழுது என்கிறார்.

உண்மையை எழுதியவுடன் பெற்றோர் முகாமுக்கே வருகின்றனர். கோரமுகத்தைக் கூறுகிறான். அதற்குப் பெற்றோர் இப்போதுதான் உன்னைக் கண்டு பெருமையடைகிறேன். சிநேகிதியும் அவன் நாட்டுக்காக போராடிய வீரன் அல்லவா? எனக்கூறி காதலை ஏற்றுக்கொள்கிறாள்.

கதையின் தலைப்பு `தேசத்தின் முகம்' என முடித்தார். இதை அவர் சொல்லிய விதம் அனைவருக்கும் நாடு குறித்த பெருமையை வரவழைத்தது. ஒரு கதை சொல்லியின் வெற்றி இதுதான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

#செருப்பின் கதை

தன் அனுபவத்தை இத்தனை சுவாரஸ்யமாக சொல்லமுடியுமா என தெரியாது. ஆனால் இவருக்கு நடந்த அனுபவத்தை ரசித்துக் கூறுவார். ஒரு நாள் இவரின் புது செருப்பு தொலைந்துவிடுகிறது. அந்த அனுபவத்தை மிக சுவாரஸ்யமாக பதிவு செய்கிறார்.

செருப்பின் வாழ்க்கை பதற்றம் நிறைந்தது. எந்தப் பாதத்தை வந்தடையப் போகிறோம் எனும் பதற்றம் இருக்கும். கடத்தி விடுவார்கள், தேயும்போது உடல் இளைக்கும், தூக்கி எறியும்போது புறக்கணிக்கப்படும் என பல துரதிருஷ்டம் செருப்புக்கு உண்டு.

இழி காரியங்களில் முதல்படி ``செருப்பால் அடிப்பேன்" என்பது... அடித்தலை காட்டிலும் அடிப்பதாகக் கூறுவது குற்றம்.

வெறுங்காலோடு நடக்க பழகிக்கொள்ள வேண்டியதுதான், அதை நிச்சயம் இன்னொரு ஆள் திருட முடியாது என நகைச்சுவையாய் சொல்லுவார்.

எழுத்தாளர் பிரபஞ்சன்
எழுத்தாளர் பிரபஞ்சன்

#பிரபஞ்சனின் ரசித்த வரிகள்

*வார்த்தைகள் மூலமாகத்தான் நம்மை விளங்கிக்கொள்ள விதிக்கப்பட்டிருக்கிறோம் அல்லது சபிக்கப்பட்டிருக்கிறோம்.

*மாற்றுச் சிந்தனைகளுக்கு இடமே தரக் கூடாது என்பதில் மிகவும் தெளிவாக இருக்கின்றன பள்ளிகள்.

* எங்கள் வீட்டுக் கட்டில் குட்டி போட்டது "தொட்டில்"

*விடியலின் கொண்டாட்டத்தையும் சந்தோஷத்தையும் மனிதர்களைவிட பறவைகளே அதிகம் அறிந்திருக்கின்றன

*இரண்டு விஷயங்கள் பற்றிப் பேச எல்லோரிடமும் ஏதேனும் இருக்கின்றது. ஒன்று பேய் மற்றது பாம்பு.

*மேடைமேல் நின்று கீழே உள்ள உங்களிடம் கக்குகிற விஷயங்களை ஒரு பிஸ்கட்டைப் போலக் கவ்விக்கொண்டு வாலை ஆட்ட வேண்டும்.

*நல்ல விஷயங்களை யார் கற்றுக் கொடுத்துவிட முடியும்?

அது நமக்குள்ளேயே இருக்கிறது. கண்டுபிடிக்க வேணும்.

*பல் துலக்குவது என்பது ஓர் அனிச்சை செயல், காலையில் எழுந்ததும் உணர்வின்றி செய்யக்கூடிய ஒரு காரியம்

*விடுமுறை காலங்களில் மட்டும் குழந்தைகள் ஆரோக்யமாக வளர்கிறார்கள்

*பிழையான வாழ்க்கை முறைக்குத்தான் பிழைப்பு என்று பெயர்!

*இரண்டு பேர் சேர்ந்து வாழ்வதற்கு எது எது தேவையில்லையோ அது அது எல்லாந்தான் இங்கே கல்யாணத்தை தீர்மானிக்கிறது

*"காற்று அடிக்கக் கூடாது. தொட வேண்டும். அதுதான் சுகம்".

இதுபோல் எண்ணற்ற கவித்துவ வரிகளை இவரின் படைப்புகளில் காணலாம்.

சமகாலத்தில் வாழ்ந்த மகத்தான எழுத்தாளர்களில் ஒருவர்.

முறைப்படி தமிழும், இசையும் கற்றவர். கட்டுரையில் துணிச்சலுடன், உண்மையுடனும் எழுதுவார். மற்ற எழுத்தாளர்களின் கதைகளையும் வெகுவாய் பாராட்டி கதை மழை எனும் நூல் எழுதியுள்ளார். பிரபஞ்சனின் மகாபாரதம் புதிய வாசகர்களை உருவாக்கியது. எந்த சமரசமும் இறுதி வரை செய்யாதவர்.

"மயிலிறகு குட்டிப்போடாது என்று தெரிகையில் ஒரு குழந்தை தன்னுடைய குழந்தைமையை இழக்கிறது… அது குழந்தைக்கு நிச்சயம் இழப்பு தான். அது போலத்தான் எழுத்துலகில் இவரின் இழப்பும். எழுத்து உள்ளவரை அவர் இருப்பார். அவரின் பிறந்தநாளில் அவரை நினைவுகூருவோம்.

-மணிகண்டபிரபு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/