Published:Updated:

என் வாழ்வை மாற்றிய அந்த எழுத்தாளர்!

ரமணிசந்திரன் நூல்கள்

அந்த ஆசிரியரின் அத்தனை புத்தகங்களையும் இடைவிடாமல் இரவு பகலாக படித்ததெல்லாம் நானே எதிர்பாராத ஒன்றுதான்!

என் வாழ்வை மாற்றிய அந்த எழுத்தாளர்!

அந்த ஆசிரியரின் அத்தனை புத்தகங்களையும் இடைவிடாமல் இரவு பகலாக படித்ததெல்லாம் நானே எதிர்பாராத ஒன்றுதான்!

Published:Updated:
ரமணிசந்திரன் நூல்கள்

எத்தனையோ எழுத்தாளர்கள் மற்றவர்கள் வாழ்க்கையில் தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறார்கள். அப்படி, என்னுடைய வாழ்க்கையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியவர் இவர். இந்த எழுத்தாளரைப் பற்றிய தகவல்கள் அரிதாகவே கிடைக்கும். பேட்டிகளே இவரைப் பற்றி அறிந்துகொள்ள இவரின் புத்தகங்களே சிறந்த வழி. எந்த ஒரு புத்தகத்தை படித்து முடிக்கையில் மனம் நிறைந்து மறுபடியும் மறுபடியும் படிக்கத் தூண்டுகிறதோ, அங்கே அந்த எழுத்தாளரின் நோக்கம் ஓரளவாவது நிறைவேறிவிட்டது என்றுதானே அர்த்தம். அதை இவர்களின் எழுத்தில் காணலாம்.

ரமணிசந்திரன்... அவருடனான என்னுடைய பரிச்சயத்தை நிச்சயம் சொல்லியே தீர வேண்டும். நான் பொன்னியின் செல்வன் மற்றும் சாண்டில்யனின் வரலாற்றுக் கதைகளைப் படித்துக் கொண்டிருந்த தருணம் அது. நான் புத்தகப் பிரியைதான். ஆனால், எங்கு என்ன புத்தகம் வாங்குவது என்பதெல்லாம் பெரிதாகத் தெரியாது. வரலாற்றுக் கதைகளில் ஆர்வம் இருந்ததால் அப்படியே சில மாதங்கள் படித்து கொண்டிருந்தேன். கல்லூரி சேரும் வரை சில மாதங்கள் வெறுமையாகத்தான் இருந்தது. அப்படி ஒருநாள் யதேச்சையாக ஒரு புத்தகத்தைப் பிரித்துப் படித்தேன். வரலாற்றுக் கதைகளிலே மூழ்கி இருந்த எனக்கு அது வித்தியாசமாக இருந்தது. படித்த பிறகு மனமோ சந்தோஷத்தில் ’நல்லாருக்கே’ என்று மறுபடியும் மறுபடியும் படிக்க வைத்தது.

அது ஆஹா ஓஹோ ரகம் இல்லை. யதார்த்தமும் காதலும் கலந்து நெருடல் இல்லா ரசனையோடு இருந்ததுதான் காரணம். அந்த நாவலின் பெயர் ’கிழக்கு வெளுத்ததம்மா’ - அதிலிருந்த சசிகாந்தனும் மீராவும் என் மனத்தில் பதிந்து போய் விட்டனர். பக்கத்திலேயே நடந்த சம்பவம் போலவும், அவர்கள் பரிச்சயமானவர்கள் போலும் ஆகிவிட்டனர். இந்த லிஸ்ட்டில் இன்னும் எக்கச்சக்க ஆட்கள் சேரப் போகிறார்கள் என்று நிச்சயமாக அப்போது எனக்கு தெரியாது. அந்த ஆசிரியரின் அத்தனை புத்தகங்களையும் இடைவிடாமல் இரவு பகலாக படித்ததெல்லாம் நானே எதிர்பார்க்காத ஒன்றுதான். அப்படித்தான் ரமணிசந்திரனின் ரசிகை என்ற நிலையிலிருந்து அடிக்டர் என்ற நிலைக்கு புரமோஷன் ஆகிவிட்டிருந்தேன்.

எழுத்தாளர் ரமணிசந்திரன்
எழுத்தாளர் ரமணிசந்திரன்

கதைமாந்தர்கள் சண்டைபோட்டுக்கொண்டதற்கெல்லாம் நான் சாப்பிடாமல், "ஏன்தான் இப்டி பண்றாங்களோ சே" என்று சலித்துக்கொண்டு இருந்திருக்கிறேன். ஒவ்வொரு கதை முடிக்கையிலும் இதுதான் பெஸ்ட் என்று தோன்றும். அடுத்த கதையில் இது பெஸ்ட் என்று டெம்டேஷனை ஏற்றிக்கொண்டே போகும். பெரிய ஹீரோயிசம் அப்படி இப்படி என்று எதுவும் கிடையாது. ஆனால், காதல் கதை என்றால் இதுவல்லவோ என எண்ண வைக்கும்.

இந்த எழுத்தாளருக்கு எழுத்தின் மீதுள்ள காதலைவிட காதலின் மீதுள்ள காதல்தான் அதிகமோ என்று நிறைய தரம் யோசித்திருக்கிறேன். ஏன் சொல்கிறேன் என்றால் அவர் எழுதிய கதையில் ஒரு காதல் கூட தோற்றதே கிடையாது. உண்மையாகவே எப்படிப்பட்ட பிரச்னை இருந்தாலும் அதை பாசிட்டிவ்வான முறையில் எடுத்துச் சென்று அதற்கொரு நல்ல முடிவு கொடுத்திருப்பார். குடும்பங்களில் பல பிரச்னைகள் தீர்க்கப்படாமல் எவ்வளவு கிளை பிரச்னைகளை உருவாக்கி இருக்கிறது என்று அறிவோம். ஆனால், இவரின் குடும்பக் கதைகளில் பிரச்னைகளை அணுகும் பாணியே தனிதான்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஒரு பணக்காரன் பணத்தை வைத்து பெண்ணை திருமணம் செய்து கொள்கிறான், அவளுக்கு பிடிக்கவே இல்லை என்றாலும் கூட. அவள் ஒருகட்டத்தில் துணிச்சலான முடிவு எடுத்து வீட்டை விட்டே வெளியேறுகிறாள். இந்த கதை 1980-களில் எழுத்தப்பட்டது. 21-ம் நூற்றாண்டில்தான் கொஞ்சம் கொஞ்சமாகத் துணிந்து முடிவு எடுத்துக்கொண்டு வருகிறார்கள். ஆனால், மிகத் துணிச்சலாக அப்போதே அதை சொல்லி விட்டார் ரமணிசந்திரன். கேங் ரேப் செய்யப்பட்ட பெண்ணை காதல் திருமணம் செய்யும் மதுசூதனனுக்கு அவளின் கதை பிறகுதான் தெரிய வருகிறது. அந்தப் பெண், அவன் மனம் வருந்த கூடாது என விவகாரத்து கேட்டு நிற்கையில், "நம் தலையில் காகம் எச்சமிட்டததற்காக தலையையேவா வெட்டி விடுகிறோம்... அது போலத்தான் இதுவும் கண்ணம்மா" என சமூகத்தில் நிலவுகின்ற கற்பின் மீதான ஆதிக்கத்தை தூசியாகத் தட்டிச் செல்கையில் எல்லாம் அவரின் ஆழ்ந்த முற்போக்கு சிந்தனை அசாதாரணமாக சுழன்றடித்துச் செல்லும்.

எத்தனை பணக்கார ஆண்கள் கதையில் தென்பட்டாலும் எத்தனை ஏழைப் பெண்கள் வாக்கப்பட்டாலும் எந்த ஒரு பெண்ணுமே அவரின் கதையில் சுய மரியாதையை இழந்ததாக நினைவே இல்லை. பெண்களுக்கு எத்தகைய முக்கியத்துவம் உள்ளது என்பதை அவரது கதைகளில் தெளிவாக தெரிந்து கொண்டு விடலாம். விட்டுச் செல்பவனை தானாக வரவழைப்பதும், விட்டுச் சென்று விட்டு பின்னாடி வரவைப்பதும் என பெண்கள் இடையேயும் பல உளவியல் உத்திகளை பார்க்கலாம். குடும்பச் சூழலில் படும் அவஸ்தைகள்... ஆணாத்திக்கத் தனத்தை சுக்குநூறாக உடைத்து போடுதல் என ரமணிசந்திரன் பெண்கள் ஏரியாவில் கைவைக்காமல் விட்ட இடம் மிக மிகக் குறைவுதான். பெண்கள் என்னவோ கணவன் வீட்டில்தான் துன்பத்தை அனுபவிக்கிறார்கள் என்று எண்ணுகையில், அவர்கள் தன் வீட்டிலேயே பாசம் என்ற பெயரில் அடிமைத்தனம் என்று தெரியாமல் உழன்று கொண்டிருப்பதையும் எழுதித் தள்ளியிருப்பார்.

தனிமனிதர்கள் சேர்ந்ததுதான் சமூகம். ஆனால், அது எப்படி தனிமனிதனைப் பாதிக்கிறது என்பதை எல்லாம் சொல்ல வேண்டிய இடத்தில் அழுத்தமாகவும் மற்ற இடங்களில் தூவிவிட்டும் சென்றிருப்பார் ரமணிசந்திரன்.

எத்தனை எத்தனை குடும்பம் எத்தனை எத்தனை கதை... எத்தனை வித்தியாசம் பட்டு நிற்கும் மாந்தர்கள். அவரின் வளையோசையில், வசதியோடு வளர்ந்த பெண் பொருளாதரத்தில் குறைந்த கணவன் வீட்டில் எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் பழகுவது, சமயத்தில் உதவி செய்து தாங்கிப் பிடிப்பது என, ’மனிதம் பணத்தால் ஆனது அல்ல... குணத்தால்தான் ஆனது’ என்று சமநிலைப்படுத்திக் கொண்டு போயிருப்பார்.

மயங்குகிறாள் ஒரு மாது என்ற கதையில், அப்பா சொல்லும் காந்தியக் கொள்கை போலே உலகம் இருக்கும் என எண்ணி இந்தச் சமூகத்தை நம்பும் பெண் கடைசியாக உண்மையை உணர்ந்து உடையும்போது சமூகத்தின் உண்மை முகத்தை கிழித்திருப்பார். ’வீட்டை விட்டு பெண் வெளியேறினாலே அவளுக்கான மரியாதை போனதாகிறது... அதில் குடும்பத்தையும் இந்த சமூகம் சேர்த்தே சிதைக்கிறது’ என்பதை மிகத் தெளிவாக கதைபடுத்தியிருப்பார். எந்த அளவுகோலில் இந்த சமூகம் அளக்கிறது என்பது இன்று வரையுமே தெரியாத ஒன்று. அவரின் கதைகளில் சாதி இருக்காது... மதம் இருக்காது... அரசியல் கருத்துகளோ காட்சிகளோ இருக்காது. காதலும் காதல் சார்ந்த பிரச்னைகளும் குடும்பங்களில் இன்னும் நிலவும் ஏற்ற இறக்கங்களும் மனித மனத்தின் போக்குகளும் அதற்கான தூண்டுகோல்களும்தாம் இருக்கும். தனிமனிதர்கள் சேர்ந்ததுதான் சமூகம். ஆனால், அது எப்படி தனிமனிதனைப் பாதிக்கிறது என்பதை எல்லாம் சொல்ல வேண்டிய இடத்தில் அழுத்தமாகவும் மற்ற இடங்களில் தூவிவிட்டும் சென்றிருப்பார் ரமணிசந்திரன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரமணிசந்திரனின் எழுத்தின் திறம் வெளிப்படும் இடம் எதுவென்றால் எந்தக் காலத்தில் படித்தாலும் காலவோட்டத்துக்கேற்ப பொருந்தி போவதுதான்... நாற்பது வருடத்திற்கு முந்தைய கதையை படிக்கையில்கூட இப்போதுதான் எழுதியதோ என்று பல முறை எண்ணி இருக்கிறேன். அது அவர்களின் முற்போக்கு சிந்தனையைச் சொல்வதா இல்லை... சமூகம் இன்னும்கூட மாறவில்லை என்று சொல்வதா தெரியவில்லை. அவரின் கதைகளில் சமுகத்தையே ஒரு வலம் வரலாம். எந்த குரூரமூம் இல்லாமல் பாசிட்டிவ் ஆக நல்ல கதைகளையும் நல்ல சிந்தனைகளையும் விதைக்கிறவர்... படித்து முடிக்கையில் வரும் திருப்தியான சிறுமுறுவல் எல்லாம் அவருக்கான வெற்றியாகத்தான் இருக்கும்.

ரமணிசந்திரன் நூல்கள்
ரமணிசந்திரன் நூல்கள்

எவ்வளவு கோபம் இருந்தாலும் எவ்வளவு மன அழுத்தம் இருந்தாலும் கையில் எடுப்பது ரமணிசந்திரன் கதைகளைத்தான். அடுத்த பத்து நிமிடத்தில் இங்கு இருக்க மாட்டோம்... கதையோடு பயணித்து கொண்டிருப்போம். சமூகத்தைப் பற்றி, குடும்பச் சூழலில் இருக்கும் சில சிக்கல்களைப் பற்றி எல்லாம் புரிதல் வந்தது என்றால் அதற்கு அவர்தான் காரணமாக இருந்தார் என்றால் மிகையாகாது. நல்ல சமூக சிந்தனையும் நிறைய புத்தகங்கள் வாசிப்பதற்கான ஊக்கத்தையும் அவரிடமிருந்தே பெற்றேன். இப்படி என் வாழ்க்கையில் மாற்றத்துக்கான விதையானது கிழக்கு வெளுத்த போதே விதைக்கப்பட்டு விட்டது. ஆம்... மாற்றங்களே மாறாதது!

செ.அன்பரசி, சிறுசேரி சிப்காட்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism