Published:Updated:

"திராவிடத் தலைவர் அண்ணாவைப் படிக்க வேண்டும்" - சீனாவில் தமிழ் பரப்பும் நிறைமதி!

"சீனமொழியைவிட தமிழ் வித்தியாசமானது. சீனமொழியில் ழகரம் இல்லை. மேலும் தமிழில் விகுதிகள் நிறைய. 'செந்தமிழும் நாப்பழக்கம்' என்பார்கள் அல்லவா? அதை உணர்ந்தேன். தொண்டையில் தண்ணீர் வைத்துக்கொண்டு பயிற்சி பெற்றேன்.

இன்று (பிப்ரவரி-21) உலகத் தாய்மொழி தினம் (International Mother Language day). 1952-ல் பாகிஸ்தானின் கிழக்குப் பகுதியில் வங்காள மொழியையும் தேசிய மொழியாக அறிவிக்கக்கோரி நடந்த போராட்டத்தில் நான்கு மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். அந்தப் போராட்டத்துக்குப் பிறகே வங்கதேசம் என்ற நாடு உருவானது. அந்தப் போராட்டத்தில் மொழிக்காக உயிர்நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக அந்த நிகழ்வு நடந்த பிப்ரவரி 21ம் தேதியை உலகத் தாய்மொழி தினமாக ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்தது.

உலகத் தாய்மொழி தினமான இன்று, தமிழோடு தொடர்புடைய ஓர் சுவாரஸ்யமான விருந்தினரை இணையம் வழி சந்தித்து உரையாடினேன். சீனா யுனான் மின்ஸு பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர் நிறைமதி கிகி ஜாங். சீனாவின் சர்வதேச தமிழ் வானொலியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் பணியாற்றியவர். தமிழ்க் கல்வெட்டுகள், கோயில்களின் சுவடுகள் கண்டெடுக்கப்பட்ட சீனத்தின் தொன்ம நகரொன்றில் வசிக்கும் நிறைமதி, நிறைய செய்திகளைப் பகிர்ந்துகொண்டார்.

"நிறைமதி... பெயரே பேரழகாக இருக்கிறது... யார் சூட்டிய பெயர்?"

"நான் பல்கலைக்கழகத்தில் படித்தபோது அங்கிருந்த பேராசிரியர் ஒருவர் நிறைய தமிழ்ப்பெயர்களை ஒரு காகிதத்தில் எழுதிக்கொடுத்து, 'உங்களுக்குப் பிடித்த பெயரைத் தேர்வு செய்யுங்கள்' என்று சொன்னார். நான் 'நிறைமதி' என்ற பெயரைத் தேர்வு செய்தேன். அப்போது எனக்கு 'நிறைமதி' என்றால் என்ன பொருள் என்று தெரியாது. தமிழை பொருளுணர்ந்து படிக்கக் கற்றபிறகே 'நிறைமதி' என்றால் 'முழு நிலா' என்று தெரிந்துகொண்டேன். இந்தவார்த்தை 'வெற்றி', 'நல்ல குடும்பம்' என்ற பொருள்களையும் தரும்."

"தமிழகத்துக்கு எத்தனை முறை வந்திருக்கிறீர்கள்?"

"இரண்டுமுறை வந்துள்ளேன். முதல்முறை சென்னைக்கு வந்தேன். சென்னை பல்கலைக்கழகத்தில் சில பணிகள் இருந்தன. இரண்டாம்முறை மதுரைக்கு வந்தேன். அங்கு காமராஜர் பல்கலைக்கழகத்தில் தங்கினேன். சில களப்பணிகள் செய்தேன். கொஞ்சம் படிக்கவும் செய்தேன்."

நிறைமதி
நிறைமதி

"தமிழ் மீது எப்படி ஆர்வம் வந்தது?"

"சர்வதேச மொழிகளைக் கற்பதில் ஆர்வம் எனக்கு. இணையதளத்தில் தேடிப்பார்த்தேன். தமிழ் தொன்மையான செம்மொழி என்றிருந்தது. தமிழ் எழுத்துகள் மலர்களைப் போல இருந்தன. அது தொடர்பாக நிறைய படித்தேன். எனக்குப் பிடித்திருந்தது. தமிழில் 200-க்கும் மேற்பட்ட எழுத்துகள் இருக்கின்றன என்று அறிந்தபோது கொஞ்சம் பயம் வந்தது. கற்றுக்கொள்ள மிகவும் சிரமமாகத்தான் இருந்தது. ஆனால் படிக்கப் படிக்க எளிதாகிவிட்டது. 2007 முதல் 2011 வரை நான்கு ஆண்டுகள் பீஜிங்கில் உள்ள தகவல் தொடர்பு பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி படித்தேன். ஆனால் அப்போது படித்தது புத்தகத் தமிழ்."

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

"பேசுவது சரி, எழுதவும் படிக்கவும் எப்படி கற்றுக்கொண்டீர்கள்?"

"சீனமொழியைவிட தமிழ் வித்தியாசமானது. சீனமொழியில் ழகரம் இல்லை. மேலும் தமிழில் விகுதிகள் நிறைய. 'செந்தமிழும் நாப்பழக்கம்' என்பார்கள் அல்லவா? அதை உணர்ந்தேன். தொண்டையில் தண்ணீர் வைத்துக்கொண்டு பயிற்சி பெற்றேன். திருக்குறளையெல்லாம் படித்து மனனம் செய்வது சிரமமாகத்தான் இருந்தது. படிக்கப் பழகியபிறகு எழுதுவதும் கைவந்துவிட்டது."

"தமிழுக்கும் சீனமொழிக்கும் என்னமாதிரியான ஒற்றுமைகள் உள்ளன?"

"இருமொழிகளுக்கும் நீண்ட வரலாறு உண்டு. இரண்டுமே தொன்மையான செம்மொழிகள். இரு மொழிகளுமே காலத்துக்கேற்ப தன்னைப் புதுப்பித்துக்கொள்கின்றன.

"சீனத்தமிழ் வானொலியில் உங்கள் பங்களிப்பு?"

"இரண்டு ஆண்டுகள் சீன வானொலியில் பணிபுரிந்தேன். சீன இசை நிகழ்ச்சிகள், சீனப் பண்பாடு, வரலாறு சார்ந்த நிகழ்ச்சிகள் தயாரித்து வழங்கினோம்."

பிப்ரவரி 21: உலக தாய்மொழி தினம்  | International mother language day
பிப்ரவரி 21: உலக தாய்மொழி தினம் | International mother language day

"மதுரைக்கு வந்துள்ளீர்கள். அந்த அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்?"

"ரொம்பவும் தொன்மையான நகரம். மதுரை ரொம்பவே நெருக்கமாக இருந்தது. முழுமையாக தமிழிப்பண்பாட்டை அனுபவித்தேன். பாய் விரித்து உட்கார்ந்து சாப்பிடுகிறார்கள். வாழை இலையில் உணவை வைத்து கையால் சாப்பிடுகிறார்கள். எல்லாமே எனக்குப் புதுசு. வித்தியாசமாக இருந்தது. இதையெல்லாம் புத்தகத்தில் படித்திருக்கிறேன். நேரில் பார்த்ததில் மகிழ்ச்சியாக இருந்தது. நான் ஒரு கிராமத்துக்குச் சென்றிருந்தபோது, ஒரு கிழவரைச் சந்தித்தேன். நான் அவரிடம் தமிழில் பேசினேன். அந்தக் கிழவர் அழுதார். 'ஏன் அழுகிறீர்கள்' என்று கேட்டேன். 'எங்கிருந்தோ வந்து அழகாக தமிழ் பேசுகிறாயம்மா... பெருமையாக இருக்கிறது' என்றார். மொழியை எந்தளவுக்கு தமிழ் மக்கள் நேசிக்கிறார்கள் என்பது புரிந்தது."

"மதுரையைப் பற்றி ஒரு புத்தகம்கூட எழுதப்போவதாக சொன்னீர்கள்..."

"ஆமாம். மதுரையில் நான் காமராஜர் பல்கலைக்கழகத்தின் ஆதரவில் சில ஆராய்ச்சிகள் செய்தேன். சில வகுப்புகளில் கலந்துகொண்டேன். அப்போது தினமும் நாள்குறிப்பு எழுதினேன். அதைத்தொகுத்து புத்தகமாக வெளியிடவிருக்கிறேன்."

"தமிழ் பேசுவதிலும் எழுதுவதிலும் என்ன சிரமம் உணர்கிறீர்கள்?"

"தமிழர்கள் மாதிரி உச்சரிப்பது மிகவும் சிரமம். வழக்குத்தமிழ் பேசுவதும் பிரச்னை. நான் இளங்கலைத் தமிழ் படித்தபோது புத்தகத்தமிழ்தான் படித்தேன். புத்தகத்தமிழுக்கும் வழக்குத்தமிழுக்கும் வித்தியாசங்கள் நிறைய உண்டு. தமிழை நன்கு புரிந்துகொண்டு பேச திரைப்படங்கள் எனக்கு நிறைய உதவின. ஒரு பேராசிரியராக நான் என் மாணவர்களுக்கு வழக்குத்தமிழ் கற்றுக்கொடுக்கவே விரும்புகிறேன்."

நிறைமதி
நிறைமதி

"சீனாவில் என்னமாதிரியான தமிழ் திரைப்படங்கள் வெளியாகின்றன?"

"நான் 'சிவாஜி த பாஸ்' பார்த்தேன். ரஜினியை எனக்கு நிறைய பிடிக்கும். அதேபோல விஜய்க்கு சீனாவில் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். 'காவலன்', 'நண்பன்' படங்களெல்லாம் இங்கே வெளியாகி பல நாள்கள் திரையரங்கில் ஓடின. என் மாணவர்களையும் இந்தப் படங்களைப் பார்க்கச் செய்தேன்."

"தமிழ் மொழியின் சிறப்பு என்று எதைக் கருதுகிறீர்கள்?"

"மூன்று சிறப்புகள் இருப்பதாகக் கருதுகிறேன். ஒன்று, அதன் தொன்மை. அது வரலாற்றில் தன்னை புதுப்பித்துக்கொண்டே வருகிறது. இரண்டாவது, இதன் அழகு. எழுத்துகள் மலர்களைப் போன்று அழகாக இருக்கின்றன. இசையைப்போல ஒலிக்கின்றன. மூன்றாவது, தமிழுக்கு முறையான இலக்கணம் இருக்கிறது."

"தமிழில் என்னவெல்லாம் வாசித்திருக்கிறீர்கள்?"

"தமிழில் கொஞ்சமாகத்தான் வாசித்திருக்கிறேன். நான் இளங்கலை மாணவி. எழுதுவது, பேசுவது தொடர்பான பாடங்களும் இலக்கணமும்தான் அதிகம். அதனால் வாசிப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே கிடைத்தன. நிறைய நாவல்கள் படிக்க வேண்டும். குறிப்பாக அண்ணாத்துரையின் சில நூல்களைப் படிக்க வேண்டும்."

நிறைமதி
நிறைமதி

"அண்ணாவைப் பற்றி என்னவெல்லாம் கேள்விப்பட்டுள்ளீர்கள்?"

"அண்ணா, தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்துக்குத் தலைமை தாங்கிய ஒரு தலைவர்."

"சீனாவில் தமிழ்க்கற்றுக்கொள்ள என்னென்ன வாய்ப்புகள் உள்ளன?"

"பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியைப் படிக்க முடியும். ஆனால் பூஜ்ஜியத்தில் இருந்துதான் தொடங்க வேண்டியிருக்கும். மொத்தம் நான்கு ஆண்டுகாலப் படிப்பு. முதலாண்டில் அ, ஆ,இ-யில் ஆரம்பித்து எழுத்துகளைப் படிக்கவேண்டும். இரண்டாவதுஆண்டில் கட்டுரைகள் படிக்க வேண்டும். மூன்றாவது ஆண்டில் மொழி பெயர்ப்பு. நான்காவது ஆண்டில் பேச்சுத்தமிழ், சில இலக்கியங்கள் பற்றிய அடிப்படை படிக்க வேண்டும்."

"சீனாவில் தமிழ்க்கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்திகள் வந்தன..."

ஆமாம். எங்கள் ஊருக்கு அருகில்தான் அந்தக் கல்வெட்டுகள் கிடைத்தன. சிவனைப் பற்றிய பாடல்கள் அந்தக் கல்வெட்டில் இருந்தன. இங்கு ஒரு சிவன் கோயில் இருந்துள்ளது. கடல் அரிப்பால் அது அழிந்துவிட்டது. அதுபற்றி கல்வெட்டில் தகவல் இருந்தது. இந்தக் கல்வெட்டு மூலம் தமிழர்களுக்கும் சீனாவுக்கும் நெருக்கமான தொடர்பு இருந்தது தெரியவந்தது.

"சீனாவுக்கும் தமிழகத்துக்குமான வரலாற்றுத்தொடர்பு பற்றிச் சொல்லுங்கள்?"

"சீனாவுக்கும் தமிழகத்துக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. குறிப்பாக, கடல் வழியில் வர்த்தகத் தொடர்பு இருந்துள்ளது. சீனாவில் பண்டைக்காலத்தில் எழுதப்பட்ட புத்தகங்களில் தமிழகம் பற்றிப் பேசப்படுகின்றன. ஹான் வம்சத்தின் வரலாற்று புத்தகத்தில் காஞ்சிபுரத்தைப் பற்றி சொல்லப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தோடு சீனாவுக்கு நிறைய தொடர்புகள் உண்டு."

"தமிழகத்துக்கும் சீனாவுக்குமான பெரிய பந்தம் போதி தர்மர். அவரைப்பற்றிப் படித்திருக்கிறீர்களா?"

"காஞ்சிபுரத்திலிருந்து சீனாவுக்கு வந்து பௌத்த மதத்தைப் பரப்பிய மாஸ்டர். அவர் கொடுத்தது தான் குங்ஃபூ. அவரைப்பற்றி நிறைய படித்திருக்கிறேன்."

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு