Published:Updated:

`தமிழர்கள் பிரிந்து கிடக்க சாதி, சமயம், அரசியல்தான் காரணம்!’- சாலமன் பாப்பையா வேதனை

சாதி, சமயம், அரசியலால் தமிழ் மக்கள் பிரிந்துகிடப்பதாக, பேராசிரியர் சாலமன் பாப்பையா வருத்தத்துடன் கூறினார்.

சாலமன் பாப்பையா
சாலமன் பாப்பையா

வேலூர் காட்பாடியில், பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா எழுதிய `புறநானூறு புதிய வரிசை வகை’ நூல் அறிமுக விழா நடைபெற்றது. சாலமன் பாப்பையா பேசுகையில், ``இன்றைய சமூகம் வசதி படைத்தது. அதில், ஏழை மக்களும் இருக்கிறார்கள். 

புறநானூறு
புறநானூறு

எனினும், அந்தக் கால மக்களின் வாழ்க்கை முறையை அறிந்துகொள்ளப் புறநானூறு உதவும். புறநானூறு பொதுமக்களின் சொத்து. புலவர்களின் கையில் சிறைப்பட்டு இருந்தது. அதை நான் முறைப்படுத்தி, வரிசைப்படுத்தி வெளியிட்டுள்ளேன். 

நம்முடைய தமிழ் மக்கள் சாதி, சமயம், அரசியலால் பிரிந்துகிடக்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். புறநானூற்றைப் படித்து இலக்கியத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்’’ என்றார். 

பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் நூல், நமக்குக் கிடைத்த பொக்கிஷம்.
நீதிபதி மகாதேவன்

அதைத்தொடர்ந்து பேசிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ், ``தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத அய்யர் நம்மிடம் இல்லை. சாலமன் பாப்பையாதான் தமிழ்த் தாத்தாவாக திகழ்கிறார். இவர் கடினமான பொருளையும் எளிமையாகச் சொல்பவர்.

புறநானூற்றில் பல விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. தமிழை எப்படி வளர்த்தார்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளன. அதை நீங்கள் படித்து தெரிந்துகொள்ள வேண்டும். தனக்காக வாழாமல் பிறருக்காக வாழ்பவனே தமிழன்’’ என்றார். 

சாலமன் பாப்பையா
சாலமன் பாப்பையா

நீதிபதி மகாதேவன் பேசுகையில், ``புறநானூற்றை 1894-ம் ஆண்டு உ.வே.சாமிநாத அய்யர் தொகுத்து வெளியிட்டார். பிறகு, 34 பதிப்புகளைப் புறநானூறு கண்டுள்ளது. பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் நூல், நமக்குக் கிடைத்த பொக்கிஷம்’’ என்றார்.