Published:Updated:

சொக்கப்பனை

சொக்கப்பனை

சொக்கப்பனை

சொக்கப்பனை

Published:Updated:

கார்த்திகை தீப விழாவின் முதன்மையான நிகழ்வு சொக்கப்பனை ஏற்றுதல். பனை மரத்தை பூலோக கற்பக விருட்சம் என்றும், பொற்பனை என்றும் சிறப்பிப்பார்கள். அதை அக்னியின் வடிவம் என்பார்கள். அது ருத்ர அம்சமாகும். சில தலங்களில் பனைமரம் பொற்பனம்பழங்களைத் தந்தது என்றும் புராணங்கள் கூறுகின்றன.

கார்த்திகை தீப நாளில் பனைமரத்தை வெட்டி எடுத்து வந்து ஆலயத்தின் முன்னுள்ள முற்றத்தில்  வெட்டவெளியில் நடுவார்கள். அதை சுற்றி 10 அல்லது 15 அடி உயரத்துக்கு பனை ஓலைகளைக் கொண்டு கூம்பு போன்று அமைப்பார்கள்.மாலையில் ஆலயங்களின் உச்சியில் தீபம் ஏற்றியதும், பஞ்ச மூர்த்திகளுக்குத் தீபாராதனை செய்து, கோயிலுக்கு முன்புறம் அமைக்கப்பட்டிருக்கும் இந்தக் கூம்புகளுக்கு முன்பாக எழுந்தருளச் செய்வார்கள். பின்னர், ஸ்வாமிக்கு தீபாராதனை செய்து, அந்தச் சுடரால் இந்த சொக்கப்பனைகளைக் கொளுத்துவர். சுடர் வேகமாகப் பரவி கொழுந்துவிட்டு எரியும். அந்த ஜோதியை சிவமாகவே எண்ணி வழிபடுவார்கள். இது, அக்னி மய லிங்கமாகும்.

சொக்கப்பனை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சொக்கப்பனை எரிந்து முடித்ததும், அதிலிருந்து பெறப்படும் கரியை தைலத்துடன் சேர்த்து ரட்சையாக காப்பாக பூசிக் கொள்வார்கள். சாம்பலை எடுத்துச் சென்று வயக்காடுகளிலும் தூவுவார்கள். இதனால் விளைச்சல் பெருகும் என்பது நம்பிக்கை. சில தலங்களில் இரட்டை சொக்கப்பனைகளைக் கொளுத்தி வழிபடுகின்றனர்.  திருமால் ஆலயங்களிலும் சொக்கப்பனை விழா தனிச்சிறப்புடன் நடைபெறுகிறது.

திருவண்ணாமலையில் சொக்கப்பனை கொளுத்தும் வழக்கம் இல்லை.

மாவளியோ மாவளி!

கார்த்திகைத் தீப நாளில் 'மாவளி’ சுற்றுதல் என்ற விளையாட்டும் நிகழும். பனம் பூளையை (பனம் பூக்கள் மலரும் காம்பை) நன்கு காய வைத்து, காற்றுப்புகாமல் (பள்ளத்துக்குள் வைத்து) தீயிட்டுக் கரியாக்கி அதை நன்கு அரைத்துச் சலித்துத் துணியில் சுருட்டி கட்டுவர். பின்னர், பனை ஓலை மட்டைகள் மூன்றை எடுத்து அதன் நடுவில் கரித்தூள் சுருணையை வைத்துக் கட்டுவர். பிறகு அதை உரிபோல் நீண்ட கயிற்றில் பிணைப்பார்கள். பின்னர், துணிப்பந்தில் நெருப்பை வைத்து கனலை ஏற்படுத்துவர். கயிற்றைப் பிடித்து வட்டமாகவும் பக்கவாட்டிலும் சுற்றுவர். இருளில் அது தீப்பொறிகளைச் சிதறவிட்டு, எரிநட்சத்திரம் வேகமாகச் சுழன்று ஓடுவது போல் காட்சியளிக்கும்.அப்போது மாவளியோ மாவளி என்று சத்தமிடுவர்.இது பார்ப்பதற்கு இனிய காட்சியாகும்.

மா ஒளி (பெரிய ஒளி) என்பது மருவி மாவளி ஆனது என்றும், பாதாளத்தில் வசிக்கும் மாவலி, தீபத் திருநாளில் மண்ணுலகம் வந்து தீபாலங்காரத்தைக் கண்டு மகிழ்கிறார் என்கிற ஐதீகத்தால் அவர் பெயரால் இது 'மாவலி’ ஆனது என்றும் கூறுவர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism