Published:Updated:

‘பூவுலகு’ சுந்தர்ராஜனின் வாழ்வை மாற்றிய ‘அந்த ஒரு வரி!’

"சுற்றுச்சூழல் சார்ந்த ஆர்வம் உன்னிடம் அதிகம் இருப்பதாகத் தெரிகிறது... நீ இந்தப் புத்தகத்தைப் படி!"

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

என்னுடைய சொந்த ஊர் சங்கரன்கோவில் அருகே உள்ள ஒரு சிறு கிராமம். விவசாயக் குடும்பம். அப்பாவும் அம்மாவும் தங்கள் இறுதி நாள்கள் வரை விவசாயத்தில்தான் இருந்தார்கள். எங்கள் வீட்டில் எப்போது தானியம், பருத்தி போன்ற வேளாண் பொருட்களும், உழவு உபகரணங்களும், உழவு மாடு என வீடே நிறைந்திருக்கும். எங்கள் வாழ்வியலில் விவசாயம் ஒன்றாகக் கலந்திருந்தது. தண்ணீரை வீணாக்காதே, குப்பை சேர்க்காதே என சிறுவயதிலிருந்தே அம்மாவும், அப்பாவும் சொல்லிச் சொல்லி வளர்த்தனர். எனவே, தத்துவரீதியாக அல்லாமல், இயல்பாகவே என்னுள் சூழலியல் சார்ந்த கரிசனம் உருவாகத் தொடங்கியிருந்தது.

பூவுலகு சுந்தர்ராஜன்
பூவுலகு சுந்தர்ராஜன்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது என்.எஸ்.எஸ்-ல் சேர்ந்தேன். இறுதியாண்டில் நான் அதன் ஒருங்கிணைப்பாளராக இருந்தபோது, அந்த ஆண்டுக்கான தேசிய ஒருமைப்பாட்டு முகாமை ஒருங்கிணைக்கும் பொறுப்பை ஏற்றிருந்தேன். அந்த முகாமில் பத்து நாள்கள் வெவ்வேறு இடங்களில் தங்கி சமூகப் பணியாற்றுவோம். அப்போது ஒருநாள் சிதம்பரத்தின் முக்கியப் பிரமுகர்களோடு பிச்சாவரத்திலுள்ள அலையாத்தி காடுகளில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, நான் தீவிரமாக இறங்கி வேலைபார்த்துக் கொண்டிருந்தேன். சிதம்பரத்தில் நகைக்கடை வைத்திருந்த திரு. பழனி என்பவர் என்னை அப்போது அழைத்து, “சுற்றுச்சூழல் சார்ந்த ஆர்வம் உன்னிடம் அதிகம் இருப்பதாகத் தெரிகிறது... நீ இந்தப் புத்தகத்தைப் படி” என்று 1980-களின் இறுதியில் பூவுலகின் நண்பர்கள் மொழிபெயர்த்து வெளியிட்ட புத்தகம் ஒன்றை எனக்குக் கொடுத்தார். உலகப் புகழ்பெற்ற ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’ என்ற புத்தகம்தான் அது!

பிற்காலத்தில் 'பூவுலகின் நண்பர்கள்' குழுவுக்கு வருவோம், செயல்பாட்டாளராக மாறுவோம் என்றெல்லாம் எனக்கு அப்போது தெரியாது. கல்லூரி இறுதியாண்டில் இருந்தபோது நான் வாசித்த அந்தப் புத்தகத்திலிருந்த, என் வாழ்வையே மாற்றிய, இன்றும் என்னை இயங்க வைத்துக் கொண்டிருக்கும் அந்த ஒரு வரி:

“இயற்கைதான் நமது பிரதான ஆசான், இயற்கையில் நடக்கின்ற பரிவர்த்தனைகளை, மாற்றங்களை ஒன்றுக்கொன்று கொடுக்கல் வாங்கல்களைப் புரிந்துகொள்வதுதான் அறிவியல்; இயற்கையைவிட பெரிய அறிவியல் உலகத்தில் கிடையாது.” எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிறார் மசானாபு ஃபுகோகா!

ஒற்றை வைக்கோல் புரட்சி
ஒற்றை வைக்கோல் புரட்சி

ஆறறிவு பெற்று, பயங்கரமான தொழில்நுட்பங்களுடன் பல்வேறு விஷயங்களை சாதித்துக் கொண்டிருப்பதாக மனிதர்களாகிய நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்; ஆனால், எல்லா வகையிலும் நாம் சாதித்த பல்வேறு விஷயங்களுக்கு இயற்கைதான் உந்துசக்தியாக, ஆதாரமாக இருந்துகொண்டிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மசானாபு ஃபுகோகாவின் அந்த வரிதான் என்னைப் பூவுலகின் நண்பர்களில் இணைத்து, ஓர் செயல்பாட்டாளனாக மாற்றி நாம் சுற்றுச்சுழலுக்காகச் செய்ய வேண்டிய விஷயங்களைச் செய்ய வைத்திருக்கிறது. இந்த இயற்கை மண்டலம், சூழலியல் தொகுதி மனிதர்களுக்கு மட்டுமானது அல்ல, எல்லா உயிரினங்களுக்குமானது என்பதை அந்தப் புத்தகம் உணர்த்தும்!

‘பூவுலகு’ சுந்தர்ராஜனின் வாழ்வை மாற்றிய அந்த ஒரு வரியை அவரது குரலிலேயே கேட்க..!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு