Published:Updated:

நலம் 360’ - 20

மருத்துவர் கு.சிவராமன்

'விவாகரத்து பெறுவதில் இந்தியாவில் தமிழகம் முதல் இடமாம்; தவிரவும் மன அழுத்தங்களால் நிகழும் தற்கொலைகளிலும் தமிழகத்துக்குத்தான் இந்தியாவில் முதல் இடமாம். 'ஆறறிவதுவே அதனோடு மனமே’ என, சிக்மண்டு ஃபிராய்டுக்கும் பல நூற்றாண்டுகள் முன்பே சொல்லிய 'தொல்காப்பியம்’ படைத்த நிலத்தில், மனதுக்குக் கொடுக்கப்படும் அழுத்தம் மிக மிக அதிகமாகி வருவது அதிரவைக்கிறது!

சமூக எதிர்பார்ப்புகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறும் மனதின் வெளிப்பாடுதான் மன அழுத்தம். அது நோயாக வடிவம் எடுக்காமல் தடுக்க தேவையான முக்கியக் காரணங்கள் இரண்டு. பிற அனைத்து மருத்துவக் காரணங்களையும் தாண்டி, அந்த இரண்டு காரணங்களையும் நாம் வேகமாகத் தொலைத்து வருகிறோம். அதில் ஒன்று... கரிசனம் தரும் பேச்சு; மற்றொன்று... கனிவு காட்டும் முகமொழி.

'பேச்சு... உயிர் மூச்சு’ எனப் பலருக்குத் தெரிவது இல்லை. ஒரு கட்டத்துக்குப் பிறகு, 'பேசிப் பயன் இல்லை’ எனப் பின்னாளில் முடிவு எடுத்து வாழ்க்கை இறுகிப்போகாமல் இருக்க, மொழிப் புணர்தல் முக்கியம். துரித வாழ்வின் வெளிப்பக்கத்து இரைச்சல், நம் சுவற்றுக்குள் அமானுஷ்ய மௌனத்தை விதைத்துவிட்டது. 'சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு’  எனப் பாடுவதற்குள் அம்மாவுக்கு மகப்பேறு விடுமுறை முடிந்துவிடுகிறது. 'மூணு கண்ணன் வந்த கதை, பூச்சாண்டி போன கதை’ சொல்லிய பாட்டிகள் கடைசித் தங்கையின் பிரசவத்துக்கு கனடா சென்றுவிட்டார். 'டேய்... மண்ணுல விளையாடாதே ஜெர்ம்ஸ்; கிரவுண்டுல விளையாடாதே அலர்ஜி’ எனச் சொல்லி வளர்க்கப்படும் பிள்ளைகள், வீட்டில்  விர்ச்சுவல் கத்தி, கைத்துப்பாக்கியைக் கொண்டு எவனையோ விரட்டிக்கொண்டே வீடியோ விளையாட்டுகளில் அகோரமாக மூழ்கிவிடுகி றார்கள். சைக்கிள் பாரில் அமர்ந்து டபுள்ஸ் போகும்போது, 'மச்சான் அவ சிரிப்புல காதல் இருந்துச்சுடா... கண்ணு காட்டிக்குடுத்துருச்சு!’ எனச் சிலாகித்த பொழுதுகள் தொலைந்து, நள்ளிரவு 'ஸ்மைலி சம்பாஷணை’யால் இளமையிலேயே கண்களைச் சுற்றி கருவளையங்கள் உண்டாகிவிட்டன. ஒரு சிங்கிள் பெட்ரூம் ஃப்ளாட்டுக்காக சம்பளத்தில் பாதியை ஈ.எம்.ஐ அரக்கனுக்கு அள்ளிக்கொடுத்துவிட்டு, காலி சட்டைப் பை காரணமாக பேச்சுமூச்சற்று இருப்பது என, சமூகத்தின் சகல அடுக்குகளிலும் உரையாடல் குறைவு நோய் நீக்கமற நிறைந்திருக்கிறது!

நலம் 360’  - 20

பேச்சுக்கு அடுத்து நவீனம் வேகமாகத் தொலைக்கும் இன்னொரு விஷயம் முகமொழி. வணிகத்துக்கும் வசதிக்கும் கற்றுவிக்கப்பட்ட முகமொழிகளைப் படித்துக் கற்றுத் தேர்ந்ததில், கட்டாயத்துக்காக மட்டுமே அதை அதிகம் காட்டிக் களைத்துப்போகிறோம். கரிசனத்தில், காதலில், காமத்தில் காட்டவேண்டிய முகமொழிகள் மொத்தமாகக் காணாமல் போகின்றன. 'அதுதான் சரின்னு சொன்னேனே... அப்புறம் என்ன?’ என்ற உணர்வுகள் அற்ற சம்மதங்களில்தான் பல உறவுகள் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. 'முகம் கொடுத்துக்கூடப் பேச முடியாத அளவுக்கு எந்த விதத்தில் நான் குறைந்துபோய்விட்டேன்’ என முளைக்கும் இந்த ஈகோ, புகை, மதுவால் சீராட்டி வளர்க்கப்பட, புருவச் சுருக்கம், முக இறுக்கம் என முகம் புதுவடிவம் பெறுகிறது. அந்தப் புதுவடிவம் கனிவான முகமொழிக்கு இடம் அளிக்காமல், வெறுப்பை மட்டுமே உமிழ்ந்துகொண்டிருக்கிறது.

தொடர்ந்து இப்படித் தரப்படும் மன அழுத்தங்கள், மூளையின் எண்ணங்களை, படிமானங்களை, கற்பனைகளை மிகச் சிறப்பாக ஆண்டுவரும் செரட்டோனின் முதலான ரசாயனச் சுரப்புகளைத் தடுமாறச் செய்யும். அவற்றின் சீரான பரிமாறலில், மிகத் துல்லியமான ஆட்சியில் தேக்கத்தை, பரபரப்பை உருவாக்கி உருவாக்கி, மெள்ள மெள்ள உள நோயாக உருகொள்ளவைக்கும். அது சிலருக்குப் பயம், சிலருக்குப் புதிது புதிதான கற்பனைகள், சிலருக்குச் சந்தேகம், சிலருக்கு வெறுப்பு என வெவ்வேறு வடிவில் உருவெடுக்கும்.  

உள நோயின் ஆரம்ப சமிக்ஞைகளை நெருக்கமான உறவுகளால் மட்டுமே அறிய முடியும். மாஸ்டர் செக்கப்கள் பெரும்பாலும் காட்டிக்கொடுக்காது. மயக்கம், வலி, ஜுரம் போன்ற எந்த உபாதைகளும் இல்லாமல் சரியான தூக்கமின்மை, புன்னகைக்க மறுக்கும் முகம் என மன அழுத்தத்தின் தொடக்கப் புள்ளிகள் மிகச் சாதாரணமாக இருக்கும். அடிக்கடி கைகளைக் கழுவுவது, மீண்டும் மீண்டும் தன் பொருட்களைச் சுத்தமாகத் துடைத்துக்கொண்டே இருப்பதுகூட மன அழுத்தத்தின் தொடக்க நிலைதான். எவ்வளவு விரைவாக இந்த மன அழுத்தத்தை அடையாளம் காண்கிறோமோ, அவ்வளவு விரைவில் ஆரோக்கியத்தை மீட்டு எடுக்க முடியும். இரண்டு மாத்திரைகளில் நோய்க்கிருமி இடத்தைக் காலிசெய்வதுபோல, இரண்டு வேளை மருந்தில் உற்சாகத்தை ஒருபோதும் வாங்கிவிட முடியாது. மன நோய்களில் இருந்து மீட்டு எடுக்கும் மருத்துவம் சில/பல மாதங்களில் இருந்து சில வருடங்களுக்குத் தேவைப்படும்.

மன நோய்கள் ஆரம்ப நிலையில் பெரும்பாலும் குணப்படுத்தக்கூடியவையே. நாள்பட்ட நிலையிலும் கட்டுப்படுத்த முடியும்தான். ஆனால், இங்கே முழுமையான தேவை ஒருங்கிணைந்த சிகிச்சை மட்டுமே. கற்பனையைக் கட்டிப்போட, மனதின் அகோரத்தைக் குறைக்க நவீன மருந்துகள் மிக அவசியம். மருந்துகளால் மீட்டு எடுத்து வரும்போது, முழுமையான வாழ்வியல் பயிற்சி, யோகாசனங்கள், பல்வேறு எண்ணெய்க் குளியல், தொக்கணம், தாரா சிகிச்சைகளின் மூலம் மீண்டும் நன்னிலைக்குத் திரும்பவைக்க பாரம்பரிய மருத்துவம் பெரிதும் கைகொடுக்கும். மருந்தையும் பாரம்பரியத்தையும் தாண்டி அதிமுக்கியமான நீடித்த தேவை உதாசீனப்படுத்தாத உறவு.

நலம் 360’  - 20

மனநலம் பேதலித்தவர்களைக் கட்டிவைக்காமல், கட்டி அணைக்கும் அரவணைப்புகளே இங்கு அவசியம். ஏனெனில், மன உளைச்சல் நோயாளிகளுக்குத் தரப்படும் மருத்துவ, சமூக வசதிகள் இப்போதும் பின்தங்கித்தான் உள்ளன. பின்னிரவைத் தாண்டிய ஒரு நாளில் ஒரு மனநோயாளி உதவியின்றித் துன்புறுகின்றார்... 'உதவ இயலுமா?’ என அரசாங்க அவசர இலக்கத்தைத் தொடர்புகொண்டால், 'அடடா... மன நோயாளிக்கு ஆம்புலன்ஸ் அனுப்ப முடியாதே’ எனத் தொடர்பு துண்டிக்கப்படுகிறது. மிகப் பிரபலமான தனியார் மருத்துவமனையை அழைத்தால், 'ஆம்புலன்ஸ் தர்றோம்... எக்ஸ்ட்ரா பைசா ஆகும். ஆனா, எங்க ஹாஸ்பிட்டலில் பார்க்க மாட்டோம். வேற எங்கேயாவது அழைச்சுட்டுப் போங்க’ என்கிறார்கள். இப்படி உளவியல் நோயாளிகளை உலகம் உதாசீனப்படுத்தும், தவிர்க்கும் அவலம் சென்னை போன்ற பெருநகரங்களிலேயே நிலவும்போது, கிராமங்களின் பில்லிசூனியப் பஞ்சாயத்துகளுக்குக் கேட்கவா வேண்டும்!

உலக சுகாதார நிறுவனம் 'உடல் நலம்’ என்பதற்கான அர்த்தத்தை இப்படி வரையறுத்திருக்கிறது... 'நலம் எனப்படுவது யாதெனில், உடல் நோயில்லாமல் இருப்பது மட்டும் அல்ல; மன நலமும் சமூக நலமும் சேர்ந்த நிலையே முழு உடல் நலம்’! ஆனால், இதைப் புரிந்துகொள்ள நவீன மருத்துவம் சில நூறு ஆண்டுகளைச் செலவழிக்க வேண்டியிருந்தது. தமிழ் உலகத்துக்கு இந்தப் புரிதல் 1,500 வருடங்களுக்கு முன்னரே ஏற்பட்டிருக்கிறது.

'மறுப்பது உடல் நோய் மருந்தென லாகும்,
மறுப்பது உளநோய் மருந்தென சாலும்,
மறுப்பது இனி நோய் வாராதிருக்க
மறுப்பது சாவை மருந்தென லாமே’

என திருமூலர் மட்டுமல்லாது, அத்தனை சித்தர் கூட்டமும் மன நலம் தொடர்பாக பல பாடல்களைப் படைத்திருக்கிறார்கள். மனம் செம்மையானால் மந்திரங்கள் ஜெபிக்க வேண்டாம்; காடு-கழனிகளை அழித்து தியான மண்டபங்களைக் கட்ட வேண்டாம்; மருந்து மாத்திரை, போதை வஸ்துக்களின் உதவி தேவை இல்லை என, எந்த போர்டு மீட்டிங் போட்டும் முடிவு எடுக்காமல் அன்றே வரையறுத்து வைத்திருக்கிறார்கள். இடையில், எங்கே தொலைத்தோம் இந்தப் புரிதலை? விடுதியாகப் போய்விட்ட  வீட்டிலா, பிராய்லர் கல்விக்கூடத்தில் கற்ற கல்வியிலா, துரத்தலும் தப்பித்தலுமான தினசரி வாழ்விலா? 'கள்ளினும் காமம் பெரிது’ என வள்ளுவன் வாக்குக்கு ஏற்ப வாழ்ந்து வந்த நம்மை, 'அட... கள்தான்டா பெரிது; கொண்டாடு’ எனக் குழிபறித்துவரும் வணிகத்தாலா?

- நலம் பரவும்...

நலம் 360’  - 20

மன இறுக்கம் குறைக்கும் உணவுகள்...

•  பழங்களில் நிறைந்திருக்கும் அதன் நிறமிச் சத்துக்கள் மன இறுக்கத்தைக் குறைக்க உதவும். குறிப்பாக மாதுளம்பழம். மன அழுத்த நோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள், மாதுளம்பழச் சாற்றை வெள்ளைச் சர்க்கரை சேர்க்காமல், ஐஸ் துண்டுகள் சேர்க்காமல் தினசரி அருந்தவும்.

•  மூளையில் சுரக்கும் செரட்டோனின்  சத்தைச் சீராக்கும் தன்மை கொண்டது வாழைப்பழம். இந்தச் சத்து குறைவினாலும், சீரற்ற நிலையிலும்தான் பல்வேறு உளவியல் நோய்கள் வருகின்றன.

•  தங்குதடையற்ற இரவு உறக்கம், மன அழுத்த நோயாளிகளுக்கு மிகவும் அவசியம். ஒரு குவளைப் பாலில் அரை தேக்கரண்டி அமுக்கரா கிழங்குப் பொடி போட்டு, சூடான பால் அருந்தினால் நிம்மதியான தூக்கம் வரும்.

•  பதற்றமும் கற்பனைகளும் நிறைந்த இரவுத் தூக்கத்தில் உழல்பவர்கள், ஒரு சிட்டிகை ஜாதிக்காய்த் தூளை, பாலில் சேர்த்து அருந்திவிட்டு உறங்கச் செல்லலாம்.  

•  மனப்பதற்றம், மன அழுத்தம், மனச்சிதைவு பாதிப்புள்ள நோயாளிகள், தினமும் சீரகத் தண்ணீர் அல்லது வெட்டிவேர் போட்ட மண்பானைத் தண்ணீரை அருந்துதல் நலம்.  

•  குளியல், மன அழுத்தம் போக்கும் மிக எளிய முறை. தினசரி இருமுறை குளிப்பது அன்றாட அழுக்கோடு மன அழுத்தத்தையும் நீக்கும். மன அழுத்தத்துக்கு மருந்து எடுத்துக்கொள்பவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை செய்து, அவர்களுக்கு என பிரத்யேகமாக உள்ள பிரமித் தைலம், அசைத் தைலம், குளிர்தாமரைத் தைலம் இவற்றில் ஒன்றை வாரத்துக்கு ஒருமுறை அல்லது இருமுறை பயன்படுத்துவது சிறப்பு.

• எண்ணெயில் பொரித்த உணவுகள் பித்தத்தைக் கூட்டுவதோடு செரிக்கவும் நீண்ட நேரம் ஆகும். தந்தூரி உணவுகளை மன அழுத்த நோயர்கள் தவிர்ப்பது நலம். ஆவியில் வேகவைத்த உணவுப் பண்டங்களே அவர்களது தேர்வாக இருக்க வேண்டும்.

• உணவில் சேர்க்கப்படும் செயற்கை வண்ணமூட்டிகள் குழந்தைகளுக்கு கவனச் சிதைவு நோய் அளிப்பதை அறிவியல் உலகம் நிரூபித்துள்ளது.

கவனத்தில் கொள்ளவேண்டியவை...

•  மனச்சிதைவால் பாதிப்பட்ட ஒருவர் தொடர்ந்து எடுத்துக்கொண்ட சிகிச்சையால், 100 சதவிகிதம் இயல்புக்கு வந்ததுபோல் இருந்தாலும், எந்தக் காரணம்கொண்டும் மருத்துவர் அனுமதி இல்லாமல் மருந்துகளைக் குறைப்பதும் தவிர்ப்பதும் கூடாது. ஏனெனில், ஆழ்மனதில் நடைபெறும் மாற்றங்கள் மிக நுண்ணிய அளவில் சிறிது சிறிதாக மூளையின் ரசாயனங்களில் மாற்றங்களை ஏற்படுத்தி, திடீரென ஒருநிலையில் இயல்பு மாறி வெளிப்படத் தொடங்கலாம்.

•  பல்வேறு மன அழுத்த நோய்களுக்கு உறக்கம் இல்லாததே முதல் காரணம். ஆரோக்கிய வாழ்வுக்கு 6 முதல் 7 மணி நேர தடையில்லாத உறக்கம் தேவை. உறங்க ஆரம்பித்ததில் இருந்து 5 முதல் 10 மணித் துளிகளில் கனவுகள் வருவதும், அதிகாலையில் விழிக்கும் தருணத்துக்கு முன்னர் 5 முதல் 10 நிமிடங்கள் கனவு வருவதும் இயல்பான உறக்கத்துக்கான அறிகுறிகள்.

•  இன்று பெரும்பாலோருக்கு இரவு உறக்கத்தில்கூட அலுவல் மற்றும் குடும்பம் சார்ந்த நினைவுகள் மனதை ஆக்கிரமிக்கின்றன. இதுவும் மன அழுத்தத்தின் அறிகுறியே. அதனால், உறங்கச் செல்லும் முன் இனிமையான மகிழ்வான தருணங்கள் முக்கியம்.

•  உடற்பயிற்சியும் சரியான பிராணாயாமப் பயிற்சியும் நிம்மதியான உறக்கத்தைத் தரும்!