Published:Updated:

அன்புக்கும் அப்செஷனுக்கும் ஒரு மெல்லிய கோடுதான்! - சிறுகதை #MyVikatan

சென்னையிலிருந்து மதுரைக்கு அனுப்பப்பட்ட ராம், மாலினியின் புராஜெக்ட் ஹெட். நாளடைவில்... அதேதான்... இருவருக்கும் காதல்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

மதுரையில் வந்து இறங்கிய உடனேயே, கூடல் அழகர் கோயிலுக்குப் போக வேண்டும் என்று அம்மா அடம்பிடித்தபோது, மாலினிக்குக் கோபம் வந்தது.

``ஒரு வருஷமா வீடு பூட்டியே இருக்குடி. ஒரு எட்டு போயிட்டு வீட்டை பார்த்துட்டு வரலாம், மாலினி..."

அம்மா இந்த இரண்டு வருடங்களில் பெங்களூருவாசியாக மாறி இருந்தாலும், மதுரையும் வீடும் அவள் உயிர். அம்மா தினமும் கேட்பது பாவமாகத் தோன்றவே, ஆஃபீஸில் லீவ் சொல்லிவிட்டு, கிருஷ்ணனிடம் சொன்னபோது, அவனும்கூட வருவதாகச் சொல்ல, இதோ இன்று மாலை மதுரை வந்து சேர்ந்தாகிவிட்டது.

அம்மா வந்ததுமே பக்கத்து வீட்டுக்குப் போய்விட்டாள். கிருஷ்ணனை ஓர் அறையில் ரெஸ்ட் எடுக்கச் சொல்லிவிட்டு, மற்றொரு அறையில் `ஷப்பா' என்று படுக்கையில் விழுந்தாள் மாலினி. சற்றே கண்மூடியவளை அம்மாவின் குரல் எழுப்பி நிஜத்துக்குக் கொண்டு வந்தது.

love
love
Representational Image

``எழுந்திரு மாலினி. நாளைக்குக் காலைல 7 மணிக்கு நாம கூடல் அழகர் கோயிலுக்குப் போறோம். சீக்கிரம் சாப்டுட்டு படுக்கலாம் வா..."

மாலினிக்கு வடக்கு மாசி வீதி கிருஷ்ணன் கோயில் ஞாபகம் வந்தது. ராமும் மாலினியும் மிகவும் விரும்பி வரும் இடம் அதுதான். நினைவுகள் பின்னோக்கி நடந்தன.

அன்று ராமை அந்தக் கோயிலுக்கு வரச்சொல்லிவிட்டுக் காத்திருந்தாள்.

``எங்க போன மாலு..? இன்னியோட ஒரு வாரம் ஆச்சு உன்னைப் பார்த்து. ஆஃபீஸ் வரல, போன் பண்ணா எடுக்கல, நெட் ஆஃப் பண்ணி வெச்சிருக்க. சரினு வீட்டுக்கு வந்தா வீடு பூட்டியிருக்கு. வாட்ஸ் ராங்..?"

நிமிர்ந்து பதில் சொல்லாமல் அவனைப் பார்த்தாள். ராம்தான் தொடர்ந்தான்.

``ஹெச்.ஆர் கிட்ட கேட்டா, மெடிக்கல் ரீசன்னு சொல்லிட்டு போனன்னு சொல்றாங்க. டீம்லயும் ஒருத்தருக்கும் தெரில. அம்மா ஓ.கேதானே?"

மறுபடியும் மௌனம். ராம் அயர்ந்து போனான். அவளைப் பார்க்காத ஏக்கம், என்னாச்சோ என்ற பரிதவிப்பு, மன உளைச்சல் எல்லாம் சேர்ந்து எரிச்சலடைய வைத்தது.

``மாலினி... என்னனு சொல்லித் தொலையேன். நான் அன்னிக்கி அப்படி பேசினது தப்புதான். ஐ அம் வெரி ஸாரி. அதுதான் காரணமா..?"

``........."

Couple
Couple
Representational Image

``ஏதாவது சொல்லேன். இந்த ஒரு வாரமா எவ்ளோ அவஸ்தை தெரியுமா? என்னம்மா ஆச்சு? ப்ளீஸ்... சொல்லு. ஐ மிஸ்டு யூ மாலு..."

அவள் அருகில் அமர்ந்து கைகோத்துக் கொண்டான்.

``நான் இங்க ரிசைன் பண்ணிட்டு, பெங்களூர்ல வேற வேலைல ஜாயின் பண்ணப் போறேன். இன்னிக்கி நீ ஆஃபீஸ் வரலை. அதான் இப்போ இங்க வரச் சொன்னேன். ஐ தாட் ஐ ஓவ்ட் தட் மச் டு யு... இனி என்னால உனக்கு ஒரு கஷ்டமும் இருக்காது."

மெதுவாக, ஆனால் அழுத்தமாக, கையை விடுவித்துக்கொண்டே அவள் சொன்னபோது அவன் அதிர்ந்துபோனான். சட்டென கோபம் தலைக்கேற விருட்டென்று எழுந்தான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``ஆர் யு க்ரேஸி... நான்தான் ஸாரி சொல்லிட்டேனே... ஏன் இன்னும் அதையே பிடிச்சுட்டுத் தொங்குற? லைஃப்ல இதைவிட பெரிய சண்டைலாம் வரும். இதுக்கே விட்டுட்டுப் போறேன்னு சொல்ற?"

`இனி என்னிடம் சொல்வதற்கு ஒன்றுமில்லை' என்கிற மாதிரி எழுந்து நின்றாள்.

ராம்க்கு வலித்தது. என்ன இவள்? நிஜமாகவே அவ்வளவுதானா? பிரேக்-அப் தானா? எப்படிச் சொல்ல முடிகிறது இவளால்?

மாலினி அவன் கையைப் பற்றி குலுக்கினாள்.

couple
couple
Representational images

``ஆல் தி பெஸ்ட் ராம். எப்பவும் சந்தோஷமா இரு. நான் உன் நம்பரையோ, வாட்ஸ்அப்பையோ, ஃபேஸ்புக்கையோ பிளாக்லாம் பண்ணமாட்டேன். உனக்கு மெசேஜ், கால் எதுவும் இனி என்கிட்ட இருந்து வராது. டேக் கேர்"

அவன் பதில் சொல்லக்கூட நேரம் தராமல் விடுவிடுவென நடந்துசென்றாள்.

*****

``எழுந்திரு மாலு, நேரமாச்சு, கோயிலுக்குப் போகணும்னு சொன்னேன்ல...'' - அதிகாலையில் மாலினியை அம்மாவின் குரல் எழுப்பியது.

`ராம் கண்ணில் படாமல் ஊர் திரும்பிடணும்' - தனக்குத்தானே சொல்லிக்கொண்டு குளிக்கப் போனாள்.

*****

மூன்று வருடங்களுக்கு முன்பு மாலினி ஒரு பெரிய ஐ.டி நிறுவனத்தின் மதுரைக் கிளையில் வேலையில் இருந்தாள். சென்னையில் இருந்து இங்கே அனுப்பப்பட்ட ராம், அவளின் புராஜெக்ட் ஹெட். அம்மா, அப்பா மதுரையில்தான் என்பதால் அவனும் சந்தோஷமாகவே வந்தான். நாளடைவில்.... அதேதான்... இருவருக்கும் காதல்.

மாலினி கல்லூரி இறுதியாண்டு படிக்கும்போது, அவளின் அப்பா இறந்துபோனார். உடனடியாக வேலைக்குத் தயாரானாள். ஃபரெஞ்ச் படித்தாள். ஐ.டி.யில் செர்டிபிகேஷன்ஸ் முடித்தாள். சுயமாக எதையும் செய்யக் கற்றுக்கொண்டாள். இப்படித் திரிந்தவள், ராமுடன் பழக ஆரம்பித்தபோது மாறிப்போனாள். எங்கோ மூலையில் அடக்கி வைத்திருந்த மாதிரி அன்பு பொங்கிக் கொண்டு் வந்தது அவன்மீது. சென்டிமென்ட் என்றாலே கிலோ என்ன விலை என்று கேட்பவள், அவனுக்காக உருகத் தொடங்கினாள்.

Relationship (Representational Image)
Relationship (Representational Image)

ஆஃபீஸ் தவிர அவர்கள் சந்திக்கும் இடம், கிருஷ்ணன் கோயில் நந்தவனம்தான். மாலினிக்கு எதுவுமே வெளிப்படையாகப் பேசியே பழக்கம். அம்மாவாகவே இருந்தாலும், எது முக்கியமோ அதை மட்டுமே பேசுவான் ராம். தனக்கென ஒரு ஸ்பேஸை விரும்புபவன். இதுவே பல நேரங்களில் அவர்களுக்குள் சண்டை உருவாகக் காரணமானது. சின்னச் சின்ன விஷயங்களைக்கூட அவன் தன்னிடம் சொல்ல வேண்டும் என்று எதிர்ப்பார்த்தாள்.

சென்னையில் ராமுடன் வேலைபார்த்த பெண்ணுக்கு இவன் மேல் லவ். இவனுக்கு விருப்பமில்லை என்றதும் கூலாக எடுத்துக்கொண்டாள். ஒரு நல்ல நட்பு தொடர்ந்தது அவர்களுக்குள். அவ்வப்போது கால் பண்ணி பேசுவாள். அது மாலினிக்கும் தெரியும். தன்னுடன் இல்லாத, பேசாத நேரங்களில் அவன், அவளோடுதான் பேசுகிறானோ என்று எதையாவது கற்பனை செய்துகொண்டு சண்டை போடுவாள்.

ராம் பொதுவாகவே பொறுமையாய் பதில் சொல்வான். ஆனால், உபயோகமில்லை என்று தெரிந்தால், பதில் பேசமாட்டான். எப்போதாவது தோன்றினால், ஒரு `ஸாரி'. அவ்வளவுதான்.

ஒருமுறை அவள் கோயிலுக்கு அழைத்தபோது, அவனால் போக முடியவில்லை. அந்தப் பெண் தன் தோழிகளோடு ஒரு கல்யாணத்துக்கு வந்த இடத்தில், ராமை பார்க்க அவன் வீட்டிற்கு வந்திருந்தாள். அதைச் சொன்னால் ஏதாவது சொல்வாளோ என்று, `வீட்டில் கெஸ்ட்' என்று சொல்லிச் சமாளித்தான். இவன் வராமல் அவள் கோயிலுக்குப் போனதில்லை. ஆனால் அன்று ஏனோ அங்கே போகவேண்டும்போல் தோன்ற, கிளம்பிவிட்டாள். அங்கே ராமை, அந்தப் பெண்ணுடன் பார்த்தாள். இவளை அங்கு எதிர்ப்பார்க்காதவன் தடுமாறிப் போனான்.

Break up
Break up

மாலினி அவனிடம் சென்று, ``ராம், நீ எப்படி இங்க? இவங்கதான் அந்த கெஸ்ட்டா? யாருனு இன்ட்ரோ கொடுக்கமாட்டியா..?" - நக்கலாகக் கேட்டுக்கொண்டே அருகில் வந்தாள்.

அவன் பதில் சொல்வதற்குள், இவளே அந்தப் பெண்ணின் கரம் பற்றி தன்னை அறிமுகம் செய்துகொண்டாள். அந்தப் பெண் தான் ராமுடன் சென்னையில் வேலைபார்த்ததாக அறிமுகப்படுத்திக் கொண்டாள். மாலினி, ராமைப் பார்த்த பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள்.

``ஓகே நீங்க பேசிட்டுருங்க... நான் கிளம்பறேன்."

மாலினி விடுவிடுவெனக் கிளிம்பிப் போய்விட்டாள். ராமுக்கு தலை சுற்றியது. `போச்சு... அடுத்த சண்டையா கடவுளே!'

இரவு மாலினி எண்ணிலிருந்து ராமுக்கு அழைப்பு.

``வீட்ல கெஸ்ட்டுனு சொன்ன, இவதான்னு ஏன் சொல்லல. இதுவரை எவ்ளோ பொய் சொல்லியிருக்க ராம் என்கிட்ட?''

``இவ வந்திருக்கானு சொன்னா, அதுக்கு ஏதாவது சொல்லுவ... அதான்."

``அப்போ நான் எதுவும் சொல்லக் கூடாது. அப்படித்தானே? அதுக்காக மறைப்பியா? வேற என்னென்ன மறைச்சியோ? ஆர் யூ சீரியஸ் அபவுட் அஸ் ஆர் நாட்? நானும் கொஞ்ச நாளா கவனிச்சுட்டுதான் இருக்கேன். நீ என்னை அவாய்ட் பண்ற மாதிரி தோணுது. நீ ஆஃபீஸ்ல என்கிட்ட சரியா பேசறதில்லை. நிறைய மறைக்கிற, பொய் சொல்ற ராம்."

Love
Love
Representational Image

``ஹைய்யோ போதும். உனக்கு நம்பிக்கையே இல்லையா என் மேல?''

``எத்தனை தடவை சொல்றது, என்கிட்ட மறைக்காதேனு. பண்றதெல்லாம் நீ. என் லவ் பத்தி நீ தப்பு சொல்லாதே."

ராம்க்கு கோபம் தலைக்கேறியது.

``எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லிட்டு இருக்க முடியாது. சொன்னாலும் அதுக்கு ஏதாவது சொல்லுவ. இப்பவே இவ்ளோ கேள்வி, சந்தேகம். கல்யாணம் ஆனா, இன்னும் எப்படிலாம் படுத்துவியோ? சத்தியமா முடியலை மாலினி. நான் போன வெக்கறேன். எதுவா இருந்தாலும் அப்புறம்..."

டொக்.

அவன் முடிப்பதற்குள் அவள் போனை வைத்துவிட்டிருந்தாள்.

ராம் எழுந்து பால்கனிக்கு வந்தான். அயர்ச்சியாய் இருந்தது. மாலினி பொசெஸிவ் ஆக இருப்பது அவனுக்குப் பிடித்திருந்தாலும், அவள் ஏதோ டிடெக்டிவ் மாதிரி அவன் பின்னாடியே வேவு பார்த்துக் கேள்வி கேட்பது கடுப்பாக்கியது.

சிறிது நேரம் கண் மூடி நின்றதில் மனம் இளகியது. ஆனாலும் அவள் பாவம். தான் ரொம்ப அதிகமாகப் பேசிவிட்டோம் என்று தோன்றியது.

போன் அடித்தான். ஸ்விச்டு ஆஃப்.

``ஸாரி மாலு."

மெசேஜ் அனுப்பினான். சிங்கிள் டிக் காட்டியது. தெரிந்ததுதான்.
`சரி நாளைக்குப் பேசிக்கலாம்' என்று படுக்கப் போனவனுக்கு அதுவே கடைசி என்று தெரிய வாய்ப்பில்லைதான்.

****

Couple / Representational Image
Couple / Representational Image
Pixabay

மாலினி குளித்துவிட்டு புடவை உடுத்தி கோவிலுக்குக் கிளம்பினாள். கிருஷ்ணன் சிரித்துக்கொண்டே, ``கல்யாணம் முடிஞ்சதும் இங்க மறுபடி வரணும் மாலினி....'' என்றான். கோவிலில் தரிசனம் முடித்ததும் அம்மா, ``மாலு, இங்க வடக்கு மாசில கிருஷ்ணன் கோயிலுக்கு நீ அடிக்கடி போவியே, கிருஷ்ணனைக் கூட்டிக்கிட்டு அங்க போய்ட்டு வாயேன். நான் பக்கத்துல இருக்குற என் ஃப்ரெண்ட் வீட்டுல பேசிட்டு வர்றேன்'' என்றதும் மாலினிக்குத் தூக்கிவாரிப் போட்டது. `அங்கேயா..? அய்யோ!'

கிருஷ்ணனும் மாலினியும் அங்கு சென்று தரிசனம் முடித்தார்கள். நந்தவனம் திறந்திருந்தது. மாலினி மெதுவாக உள்ளே நுழைந்தாள். ராதாகிருஷ்ணர் எப்போதும்போல சிரிப்புடன் இவர்களைப் பார்த்தார். கண் எதேச்சையாக, அவளும் ராமும் எப்போதும் அமர்ந்து பேசும் திண்டின் பக்கம் போனது. யாரோ தலை குனிந்து அமர்ந்திருந்தார்கள். மாலினிக்குத் தொண்டை அடைத்தது. கிருஷ்ணன் அதற்குள் காலியாக இருந்த இன்னொரு திண்டில் அமர்வதற்காகப் போனான்.

``க்ருஷ், உக்கார வேண்டாம், கிளம்பலாம் வா."

மாலினியின் குரல் கேட்டு கிருஷ்ணனும், குனிந்திருந்த அந்த உருவமும் நிமிர்ந்தன. மாலினி விக்கித்துப்போனாள். அது ராம் மாதிரி... மாதிரி என்ன ராமேதான். இவளைப் பார்த்ததும் சட்டென்று எழுந்துவிட்டான். அவள் அங்கிருந்து சட்டென நகர்ந்துவிட்டாள்.

ராமின் கை, கிருஷ்ணனின் தோளைப் பற்றியது.

``அது மாலினிதானே?"

``ஆமா... நீங்க ராமா?"

ராம் தலையசைத்தான்.

``என் பேர் கிருஷ்ணன். வீ வொர்க் டுகெதர் இன் பெங்களூரு."
கிருஷ்ணன் அவன் கைப்பற்றிக் குலுக்கினான்.

``வாங்க அங்க போய் உக்கார்ந்து பேசலாம்'' என்று சொல்லிக்கொண்டே ஒரு திண்டில் அமர்ந்தான். ராமும் அருகில் உட்கார்ந்தான்.

Relationship/ Representational Image
Relationship/ Representational Image

கிருஷ்ணன் ஆரம்பித்தான்.

``நானும் மாலினியும் இன்ஜினீயரிங் க்ளாஸ்மேட்ஸ் அண்ட் ஃப்ரெண்ட்ஸ். அப்போவிருந்தே தெரியும். மாலினியும் அம்மாவும் மதுரை வர்றதா சொன்னதும், எனக்கும் கூட வர ஆசை, அதான் வந்தேன்...'' என்றவன் தன் மொபைலை ஸ்க்ரீனை அன்லாக் செய்தபடியே, ``ரெண்டு மாசத்துல கல்யாணம் பாஸ்... போன மாசம்தான் என்கேஜ்மென்ட் முடிஞ்சிச்சு...'' என்று சொன்னபோது, ராமுக்கு மனம் திகுதிகுவென அடித்துக்கொண்டது. மொபைலில் என்கேஜ்மென்ட் போட்டோஸை காட்ட, கிருஷ்ணன் அருகில் வேறொரு பெண். அவர்களுக்குப் பக்கத்தில் மாலினியும் அம்மாவும்.

``வைஷ்ணவியும் எங்க க்ளாஸ்மேட்தான். யெஸ் காலேஜ் லவ்...'' என்றான் சிரித்தபடி கிருஷ்ணன். ராம் பெருமூச்சுவிட்டான்.

``ராம், உங்கள பத்தி மாலு எல்லாம் சொல்லிருக்கா. ஐ திங் யு கைஸ் ஷுட் டாக் அகெய்ன். அதான் கடவுள் வந்தன்னிக்கே உங்களை மீட் பண்ண வெச்சிருக்கார். நான் அவளை சமாதானப்படுத்தி வரச் சொல்றேன். ப்ளீஸ்... மனம்விட்டுப் பேசுங்க...''

மாலினியிடம் வந்தான் கிருஷ்ணன்.

``பாரு, இப்போ உன் மனம் கொந்தளிச்சிட்டு இருக்குதானே? இதுக்கு ஒரு முடிவு கட்டறவரை நீ ஓடிக்கிட்டேதான் இருப்ப. போய் ராம்கிட்ட பேசு."

``எப்படி இருக்க ராம்?" மாலினிதான் ஆரம்பித்தாள்.

``மாலு, இப்பவாவது சொல்லு, அந்தப் பொண்ணுதான் காரணமா நீ என்னை விட்டுட்டுப் போனதுக்கு? இல்ல வேற ஏதாவது ரீசன்னா சொல்லு. என் மனசுல இந்த நிமிஷம் வரை நீ மட்டும்தான். என்னைப் பிடிக்கலையா?"

மாலினி மறுப்பாய் தலையசைத்தாள்.

Relationship/ Representational Image
Relationship/ Representational Image
Pixabay

``அப்புறமென்ன மாலினி? பழசெல்லாம் தூக்கி குப்பைல போடு. புதுசா தொடங்கலாம்.''

ராமின் கண்களில் ஓர் உற்சாகம் தெரிந்தது.

``இல்ல ராம். ஐ டோன்ட் திங்க் இட் வில் வொர்க் அவுட். நான் ஏன் உன்கிட்ட இருந்து விலகிப்போனேன் தெரியுமா?"

``ஏன்?"

``பிகாஸ் ஐ வாஸ் க்ரேஸி அபவுட் யு. அப்செஷன்னுகூட சொல்லலாம். என்னோட வாழ்க்கைல இதுவரை யார் மேலயும் ஏற்பட்டதில்லை. உன் முன்னாடி நான் வேற யாரோவா மாறிட்ட மாதிரி தோணும் ராம். ஒவ்வொரு தடவையும் நான் ஏதாவது உன்கூட சண்டைப் போட்டுட்டு வீட்ல போய் யோசிக்கும்போது ரொம்ப கேவலமா ஃபீல் பண்ணுவேன். ஏன்னா என் இயல்பு அதில்லை. இன்ஃபாக்ட் ஐ ஏம் வெரி பர்ட்டிக்குலர் அபவுட் மை ஸ்பேஸ் டூ. அப்படி இருக்கறவ, உன்னை எப்படி எல்லாத்தையும் ஷேர் பண்ணுனு சண்டைப் போட முடிஞ்சுதுனு நினைச்சு மண்டை காஞ்சு போயிருக்கேன்.''

``மாலு இதெல்லாம்..."

``ப்ளீஸ் ராம்... நான் சொல்ல வந்ததை சொல்லிடறேன். ரொம்ப நாளா மனசுல இருக்கற விஷயம் இது. யு நோ ராம், அப்பா எப்பவும் சொல்லி நான் கடைப்பிடிக்கற விஷயம் என்ன தெரியுமா? மனுஷங்களைவிட வாழ்க்கை மேல பொசெஸிவ்வா இருக்கணும்ங்கறதுதான். ஆனா உன்கிட்ட எவ்வளவு இம்மெச்சூர்டா நடந்துகிட்டேன். மே பி... லவ்ல இது காமனா இருக்கலாம். பட் இட் மேட் மீ அன்கம்ஃபர்ட்டபிள்.

காட்! ராம்! நான் உன்னை சந்தேகப்பட்டிருக்கேன். உன் முன்னாடி ஒரு மாதிரி பிஹேவ் பண்ணிட்டு, பின்னாடி என் உண்மையான இயல்புக்கு பதில் சொல்ல முடியாம எத்தனை நாள் ராத்திரி பைத்தியக்காரி மாதிரி எனக்கு நானே பேசிக்கிட்டு இருந்திருக்கேன் தெரியுமா. பட் ஐ ஸ்டில் வான்ட்டட் டு கிவ் அஸ் ஏ சான்ஸ். அதான் பெங்களூரு ஓடிப்போனேன். கொஞ்சம் விலகியிருந்தா சரியாகும்னு. பட் உன் கூட இப்படித்தான் இருப்பேன்னு தோணுது. இப்படி இருந்தா வீ வில் ஒன்லி ஹர்ட் ஈச் அதர் மோர்.

Couple/ Representational Image
Couple/ Representational Image

``மாலு... அப்படிலாம் ஆகாது. வி லவ் ஈச் அதர்... கொஞ்ச நாளான, எல்லாம் சரியாகும்."

``ராம், நீ அவசரப்படற. கொஞ்சம் யோசிச்சு பாரு. இனி இப்படி சண்டை வராதுனு என்னால சொல்ல முடியாது. அப்படி வந்தா, ஒரு கட்டத்துல ரெண்டு பேருக்கும் சலிப்பு வந்துடும். லைஃப் வில் பிகம் ஏ காம்ப்ரமைஸ். உனக்கு என் மேலேயே வெறுப்பு வரலாம். என்னால அதை நினைச்சுக்கூடப் பார்க்க முடியல.

இந்த ரெண்டு வருஷத்துல உன்னைப் பார்க்காம, பேசாம, நான் ரொம்ப கஷ்டப்பட்டேன்தான். ஆனா மனசுல இப்ப அந்த ரெஸ்ட்லெஸ்னஸ் இல்லை. இன்செக்யூரிட்டி இல்லை. உன்னை வாழ்க்கையில சந்திக்கறதுக்கு முன்னாடி இருந்த மாலினி எனக்குத் திரும்ப கிடைச்சா. எனக்கு அது ரொம்ப முக்கியம்னு தோணுது.”

``......"

``என்னைப் பொறுத்தவரை எல்லாமே ஒரு மாடரேஷன்ல போகணும். அப்போதான் லைஃப் வில் பி ப்யூட்டிஃபுல் அண்ட் பீஸ்ஃபுல். நம்ம விஷயத்துல அப்படி போகும்னு எனக்கு நம்பிக்கையே இல்லை ராம். நம்மைப் பத்தி எப்பவும் நல்ல மெமரீஸ் நமக்கு இருக்கணும். லவ் பண்ணிட்டோம்ங்கிறதுக்காக சேர்ந்து வாழ்ந்து ஒருத்தரை ஒருத்தர் காயப்படுத்திக்கிட்டே இருக்கிறதைவிட, இதுவே நல்லதுனு தோணுது.

Vikatan

``........"

``உனக்கு ஏமாற்றமாவோ, இல்லை கோபமாகூட இருக்கலாம். பட், யோசிச்சா உனக்கு இதுதான் கரெக்ட்னு புரியும்னு நான் நம்பறேன்."

ராம் இனி பேசுவது வீண் என்பதுபோல மௌனம் காக்க, மாலினி கிளம்பினாள்.

ராதாகிருஷ்ணன் வழக்கம்போல சிரித்தபடியே எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தார்.

- ஸ்ரீப்ரியா

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு