Published:Updated:

`தாத்தா இத சாப்பிடுங்க...' அன்பு கசிந்த நிமிடம்! - ரயில்பெட்டிக் கதைகள்

Representational Image
Representational Image ( கே.கார்த்திகேயன் )

ரயில் மெல்ல நகர்ந்தது. ரயிலுக்கு வெளியே இருப்பவர்கள் அந்நியர்கள் என்றாலும் டாட்டா காட்டியபடியே வந்தனர் அக்காவும் தம்பியும். ஸ்கூல் ரைம்ஸ்களில் ஆரம்பித்து, `கண்டுபிடி கண்டுபிடி' வரை விளையாடி அதகளம் செய்தனர்.

நண்பகல் 1.30 மணி. மேகத்தை விரட்டியடித்து, பளீரென்று கண்களைக் கூசச் செய்துகொண்டிருந்தது வெயில். சென்னை எழும்பூர் ரயில் நிலையம். நான்காவது நடைமேடையில் புறப்படத் தயாராக இருந்தது வைகை ரயில். அவசரமும் பதற்றமும் நிறைந்த மனித முகங்களுக்கு மத்தியில், ``ஹே... இங்க பாரு இந்த பபுள்ஸ் எவ்வளவு பெரிசா இருக்குது" என்றபடி இரண்டு குழந்தைகள் சோப்புக் குமிழ்களை ஊதி விளையாடிக்கொண்டிருந்தனர். ஏழு வண்ணங்களை பிரதிபலித்தவாறே வானவில் உதிர்த்த இறகுகள்போல பறந்துசெல்லும் அவற்றைப் பார்க்கும்போது, என் கைகளுக்கும் சிறகு முளைத்துவிட்டன. குமிழ்களை ஒவ்வொன்றாகத் தொடத் தொட, அவை சட்டென மாயமாகும் அழகு, மனத்தை குழந்தைப் பருவத்துக்கே அழைத்துச் சென்றுவிட்டது.

ரயில் பயணம்
ரயில் பயணம்
சு.சூர்யா கோமதி

``பயணிகளின் கனிவான கவனத்திற்கு...' என்கிற ரயில் பயணிகளுக்கு நெருக்கமான, ஏற்ற இறக்கமுடைய அந்தக் குரல், என் காலச்சக்கரத்தை மீண்டும் நண்பகல் 1.30 மணிக்குக் கொண்டுவந்தது. D7 கோச்சில் ஏறி என் இருக்கையை நோக்கி நகர்ந்தேன். விடுமுறை தினம் என்பதால் ரயிலில் அதிக கூட்டம். முன்பதிவு செய்யாத பலரும் ரிசர்வேஷன் பெட்டியின் வாசலை அடைத்துகொண்டு நின்றிருந்தார்கள். ``கொஞ்சம் வழிவிடுங்க"னு சொல்லி பையை வைத்து இடித்துக்கொண்டே உள்ளே நுழைந்தேன்.

ஜன்னல் கம்பிகளுடன் சண்டை போட்டு உள்ளே நுழையும், குளிர்ந்த காற்றை ஏந்திக்கொள்ளும் ஆர்வத்தில் ஜன்னல் சீட் எனக்கானதா எனப் பார்த்தேன், சின்ன ஏமாற்றம். கதவருகே இருக்கும் முதல் வரிசை இருக்கைதான் எனக்கானது. அதே வரிசையில் ஜன்னல் சீட் அருகே உட்கார்ந்திருந்த பெரியவர், கதவுகளை அடைத்து, காற்றுக்குத் தாழிட்டிருந்தார். ஏமாற்றம் கொஞ்சம் கோபமாகவும் மாறியது. கோபத்தைக் குறைக்க மூச்சை இழுத்து ஆசுவாசப்படுத்திக்கொண்டேன். லக்கேஜ் கேரியரில் பல வகைகளில் அடுக்கிவைக்கப்பட்டிருந்த சுமைகளை நகர்த்திவிட்டு என் பையையும் வைத்தேன். திடீரென துப்பட்டாவை யாரோ பிடித்து இழுத்தார்கள். எரிச்சலுடன் திரும்பிப் பார்க்க, புன்னகை தவழ பார்த்தான் எட்டு வயதுள்ள சிறுவன். எதிர்புறம் காலியாக இருந்த ஜன்னல் இருக்கையைக் காண்பித்து, ``ஆன்ட்டி, அந்த சீட் உங்களுடையதா... நான் உட்கார்ந்துக்கவா ப்ளீஸ்" என்றான்.

`10 நிமிஷத்தில் பாப்பாவைக் கொஞ்சிக்கணும்!'- ரயில் பெட்டிக் கதைகள்
ரயில் பயணம்
ரயில் பயணம்
தே. அசோக் குமார்

அவன் கேட்ட உடல்மொழியும் பளீரென்ற கண்களும் அத்தனை அழகு. அது என் இருக்கை இல்லை எனச் சொல்லி, ஏமாற்ற மனசு வரலை. ``உட்கார்ந்துக்க பார்க்கலாம்'னு சொல்லிவைத்தேன். மூன்று பேர் அமரும் சீட்டில் மூன்றாவது நபராக அமர்ந்துகொண்டேன். சிறுவன் ஜன்னல் சீட்டில் அமர்ந்துகொண்டான்.

அவன் அருகில் அமர்ந்திருந்த சிறுமியைக் காண்பித்து, ``இது யார்"னு கேட்க, ``இது எங்க அக்கா, அது என் அம்மா" என அறிமுகப்படுத்தினான். ``ம்மா... மா" எனத் தூக்கத்திலிருந்த அம்மாவை உலுக்கினாள் அந்தச் சிறுமி. சோர்வுடன் கண்களைத் திறந்த தன் அம்மாவிடம்,``தம்பி அந்த அக்காகிட்ட ஜன்னல் சீட்டில்தான் உட்காருவேனு அடம்பிடிச்சு உட்கார்ந்துருக்கான்"னு காதுக்குள் சிண்டு முடிந்தாள். ``ஒழுங்கா ஒரு இடத்துல உட்காரமாட்ட"னு சிறுவனின் தலையில் ஒரு குட்டு வைத்தார் அந்த அம்மா. மண்டையைத் தடவிக்கொண்டே குனிந்துகொண்டான் சிறுவன். அவனின் அமைதி சிறுவயதில் அப்பாவிடம் தம்பியை அடிக்கடி மாட்டிவிட்டு வக்கணை கழித்த நிமிடங்கள் மனசுக்குள் படமாக விரிந்தது. அப்பாவின் இடத்தைப் பூர்த்திசெய்யும் தம்பிகளை அடிவாங்க வைத்த அனுபவங்கள் எல்லா அக்காக்களுக்கும் இருக்குமோ என நினைத்து சிரித்துக் கொண்டேன்.

Representational image
Representational image
சு.சூர்யா கோமதி

``டேய், டேய் ஜன்னல் சீட் எனக்கும் குடுடா. ஜன்னல் சீட்டுக்கு யாரும் வரக்கூடாது. வந்தாலும் எங்களை அந்தச் சீட்டில் உட்கார வெச்சுடணும்"னு நானும் சேர்ந்துதானே பிரேயர் பண்ணேன் என அந்த அக்கா அப்பாவியாகக் கேட்டாள். மறுக்கமுடியாமல் சரி ஒண்ணுல இருந்து 50 வரை எண்ணிட்டிரு. அதுவரை நான் ஜன்னல்கிட்ட உட்காருவேன். அப்புறம் நான் எண்ணுவேன் நீ உட்காரு"னு ஒப்பந்தம் போட்டுக்கொண்டார்கள். ரயில் மெல்ல நகர்ந்தது. ரயிலுக்கு வெளியே இருப்பவர்கள் அந்நியர்கள் என்றாலும் டாட்டா காட்டியபடியே வந்தனர் அக்காவும் தம்பியும். ஸ்கூல் ரைம்ஸ்களில் ஆரம்பித்து, `கண்டுபிடி கண்டுபிடி' வரை விளையாடி அதகளம் செய்தனர்.

`கத்தாதீங்க எல்லோருமே உங்களைத்தான் பாக்குறாங்க'னு அரை தூக்கத்தில் அந்த அம்மாவில் குரல் அவ்வப்போது அதட்டியது. செவிமடுக்காமல் சீட்டில் ஏறி நின்று, கதகளி ஆடியவர்களைப் பார்த்தபோது குழந்தையாகவே இருந்துருக்கலாம்னு தோணுச்சு.

