Published:Updated:

நலம் 360’ - 21

மருத்துவர் கு.சிவராமன், படம்: வீ.சக்தி அருணகிரி

குழந்தை நலத் துறையில் பதறவைக்கும் ஒரு சொற்றொடர், Sudden infant death syndrome. காரணமே இல்லாமல் திடீரென நிகழும் பச்சிளம் குழந்தை மரணத்துக்கு இப்படி ஒரு பெயர். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில்கூட, இந்தப் பிரச்னையால் குழந்தை இறப்புகள் ஏராளம். பெற்றோருக்குப் பக்கத்தில் குழந்தையைப் படுக்கவைப்பதும்கூட இந்த இறப்புக்கு  முக்கியமான காரணம் என்பதை, சமீபத்திய ஆராய்ச்சி மூலம் அறிந்துள்ளது அமெரிக்கக் குழந்தைகள் நல அமைப்பு. உடனே அந்த அமைப்பின் ஆய்வாளர்கள் அவசர அவசரமாக, குழந்தைகள் பாதுகாப்பாகத் தூங்குவதற்கான பழக்கத்தை (safe sleep practice) வெளியிட்டனர். அதன்படி, தூங்கும் இடம் காற்றோட்டமாக இருக்க வேண்டும், முதுகு அழுந்தும்படியாக  குழந்தை தூங்க வேண்டும். வயிறு அழுந்தும்படியாகக் குப்புறப் படுக்கவிடக் கூடாது; பக்கவாட்டில் புரண்டுவிடாது இருக்க, அணைக்கும்படியாக மிருதுவான பருத்தித் துணி படுக்கை அவசியம்... என அந்தப் பட்டியல் நீண்டது. ஆனால், அதற்கு எல்லாம் நம்மிடம் பல தலைமுறைகளாக இன்னொரு பெயர் உண்டு... அது தொட்டில் அல்லது தூளி!

'கொவ்வை இதழ் மகளே - என்
குவிந்த நவரத்தினமே
கட்டிப் பசும்பொன்னே - என்
கண்மணியே கண் வளராய்’ எனத்
தாலாட்டு பாடி, தூளியில் ஆட்டித்   தூங்க வைக்கும் நலப் பழக்கம் 2,000 வருடங்களாக நம்மிடம் உண்டு. ஆனால், தூளியில் குழந்தையைப் போட்டு, நாக்கை அசைத்து தாலாட்டு பாடி குழந்தையின் கவனத்தை ஈர்த்து, கண்களால் அதன் சிந்தனையை ஒருமுகப்படுத்தி, கவனத்தை நிலைநிறுத்திய சில மணித்துளிகளில், அந்தக் குழந்தை தன்னை மறந்து தன் நாவை ஆட்டிப் பார்த்து, பின் அப்படியே பாடலின் ஒலியில் சொக்கி உறங்கும். இந்த அற்புதப் பண்பாடு இப்போது கொஞ்சம் கொஞ்சமாகக் காணாமல் போய்வருகிறது. வழக்கமாக அம்மாவின் பழைய பருத்திச் சேலைதான் தூளி செய்யும் துணி. அன்னையின் மணத்துடன், இருபக்கமும் பருத்திப் புடவையின் அணைப்பில் முதுகில் மட்டுமே படுக்க முடியுமான தொட்டிலின் துணிக்கற்றைக்கு நடுவே, தொட்டில் கம்பு ஒன்றைச் செருகி இருப்பார்கள். காற்றில் ஆடும்போது சுருண்டுகொண்டு, உள்ளே காற்று இறுக்கம் வந்துவிடாமல், தொட்டிலை எப்போதும் விரித்திருக்க உதவும் அந்தக் கம்பு. அதை அங்கு வைத்த பாட்டிக்கு சத்தியமாக Sudden infant death syndrome  பற்றி தெரியாது. safe sleep practice குறித்து தேட அப்போது இணையம் என்ற ஒன்றே இல்லை.  

நலம் 360’  - 21

இன்றைய அறிவியலின் தேடலுக்குச் சற்றும் குறைவில்லாத உலக நாகரிகத் தொட்டிலான தமிழ் மரபு கற்றுத்தந்த நலப் பழக்கம்தான், தூளி. சிறுநீர் கழித்தால் படுக்கையில் தங்காமல் ஓடும் இந்தத் துணித்தூளியில், அதன் தொங்கி ஆடும் குணத்தால், பூரான் - பூச்சிகளும் ஏறாது. குழந்தைகளுக்கு உணவு புரையேறிவிடாமல் காக்கும் படுக்கை நுட்பமும் தூளியில் உண்டு. கூடவே, கொஞ்சம் குலப்பெருமையும், குசும்பு எள்ளலும், உறவின் அருமையும் என எல்லாம் ஏற்றி தூளியில் தாலாட்டு பாடி அமைதியாக உறங்கவைத்தும், ஆர்ப்பரிக்க எழுந்து நிற்க வைக்கவும், களம் அமைத்தது தொட்டில்பழக்கம் மட்டும்தான். நகரங்களில் பழைய பேன்ட்டை ஆணியில் மாட்டிவைத்திருப்பதுபோல் சுவரில் குழந்தையை ஒரு பையில் போட்டுத் தொங்கவிட்டிருப்பதைப் பார்க்கும்போதும், '20 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு cradle வந்திருக்காம்; நெட்டில் ஆஃபர் வந்திருக்கு’ எனப் பேசுவதைக் கேட்கும்போதும், இன்னும் எத்தனை விஷயங்களை இப்படித் தொலைக்கப் போகிறோமோ என மனம் பதறுகிறது!

'தாய்ப்பாலுக்கு நிகர் ஏதும் இல்லை’ என்பது நாம் அறிந்ததே. அதே தாய்ப்பாலை மார்பகத்தில் இருந்து நேரில் பெறாமல், பிடித்துவைத்து, புட்டியில் குடிக்கும் நகர்ப்புறக் குழந்தைகள் இப்போது அதிகம். வழியே இல்லாதபோது இது சிறந்த மாற்றாகக் கருதப்பட்டாலும், தாயின் மார்போடு அணைந்து, நேராகப் பால் அருந்துவதற்கு இது இணை ஆகாது. நேராக தாய்ப்பால் அருந்தும் குழந்தைக்குக் கிடைக்கும் கூடுதல் மருத்துவப் பயனை, கொஞ்சம் உற்றுப் பார்த்தால், உச்சிமுடியும்கூடச் சிலிர்க்கும். பச்சிளம் குழந்தையின் வாயில், உமிழ் நீரில் இருக்கும் கிருமித்தொற்றை, அந்தக் குழந்தை பால் அருந்தும்போது, தாயின் உடல் உணர்ந்துகொண்டு, உடனடியாக அந்தக் கிருமிக்கு எதிரான antibodies-ஐ ஒரு சில மணித்துளிகளில் தன் உடம்பில் தயாரித்து, அடுத்த வேளை பால் ஊட்டும்போது, தாய்ப்பாலுடன் கலந்து தந்துவிடுமாம். இவ்வளவு விரைவாக தாய், தன் நோய் எதிர்ப்பு ஆற்றலை குழந்தைக்கு அளிப்பதை ஆய்வில் பதிந்து, வியந்து சொல்கிறார்கள் ஆய்வாளர்கள். இந்த antibodies supply காலையில் அலுவலகத்துக்குச் செல்லும் முன் புட்டியில் பிடித்துவைத்த தாய்ப்பாலில் குழந்தைக்குக் கிடைப்பது இல்லை. கூடவே, தாய்ப்பால் சுரப்பு, தாயின் மார்புக் காம்பை உறிஞ்சும்போது மட்டுமே குழந்தை வாய்க்கு வரும். ஆனால், புட்டிப்பால் அருந்தும்போது குழந்தை பாலை உறிஞ்சாமல் இருந்தாலும், அது வழிந்து வாயில் நிரம்பி, சில நேரம் மூச்சுக்குழலுக்குள் செல்லவும்கூட வாய்ப்பு உண்டு.

நலம் 360’  - 21

இன்னொரு விஷயம், தாய்ப்பால் புகட்டும்போது, குழந்தையின் நிறைவும் மகிழ்வும்தான் தாயின் கண்ணுக்குத் தெரியும். எந்த அளவு குழந்தை பால் குடித்திருக்கிறது என தாய் கணக்கிட முடியாது. ஆனால், பராமரிப்பவர் புட்டியில் பிடித்துவைத்த தாய்ப்பாலை அப்படிக் கொடுக்க இயலாது. 'தாய்ப்பாலை வீணாக்கக் கூடாது’ எனப் பெரும்பாலும் புட்டி காலியாகும் வரை கொடுப்பர். இது சில நேரங்களில் கூடுதலாகப் போய், பின்னாளில் குழந்தை தேவைக்கு அதிகம் உண்ணும் பழக்கம் உடையவர்களாக மாறிவிடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதோடு, தாய்ப்பாலை புட்டியில் பீச்சும் தாய்க்கு மீண்டும் பால்சுரப்பு ஏற்படுவது, இயல்பாக குழந்தை பால் அருந்தும்போது சுரப்பதுபோல சீராக நடைபெறாது. மொத்தத்தில், புட்டிப்பால் புகட்டுவது என்பது, அம்மாவின் கழுத்துச் சங்கிலியை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு, ஓரக் கண்ணால் அம்மாவை ரசித்தபடி, உறிஞ்சலுக்கு நடுவே 'களுக்’ சிரிப்பை கண்களில் காட்டி, குழந்தை பால் உறிஞ்சும் செயலுக்கு, இணை ஆகாது!

உரை மருந்து கொடுத்தாலும், சேய்நெய் தந்தாலும், வசம்பு கருக்கிக் குழைத்துக் கொடுத்தாலும் 'அந்தச் சங்கை எடு... கொஞ்சம்’ என்ற சத்தம் கேட்கும். வட மாவட்டத்தில் 'பாலாடை’ என்றும் தெக்கத்தி மண்ணில் 'சங்கு’ என்றும் அழைக்கப்படும் அந்தக் கால குழந்தை மருந்தூட்டும் கலன், இப்போதைய பிளாஸ்டிக் அவுன்ஸ் கிளாஸிலும் ட்ராப்பர் குழலிலும் தோற்றுப்போய், தொலைய ஆரம்பித்துவிட்டது.  வெள்ளி அல்லது வெண்கலத்தால் ஆன பாலாடையில், குழந்தைக்கு மருந்தூட்டும்போது தாயின் சுத்தமான ஆள்காட்டிவிரலால், மருந்தைக் குழைத்து வாயினுள் அனுப்பும் வசதி உண்டு. மடியில் குழந்தையைத் தலை உயர்த்திக் கிடத்தி, பாலாடையின் மழுங்கிய முனையை, இதழ் ஓரத்தில் வைத்து, மருந்தை அல்லது மருந்து கலந்த தாய்ப்பாலைப் புகட்டும் வித்தை, தாய்க்குக் கட்டாயம் தெரியவேண்டிய உயிர்வித்தை. முடிந்த மட்டும் பிஞ்சுக் குழந்தையின் வாய் நஞ்சு பிளாஸ்டிக்கைச் சுவைக்காமல் இருக்க, இந்த நல்ல பழக்கம் நிச்சயம் மீட்டு எடுக்கப்பட வேண்டும்.

ஏழு, எட்டாம் மாதத்தில் பக்கவாட்டில் இரண்டு பக்கங்களும் தலையணை அணைப்பில் உட்கார்ந்திருந்த குழந்தை, 11-ம் மாதத்தில்  நடை பழக ஆரம்பிக்கும்போது, அன்று நாம் வாங்கித் தந்த நடைவண்டி இப்போது இல்லை. கைகள் மட்டும் ஊன்றிப் பிடித்து நடை பயிலும் அந்தக் கால வண்டிக்கு இப்போதைய walker இணையாவதே இல்லை. குழந்தை மருத்துவ ஆய்வாளர்கள், 'குழந்தைகளுக்கு walker வாங்கித் தராதீர்கள்’ எனக் கூறுகிறார்கள். குழந்தை சரியாக நடப்பதற்கு தசை வலுவை, இடுப்பு வலுவைப் பெறும் முன்னர், எல்லா பக்கமும் தாங்கிக்கொள்ளும் walker வாகனம் உண்மையில் குழந்தையின் இயல்பான நடைத்திறனைத் தாமதப்படுத்தும். ஆனால், நம் ஊர் நடைவண்டி அப்படி அல்ல. பக்கவாட்டுப் பிடி இல்லாததால் நடைக்கான தசைப்பயிற்சியை, இடுப்பு கால்தசைக்கு ஏற்றவாறு தந்து நடையைச் செம்மையாக்கும்.

நலம் 360’  - 21

இப்படி, நம் இனப் பழக்கங்கள் எல்லாம் பெருவாரியாக நம் நலத்துக்கு வித்திடும் நலப் பழக்கங்கள். இடையிடையே வரலாற்றில் அப்போதைய சமூக, மத, இனப் பிணக்குகளும், ஆளுமைப் புகுத்தல்களும் செருகி வந்திருந்தாலும், இன்னும் மிச்சம் இருக்கும் பழக்கங்களையாவது எடுத்தாளத் தவறிவிடக் கூடாது. கலோரி கணக்கிலும், காப்புரிமை சூட்சுமத்துக்குள்ளும் நவீன உணவாக்கம் கட்டமைக்கப்படும்போது, எதைச் சாப்பிட வேண்டும் என மட்டும் சொல்லிச் சென்றுவிடாமல், எப்படிச் சாப்பிட வேண்டும், எதற்குச் சாப்பிட வேண்டும் என எப்போதோ எழுதிவைத்த மரபு நம் மரபு மட்டும்தான்.

'முன்துவ்வார் முன்னெழார் தம்மிற் பெரியார் தம்பாலி ருந்தக்கால்’ என நம்மோடு நம் வயதில் பெரியவர் உணவருந்தினால், அவர்கள் சாப்பிட்டு எழும் முன்னதாக நாம் எழக் கூடாது என நம் இனக் கூட்டம் கிட்டத்தட்ட 1,800 ஆண்டுகளுக்கு முன் ஆசாரக் கோவை நூலில் சொன்னதில் உணவு அறிவியல் கிடையாது; ஆனால் ஓங்கிய உணவுக் கலாசாரம் உண்டு. அதேபோல் தலை தித்திப்பு, கடை கைப்பு எனச் சாப்பிடச் சொன்ன முறையில் இனிப்பில் தொடங்குவது, விருந்தோம்பலில் மகிழ்வைத் தெரிவிக்கும் பண்பாட்டுக்கு மட்டும் அல்ல; ஜீரணத்தின் முதல் படியான உமிழ்நீரை முதலில் சுரக்கவைக்கும் என்பதற்காகவும் சேர்த்துத்தான். இப்படி மாண்பு நிறைந்த உணவுப் பழக்கத்தை, அளவு அறிந்து, பகுத்து உண்டு உண்ணச் சொன்ன செய்தி நம் மண்ணில் பந்தியில் மட்டும் பரிமாறப்படவில்லை; பண்பாட்டிலும் சேர்த்துத்தான். இதை எப்போது புரிந்துகொள்ளப்போகிறோம்? எப்போது முழுமையாகக் கைக்கொள்ளப்போகிறோம்?

- நலம் பரவும்...

'பதார்த்த குண சிந்தாமணி’ எனும் பழம்பெரும் சித்த நூல் சொல்லும் சில நலவாழ்வுப் பழக்கங்கள்:

• நாளுக்கு இரண்டு முறை மலம் கழிப்பது.

•  வாரத்துக்கு ஒரு முறை எண்ணெய்க் குளியல்.

•  மாதத்துக்கு ஒரு முறை உடலுறவு.

•  45 நாட்களுக்கு ஒரு முறை நாசியில் (nasal drops) மருந்து விடுவது.

•  நான்கு மாதங்களுக்கு ஒரு முறை பேதி மருந்து சாப்பிடுவது.

•  வருடத்து இரண்டு முறை வாந்தி மருந்து சாப்பிடுவது.

செய்யக் கூடாத விஷயங்கள்:

•  முதல் நாள் சமைத்த உணவு அமுதமாகவே இருந்தாலும் சாப்பிடக் கூடாது.

•  கருணைக்கிழங்கு தவிர பிற கிழங்குகளைச்  சாப்பிடக் கூடாது.

•  பகலில் தூக்கமும் புணர்ச்சியும் கூடாது.

•  நாளுக்கு இரண்டு பொழுதுகள் தவிர மூன்று பொழுதுகள் சாப்பிடக் கூடாது.

•  பசிக்காமல் உணவு அருந்தக் கூடாது.

 உணவு உண்ணும்போது இடையிடையே  நீர் அருந்தக் கூடாது.

•  தும்மல், சிறுநீர், மலம், கொட்டாவி, பசி, தாகம்,  வாந்தி, இருமல், ஆயாசம், தூக்கம், கண்ணீர்,    உடலுறவில் சுக்கிலம், கீழ்க்காற்று, மூச்சு இவற்றை அடக்கக் கூடாது.

கண்டிப்பாகச் செய்யவேண்டியவை:

•  உணவு சாப்பிட்ட பிறகு குறு நடை.

•  நீரைச் கருக்கி, மோரைப் பெருக்கி, நெய்யை உருக்கி உண்பது.

•  வாழைப்பழத்தைக் கனியாக அல்லாமல்   இளம்பிஞ்சாகச் சாப்பிடுவது.

•  எண்ணெய்க் குளியலின்போது வெந்நீரில் குளிப்பது.