சினிமா
Published:Updated:

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 21

பாரதி தம்பி, படம்: ரமேஷ் கந்தசாமி

'தீண்டாமை ஒரு பெருங்குற்றம்’ எனப் பாடப் புத்தகத்தில் படித்துவிட்டு, வீட்டில் தீண்டாமையைக் கடைப்பிடித்தால், அந்தக் குழந்தை எதைப் பின்பற்றும்? 'ஏழைக்கு எழுத்தறிவித்தவன் இறைவன்’ எனப் பள்ளியில் சொல்லிவிட்டு, ஏழைகளை பள்ளி காம்பவுண்டு சுவருக்கு வெளியே துரத்தினால், குழந்தையின் மனம் எதை எடுத்துக்கொள்ளும்? பரந்த மனப்பான்மையைப் பக்கத்துக்குப் பக்கம் போதித்துவிட்டு, 'அவன்கூட சேராதே... அவளுக்கு இதைத் தராதே’ எனச் சொல்லித்தந்தால், அந்த சிறுமனம் குழம்பிப் போகாதா? அரசுப் பள்ளியில் படிக்கும் ஒரு குழந்தை, அதே தெருவில் தனியார் பள்ளியில் படிக்கும் குழந்தைகளை பள்ளிப் பேருந்து ஏற்றிச் செல்லும்போது ஏங்குமா... இல்லையா? இத்தகைய முரண்பாடுகளோடு நம் சமுதாயம் இருப்பதால்தான், மிக இளம் வயதிலேயே மாணவர்களின் மனங்களும் இதற்குப் பழகிப்போகின்றன. உண்மையில் நமக்குத் தேவை வகுப்பறைப் புரட்சி.

பணம் உள்ளவனுக்கு முதல் தரக் கல்வி; பணம் இல்லாதவனுக்கு நான்காம் தரக் கல்வி என்றால், அது எவ்வளவு கேடுகெட்ட நிலை? 'சமச்சீர் கல்வி’ என்பது அதன் சாராம்சத்தில் முற்போக்கானது. ஏற்கெனவே இருந்த நமது கல்விச் சூழலுடன் ஒப்பிடும்போது அது ஒரு பாய்ச்சல். ஆனால், சமச்சீர் கல்வியிலும்கூட மேற்கண்ட பாகுபாடுகள் தொடரத்தான் செய்கின்றன. தனியார் பள்ளிகளில் ஏ.சி வகுப்பறைகள் இருக்கும்போது, அரசுப் பள்ளிகளில் கழிப்பறைகள்கூட இருப்பது இல்லை. பிறகு எப்படி அது சமச்சீர் கல்வி ஆகும்? இதில் இருந்து விடுபடுவதற்கு அடிப்படையான கல்வி அமைப்பிலேயே மாற்றம் தேவைப்படுகிறது.

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 21

மாற்றுவழிக் கல்வி முயற்சிகள் இந்தியாவின் பல பகுதிகளிலும் பரவலாக நடைபெற்றிருந்தபோதிலும், தமிழகத்தின் தாய்த்தமிழ் பள்ளிகளுக்கு அதில் ஒரு முக்கிய இடம் உண்டு. 1993-ல் சென்னை அம்பத்தூர் பகுதியில் தோழர் தியாகு ஆரம்பித்ததுதான் முதல் தாய்த்தமிழ் பள்ளி. அது தமிழ்நாடு முழுக்க தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் புற்றீசலைப்போல பெருகிக்கொண்டிருந்த நேரம். அரசுப் பள்ளிகள், மக்களின் நம்பிக்கையை இழக்கத் தொடங்கிய நேரமும் அதுதான். சரியாக அந்த நேரத்தில் வந்தது தாய்த்தமிழ்ப் பள்ளி.

அரசுப் பள்ளிகளில் உள்ள அதே நடைமுறைதான். எல்லா பாடங்களும் தமிழ் வழியில் சொல்லித்தரப்படும். ஆங்கிலம் ஒரு மொழிப்பாடமாக இருக்கும். ஆனால் தாய்த்தமிழ்ப் பள்ளிகளில் இது மிகவும் தரத்துடனும் அக்கறையுடனும் செய்யப்பட்டது. ஏட்டுக் கல்வி மட்டும் அல்லாமல் வாழ்க்கைக்குத் தேவையான மதிப்பீடுகளும், ஒழுக்க நெறிகளும் போதிக்கப்பட்டன. வரலாற்று அறிவு, சமூகம் பற்றிய பார்வை, சுற்றுச்சூழல் குறித்த அக்கறை என அந்தக் கல்வியில் அனைத்தும் இருந்தன. அரசுப் பள்ளிகளில் இப்போது கொண்டுவரப்பட்டுள்ள செயல்வழிக் கற்றல் முறை, 20 ஆண்டுகளுக்கு முன்பே தாய்த்தமிழ்ப் பள்ளிகளில் நடைமுறையில் இருந்தது. 'மெள்ளத் தமிழ் இனி வாழும்’ எனப் பலரும் அந்தப் பள்ளியைப் புகழ்ந்தனர். இதைத் தொடர்ந்து 1995-ல் திருப்பூரிலும், 1997-ம் ஆண்டு கோபிசெட்டிப்பாளையத்திலும் தாய்த்தமிழ்ப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. பிறகு தமிழ்நாடு முழுக்க மளமளவென ஆரம்பிக்கப்பட்டு ஒரு கட்டத்தில் அதன் எண்ணிக்கை 40-ஐ தொட்டது. எல்லா பள்ளிகளின் பெயர்களும் தாய்த்தமிழ்ப் பள்ளிகள் என இருந்தபோதிலும், அவை அனைத்தும் தனித்தனியான நபர்களால் நடத்தப்பட்டன.

தாய்த்தமிழ்ப் பள்ளியைத் தொடங்கிய எவரும் 'கல்வித் தந்தை’கள் இல்லை. சொல்லப்போனால் அவர்கள் போதிய பொருளாதார வசதி இல்லாதவர்கள். அரசியல் ஆர்வமும், சமூக மாற்றத்துக்கான கனவையும் மட்டுமே கொண்டிருந்தனர். கல்வி மூலம் அதை நிறைவேற்றும் வாய்ப்பு கண்முன்னே இருந்தபோது துணிவுடன் அதில் களம் இறங்கினார்கள். தமிழ்த் தேசிய, திராவிட, கம்யூனிஸ அரசியல் பின்னணியைக் கொண்டிருந்த தாய்த்தமிழ்ப் பள்ளியின் தாளாளர்கள், அவற்றை கல்வியின் வழியே பள்ளிகளில் கொண்டுசேர்த்தனர். தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு மாற்றாக மக்களின் நம்பிக்கையைப் பெறத் தொடங்கியிருந்த நேரத்தில், 2004-ல் கும்பகோணம் பள்ளி தீ விபத்து நடைபெற்றது. 94 இளம் தளிர்களைப் பலிகொடுத்த அந்த நிகழ்வுக்குப் பிறகு பள்ளிகள் மீதான அரசின் இறுக்கம் அதிகரித்தது. ஓலைக் குடிசைகளில் பள்ளி நடத்தக் கூடாது. உறுதியான கட்டட வசதிகள் வேண்டும் என்ற நிபந்தனைகள் பொதுவில் ஏற்கத்தக்கவை. ஆனால், லாப நோக்கம் இல்லாமல் இயங்கிய, பொருளாதாரத்தில் பின்தங்கிய தாய்த்தமிழ்ப் பள்ளிகளால் இந்த நிபந்தனைகளை நிறைவேற்ற முடியவில்லை. அரசின் கெடுபிடிகளைச் சமாளித்து, தொடர்ந்து பள்ளியை நடத்த இயலவில்லை. இதனால் 2004-க்குப் பிறகு மாநிலம் முழுவதும் இயங்கிய தாய்த்தமிழ்ப் பள்ளிகள் ஒவ்வொன்றாக மூடப்பட்டன. இப்போது ஒட்டுமொத்தமாகச் சேர்த்து சுமார் 15 பள்ளிகள் மட்டுமே இயங்குகின்றன.

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 21

அதில் கோபிசெட்டிப்பாளையத்தில் செயல்பட்டுவரும் தாய்த்தமிழ்ப் பள்ளிக்கு, அந்தப் பகுதி மக்களிடம் ஏகோபித்த நன்மதிப்பு. மழலையர் பள்ளி, தொடக்கப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி ஆகிய மூன்றும் தனித்தனியே செயல்பட்டு வருகின்றன. ப்ரி.கே.ஜி., எல்.கே.ஜி., யூ.கே.ஜி என்பதுதான் மழலையர் பள்ளி. அது அரும்பு, மொட்டு, மலர் எனப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று வகுப்புகளிலும் பாடம் என எதுவும் கிடையாது. பள்ளி குறித்த தயக்கத்தை விலக்கி, பள்ளியை விரும்பும் சூழலை உருவாக்குவதுதான் மழலையர் வகுப்புகளின் நோக்கம்.

