Published:Updated:

ஒரே கூண்டில் புலி, சிங்கம், கரடி... இது விலங்குகளின் ‘நண்பேண்டா’ வெர்ஷன்!

ஒரே கூண்டில் புலி, சிங்கம், கரடி... இது விலங்குகளின் ‘நண்பேண்டா’ வெர்ஷன்!
ஒரே கூண்டில் புலி, சிங்கம், கரடி... இது விலங்குகளின் ‘நண்பேண்டா’ வெர்ஷன்!

நிபந்தனையற்ற அன்பு என்பதைப் பற்றிப் படித்திருப்போம். எங்கேனும் கேள்விப்பட்டிருப்போம். மனிதர்களைக் கடந்து உலகின் எல்லா உயிரினங்களுக்கும் நிபந்தனையற்ற அன்பு என்பது  பொதுவாகவே இருக்கிறது. ஒரு விலங்கு தனது இனம் சாராத இன்னொரு விலங்கின் மேல் செலுத்துகிற அன்பு இயற்கையின் முரண்பாடுகளை எல்லாம் கடந்து உலகின் எங்கோ ஒரு மூலையில், இப்போதும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.

அமெரிக்காவின் ஜார்ஜியாவில் கடந்த 2001-ம் ஆண்டு நடந்த போதைப்பொருள் கடத்தல் தடுப்புச் சோதனையில் ஒருவரிடமிருந்து  சிங்கம், புலி, கரடி என மூன்று குட்டிகளை காவல்துறையினர் கைப்பற்றுகின்றனர். அங்கிருக்கிற விலங்குகள் சரணாலயத்தில் மூன்று குட்டிகளும் வளர ஆரம்பிக்கின்றன. ஜங்கிள் புக் திரைப்படத்தில் விலங்குகளுக்கு வருகிற பெயர்களை இம்மூன்று விலங்குகளுக்கும் சூட்டுகிறார்கள். சிங்கத்திற்கு லியோ என்றும், புலிக்கு ஷேர்கான் என்றும், கரடிக்கு பாலு எனவும் பெயர் வைக்கிறார்கள். சிறிது வளர்ந்ததும் மூன்று குட்டிகளையும் தனித்தனியாக வளர்க்க சரணாலயப் பணியாளர்கள் முடிவு செய்கிறார்கள். ஆனால், மூன்று குட்டிகளும் தனித் தனியாக இருக்காமல் மூன்றுக்குமான கூண்டில் சேர்ந்தே வாழ்ந்திருக்கின்றன.

ஒரு கட்டத்தில் கரடிக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்குக் கொண்டு போயிருக்கிறார்கள். அந்த நாள்களில் சிங்கமும், புலியும் சாப்பிடாமல் இருந்திருக்கின்றன. கரடி மீண்டு வந்த பிறகே மற்ற இரு விலங்குகளும் எப்போதும் போல இருந்திருக்கின்றன. 15 வருடமாக இணைந்திருந்த நட்பு ஒரு கட்டத்தில் முடிவுக்கு வந்தது. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் சிங்கம் உடல்நலக்குறைவால் இறந்து போயிருக்கிறது. லியோவின் நினைவாக நிர்வாகம் அதன் புகைப்படங்களை ஆங்காங்கே மாட்டி வைத்திருக்கிறது. புலியும் கரடியும் வசிக்கிற இடத்தில், சரணாலய நிர்வாகம் லியோவின் சிலை ஒன்றை வடிவமைத்து வைத்திருக்கிறார்கள். சிங்கத்தின் சிலையை மற்ற இரண்டு நண்பர்களும் பார்த்துக் கொண்டிருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை சரணாலய முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். அந்த ஒரு புகைப்படம் அவர்களின் நட்பை அவ்வளவு ஆழமாக  எளிதில் கடந்துபோய் விடாதபடிக்கு பேசிக் கொண்டே இருக்கிறது. மிஸ் யூ லியோ!

கென்யாவிலுள்ள மொம்பசாவில் 2004 டிசம்பர் 26-ல் சுனாமி அலைகள் தாக்கியதில் கடற்கரையை ஒட்டியப் பகுதிகள் எல்லாம் பாதிக்கப்பட்டு உருக்குலைந்து கிடக்கின்றன. பாதிப்பில் இருந்து மீட்டெடுத்தவை போக பாழாய்ப் போனதை மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கரையில் மூன்று வயதுடைய நீர் யானைக் குட்டி ஒன்று கரையொதுங்கிக் கிடக்கிறது. மீன் வலைகளாலும் கயிறுகளாலும் சிக்கியிருந்த நீர் யானை மிகவும் சோர்வாகக் கிடக்கிறது. அதைப் பார்க்கிறவர்கள் நீர் யானைக் குட்டியை மீட்டு சிகிச்சை அளிக்கிறார்கள். அதை வளர்ப்பதற்கு அங்கிருக்கிற சுற்றுச்சூழல் அமைப்பு அனுமதி அளிக்கிறது.

அங்கிருக்கிற பகுதியில் விலங்குகள் சரணாலயம் நடத்துகிற பவுலா கவும்பா என்கிறவர் வசம் நீர் யானை ஒப்படைக்கப்படுகிறது. நீர் யானைக் குட்டியை  மீட்டு சரணாலயத்துக்குக் கொண்டு வருகிறார். அதற்கு ஓவென் எனப் பெயரிடப்படுகிறது. அங்கு ஏற்கெனவே எம்ஸி எனப் பெயரிட்ட 130 வயதுடைய ஓர் ஆமையும் வளர்ந்து வருகிறது. ஆமை வளர்கிற இடத்தில நீர் யானை விடப்படுகிறது. நிலத்திலும் நீரிலும் வாழக் கூடியவை என்கிற இயல்பைத் தவிர்த்து, இரண்டு உயிரினங்களுக்கும் வேறு எந்த ஒற்றுமையும் கிடையாது.  நீர் யானைக்கு எல்லாம் புதிதாக இருக்கிறது. சூழ்நிலை இரண்டு விலங்குகளையும் குழப்பமடையச் செய்கிறது. நீர் யானையைப் பார்க்கிற ஆமை, பயந்து ஒதுங்குகிறது. நீர் யானையின் நடவடிக்கை ஆமைக்கு ஆச்சர்யத்தை அளிக்கிறது. நாள்கள் செல்லச்செல்ல இரண்டு உயிரினங்களும் நட்பு கொள்கின்றன. இரண்டு உயிரினங்களும் ஒன்றோடு ஒன்று சார்ந்து வாழ ஆரம்பிக்கின்றன. இரண்டும் சேர்ந்தே பூங்காவைச் சுற்றிவரத் தொடங்குகின்றன. இயற்கைக்கு மாறான நட்பை ஊர் மக்கள் கொண்டாடுகிறார்கள். நீர் யானை மற்றும் ஆமை சேர்ந்திருக்கும் புகைப்படங்கள் உலகத்துக்குக் கதை சொல்ல ஆரம்பித்திருக்கின்றன.

எங்கோ நடந்தது எனக் கடந்து போகிற சம்பவங்களில் சில நமக்கு அருகேயும் நடந்திருக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த வருடம் தாயைப் பிரிந்த நாய்க்குட்டி ஒன்று வீதிகளில் சுற்றிக்கொண்டிருந்திருக்கிறது. அதைப் பார்க்கிற குரங்கு ஒன்று, நாய்க்குட்டியை அரவணைத்துக்கொள்கிறது. அதற்கு உணவு கொடுப்பது, தனது குட்டியைப் போல தூக்கிக்கொண்டு செல்வது என நாய்க்குட்டியை அதன் பாதுகாப்பிலேயே வைத்திருக்கிறது. இயற்கைக்கு முரணாக இருக்கிற காட்சியைப் பார்க்கிற மக்கள், குரங்கிடம் இருந்து நாய்க்குட்டியை பிரிக்க முயற்சிக்கிறார்கள். ஆனால், குரங்கு நாய்க்குட்டியை எடுத்துக்கொண்டு காட்டுக்குள் ஓடிவிடுகிறது. எங்கு சென்றாலும் நாய்க்குட்டியோடு பயணித்திருக்கிறது. மரங்களிலும் வீட்டின் மாடிகளிலும் நாய்க்குட்டியை தூக்கிக்கொண்டு போவதை மக்கள் ஆச்சர்யத்துடன் பார்க்கிறார்கள்.

மக்கள் கொடுக்கிற உணவை நாய்க்குட்டிக்கு பகிர்ந்து கொடுக்கிறது. மற்ற நாய்கள், நாய்க்குட்டியை அணுகாதவாறு பாதுகாத்து வருகிறது. குரங்கின் பிடியில் நாய் இருப்பதாய் நினைக்கிற மக்கள், நாய்க்குட்டியை மீட்க சில உத்திகளைக் கையாள்கிறார்கள். ஆனால், பயன் ஏதும் கிடைக்கவில்லை. பிறகு வனத்துறைக்கு தகவல் கொடுக்கிறார்கள். அவர்கள் குரங்குக்கு கூண்டு வைத்து குரங்கைப் பிடிக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால், குரங்கு கூண்டைப் பார்த்ததும் நாய்க்குட்டியைத் தூக்கிக்கொண்டு வேறு வேறு இடங்களுக்கு மாறிக்கொண்டே இருக்கிறது. ஐந்து நாளில் நாய்க்குட்டிக்கும் குரங்குக்குமான உறவு பலப்படுகிறது. மக்கள் நாய்க்குட்டியை குரங்கிடமிருந்து  பிரிக்க முயற்சி செய்துகொண்டே இருக்கிறார்கள். இறுதியில் மக்கள், வனத்துறை, காவல்துறை என எல்லோரும்  ஒன்று சேர்ந்து சுருக்குப்போட்டு குரங்கைப் பிடிக்கிறார்கள். நாய்க்குட்டி மீட்கப்படுகிறது. நாய் மீட்கப்பட்டதும் குரங்கு விடுவிக்கப்படுகிறது. பிறகான காலங்களில் குரங்கு நாய்க்குட்டியைப் பல இடங்களில் தேடி இருக்கிறது. ஏமாற்றமும் தோல்வியும் உலகத்திலுள்ள  எல்லா உயிர்களுக்கும் பொதுவானதாகவே வரையறுக்கப்பட்டிருக்கிறது.

கற்றுக்கொள்வதற்கும் திருத்திக் கொள்வதற்கும் உலகில் உள்ள எல்லா உயிரினங்களிடமும் ஒரு குணம் இருக்கிறது.  மனிதர்களிடம் இருக்க வேண்டிய சில குணங்கள் இப்போது விலங்குகளிடம் இருக்கின்றன என்கிற கருத்தில் முரண்பட்டாலும் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். ஏனெனில் உலகத்தில் இருக்கிற எல்லா உயிரினங்களுக்கும் பொதுவாக இருக்கிற ஆகச்சிறந்த மொழி என்பது அன்பு செலுத்துவது மட்டும் தானே!