Published:Updated:

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 20

பாரதி தம்பி, படம்: சி.சுரேஷ் பாபு

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 20

பாரதி தம்பி, படம்: சி.சுரேஷ் பாபு

Published:Updated:

ரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியைக் கொண்டுவருவதற்கு அரசு சொல்லும் காரணம் என்ன? 'அப்போதுதான் தனியார் பள்ளிகளுடன் போட்டி போட முடியும். ஆங்கில வழிக் கல்வியில் பிள்ளையைப் படிக்கவைப்பதற்காக பெற்றோர்கள் தனியார் பள்ளிகளை நோக்கிப் போவதால், அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைகிறது. இதைத் தடுத்து அரசுப் பள்ளிகளை மேம்படுத்தவே ஆங்கில வழிக் கல்வியைக் கொண்டுவருகிறோம்’ என்கிறார்கள். ஆனால் இது உண்மையா? அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, தனியார் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை குறைந்துவிட்டதா? எல்லோரும் 'அதான் அரசாங்கம் இலவசமாக ஆங்கில வழிக் கல்வி நடத்துதே... பின்ன எதுக்கு காசு கொடுத்து தனியார் பள்ளியில் சேர்க்கணும்?’ எனச் சிந்தித்து, அரசுப் பள்ளி நோக்கி வந்துவிட்டார்களா? அப்படி எதுவும் நடக்கவில்லை. மாறாக, அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களில் கணிசமானோர், ஆங்கில வழிக் கல்விக்கு மாறியுள்ளனர். தனியார் பள்ளிகள் வழக்கம்போல இயங்குகின்றன.

அரசின் அறிவிப்பில், 'தனியார் பள்ளிகளுடன் போட்டிபோட்டு அரசுப் பள்ளிகளை மேம்படுத்தவே ஆங்கில வழி’ என சொல்லியிருந்தாலும், உண்மையில் இதனால் தனியார் பள்ளிகளுக்குத்தான் ஆதாயம். இன்று, அரசுப் பள்ளிகளில் தரம் இல்லாத ஆங்கில வழிக் கல்வியில் பிள்ளையைச் சேர்க்கும் பெற்றோர், 'ஆங்கில வழிக் கல்வி’ என்ற ருசிக்குப் பழக்கப்படுத்தப்படுகின்றனர். ஒருசில ஆண்டுகளில் ஆங்கில வழியிலேயே தரமான பள்ளியில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தை அவர்கள் வந்தடையும்போது, அவர்களின் ஒரே தேர்வு தனியார் பள்ளிகள்தான். இந்த வகையில் நீண்டகால நோக்கில், தனியார் பள்ளிகளை நோக்கி மாணவர்களை அனுப்பிவைப்பதற்கான வேலையைத்தான் அரசுப் பள்ளிகளின் ஆங்கில வழி வகுப்புகள் செய்கின்றன.

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 20

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அரசு 10 ரூபாய்க்கு தண்ணீர் விற்கிறது. 'குறைந்த விலையில் மக்களின் தாகம் தீர்ப்பதாக’ பலரும் சொல்கின்றனர். கடையில் மற்ற பிராண்டு தண்ணீர் பாட்டில்கள் ஒரு லிட்டர் 20 ரூபாய்க்கு விற்கும்போது, 'அரசு பிராண்டு’ தண்ணீர் 10 ரூபாய்க்கு விற்கப்படுவது மேல்தோற்றத்தில் மக்கள் நலத் திட்டமாகவே தோன்றும். ஆனால், அரசாங்கம் என்ற வகையில் அதன் நோக்கம் லாபம் பார்ப்பதாக இருக்கக் கூடாது. மக்களின் தாகம் தீர்க்க வேண்டும். மறுபுறம், பாட்டில் தண்ணீருக்கு மக்களைப் பழக்கப்பப்படுத்தும் அரசின் அணுகுமுறையே இதில் ஆபத்து. இப்படி பாட்டில் தண்ணீருக்குப் பழக்கப்படும் மக்கள்தான், தனியார் தண்ணீர் வியாபாரிகளின் விசுவாச வாடிக்கையாளர்களாக உருமாறுகின்றனர். இதை அப்படியே கல்விக்குப் பொருத்திப் பாருங்கள்... அரசின் ஆங்கில வழிக் கல்வியில் பிள்ளையைச் சேர்த்து, பிறகு அதன் தரத்தில் நம்பிக்கை இழந்து, தனியார் ஆங்கில வழிப் பள்ளிகளை நோக்கி வருகிறார்கள்.

இதில் மற்றொரு கோணத்தையும் நாம் பார்க்க வேண்டும். இன்று உலகம் ஒரே குடையின் கீழ் சுருங்கி வருகிறது. முதலாளிகளின் பார்வையில் இந்த உலகம், பிரமாண்டமான சந்தை. இந்தச் சந்தையில் பலரும் பல்வேறு மொழிகளைப் பேசிக்கொண்டிருப்பதைக் காட்டிலும், ஒரே பொதுமொழியைப் பேசுவதுதான் உலகளாவிய வர்த்தகத்துக்கு உதவும். இந்தியாவில் 20 மொழிகளில் விளம்பரம் செய்வதைக் காட்டிலும், ஒரு மொழியில் விளம்பரம் செய்வது பன்மடங்கு லாபம் இல்லையா? பிரதேச அடையாளங்கள், தாய்மொழிப் பற்று, பண்பாட்டு அடையாளங்கள் போன்றவை எப்போதும் லாப வெறிக்கு எதிரானவை. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே சந்தை... நிறுவனங்களின் ஒரே தாரக மந்திரம் இதுதான். இதை அவர்கள் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவும் செய்கின்றனர்.

2000-ம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில், முகேஷ் அம்பானியும், குமாரமங்கலம் பிர்லாவும் இணைந்து 'கல்வித் துறை சீர்திருத்தத்துக்கான கொள்கைச் சட்டகம்’ (A policy framework for reforms in education) ஒன்றை வெளியிட்டனர். அதில், 'கல்வியை சமூக முன்னேற்றத்தின் கருவியாகப் பார்க்கும் நமது கண்ணோட்டத்தை அடிப்படையிலேயே மாற்றி அமைக்க வேண்டும். புதிய திறமைகளை விரைந்து கற்றுக்கொள்ளக்கூடிய, சந்தைப் போட்டிக்கு ஏற்பத் தன்னை தகவமைத்துக்கொள்ளக்கூடிய தொழிலாளிகளை உருவாக்க வேண்டும்’ என வெளிப்படையாக அறிவிக்கிறார்கள். 'கல்வி என்பது சமூக மாற்றத்துக்குக் கிடையாது; சந்தையின் தேவைக்கு ஏற்ப ஆட்களை உற்பத்தி செய்வதற்கே’ எனவும் பிரகடனம் செய்கின்றனர்.

நவீன உலகில் நிறுவனங்களுக்கு லாபம் ஒன்றே இலக்கு. மனிதவளமாக இருந்தாலும், மூலப்பொருட்களாக இருந்தாலும் எங்கு எது மலிவாகக் கிடைக்கிறதோ, அங்கு அதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மூலதனம் எல்லை கடந்து வருவதன் முதன்மை நோக்கம் இதுதான். அமெரிக்கர்கள் பார்த்துக்கொண்டிருந்த தகவல் தொழில்நுட்பப் பணிகளைப் பறித்து இந்தியர்களுக்கு அவுட்சோர்ஸ் செய்வதன் நோக்கம், அமெரிக்கர்களைவிட இந்தியர்கள் சிறப்பாக ஆங்கிலம் பேசுகிறார்கள் என்பது அல்ல... இந்திய உழைப்புக்கு கூலி குறைவு என்பதுதான் காரணம். ஆகவே, மக்களின் மனங்களை வியாபித்துள்ள ஆங்கில மோகத்துக்குப் பின்னால் இப்படிப்பட்ட அரசியல் இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

நமது கடந்த காலத்தைத் திரும்பிப் பார்த்தால், 'மொழிப் போர்’ என்ற சொல் உருவாகும் அளவுக்கு மொழி மீதான பற்றுக்கு, நமக்கு ஒரு வரலாறு இருக்கிறது. ஆனால் இப்போது நடப்பது என்ன? சரிபாதி தமிழகக் குழந்தைகள் ஆங்கில வழியில்தான் படித்துக்கொண்டிருக்கின்றனர். தமிழை ஒரு மொழிப் பாடமாகப் படிக்கக்கூடத் தயங்குகின்றனர். தன் பிள்ளை ஆங்கிலம் பேசுவதைக் கண்டு அகமகிழும் பெற்றோர், தமிழில் தடுமாறுவதைக் கண்டு மனம் வருந்த வேண்டும். தமிழ் கற்றுத்தர மெனக்கெட வேண்டும். மாறாக 'என் பிள்ளைக்கு தமிழ் சுத்தமா வரலை. ஆனா இங்கிலீஸ்ல 95 மார்க் எடுக்கிறான்’ என செல்லமாக அலுத்துக்கொள்கிறார்கள். தாய்மொழியில் பயில்வதன் மூலம்தான் ஒரு குழந்தை, தன் அறிவுத்திறனின் உச்சத்தை அடைய முடியும். புகழ்பெற்ற மொழியியல் அறிஞர் நோம் சாம்ஸ்கி, 'குழந்தைகள், மனதளவில் எந்தத் தொந்தரவும் இல்லாமல் ஒரு மிதிவண்டியை ஓட்டிப் பழகுவதுபோல தாய்மொழியைக் கற்றுக்கொள்கின்றனர்’ என்கிறார்.  

தாய்மொழிக் கல்வியே சிறந்தது என்பதை உறுதிசெய்யும் பல ஆய்வுகள் உலகமெங்கும் நடைபெற்றுள்ளன. அதில் முக்கியமான இரண்டு ஆய்வுகள் அமெரிக்காவில் நடைபெற்றவை. அமெரிக்க அரசு, தன் நாட்டில் வசிக்கும் மொழிச் சிறுபான்மையினருக்கு எந்தக் கல்விமுறையில் பயிற்றுவிப்பது என்பதை முடிவு செய்ய 1991-ல் 'ரமிரெஸ் எட் அல்’ (Ramirez et al 1991) என்ற ஆய்வை நடத்தியது. பிரமாண்ட பொருட்செலவில் எட்டு ஆண்டு காலம் நடந்த இந்த ஆய்வின் பிரதான நோக்கம், 'அமெரிக்காவில் வசிக்கும் லத்தீன் இன மாணவர்களுக்கு எந்தக் கல்விமுறையில் பாடம் நடத்துவது? ஆங்கில வழியிலா... தாய்மொழியான ஸ்பானிஷ் வழியிலா?’ என்ற கேள்விக்கு விடை கண்டறிவதே. 2,342 மாணவர்கள் இந்த ஆய்வில் இணைத்துக்கொள்ளப்பட்டு, அவர்கள் மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். முதல் குழுவுக்கு ஆரம்பம் முதலே ஆங்கில வழி வகுப்புகள் நடத்தப்பட்டன. இரண்டாம் குழுவுக்கு, ஆரம்பத்தில் ஒன்று இரண்டு வருடங்கள் ஸ்பானிஷ் மொழியில் கற்பித்துவிட்டு, பிறகு ஆங்கில வழிக்கு மாற்றப்பட்டனர். மூன்றாவது முழுவினரை, நான்கு முதல் ஆறு வகுப்புகள் வரை ஸ்பானிஷ் மொழியில் படிக்க வைத்து, கூடவே ஆங்கிலத்தை ஒரு மொழிப்பாடமாகவும் கற்பித்து, பிறகு ஆங்கில வழிக்கு மாற்றினார்கள். சில ஆண்டுகளுக்குப் பிறகு இவர்களின் அறிவுத்திறனை மதிப்பிட்டபோது ஆச்சர்யம் தரும் உண்மைகள் வெளிவந்தன.

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 20

தொடக்கத்தில் இருந்து ஆங்கில வழியில் படித்த மாணவர்கள், அறிவு, ஆற்றல், ஆங்கில மொழித்திறன் என அனைத்திலும் பின் தங்கி இருந்தனர். மாறாக, ஆரம்ப வகுப்புகளை ஸ்பானிஷ் மொழியில் படித்த மாணவர்கள் இவை அனைத்திலும் மேம்பட்டு இருந்தனர். குறிப்பாக மூன்றாம் குழுவினரின் ஆங்கிலத் திறன், ஆங்கில வழியிலேயே படித்த மாணவர்களைவிட மேம்பட்டதாக இருந்தது. அதாவது தாய்மொழி வழியில் கல்வி கற்பதன் வழியேதான், ஆங்கிலத்தையும் சிறப்பாகக் கற்க முடியும் என்பது இதில் இருந்து தெரிகிறது. மேலும் தாய்மொழி வழிக் கல்விதான் அறிவு, திறன், ஆற்றல் என அனைத்திலும் சிறந்து விளங்க உதவுகிறது என்பது இந்த ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டது.

அதே அமெரிக்காவில் 1996-2001 ஆகிய ஆறு ஆண்டு காலம் நடத்தப்பட்டது தாமஸ்-கால்லியர் (Thomas - Collier) ஆய்வு. இரண்டு லட்சம் மாணவர்கள், அவர்களின் 15 ஆண்டு கால கல்விப் பதிவுகள்... இவற்றைக்கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வு, உலக அளவில் முக்கியமான ஒன்று. 2002-ம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த ஆய்வு முடிவும், தாய்மொழிக் கல்விதான் சிறந்தது என்பதை பல்வேறு புள்ளிவிவரங்களுடன் உறுதி செய்கிறது. அமெரிக்கா, தன் நாட்டின் வசிக்கும் மொழிச் சிறுபான்மையினரின் கல்விமுறையில் மாற்றம் கொண்டுவருவதற்கு முன்பு இப்படி நீண்ட ஆய்வுகளைச் செய்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் எந்தவித ஆய்வும் இல்லாமல், ஓர் அரசாணை மூலம் அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் கொண்டுவரப்படுகின்றன. அரசுப் பள்ளி மாணவர்களின் ஆங்கில அறிவை மேம்படுத்துவதுதான் அரசின் நோக்கம் என்றால், தரமான ஆங்கில ஆசிரியர்களை நியமிக்கட்டும். அதைவிட்டுவிட்டு அரசுப் பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களை சோதனைச் சாலை எலிகளைப்போல பயன்படுத்துவது எந்த வகையில் நியாயம்?

-பாடம் படிப்போம்...

அந்தரத்தில் ஒரு மொழி!

'எஸ்பெரான்டோ’ மொழி பற்றி உங்களுக்குத் தெரியுமா? Esperanto என்பது நவீன காலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு மொழி. போலந்து நாட்டைச் சேர்ந்த எல்.எல்.சாமன்ஹோஃப் என்கிற கண் மருத்துவர், 1887-ம் ஆண்டு இந்த மொழியை உருவாக்கினார். மக்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட மொழி வேறுபாடுதான் காரணம் என்னும் முடிவுக்கு வந்த அவர், தேச எல்லைகளைக் கடந்து, சர்வதேச அளவில் அனைவரும் பேசக்கூடிய எளிமையான மொழியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் உருவாக்கியதுதான் எஸ்பெரான்டோ. லத்தீன் மொழிகள், ஆங்கிலம், ஜெர்மன், போலந்து, ரஷ்ய மொழிகளின் செல்வாக்கு இந்த எஸ்பெரான்டோ மொழியில் உண்டு. எனினும், இது கற்றுக்கொள்ள மிகவும் சுலபமான மொழி என்றே சொல்லப்படுகிறது.

இன்று உலகளாவிய அளவில் 10,000 பேர் இந்த மொழியைச் சரளமாகப் பேசுகின்றனர். 10 லட்சம் பேரால் இந்த மொழியைப் புரிந்துகொள்ள முடியும். கூகுள் டிரான்ஸ்லேட்டரில்கூட எஸ்பெரான்டோ மொழி இருப்பதைப் பார்க்கலாம். இத்தனை விஸ்வரூப வளர்ச்சி பெற்றுவரும் இந்த மொழியைப் பற்றி மொழியியல் அறிஞர் நோம் சாம்ஸ்கி, 'Native speakers’ இல்லை என்ற நிலையில் 'எஸ்பெரான்டோ’வை ஒரு மொழி என்றே அழைக்க முடியாது’ என்கிறார். 'தகவல் தொடர்புதான் ஒரு மொழியின் அடிப்படை நோக்கம்’ என நாம் எளிமையான வரையறைகளைப் படித்து வந்திருக்கிறோம். இந்த நோக்கத்தை 'எஸ்பெரான்டோ’வும் நிறைவேற்றவே செய்கிறது. அப்படி இருந்தும் 'இதை தாய்மொழியாக ஏற்க முடியாது’ என்கிறார் சாம்ஸ்கி. ஏனெனில் இந்த மொழிக்கு எனப் பூர்வீகத் தாய்மொழியினர் இல்லை. கலாசார, பண்பாட்டு அடையாளங்கள் இல்லை. இவை எதுவும் இல்லாமல் ஒரு மொழி அந்தரத்தில் ஜீவித்திருக்க முடியாது. வேறு பொருளில் சொல்வதானால், நாம் மொழியை இழக்கிறோம் என்றால், நமது பண்பாட்டை, நமது வரலாற்றை இழக்கிறோம் என அர்த்தம்.