''முழுக்க, முழுக்க விளையாட்டு முறையில்தான் கற்றல் நடக்கும். எடுத்ததுமே அ, ஆ என ஆரம்பிக்க மாட்டோம். புள்ளி, வட்டம், கோடு என உருவங்களில் இருந்து தொடங்குவோம். பிறகு வண்ணங்களை அறிமுகப்படுத்துவது, குழந்தையின் பின்னணியைத் தெரிந்துகொண்டு அதற்கு ஏற்ப சொல்லித் தருவது என இருக்கும். இந்த மூன்று வகுப்புகளிலும் எழுத்துப் பயிற்சி எதுவும் கிடையாது. நேரடியாக 1-ம் வகுப்பில்தான் எழுத்துப் பயிற்சி. இது மழலையர் பள்ளிக்கு என நாங்களே வடிவமைத்துக்கொண்ட பாடத் திட்டம். 1-ம் வகுப்பில் இருந்து அரசின் பாடத் திட்டத்தை நடத்துகிறோம். அதோடு சேர்த்து மாணவர்களின் தனித்திறன்களை வளர்த்து, அவர்களை சமூக அக்கறைகொண்ட மனிதர்களாக மாற்றவும் மெனக்கெடுகிறோம்!'' என்கிறார், கோபி தாய்த்தமிழ்ப் பள்ளியின் தாளாளர் குமணன்.  

மாணவர்களைக் கையாள்வது குறித்து கூடுதல் புரிதலை ஆசிரியர்கள் பெறுவதற்காக, ஒவ்வோர் ஆண்டும் கல்வியாளர்களை வரவழைத்து பள்ளியின் ஆசிரியர்களுக்கு ஒரு வாரம் பயிற்சிப் பட்டறையும் நடத்தப்படுகிறது. சிலம்பம், கரகாட்டம், ஒயிலாட்டம் போன்ற நாட்டுப்புறக் கலைகளைப் பயிலும் இந்தப் பள்ளி மாணவர்கள், பறை இசையிலும் பட்டையைக் கிளப்புகின்றனர். காடுகளுக்குச் செல்வது, நீதிமன்றம், ஆட்சியர் அலுவலகங்களுக்குச் செல்வது என வகுப்பறைக்கு வெளியிலான கல்வியையும் இவர்கள் பெறுகின்றனர். முக்கியமாக 'டிஸ்லெக்ஸியா’ என்ற திறன்குன்றிய குழந்தைகளை மருத்துவர்களே இந்தப் பள்ளிக்கு அனுப்பிவைக்கிறார்கள். கோபி தாய்த்தமிழ்ப் பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிலும் நான்கைந்து குழந்தைகள் இப்படிப் படிக்கிறார்கள். தாய்த்தமிழ்ப் பள்ளிகளில் ஆங்கிலம் நடத்தவே மாட்டார்கள் எனப் பலரும் தவறாகக் கருதுகிறார்கள். இங்கு ஆங்கிலம் ஒரு மொழிப்பாடமாகச் சொல்லித் தரப்படும். இந்தப் பள்ளியில், 'ஸ்போக்கன் இங்கிலீஷ்’ கிளாஸ் நடத்துவதற்கு என்றே பிரத்யேகமாக ஓர் ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 21

1997-ல் தொடங்கப்பட்ட தாய்த்தமிழ் தொடக்கப் பள்ளியில் இப்போது 200 பேர் படிக்கிறார்கள். வாடகை இடத்தில் பள்ளி இயங்கிவரும் நிலையில், நிலத்தின் உரிமையாளர் பள்ளியைக் காலிசெய்யச் சொல்லிவிட்டார். இப்போது தொடர்ந்து இயங்குமா, மூடப்பட்டுவிடுமா என்ற திரிசங்கு நிலையில் இருக்கிறது இந்தப் பள்ளி. இதே கோபியில் தாய்த்தமிழ் மேல்நிலைப் பள்ளி கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. 6 பேர் முதன்முறையாக 10-ம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வை எழுதினார்கள். அனைவருமே 400 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தனர்.

''அனைத்து மாணவர்களும் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்து வந்தவர்கள். பிரபாகரன் என்கிற ஒரு மாணவன், தனியார் பள்ளியில் படித்து 9-ம் வகுப்பில் தேர்ச்சி பெறாமல் விஷம் குடித்துவிட்டான். ஓர் ஆண்டு காலம் பள்ளிக்குச் செல்லவில்லை. அவனை நாங்கள் சேர்த்துக்கொண்டோம். அவன் 10-ம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்கள் 444. அவனது அப்பாவால் இப்போது வரை நம்ப முடியவில்லை. இந்த ஆண்டுகூட 18 பேர் அரசுப் பொதுத் தேர்வு எழுதப் போகிறார்கள். அனைவரும் மிகவும் வறிய, பின்தங்கிய சூழலில் இருந்து வந்தவர்களே. நிச்சயம் நல்ல மதிப்பெண் எடுப்பார்கள்'' என்கிறார் குமணன். இந்தத் தாய்த்தமிழ்ப் பள்ளியில் முதன்முதலில் சேர்ந்த அறிவுத் தென்றல் என்கிற மாணவி, இப்போது தொல்லியல் துறையில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டிருக்கிறார்.

அங்கொன்று, இங்கொன்றுமாக நடந்தாலும் மாற்றுக்கல்வி முயற்சிகள் தொடர்ந்து நடக்கின்றன. தங்கள் குழந்தைக்குச் சிறப்பான எதிர்காலத்தைத் தர விரும்பும் பெற்றோர்கள், இத்தகைய மாற்றுவழிப் பள்ளிகளைக் கண்டறிந்து பிள்ளைகளைச் சேர்க்க வேண்டும்!

- பாடம் படிப்போம்...

4-ம் வகுப்புக்கு டேப்லெட்!

னியார் பள்ளிகளின் அட்டகாசத்துக்கு உதாரணம் தேவை இல்லை. ஆனால், இந்த மதுரை பள்ளியில் நடைபெற்றுவரும் கொடுமை அனைத்திலும் உச்சம். மதுரை, திருநகரில் இருக்கிறது அந்தத் தனியார் பள்ளி. இங்கு, நான்காம் வகுப்பில் இருந்து அனைத்து மாணவர்களும் லேப்டாப் மூலம்தான் பாடம் படிக்க வேண்டும் எனச் சொல்கிறார்கள். 3-ம் வகுப்பு தேர்வாகி 4-ம் வகுப்புக்குச் செல்லும்போதே தங்கள் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் லேப்டாப் வாங்கிக் கொடுத்தாக வேண்டும். 'வசதி இருப்பவர்கள் வாங்கித் தரட்டும். மற்றவர்கள் வழக்கம்போல புத்தகங்கள் மூலம் படிக்கட்டும்’ என மேம்போக்காக விட்டுவிடவில்லை. அனைவரும் கட்டாயம் லேப்டாப் வாங்க வேண்டும் என வற்புறுத்துகின்றனர்; அதுவும் அவர்கள் சொல்லும் கடையில். இதனால் ஏழை, நடுத்தரப் பெற்றோர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். கடன் வாங்கியேனும் லேப்டாப் வாங்கித் தந்தாக வேண்டிய நிலைக்குத் தள்ளுகின்றனர்.

4, 5-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு லேப்டாப் மூலம் பாடம் நடத்த வேண்டிய அவசியம் என்ன? இந்த வயதிலேயே கம்ப்யூட்டரை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தால் அவர்களின் கண்பார்வை பாதிக்கப்படாதா? எழுதிப் பழக வேண்டிய வயதில் கீ-போர்டைத் தட்டத் தொடங்கினால் எழுத்தின் வாசனைகூட அவர்களுக்கு அறிமுகம் ஆகாதே. பேப்பரையும் பேனாவையும் கொடுத்து எழுதச் சொன்னால் தட்டுத்தடுமாறி அல்லவா போவார்கள். இதைவிடக் கொடுமை இந்த ஆண்டில் இருந்து 'இனி லேப்டாப் வேண்டாம். எல்லோரும் டேப்லெட் வாங்க வேண்டும்’ எனக் கூறியுள்ளனர். பல பெற்றோர்கள் வாங்கிக்கொடுத்தும் உள்ளனர். சந்தையில் 5 ஆயிரம் ரூபாய்க்கே நல்ல டேப்லெட் கிடைக்கும் நிலையில், பள்ளி நிர்வாகமோ 15 ஆயிரம் ரூபாய் விலையில், அவர்கள் சொல்லும் ஷோரூமில்தான் டேப்லெட் வாங்க வேண்டும் என்கிறது.

இதுபோன்ற மின்னணுப் பொருட்களை நாள் முழுக்க பயன்படுத்தும்போது எந்த நேரமும் சார்ஜிலேயே இருந்தாக வேண்டும். இதனால் வகுப்பறையில் மாணவர்களின் மேஜைகளில் மின்சார இணைப்புக் கொடுத்துள்ளனர். எங்கேனும் சிறிய மின்கசிவு ஏற்பட்டாலும் அது பெரும் சிக்கல்களை ஏற்படுத்தும். பணம் பிடுங்குவதற்காக மாணவர்களின் உயிருடனும், எதிர்கால வாழ்க்கையுடனும் விளையாடும் இதுபோன்ற பள்ளிகளை, கல்வித் துறை தலையிட்டு, தடுத்து நிறுத்த வேண்டும்!