Published:Updated:

`சாதலும் ஏனைய கலைகளைப் போன்றதே..!' சில்வியா பிளாத்தின் நினைவுகள் #SylviaPlath

சில்வியா பிளாத்

கவிஞர் சில்வியா பிளாத் நினைவு நாள் சிறப்புப் பகிர்வு

`சாதலும் ஏனைய கலைகளைப் போன்றதே..!' சில்வியா பிளாத்தின் நினைவுகள் #SylviaPlath

கவிஞர் சில்வியா பிளாத் நினைவு நாள் சிறப்புப் பகிர்வு

Published:Updated:
சில்வியா பிளாத்

முறிவுகளில் குலைந்திருக்கும் மனங்களுக்கு,

தின்று செரிக்கும் நமது நாள்களுக்கு மத்தியில் இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுவது எனக்கு அவசியமாக இருக்கிறது. ஏனென்றால், இன்று பிப்ரவரி 11. என்ன, எப்படிச் சொல்லவேண்டும் என்பதில் எனக்குத் தெளிவில்லை. இந்த நாளைக் குறித்து சொல்லித் தொடங்குவது வார்த்தைகளை உருவாக்க உதவியாக இருக்கும் என நினைக்கிறேன். நான் சொல்லப்போகும் பறவை, அர்த்தங்களை இழந்துவிட்ட கால ஓட்டத்திற்குள் நுழைந்து, பல மாதங்களைக் கடந்து 1963-ஆம் ஆண்டின் அந்த பிப்ரவரி மாதம் 11-ம் நாளுக்கு சென்றிருக்கிறது. அன்று, அதிகாலை 4:30 மணிக்குச் சமையலறையின் அவனில் (Ovan) தலைவைத்து கார்பன் மோனாக்சைடு வாயுவைச் சுவாசித்து, அது தனது இறப்புக்குள் மூழ்கிக்கொண்டது. அர்த்தங்கள் இழந்துவிட்ட நாள்கள், தனது தேய்மானத்தை நிறுத்தத்தானே தோன்றும்?

சில நேரங்களில் நான் நினைப்பதுண்டு. தேவைப்படுவனவற்றைக் காற்றிலிருந்து எடுத்துக்கொள்ள முடியுமென்றால், எவ்வளவு நன்றாக இருக்கும்! எதற்காக ஏங்குகிறோமோ, அது காற்றிலேயே இருந்தால்! அம்மாவின் தாலாட்டு, இறந்துபோன நண்பனின் சிரிப்பு, தொலைவிலிருக்கும் காதல், ஏன் யாரென்று தெரியாதவர்களின் அணைப்பைக் கூட காற்றிலிருந்து எடுத்துக்கொள்ள முடிவது சமயங்களில் அதிஅவசியமாய் இருக்கும் இல்லையா? ஆனால், இது பயன்படாது. உயிருள்ள மனிதர்கள் உலகம் முழுவதும் நிறைந்திருக்கும்போது காற்றிலிருந்து உருவிக்கொண்டே இருப்பதன் செயற்கைத்தனம் விரைவில் அறையும்போது அது கொடுக்கும் அழுத்தங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

அந்தப் பறவையின் பெயர் சில்வியா ப்ளாத்.``நமது எல்லைக்கோடுகளால் நாம் ஒவ்வொருவரும் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறோம். நமது கைநழுவிவிட்ட வாய்ப்புகளால், வலியுறுத்தப்பட்டு நாம் தேர்ந்தெடுத்த பாதைகளால், நமது இழப்புகளால் இயல்பாக நேசிப்பதைக்கூட செய்வதில் நமக்குச் சிக்கல்கள் உருவாகின்றன. திரும்பவும் வீட்டிற்குத் திரும்ப, கருவறைக்குள் சுருண்டுகொள்ள பெரும் ஆசைப்படுகிறோம். உலகம் ஒவ்வொரு கதவாக நம் முகத்தில் அறைந்து சாத்துவதை வெறுமையில் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். நமக்குத் தெரிந்த ரகசியம் ஒன்றை, நமது மகிழ்வு, சிரிப்பு, திறப்புகளுக்கான அந்த ரகசியத்தைத் தொலைத்து விடுகிறோம். மனம் உள்வாங்கியிருக்கும் வரம்புகளில் தன்னியல்பு அகப்பட்டுக்கொள்வதுதான் இந்த உலகத்தில் புதிதாய்ப் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்குமான சாபமாக இருக்குமென நான் நினைக்கிறேன்.

சில்வியா பிளாத்
சில்வியா பிளாத்
சாதலும் ஏனைய கலைகளைப் போலொன்றே அபூர்வ அழகோடு அதனை நான் நிகழ்த்துகிறேன்.
சில்வியா பிளாத்

``என்னை எதிர்கொள்வதற்கு எனக்குப் பயமாக இருக்கிறது" என்று ஒருமுறை அப்பறவை குறிப்பிட்டது. பெரும்பாலான நாள்களை மனச்சோர்வின் மாத்திரைகள், மருத்துவமனையின் சாட்சியங்களில் கழிக்கும் ஒருவர், தன்னைச் சுற்றியிருப்பவர்கள் கொடுக்கும் அழுத்தங்களை அவிழ்த்துவிட சோர்விலும் முயலவேண்டியது அவசியமாய் இருக்கிறது. ஒரு மனிதரின் அருகாமை எவ்வளவு சக்திவாய்ந்ததாய் இருக்கிறதென்றால், தன்னை அவர் பார்க்கும் பார்வையில்தான் வெகுவிரைவில் தன்னைத்தானே பார்த்துக்கொள்கிறது, அழுத்தங்களில் ஆட்பட்டிருக்கும் மனம். ஆகையினால்தான், தனது புரிதலின் எல்லைகளை மறந்துவிட்டு பிறருக்குச் செவிகொடுப்பது தேவையாக இருக்கிறது. உண்மையில், செவிகொடுப்பதன் பொருள் இதுவாகத்தானே இருக்கமுடியும்? இப்படியான செவிகொடுத்தலில் காற்றிலிருந்து எதையும் உருவவேண்டிய தேவையே இருக்காது, இறந்துபோன நண்பனாக, தொலைவிலிருக்கும் காதலாக, அணைப்பாக அந்த அருகாமை இருக்கக்கூடும் என்று நான் நம்புகிறேன்.

சில்வியா பிளாத்
சில்வியா பிளாத்
என்மேல் பாய்கிறது சிறுத்தை ஒன்று / என் மரணம் அதனால் அமையும் / அதன் வேகத்தை தடுக்க இதயம் விரிப்பேன் /அதன் தாகம் தணிக்க ரத்தம் கொடுப்பேன்
சில்வியா பிளாத்

எளிமையானவற்றிலிருந்து வெகு தொலைவு நகர்ந்து வந்துவிட்ட பின், இந்தச் சிக்கல்களுள் தொடக்கத்தில் இருந்த எளிமைக்கு நகர்வது கடினம்தான். அதற்கு கார்பன்மோனாக்சைடு வாயுவில் மூச்சுத் திணறுவதுகூட எளிதான காரியமாக இருக்கலாம். ஆனால், நெருப்பிலிருந்து சாம்பலை ஒவ்வொரு முறையும் உதறிக்கொண்டு பறந்துகொண்டிருக்கும் ஒரு பறவைக்காக நாம் இதைச் செய்யவேண்டும். ஒருநாள் அது சாம்பலுக்குள் மறைந்து, அதன் சிறகுகளுடன் மடிந்துபோகாமல் இருப்பதற்காக நாம் இதைச் செய்யவேண்டும்.

`சாதலும் ஏனைய கலைகளைப் போன்றதே..!' சில்வியா பிளாத்தின் நினைவுகள் #SylviaPlath
உதிருமோர் இலையைப் போல் என் வாழ்வு ஓ! கடவுளே! விரைவாக்கு என் முடிவை.
சில்வியா பிளாத்

`முயன்று பாருங்கள், உங்கள் உடலில் சுவாசம் மிச்சம் இருக்கும்வரை! செழிப்பான, அருமையான உயிராக உங்கள் இதயம் வளர்வதற்கு இடம்கொடுங்கள், அதற்காக எவ்வளவு கடினமாக வேண்டுமானாலும் உழையுங்கள்' அந்தப் பறவை ஒருமுறை எழுதியது. அப்படி நாம் முயல்வது சமயங்களில் வாழ்வதற்கான நம்பிக்கையைக்கூட மற்றவர்களுக்குக் கடத்தும் என்று நான் நினைக்கிறேன்.