Representational Image
Representational Image
தே.அசோக்

ரயில் கிளம்பி சற்று நேரத்திலேயே ``அம்மா தண்ணி வேணும்"னு சிறுவன் கேட்க, ``இவ்வளவு நேரம் ஜன்னலில் கை வெச்சிருந்தல, எவ்வளவு அழுக்கு இருக்கு பாரு. போய் கையைக் கழுவிட்டு வந்து வாட்டர் பாட்டிலை எடுத்துக் குடி"னு சொல்லிவிட்டு கண்களை மூடிக்கொண்டாள் அந்த அம்மா. எட்டாத வாஷ்பேஷினில் எக்கி எக்கி கைகளை கழுவிட்டு தண்ணீர் பாட்டிலை எடுத்து சிந்த சிதற குடித்தான். பாப்கார்ன் விற்கும் பாட்டியம்மா வருவதைப் பார்த்து, ``டேய் அஷ்வின்... அங்க பாருடா பாப்கார்ன் விக்கிறாங்க"னு தம்பியின் ஆசையைத் தூண்டிவிட்டுட்டு அமைதியாகத் திரும்பிக்கொண்டாள் அக்கா. ``அம்மா ரொம்ப பசிக்குது, பாப்கார்ன் வேணும்"னு அழுது அடம்பிடித்து பாப்கார்ன் வாங்கிவிட்டான். எதுவும் பேசாமல் வேடிக்கை பார்த்த அக்காவுக்கும் ஒரு பாக்கெட் கிடைத்தது. அக்காக்கள் சாமர்த்தியசாலிகள்தான். ``பாப்கார்ன் பாக்கெட்டைக் குடு. பிரிச்சு தர்றேன்''னு அம்மா சொல்ல, ``நான் இப்போ பெரியவனாகிட்டேன். நானே பிரிச்சுப்பேன்"னு பெரிய மனுஷத்தனத்தைக் காட்டினான். வாயால் கிழித்து எடுக்க முயன்றபோது, பாக்கெட்டுக்குள் மூச்சை அடக்கியிருந்த பாப்கார்ன்கள், வண்ணத்துப்பூச்சிகளாகப் பறந்து இருக்கையில் சிதறின.

``அம்மா... தம்பி பாப்கார்னைக் கொட்டிட்டான்"னு அக்காவின் குரல் மீண்டும் அம்மா தூக்கத்தைக் கலைத்தது. கண்விழித்து முறைத்தார் அம்மா. சீட்டில் கிடந்த பாப்கார்னை அள்ளி வாயில் வைக்கும் நேரத்தில், ``டேய் கீழ விழுந்ததைச் சாப்பிடாதனு எத்தனை முறை சொல்றது"ன்னு பிடுங்கி, ஜன்னல் வழியே வீசினார். காலி பாப்கார்ன் பாக்கெட்டுடன், சிறுவனின் கண்கள் அக்காவின் பாக்கெட்டைப் பார்த்தது. அதுவரை தம்பியை வேடிக்கை பார்த்தவள் சட்டென ஜன்னல் பக்கம் திரும்பிக்கொண்டாள். சிறுவன் பாப்கார்ன் வேணும்னு அழத் தொடங்க, அவனைச் சமாளிக்க முடியாமல் தன்னுடைய ஹேண்ட்பேகிலிருந்து ஒரு பிஸ்கெட் பாக்கெட்டை எடுத்துக் கொடுத்து சமாதானப்படுத்தினார் அம்மா.

Representational Image
Representational Image
கே. ராஜ சேகரன்

சலசல பேச்சுகளுக்கு மத்தியில் அழுக்குகள் தோய்ந்த ஆடையை உடுத்திய பெரியவர் ஒருவர், கால்களை இழுத்து இழுத்து உட்கார்ந்தவாறே நகர்ந்து வந்தார். அவரின் வறுமையை மெலிந்த தேகம் காட்டிக்கொடுத்தது. இருக்கையின் அருகில் தரைப் பகுதியைத் துணியில் துடைத்துவிட்டு கைகளை ஏந்தினார். நாங்கள் அமைதியாக இருக்க, ஒரு நிமிஷம்கூட யோசிக்காமல், பிஸ்கட் பாக்கெட்டை அவர் கையில் வைத்தான் சிறுவன். அதைப் பார்த்த அம்மா, முதுகில் அடி கொடுத்து, ``டேய் அவரு கையில எவ்வளவு அழுக்கு இருக்கு பாருடா. போய் கையைக் கழுவிட்டு வந்து உட்காரு" என்றார். பசியைப் பிரதிபலிக்கும் பெரியவரின் கண்கள் கலங்கியது; சிறுவன் பிஸ்கட் பாக்கெட்டை சீட்டின் அருகே வைத்துவிட்டு நகர்ந்தார். அடுத்த பகுதியில் தரையைத் துடைத்துவிட்டு கைகள் ஏந்த மனமில்லாமல் அவர் செல்ல, எனக்கு மனசு வலித்தது.

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் ரயில் நின்றது. இரண்டு பைகளுடன் ஏறிய ஒருவர், நாங்கள் அமர்ந்திருந்த சீட்டின் அருகில் வர, ``அப்பாடா வந்துட்டீங்களா? அடுத்தமுறை சென்னையிலிருந்தே சேர்ந்து வருவோம். என்னால இதுங்களை சமாளிக்க முடியல"னு குறைப்பட்டுக்கொண்டார் அந்த அம்மா. ஆறடி உயரம்கொண்ட அந்த நபரிடம் அப்பா என்று ஒட்டிக்கொண்டாள் சிறுமி. ``என்ன ஆச்சு? சார் அமைதியா இருக்காரு''னு சிறுவனிடம் கைநீட்டி தூக்கிக்கொண்டார்.

ரயில் பயணம்
ரயில் பயணம்
சு.சூர்யா கோமதி

``நல்லா நாளு அடி போட்டேன். ஓவர் சேட்டை" எனஅம்மாவிடம் இருந்து பதில் வந்தது. ``குழந்தைகள்னா அப்படித்தான்'' என்றவாறே அவனைத் தன் தோளில் போட்டுக்கொண்டு, ``செல்லம்ல, என்ன பண்ணீங்க? டிராவல் ஜாலியா இருக்கும்னு சொல்லிட்டு இப்படி உம்முனு இருந்தா எப்படி? னு' மகனை சமாதானப்படுத்த முயன்ற அப்பாவிடம் அதுவரை நடந்ததை எல்லாவற்றையும் ஒப்பித்து முடித்தாள் அக்கா.

சில நொடிகள் தலையைக் குனிந்தே இருந்த சிறுவன், பிரியாணி விற்கும் சத்தம் கேட்டதும் நிமிர்ந்து, ``பிரியாணி வேணும்"னு பாவமாகக் கேட்டான்.``இப்பதானேடா சாப்பிட்டே. விக்கிறதையெல்லாம் கேட்டுகிட்டு இருந்தா இன்னும் நாலு அடி விழும்"னு அம்மாவிடமிருந்து கறார் உத்தரவு வந்தது.``அம்மா தூங்கட்டும் வாங்கித்தர்றே'னு அப்பா சைகை காட்டினார். அப்பாவிடம் எது கேட்டாலும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தலையை லேசாக அசைத்தான் சிறுவன். சிறிது நேரத்தில் அம்மா தூங்கிவிட, அப்பாவின் அருகில் சென்று ``பிரியாணிப்பா"னு கிசுகிசுத்தான்.

Representational image
Representational image
கே.கார்த்திகேயன்

ரெஸ்ட்ரூம் போவது போல நகர்ந்தார்கள் அப்பாவும் மகனும். அடுத்த பெட்டியில் நின்றுகொண்டிருந்த பிரியாணி விற்பவரிடம் பிரியாணியை வாங்கிவிட்டு, வேகமாக நாங்கள் இருக்கும் பெட்டிக்கு ஓடிவந்தான் சிறுவன். அவனின் கால்கள் கழிப்பறை அருகில் நின்றது. ``டேய் இரு அப்பா வர்றேன். தனியா உள்ள போகாத"னு குரல் கொடுத்த அப்பாவை திரும்பிப் பார்த்தவாறே, கழிப்பறையின் அருகில் படுத்திருந்த சுத்தம் செய்யும் பெரியவரிடம் சென்றான். ``தாத்தா பசிக்குதா. நான் கொடுத்த பிஸ்கட்டையும் சாப்பிடாம வந்துட்டீங்க. இந்தாங்க"ன்னு அவரின் கைகள் பிடித்து பிரியாணி பொட்டலத்தைக் கொடுத்தான்.

``என் பேரன் மாதிரியே இருக்க சாமி"ன்னு அவனைக் கட்டியணைக்க முனைந்த கைகளைத் தயக்கத்துடன் தளர்த்தி, ஆசீர்வாதம் வழங்கிய அந்தப் பெரியவரின் கைகளில் அழுக்குகளைவிட அன்பு அதிகம் கசிந்தது.

அடுத்த கட்டுரைக்கு