Published:Updated:

`வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை, போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை!’- அப்படியா? #MyVikatan

Representational Image
Representational Image ( Credits : Pixabay )

பல பழமொழிகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றை நம் வாசகர் இங்கு விளக்கியிருக்கிறார்.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

அலுவலகத்தில் ஒருமுறை ஒரு குழுவை அமைப்பது தொடர்பாக பேசிக்கொண்டிருந்தபோது, ராஜாவை குழுவில் சேர்த்துக்கொள்வது நல்லது என்று சொன்னேன். என் நண்பர் ரமேஷ், ராஜாவை நம்பி செயல்படுவது மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவதற்கு சமம் என்று சொன்னார். அந்தப் பழமொழி தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது என்று சொல்லி, எனது விளக்கத்தை எடுத்துரைத்தேன்.

Representational Image
Representational Image

``மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்க முடியாது" என்று சொல்வார்கள். வேகமாகப் பயணம் செய்யப் பயன்படுத்தப்படுவது குதிரை. ஆனால், மண் குதிரை நகரவே செய்யாது. அப்படியிருக்கும்பொழுது ``மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கக் கூடாது" என்று சொல்லியிருக்க மாட்டார்கள். அப்படியானால், சரியான பழமொழி எது? ``மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்கக் கூடாது" என்பதுதான் சரியான பழமொழி.

ஆற்றில் தண்ணீர் ஓடும்பொழுது, மண் மேடு உண்டாகும். அதற்கு மண் குதிர் என்று பெயர். மண் குதிர்கள் இறுக்கமானவை அல்ல. அதில் மனிதனோ விலங்குகளோ நிற்க முயன்றால் அவை உடைந்து விடும். முறையாக நீச்சல் பயிற்சி இல்லாதவர்கள், ஆற்றில் சிறிது தூரம் நீந்திப் போய், அந்த மண் குதிரில் நின்று விட்டு மீண்டும் நீந்தலாம் என திட்டமிடக் கூடாது. மண் குதிரில் நின்றால், அது உடனே சிதைந்து அதில் நின்றவர் நீரில் மூழ்கிவிடுவார். எனவே, மண்குதிரில் நிற்கலாம் என நினைத்து ஆற்றில் இறங்கக் கூடாது என்பதுதான் பழமொழி.

Representational Image
Representational Image

இதுபோல பல பழமொழிகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. உதாரணமாக, ``ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன்" என்று சொல்லக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆயிரம் பேரை கொன்றால் கொலைகாரன் என்றுதானே சொல்ல வேண்டும், அவனை எப்படி வைத்தியனாக ஏற்றுக்கொள்வது? எனவே, பழமொழி மருவியிருக்கிறது என்பது தெரிகிறது.

பழங்காலத்தில் வேர்களையும் இலைகளையும் பயன்படுத்தி சிகிச்சை அளிப்பவர்கள் வைத்தியர்கள். அரை வைத்தியனாக ஒருவரை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றால், ஆயிரம் வேர்களையாவது படித்து தெளிந்திருக்க வேண்டும் என்பதுதான் அந்தப் பழமொழியில் உள்ள கருத்து. எனவே, சரியான பழமொழி, ``ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன்."

Representational Image
Representational Image

``வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை, போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை" என்று சொல்லக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இது பழமொழி என்ற பிரிவில் வருமா என்று தெரியவில்லை. ஏனென்றால், போலீஸ் என்பது சமீபத்திய வார்த்தை.

வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை என்பது ``வாக்கை கற்றவனுக்கு வாத்தியார் வேலை" என்பதன் மருவிய சொற்றோடர். வாக்கு என்ற வார்த்தையை கல்வி என்று புரிந்துகொள்ள வேண்டும். எனவே கல்வியைக் கற்று சிறந்தவனுக்கு வாத்தியார் வேலை.

Representational Image
Representational Image

திருடனின் போக்கை கற்றவனுக்கு போலீஸ் வேலை. போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை என்பது தவறு. எனவே, சரியான சொற்றோடர், ``வாக்கை கற்றவனுக்கு வாத்தியார் வேலை, போக்கை கற்றவனுக்கு போலீஸ் வேலை".

இவற்றை நான் இலக்கியசெல்வர் திரு குமரிஅனந்தனின் எழுத்தில் இருந்து தெரிந்துகொண்டேன்.

-கோதண்டம் கிருஷ்ணமூர்த்தி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு