Published:Updated:

மதுரை தெருக்களின் வழியே - 2: மாறிவரும் மதுரையின் முகம்... காரணம் என்ன?

மதுரை

எண்பதுகளில்கூட இரவு முழுக்க மதுரை நகரத் தெருக்களில் வழிப்பறி பற்றிய பயமில்லாமல் நடந்து செல்லலாம். மதுரை பெரியார் பேருந்து நிலையம், முதலாகச் சிம்மக்கல், முனிச்சாலை, காளவாசல், தத்தனேரி என நகரமெங்கும் இரவுக் கடைகள் விழித்திருக்கும்.

மதுரை தெருக்களின் வழியே - 2: மாறிவரும் மதுரையின் முகம்... காரணம் என்ன?

எண்பதுகளில்கூட இரவு முழுக்க மதுரை நகரத் தெருக்களில் வழிப்பறி பற்றிய பயமில்லாமல் நடந்து செல்லலாம். மதுரை பெரியார் பேருந்து நிலையம், முதலாகச் சிம்மக்கல், முனிச்சாலை, காளவாசல், தத்தனேரி என நகரமெங்கும் இரவுக் கடைகள் விழித்திருக்கும்.

Published:Updated:
மதுரை
இன்றைய உலகமயமாக்கல் காலகட்டத்தில் இரண்டாயிரம் ஆண்டுத் தொன்மையான தமிழ் மொழியும் தமிழர் வாழ்க்கையும் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. எல்லாவிதமான பண்பாட்டு அடையாளங்களும் சிதிலமாக்கப்பட்டு, வேகம் வேகமாக ஒற்றைத்தன்மைக்குள்ளாகிக் கொண்டிருக்கும் கார்ப்பரேட் அரசியல் நெருக்கடியில் மதுரை நகரம் மட்டும் விதிவிலக்காக இருக்க முடியாது. எனினும் இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் நவீனத்துவத்தின் ஆளுகை, பெரிய அளவில் படராத மதுரை நகரானது, வெள்ளந்தியான பெரிய கிராமமாகச் சோம்பிக் கிடக்கிறது. அன்றாட வாழ்க்கையில் மதுரை மக்கள் எப்படி வாழ்ந்தனர் என்ற பதிவுகள் எதிர்காலத்தில் சமூக வரலாறாகிவிடும். அவ்வகையில் 1960இல் தொடங்கி மதுரை நகரத்தின் இயல்புகளை என் சொந்த அனுபவங்கள், கள ஆய்வுகள், செவிவழிக் கதைகள், வாசித்த புத்தகங்கள் மூலம் பதிவு செய்திட முயன்றுள்ளேன்.

ஒவ்வொரு பழைமையான நகரமும் வரலாற்று மிச்சங்களுடன் கடந்த காலத்தை நினைவூட்டுகின்றன. மதுரை என்றவுடன் பிரமாண்டமான மீனாட்சி அம்மன் கோயில் இந்தியாவிலுள்ள பிற மாநிலத்தவர்களுக்கும் அயல் நாட்டவர்க்கும் நினைவிலாடும். அண்மைக் காலத்தில் மீனாட்சியம்மன் கோயிலுக்கு வருகிற அயல் நாட்டார், வட இந்தியர் எண்ணிக்கை கணிசமாகப் பெருகியுள்ளது. மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் நான்கு வாயில்களிலும் உயர்ந்து நிற்கிற வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு கோபுரங்கள் நகரின் வடிவாக்கத்தைத் தீர்மானித்துள்ளன. ஒரு கோபுரம் இருக்கிற திசையை முன்வைத்து நகரில் எங்கு வேண்டுமானாலும் சென்று திரும்பிவிடலாம். சரி, பண்டைய மதுரை நகரம் எப்படி இருந்திருக்கும் என்ற கேள்வி தோன்றுகிறது. சங்க இலக்கியமான பரிபாடல் மதுரை நகரத்தின் அமைப்பு பற்றி விவரித்துள்ளது. அந்தப் பாடல் தாமரை மலருக்கு உவமையாக மதுரையைக் குறிப்பிட்டுள்ளது.

பழங்கால மதுரை
பழங்கால மதுரை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்

பூவொடு புரையும் சீரூர் பூவின்

இதழகத் தனைய தெருவம் இதழகத்

தரும்பொகுட் டனைத்தே அண்ணல் கோயில்…

மதுரைப் பேரூர், மாயோனுடைய கொப்பூழில் மலர்ந்த தாமரைப் பூவோடு ஒப்பிடும் சிறப்புடையது. அப்பூவின் அக இதழ்களைப் போன்றவை மதுரைத் தெருக்கள். அவ்விதழ்களின் உட்புறமாக விளங்கும் கோட்டையைப் போன்றது பெருமையில் சிறந்தவனாகிய பாண்டியனின் கோயில்… இப்படியான விவரிப்பு, மதுரை நகருக்குப் பெருமை சேர்க்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மதுரை நகரின் மையமாக உள்ள மீனாட்சி அம்மன் கோயிலை முன்வைத்துச் சதுர வடிவில் விரிந்துசெல்லும் தெருக்கள் நெரிசலாகவும் இறுக்கமாகவும் இன்றளவும் உள்ளன. மதுரைத் தெருக்கள் ஆடிவீதி, சித்திரை வீதி, ஆவணி வீதி, மாசி வீதி, வெளி வீதி, ஆவணி மூல வீதி என அடுத்தடுத்து விரிந்துகொண்டே இருக்கின்றன. நான்கு திசைகளிலும் உயர்ந்து நிற்கும் கோபுரங்களைவிட்டு அலைபோலத் தெருக்கள் விலகிப் போகுமாறு அமைக்கப்பட்டுள்ளன. மதுரை நகரில் வெளி வீதிகள் எல்லாம் முன்னர் கோட்டைச் சுவர்களாக இருந்தன. மதுரைக் கோட்டை 1842 ஆம் ஆண்டில் மாவட்ட ஆட்சியரான பிளாக்பெர்ன் உத்தரவின் பேரில் இடிக்கப்பட்டது. பாண்டியன் அகழித் தெரு, தெற்கு அகழித் தெரு, விட்ட வாசல், பெரியார் பேருந்து நிலையம் அருகில் இருக்கிற கோட்டை கொத்தளத்தின் எஞ்சிய கட்டடம் போன்றவை மதுரை நகரின் தொன்மைக்குச் சான்றாக இன்றும் இருக்கின்றன. மதுரையில் கோட்டை இருந்ததன் அடையாளமாக மேல வாசல், கீழ வாசல், தெற்கு வாசல், வடக்கு வாசல் என்று அழைக்கப்படுகிற இடங்கள் இருக்கின்றன.

சிலப்பதிகாரம் காப்பியத்தில் கண்ணகியும் கோவலனும் மதுரைக்குச் சென்றபோது மாதரி என்ற இடைக்குலப் பெண்ணிடம் அடைக்கலமாயினர். மாதிரியின் வழியினரான கோனார் சமூகத்தினர் கோயிலின் வடக்கு, மேற்குப் பகுதிகளில் பெருமளவில் குடியிருக்கின்றனர். அவர்கள் மாடுகளை வளர்த்துப் பால் வணிகம் செய்வது இன்றும் தொடர்கிறது.

மீனாட்சி அம்மன் கோயில் - எட்மண்ட் டேவி லயன் 1868
மீனாட்சி அம்மன் கோயில் - எட்மண்ட் டேவி லயன் 1868

மீனாட்சி அம்மன் கோயிலும், அங்கு ஆண்டு முழுக்க நடைபெறும் பல்வேறு திருவிழாக்களும் பெரிய அளவில் சாதாரண மக்களை ஈர்க்காத காலகட்டம் முன்னர் இருந்தது. 1939-ம் ஆண்டில்கூட பிற்படுத்தப்பட்டவர்களும், குறிப்பிட்ட சாதியினரும் கோயிலுக்குள் நுழையக்கூடாது என்று வைதிக மதம் தடை விதித்திருந்தது. எனவே உழைக்கும் மக்களுக்கும் மீனாட்சி அம்மன் கோயிலுக்கும் பெரிய அளவில் தொடர்பில்லை, வடக்குக் கோபுரத்துக்கு வெளியே இருக்கும் முனியாண்டி சாமியை வழிபடும் மக்களில் பலர் பிரமாண்டமான கோயிலுக்குள் நுழைவதில் ஆர்வமற்று இருந்தனர். எனினும் எழுபதுகளில்கூட கோயிலைச் சுற்றியிருக்கிற வீடுகளில் வசித்தவர்களுக்கும் வழிப்போக்கர்களுக்கும் பொழுதைப் போக்கிடும் இடமாகக் கோயில் விளங்கியது. மதியவேளையில் கோயில் நடை சாத்தப்பட்டவுடன், வெளிப்பிரகாரத்தில் ஜிலுஜிலுவென வீசும் காற்றில் வயதான ஆண்கள் பலர் படுத்து உறங்கினர். ஒண்டிக் குடித்தனத்து வீடுகளில் பகல் வேளையில் உறங்க வாய்ப்பற்ற முதியவர்களுக்கு உறங்குவதற்கான இடமாகக் கோயில் பயன்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எல்லா நகரங்களும் நூற்றுக்கணக்கான தெருக்களால் தன்னிருப்பை அடையாளப்படுத்துகின்றன. மதுரை நகரத் தெருக்களின் பெயர்கள் வரலாற்றையும் கதைகளையும் சுமந்து நீள்கின்றன. நாயக்கர் ஆட்சியில் ஓவியர்கள் வாழ்ந்த இடம் சித்திரக்காரத் தெரு, இசைக் கலைஞர்கள் வாழ்ந்த தெரு நவபத்கானா தெரு, மஞ்சனம் அரைத்தவர்கள் இருந்த இடம் மஞ்சணக்காரத் தெரு என்று அழைக்கப்பட்டன. மதுரை நகரில் ஒவ்வொரு தெருவிலும் ஒரே வகைப்பட்ட பொருள்கள் விற்பனை செய்வது பல நூற்றாண்டுகளாக வழக்கினில் உள்ளது.

சுண்ணாம்பு விற்கும் சுண்ணாம்புக்காரத் தெரு, வைக்கோல் விற்கும் வைக்கோல்காரத் தெரு, தென்னோலை விற்கும் தென்னோலைக்காரத் தெரு என நீளும் தெருக்களின் பெயர்கள் ஆய்விற்குரியன. துணிமணிகள் விற்கும் விளக்குத்தூண், ஆயிரக்கணக்கான நகைக்கடைகள் இருக்கும் தெற்காவணிமூல வீதி, மின்பொருள்கள், கட்டுமான பொருள்கள் விற்பனையாகும் மேலமாசி வீதி, வாகனங்களின் உதிரிப் பொருள்கள் விற்கும் நூற்றுக்கணக்கான கடைகள் அடங்கிய வடக்கு வெளி வீதி, பலசரக்குக்கடைகள் நிரம்பிய கீழமாசி வீதி என இன்றளவும் தனித்து விளங்குகின்றன. காக்காத் தோப்புத் தெரு, புட்டுத் தோப்பு, கமலத் தோப்பு, வாழைத் தோப்பு, சிங்காரத் தோப்பு, ஹாஜிமார் தோப்பு, தோப்பு, வடம் போக்கித் தெரு, எழுத்தாணிக்காரத் தெரு, தாசில்தார் பள்ளிவாசல் தெரு, தலைவிரிச்சான் சந்து, அரசரடி, சந்தைப் பேட்டை, தவிட்டுச் சந்தை, நெல் பேட்டை, வெற்றிலைப் பேட்டை… மதுரை நகரத்துத் தெருக்களும் முக்கியமான இடங்களும் வரலாற்றின் தொடர்ச்சியாக உள்ளன. மதுரை நகரின் ஒரு பகுதி கீழ் மதுரை என்று அழைக்கப்படுகிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில்

மதுரையில் விஜயநகரப் பேரரசின் ஆட்சி நிலவியபோது, பட்டுத் துணி நெசவினுக்காகக் குஜராத் பகுதியிலிருந்து அழைத்து வரப்பட்ட சௌராஷ்டிரா மொழி பேசும் மக்கள் இன்று மதுரையெங்கும் பரவியுள்ளனர். மதுரை நாடாளுமன்ற உறுப்பினராகச் சௌராஷ்டிரர் ஒருவர் பல்லாண்டுகள் தேர்ந்தெடுக்கப்பட்டது வரலாற்று விநோதம்தான். மதுரை நகராட்சியின் தலைவர் பொறுப்புகளில் தொடர்ந்து பதவி வகித்தவர்கள் நாயக்கர்கள்தான். சங்கம் வைத்துத் தமிழை வளர்த்த மதுரை நகரில் தமிழர்கள் அரசியலில் பெரிய அளவில் ஆர்வம் காட்டாத நிலை, புலப்படாத விஷயம்தான். கடந்த முப்பது ஆண்டுகளில்தான் தமிழர்கள் அரசியலில் நுழைந்து அதிகாரத்தின் கனியை ருசித்துக் கொண்டிருக்கின்றனர்.

எண்பதுகளில்கூட இரவு முழுக்க மதுரை நகரத் தெருக்களில் வழிப்பறி பற்றிய பயமில்லாமல் நடந்து செல்லலாம். மதுரை பெரியார் பேருந்து நிலையம், முதலாகச் சிம்மக்கல், முனிச்சாலை, காளவாசல், தத்தனேரி என நகரமெங்கும் இரவுக் கடைகள் விழித்திருக்கும். எந்தப் பொருளையும் நள்ளிரவு நேரத்திலும் வாங்கலாம். இரவு 11 மணி முதல் காலை 4 மணி வரை எந்த நகரப் பேருந்தும் புறநகர்ப் பேருந்தும் இயங்காத காலகட்டம் என்பதை நினைவில்கொள்ள வேண்டும். இரண்டாவது ஆட்டம் திரைப்படத்தைத் தியேட்டரில் பார்த்துவிட்டு, ஐந்தாறு மைல்கள் நடந்து வந்து இரவு முழுக்கப் பேருந்து நிலையத்தில் காத்திருக்கிற கிராமத்தினருக்கு எல்லாம் கொண்டாட்டம்தான்.

எழுபது எண்பதுகளில் நண்பர்களுடன் இரவு முழுக்க மதுரைத் தெருக்களில் நடந்தவாறு பேசிக்கொண்டு, பொழுது புலர்ந்தவுடன் எங்கள் ஊரான சமயநல்லூருக்குக் கிளம்புவது எனது வழக்கம். எங்களைப் போன்று பல்வேறு குழுவினர் தெருக்களில் நடந்து கொண்டிருந்தனர். தேநீர், புகைத்தல் எனப் பேச்சுகளும் மறுபேச்சுகளும் காற்றில் மிதக்கும். 'இராப் பறவை' என்ற சொல்லுக்கான அர்த்தத்தை மதுரைக்காரர்கள் புரிந்து வைத்திருந்தனர். "சும்பப்பயல்தான் ராத்திரியில் தூங்குவான்" என்று மூத்த எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு எழுதியிருப்பது தற்செயலானது அல்ல; ஆழ்ந்த அனுபவத்தின் விளைவாகும்.

மதுரை பஜார் - கஸ்த் - 1909
மதுரை பஜார் - கஸ்த் - 1909
1984-ம் ஆண்டு புயலிலே ஒரு தோணி நாவல் எழுதிய நாவலாசிரியர் ப.சிங்காரத்துடன் பேசிக் கொண்டிருந்தபோது சொன்னார்: ”மதுரை மாதிரி ஒரு ஊர் வராதுங்க ராத்திரி எந்த நேரம் எது வேண்டுமென்றாலும் சாப்பிடலாம். என்ன வேணும்னாலும் வாங்கலாம்." இருபதாம் நூற்றாண்டின் இறுதியில்கூட 24 மணி நேரமும் செயற்பட்ட முடியலங்கார நிலையம் என்ற சலூன்கள் இருந்தன. இரவு என்பது மனித உயிர்கள் உறங்குவதற்கான நேரம் என்ற பொதுப்புத்தியைப் புரட்டிப் போட்டு, இருளின் வழியாகத் தங்கள் இருப்பினைத் தேடிய மதுரைக்காரர்களின் உலகம் வேறுவிதமானது.

எழுபதுகளில் பரபரப்புடன் இயங்கிய மதுரைத் தெருக்களைப் பற்றிச் சொல்ல வேண்டும். மீனாட்சியம்மன் கோயில் வெறுமனே வழிபாட்டுத் தலமாக அப்பொழுது இருந்தது. சுற்றுலா மையமாக மாறாத காலகட்டம் அது. ஐயப்பன் வழிபாடு பிரபலமாக இல்லை. ஆதிபராசக்தி வழிபாடு அறிமுகமாகாத நிலை. எனவே பெருங்கொண்ட கும்பல் கறுப்பு ஆடை அல்லது செவ்வாடைகளுடன் கோயிலில் மொய்க்காத நிலை. எப்பொழுது வேண்டுமானாலும் கோயிலுக்குப் போய் அம்மனைப் பரபரப்பின்றித் தரிசிக்கலாம். சுவாமி சந்நிதியில் கூட்டம் மிகக் குறைவாக இருக்கும். பொற்றாமரைக் குளக் கரையில் கல்லூரி மாணவர் கூட்டம், இளம் திருமணத் தம்பதியர், அபூர்வமாகக் காதல் ஜோடி ஓய்வாகக் கதைத்துக் கொண்டிருப்பார்கள். கோயிலுக்கு முன்னால் இருக்கும் தெருவில் நகரப் பேருந்துகள் இயங்கிக் கொண்டிருந்தன.

இன்று கோயிலுக்கு அருகில் எந்த வாகனமும் செல்ல முடியாமல் தடை போடப்பட்டிருக்கிறது. கோயிலுக்குள் எல்லாக் காலத்திலும் மக்கள் கூட்டம் பொங்கி வழிகின்றது. ஒவ்வொரு நுழைவு வாயிலிலும் மெட்டல் டிடெக்டர், ஏகே 47 துப்பாக்கி ஏந்திய காவலர்கள் என எல்லாப் பக்தர்களும் கண்காணிக்கப்படுகின்றனர். மன அமைதிக்காகவும், குடும்பப் பிரச்னைகளை அம்மனிடம் சொல்லி மன ஆறுதல் பெறவும் கோயிலுக்குப் போனது என்பது பழங்கதையாகி விட்டது. மீனாட்சி அம்மன் சிலை உட்படச் சகலமும் கோயில் வாசலில் நிற்கின்ற போலீஸ்காரர்களின் துப்பாக்கிகளை நம்பித்தான் உள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருவிழா
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருவிழா

1969-ம் ஆண்டில் பேருந்துகள் நாடுட்டுடமையாக்கப்படும் வரையிலும் மதுரை நகரில் பெரும்பாலான நகரப் பேருந்துகளை டி.வி.எஸ். நிறுவனம்தான் இயக்கியது. எனினும் பெரும்பாலான மக்கள் நகருக்குள் நடந்து சென்றனர். எழுபதுகளில் திரையரங்கில் திரைப்படம் பார்த்துவிட்டு மாலைவேளையில் மூன்று மைல் தொலைவுகூட நடந்து சென்று பேருந்து நிலையம் செல்வோம். விக்டோரியா திரையரங்கு முன்புறம், தெற்கு வாசல் மார்க்கெட் போன்ற இடங்களில் குதிரை வண்டிகள் நிறுத்துவதற்கான கூடங்களும், குதிரைகள் தண்ணீர் குடிப்பதற்கான நீளக் கல்தொட்டிகளும் இருந்தன. மதுரைக்குள் நகரப் பேருந்துகள் இயங்கினாலும், ஊருக்குள் சிறிய சந்துகள், தெருக்களில் செல்வதற்குச் சைக்கிள் ரிக்சாக்களும், குதிரை வண்டிகளும் பயன்பட்டன.

குதிரை வண்டி ஜட்கா என அழைக்கப்பட்டது. ஏழெட்டுப்பேர் திணிக்கப்பட்ட குதிரை வண்டிக்குள். ஒருவர்மீது ஒருவர் இடித்துக் கொண்டும், உச்சந்தலையினால் வண்டிக் கூரையில் மோதிக்கொண்டும் பயணிப்பது சுவாரஸ்யமான அனுபவம். குதிரை வண்டிக்காரர் வண்டி வேகமாக ஓடுவதற்காக ஓடும் வண்டியின் சக்கர ஆரக்காலில் சாட்டைக் கம்பைவிட்டுச் சடசடவெனச் சப்தம் எழுப்புவது குழந்தைகளுக்குக் குதூகலத்தைத் தரும். இரண்டு அல்லது மூவரை ஏற்றிக்கொண்டு உச்சிவெயிலில் ரிக்சா பெடலை மிதிக்கும் ரிக்சாக்காரரின் உடலுழைப்பு மிகக் கடினமானது. ரிக்சாக்களும் ஜட்காக்களும் பரவலாக நிரம்பியிருந்த மதுரைத் தெருக்களில், இன்று ஆட்டோக்கள் பறந்து கொண்டிருக்கின்றன. உச்சமாக ஷேர் ஆட்டோக்கள். ஒரு ஆட்டோவில் ஏழெட்டுப் பேர்களைத் திணித்துக்கொண்டு யார் மீதோ மோதுவது போல விரைந்தோடுகின்றன.

மதுரை
மதுரை

ஒப்பீட்டளவில் பல்வேறு மாற்றங்களுடன் நவீனக் காலத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டிருக்கிற மதுரை நகரின் முகம் தனித்துவமானது.

"நாங்க எல்லாம் ஊருக்குள்ளே ரொம்பப் பேருக்கு யோசனை சொல்றவிங்க. எங்க கிட்டேயேவா?" என்று கலாய்க்கிற திரைப்பட நடிகர் வடிவேலு சித்திரிக்க முயலும் 'உதார்' பேர்வழி, இன்னொரு மதுரைக்காரர்தான்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism