Published:Updated:

"உலகத்திலேயே அதிகமாக முட்டாள்தனங்களை Youtube-ல் ஏற்றியிருப்பது தமிழர்கள்தான்" - ஜெயமோகன்

ஜெயமோகன்

எந்த தீவிர எழுத்தாளர் விமர்சனங்களை சந்திக்காமல் இருந்திருக்கான்? ஒரு நாள் கூட கிடையாது. ஏனென்றால் விமர்சனம் இலக்கியத்தின் பண்பு நலன்களில் ஒன்று.

"உலகத்திலேயே அதிகமாக முட்டாள்தனங்களை Youtube-ல் ஏற்றியிருப்பது தமிழர்கள்தான்" - ஜெயமோகன்

எந்த தீவிர எழுத்தாளர் விமர்சனங்களை சந்திக்காமல் இருந்திருக்கான்? ஒரு நாள் கூட கிடையாது. ஏனென்றால் விமர்சனம் இலக்கியத்தின் பண்பு நலன்களில் ஒன்று.

Published:Updated:
ஜெயமோகன்
கடந்த 30 ஆண்டுகளாக தமிழ் இலக்கியம் என்று எடுத்துக்கொண்டால் அதில் தவிர்க்க முடியாத ஒரு பெயர் இருக்கும். அந்தப் பெயரின் மீது பல்வேறு மக்களுக்கு காதலும், அதே சமயம் விமர்சனமும் உண்டு. ஜெயமோகன் அப்படியான ஒரு எழுத்தாளுமை. விஷ்ணுபுரம், கொற்றவை, வெண்முரசு போன்ற விமர்சனத்திற்கு பெயர் பெற்ற பல நாவல்களையும் சிறுகதைகளையும் எழுதிய ஜெ.மோ சர்கார், 2.0, கடல், நான் கடவுள் போன்ற படங்களுக்கும் பங்களித்திருக்கிறார். அவரை சந்தித்து பேராசிரியர் பர்வீன் சுல்தானா நிகழ்த்திய நேர்காணல் இதோ...
எழுத்தாளர் ஜெயமோகன்
எழுத்தாளர் ஜெயமோகன்

"ஏன் ஜெயமோகன் எழுதனும்? யாருக்காக எழுதனும்? யாரெல்லாம் அவருடைய வாசகர்கள்?"

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"ஒரு முறை ஒரு பேட்டியில் நான் கூறியிருப்பேன். 'புத்தனுக்கு தியானம் எப்படியோ, அதுபோலதான் எனக்கு எழுத்து' என்று. எழுத்து என்பது வாசகனை மகிழ்விக்ககூடியதல்ல. இன்னும் சொல்லப்போனால், வாசகனுக்குக் கற்பிக்கும் தன்மைகூட எழுத்திற்குக் கிடையாது. அது ஒரு வெளிபாடு மட்டும்தான். ஒரு கனவை நாமே உருவாக்கிக்கொள்வதுதான் இலக்கியம். நாமே ஒரு மொழி வழியாக கனவிற்குள் போகிறோம். அந்தக் கனவில் நாம் வாழ்கிறோம். கனவு நம்மிடமிருந்துதான் வருகிறது. ஆனால் அதுவரும் வரைக்கும் அது எங்கிருந்து வருகிறது என்பது தெரியாது. ஆனால் அதுவந்த பின் நமக்கே அது புதியதாகவும், பல புதிய விஷயங்களைக் கற்பிப்பதாகவும் இருக்கும். அதுபோல் தான் இலக்கியம். கனவு நமக்கு கற்பிப்பதுபோல, நாம் எழுதுவது நமக்கு நாம் யாரென்று கற்பிக்கின்றது. ஒருவர் என் எழுத்தைப் படிக்கவில்லை என்றாலும், நான் இப்படிதான் எழுதுவேன். ஒருவர்கூட புரிந்து கொள்ளவில்லை என்றாலும்கூட என் படைப்புகளில் எந்தவொரு மாற்றமும் வராது. எனக்கு எழுதும்போதும், வெளியிடும்போதும் வாசகரே தேவையில்லை. என் வாசகர்கள் அனைவரும் நான் எழுதக்கூடியதை பகிர்ந்துகொள்ளக் கூடியவர்கள். அவர்களுக்காக நான் எழுதவில்லை. அவர்கள் எந்தவிதத்திலும் எனக்கு ஒரு பொருட்டு கிடையாது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

"உங்களுக்கு எப்படி வாசகர்கள் அதிகமாகிறார்களோ, அதே போல் விமர்சகர்களும் அதிகமாகிறார்கள். நிறைய மனஉளைச்சல்களை சிக்கல்களை கொடுக்குற முயற்சிகள் இருந்தாலும், எல்லாவற்றையும் கடந்து எழுதிக்கொண்டே இருப்பதற்கு எது உங்களுக்கு உத்வேகமா இருக்கு?"

"இலக்கியத்தை இங்கு பழைய இலக்கியங்கள், புதிய இலக்கியங்கள் என்று இரண்டு விதமாய் பிரிக்கலாம். பழைய இலக்கியங்களின் பண்பு என்னவென்றால், அது நேரடியாக சான்றோர் அல்லது கற்றோரை நோக்கிச் செல்லக்கூடியது. ஆனால் நவீன இலக்கியங்கள் நேரடியாக மக்களின் கைகளில் சென்று சேரக்கூடியது. உதாரணத்திற்கு சமுதாயத்தையே நாம் உற்றுநோக்கும்போது, முந்தைய காலங்களில் ஒரு பொது கல்விமுறை இல்லை. குலக்கல்விதான் இருந்தது. அதாவது ஒரு குலத்திற்கான கல்வி, ஒரு தொழிலுக்கான கல்வி. அனைவருக்கும் ஒரே கல்வி என்பதுதான் நவீன சமுதாயம். இந்த நவீன சமுதாயத்தை நோக்கி எழுதக்கூடிய எழுத்து தான் நவீன எழுத்து. இந்த காலம் பாரதியிலிருந்தே தொடங்குகிறது. பழைய இலக்கியங்கள் அனைத்தும் ஒரு கற்றோரை/ சான்றோரை நோக்கிச் செல்லக்கூடியது. புதிய இலக்கியம் என்பது நேரடியாக வாசகனைச் சென்று சேரக்கூடியது. இந்த நவீன இலக்கியத்தின் அடிப்படை பண்புகளில் ஒன்று, அது நேரடியாக சமூகத்தைப் பற்றி பேசும், வழிகாட்டும்.

ஜெயமோகன்
ஜெயமோகன்

தமிழில் எழுதின முதல் நவீன இலக்கியமே கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. அ. மாதவையா 1870-ல் சாவித்திரி எனும் புத்தகம், ஒரு பிராமண விதவையைப் பற்றி விவரிக்கிறது. பிறகு அதை முத்து மீனாட்சி எனும் பெயரில் நாவலாய் மாற்றுகிறார். கடும் விமர்சனங்களைக் கண்டு அதை பாதியிலேயே நிறுத்திவிட்டார். பிறகு 15 வருடம் கழித்து அதை நாவலாக வெளியிட்டார். இன்றைக்கு அந்த நாவலைப் படித்தாலும், அது சீண்டக்கூடியது. பிராமண சமுதாயம் ஒரு பெண்மீது எப்படி உச்சகட்ட வன்முறையை செலுத்துகிறது என்பதை விவரிக்கும் அந்தக் கதை. இது போல நவீன இலக்கியங்கள் எந்தவொரு விஷயத்தையும் சீண்டக்கூடிய தன்மை உடையது. இடித்துரைக்கக்கூடிய தன்மை உடையது. பாரதியினுடைய கவிதைகளும் அப்படிதான், ஜெயகாந்தன் உருவாக்காத விவாதங்கள் கிடையாது. தம்முடைய இறப்பு வரைக்குமே விவாதங்களில் தான் இருந்தார். சுந்தர ராமசாமி சந்திக்காத விமர்சனங்கள் கிடையாது. எந்த தீவிர எழுத்தாளர் விமர்சனங்களைச் சந்திக்காமல் இருந்திருக்கான்? ஒரு நாள் கூட கிடையாது. ஏனென்றால் விமர்சனம் இலக்கியத்தின் பண்பு நலன்களில் ஒன்று."

"வரலாறு குறித்த விஷயத்தில் ஜெயமோகன் வித்தியாசமான பார்வைக் கொண்டவர் என்று ஒரு விமர்சனம் உண்டு. தற்போது தமிழ் சூழலில் வரலாறு எவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது? சமீப காலமாக கொற்கை, கீழடி, கொடுமணல் குறித்த பதிவுகள் எல்லாம் பெருமளவில் வந்துக்கொண்டிருக்கிறது. இந்திய வரலாறு தென்னகத்தில் இருந்து தான் தொடங்கியது என்று சொல்கிறார்கள். அது குறித்து உங்கள் கருத்து என்ன?"

ஒரு எழுத்தாளனுக்குத் தத்துவம் மற்றும் வரலாறு இரண்டுமே இரண்டு சிறகுகள் போல. குறிப்பாக நாவலாசிரியர்களுக்கு வரலாறு மிகவும் முக்கியம். நான் என்னுடைய 25 வயதிலிருந்து தொடர்ந்து வரலாறு படித்துக்கொண்டிருக்கக் கூடியவன். தமிழ்நாட்டிலுள்ள பொது தளங்களில் வரலாற்றை குறித்த புரிதல் அறவே கிடையாது. வரலாறு என்பது புறமயமான தரவுகளைக் கொண்டு உருவாக்கப்படும் ஒரு சித்திரம். அதில் பற்றுகளுக்கு இடம் கிடையாது. ஒரு வரலாற்று ஆய்வாளர் தமிழனுடைய பெருமைகளை எடுத்துச் சொல்வதற்காக இதை செய்தேன் என்று சொன்னால் அவர் வரலாற்று ஆய்வாளர் கிடையாது. தமிழ்நாடு வரலாறு பற்றி பேசும் பெரும்பாலானவர்களுக்கு ஒரு தாழ்வுணர்ச்சி இருக்கிறது. தங்களுடைய செயற்கையான பெருமிதங்களைச் சொல்வதற்கு வரலாற்றில் ஏதாவது கிடைக்குமா என்று பார்க்கிறார்கள். தமிழ்போல ஒலிக்கக்கூடிய ஒரு பத்து வாரத்தை எதாவது ஒரு மொழிகளில் இருந்தால் அந்த மொழி தமிழில் இருந்து வந்தது என்று சொல்லிவிடுவார்கள். யூடியூபில் சென்று தமிழ்நாடு வரலாற்றை பற்றி சொல்லக்கூடிய அந்தப் பேச்சுகளை பார்த்தால், உலக அளவிலேயே இந்த அளவிற்கு முட்டாள்தனங்களை வலையேற்றி இருக்கக்கூடிய ஒரு இனம் தமிழர்கள்தான் என்பது தெரியும். இதனாலேயே நம்முடைய உண்மையான பெருமிதங்களையும், வெற்றிகளையும் மற்றவர்கள் அங்கீகரிக்க மாட்டார்கள்."

ஜெயமோகன்!
ஜெயமோகன்!

1960 வரையிலுமே சர்வதேச தளங்களில் இருக்கக்கூடிய வரலாற்று ஆய்வாளர்கள் எல்லோருமே சங்க கால இலக்கியம் என்று ஒன்று இல்லையென்று தான் சொல்லிக் கொண்டிருந்தார்கள். பல்லவ காலத்து ஜைனப் புலவர்கள் சிலரால் உருவாக்கப்பட்டது தான் சங்க கால இலக்கியம். தொல்லியல் சான்றுகள் எதுவும் இல்லாத காரணத்தினால் சங்க காலத்தை புறம் தள்ளினார்கள். பின்னர் இரண்டு ஆய்வாளர்கள் ஐராவதம் மகாதேவன் மற்றும் நாகசாமி தங்கள் தொல்லியல் ஆய்வுகளை முன்வைக்கிறார்கள். அதன்பின் தான் சங்க காலம் என்று ஒன்று உண்டென நிரூபணம் ஆகியது. தமிழகத்தின் வரலாற்று ஆய்வின் பெரிய இடர் என்னவென்றால் இங்கு தொல்லியல் சான்றுகள் கிடைக்குமிடத்தில், அதை நிறுவக்கூடிய இலக்கிய சான்றுகளோ மொழி சான்றுகளோ கிடையாது. மொழி சான்றுகள் இருக்கக்கூடிய இடங்களில் தொல்லியல் சான்றுகள் கிடையாது. ஆதிச்சநல்லூர், கொடுமணல் போன்றவைகளெல்லாம் குறைந்தது 2500 ஆண்டுகள் பழைமையானவை. ஆனால் அந்தப் பண்பாட்டைப் பற்றி எந்தவித தரவுகளும் நம்மிடம் கிடையாது. அதைப் பற்றிய இலக்கியச் சான்றே கிடையாது. அதனால் அதைப் பற்றி நம்மால் விளக்க முடியாது. குறுந்தொகை, புறநானூற்றில் இலக்கியச் சான்றுகள் கிடைக்கப்பெறுகிறது. ஆனால் குறுந்தொகை காலகட்டத்தை சேர்ந்த தொல்லியல் சான்றுகள் எதுவும் இல்லை."

"இப்போது உலக அளவில் சங்க இலக்கிய காலகட்டத்தைச் சேர்ந்தது என்று உண்மையாகச் சொல்லக்கூடிய ஒரு சிறு நகரம் கிடைத்துள்ள வகையில் கீழடி முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால் இந்திய அளவில் ராஜ்கீர் கீழடியைவிட 200 வருஷம் பழைமையானது. மேலும் சாரநாத் ஸ்தூபி, சாஞ்சி ஸ்தூபி போன்ற இன்னும் கீழடியைவிட பழைமையான இடங்கள் இந்தியாவில் உள்ளது. ஹரப்பா மொகெஞ்சதாரோ காலத்தைவிட பழைமையான இடங்கள் ராஜஸ்தான் மற்றும் கட்ச் பாலைவனங்களில் உள்ளது. இங்கு கீழடியினுடைய இடம் என்னவென்றால் வரலாற்றில் சங்க காலம் என்பது ஒரு புனைவு அல்ல என்று சொல்லக்கூடிய ஒரு நகரம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது என்பது தான். ஆனால் வரலாறு இங்கிருந்துதான் தொடங்குகிறது என்று சொல்வது, வரலாறு என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் சொல்லக்கூடியது. இது குறித்து இணையத்தில் பேசுபவர்களிடம் எதேனும் ஒரு வரலாற்று நூலின் பெயரையோ, வரலாற்றாசிரியரின் பெயரையோ கேட்டால் தெரியாது. ஆனால் அவர்கள் தான் இது பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்."

"நீங்க நிறைய எழுத்தாளர்களை விமர்சனம் பன்றிங்க. ஒரு சிலரின் படைப்புகளை அதெல்லாம் எழுத்துக்களே கிடையாது என்று தூக்கு வீசுறிங்க. அப்போ நீங்க மட்டும் தான் எழுத்தாளரா?"

"வேற்று நாடுகளில் எழுத்தாளர் வேறு. விமர்சகர் வேறு. ஆனால் தமிழகத்தில் புதுமைப்பித்தன் காலத்திலிருந்து எழுத்தாளர்கள் விமர்சனம் எழுத வேண்டிய தேவை இருக்கு. ஏனென்றால் அழகியல் பார்வையோட விமர்சனம் எழுதக்கூடிய விமர்சகர்கள் இங்கு குறைவு. இப்போதுள்ள விமர்சகர்கள் அழகியலைவிட அரசியல் பார்வை கொண்டுதான் விமர்சனம் செய்கிறார்கள். இந்தக் கேள்வியை நீங்கள் சுப்ரமணிய பாரதியிடம் கேட்கலாம், புதுமைப்பித்தனிடம் கேட்கலாம், சுந்தர ராமசாமியிடம் கேட்கலாம், என்னிடமும் கேட்கலாம், எனக்கு அடுத்து வரக்கூடிய தலைமுறையினரிடமும் கேட்கலாம். விமர்சனங்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று, கல்வித் துறை சார்ந்த விமர்சனம். இது எந்த காலக்கட்டத்தில் வந்தது. தரவுகள் சரியாக இருக்கின்றனவா என்று விமர்சனம் செய்வது. மற்றொன்று அரசியல் சார்ந்த விமர்சனம். இது முற்போக்கா பிற்போக்கா என்று கருத்தியலை சார்ந்து விமர்சனம் செய்வது. மூன்றாவது ஒரு படைப்பு சிறுகதையா?, நாவலா? , அதனுடைய மொழியீடு என்ன? என்று பார்ப்பது. இந்த மூன்றாவது விமர்சனத்தை தான் நாங்கள் செய்துக்கொண்டு இருக்கிறோம். இது ஒரு சூழலில் மிகவும் அவசியமாகிறது. எல்லாரும் எல்லாமும் இலக்கியமென்றால், இலக்கியமென்பதே கிடையாது."

"நீங்கள் இதழாசிரியர் சுதாங்கன் இறந்தபின் அவரை விமர்சித்திருந்தீர்கள். ஒருவர் இறந்து போனபின் அவரது ஆக்கங்களை குறித்து விமர்சிப்பது அழகியலில் இருந்து விலகி போய்விடுவது போல உங்களுக்கு தோன்றவில்லையா?"

"இதை சுதாங்கனுக்கு மட்டுமல்ல என் நெருங்கிய நண்பரான ஞாநியையும் இப்படி தான் விமர்சித்திருந்தேன். பொது மக்கள் ஒருவர் இறந்தப்பின் உணர்ச்சிவசப்பட்டு அவரை தலையில் வைப்பார்கள். சாகித்திய அகாதமி மறைந்துபோன எழுத்தாளர்களைப் பற்றி, இந்திய எழுதாள சிற்பிகள் என்று ஒரு இதழ் வெளியிடுகிறார்கள். பல புத்தகங்களில் ஒரு வரிக்கூட விமர்சனம் கிடையாது. எல்லாமுமே வெறும் புகழ் மொழிகள்தான். ஒரு அரசியல்வாதி மறைந்துபோனால், அதன்பின் அவர் நினைவு தான். ஒரு தொழிலாளர் மறைந்து போனால், அவர்கள் பிள்ளைகள் அவர்களுக்கு அஞ்சலி கூட்டம் வைப்பார்கள். ஆனால் ஒரு எழுத்தாளன் மறைந்துப்போகும் இடத்திலிருந்து தொடங்குகிறான். இன்று நாம் புதுமைப்பித்தனை பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால் சத்தியமூர்த்தியைப் பற்றிப் பேசுவதில்லை. சத்தியமூர்த்தி காலத்தில் அவர் பெரிய ஆளுமை. ஆனால் அப்போது புதுமைப்பித்தன் என்பவர் யாரென்றே தெரியாது. ஒரு அறிவியக்கவாதி இறந்துபோன இடத்திலிருந்து ஒரு தொடக்கம் இருக்கு. ஒவ்வொரு அறிவியக்கவாதியும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு விஷயம், 'நீ தொகுக்கப்படுவாய்' என்பது தான்.

ஜெயமோகன்
ஜெயமோகன்

சுதாங்கன் மறைந்தாலும் சுந்தர ராமசாமி மறைந்தாலும் ஒரே மாதிரியான புகழ் வார்த்தைகள் தான் வீசப்படுகின்றன. அப்போது ஒரு அறிவியக்கவாதி இது சுதாங்கன், இது சுந்தர ராமசாமி என்று சொல்ல வேண்டிய நிலையில் உள்ளான். அது அடுத்த தலைமுறைகாக செல்லக்கூடியது. இதனால் நீங்கள் புண்படுகிறீர்கள் என்றால் தயவுசெய்து என்னைப் படிக்காதீர்கள். தீவிர இலக்கியத்தின் மீதும், அறிவியக்கத்தின் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள் என் எழுத்துக்களைப் படிக்கிறார்கள். அவர்களிடம் நான் பேசிக்கொண்டிருக்கிறேன். உங்களுக்கு சம்பிரதாயமான புகழ் மொழிகள், மங்கல வார்த்தைகள் வேண்டுமென்றால், அதை சொல்லக்கூடியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அங்கு சென்று படிக்கலாமே. நான் இறந்தாலுமே இதே போன்ற அளவுகோலில் நான் என்ன செய்தேன் என்று கணக்கு போட்டால் போதும். எனக்கு ஒரு துளி மங்கள வார்த்தையும், இரங்கல் வார்த்தைகளோ தேவை கிடையாது.