Published:Updated:

நலம் 360’ - 23

மருத்துவர் கு.சிவராமன்

ருவேளை 'ஞானப்பழம்’ திருவிளையாடல் இப்போது நிகழ்ந்தால், என்ன நடந்திருக்கும்? 'என்னது ஞானப்பழமா? இதில் எத்தனை கலோரி? அய்யோ... ஸ்வீட் ஜாஸ்தி! இப்போ  மயிலில் ஏறி உலகத்தைச் சுத்திவந்து இதை ஜெயிச்சாலும், பழத்தைச் சாப்பிட்ட பிறகு தினம் ஊரைச் சுத்தி ஓடவேண்டியிருக்கும். ஸோ... ஸாரி டாடி! எனக்கு ஞானப்பழம் வேண்டாம்’ என யூத் கடவுள் முருகப்பெருமானே பதறும் 'ஷுகர் உலகம்’ ஆகிவிட்டது நம் சமூகம். தூக்கக் கலக்கத்துடன் தெருநாய் துரத்த, தலைதெறிக்க ஓடவும், மொட்டைமாடியில் மூச்சைப் பிடித்து தவம் செய்யவுமாக இளைஞர்களைப் பதற்றப்பட வைத்திருக்கிறது சர்க்கரை வியாதி பயம்!

நலம் 360’  - 23

'நாங்க சர்க்கரையே தொடுறது இல்லை. எல்லோரும் ஜீரோ கலோரி இனிப்புக்கு மாறிட்டோம்; செயற்கைச் சர்க்கரை. காபி, டீக்கு மட்டும் இல்லை... பாயசம், பாதம்கீருக்கும் இப்போ அதான்’ எனப் பெருமையாகச் சொல்லும் புத்திசாலிக் கூட்டம் நகர்ப்புறத்தில் பெருகிவருகிறது. 'டயாபட்டிக் நோயாளிகள்  சர்க்கரை சாப்பிடக் கூடாது. ஆனால், வாழ்க்கையில் இனிப்பு இல்லாமல் இருக்க முடியுமா? ஆகவே, 'நோய்ச் சிக்கலை உண்டாக்காமல், அதே இனிப்பைத் தரும் இதைச் சாப்பிடுங்க!’ ’ என ஆரம்பித்ததுதான் செயற்கை இனிப்பு வியாபாரம். இப்போது அந்த வியாபாரம் கொஞ்சம் கொஞ்ச மாக, 'உடல் எடை குறைக்கணுமா, ஜீரோ சைஸ் இடுப்பு வேணுமா, எப்போதும் ஷ§கர் வராமல் தடுக்கணுமா, இந்தச் சர்க்கரை சாப்பிடுங்க’ எனச் சொல்லத் தொடங்கியுள்ளது. துரித உணவிலும் மருந்து மாத்திரைகளிலும் ஏராளமாகப் புழங்கும் இனிப்பு அவதாரங்களின் பட்டியல் கொஞ்சம் பெரிது. Acesulfame, Aspartame, Neotame, Saccharin, Sucralose முதலிய செயற்கை இனிப்புகளும், Erythritol, Hydrogenated starch, Lactitol, Maltitol, Mannitol முதலான சர்க்கரை அமிலங்களும், Stevia, Tagatose, Trehalose போன்ற நவீன சர்க்கரைகளும் இதில் அடக்கம். இந்த வகையறாக்களில் முன்பே வந்த Aspartame  எனும் ரசாயனத்தை காபியில் கலந்து குடிக்கலாம்; கேசரி கிண்டிச் சாப்பிட முடியாது. கொதிநிலையில் இந்த வேதிப்பொருள் உடைந்து சிக்கல் உண்டாக்கும் என்பதால், சர்க்கரை வியாதிக்காரர் மட்டும் இதைச் சத்தம் போடாமல் காபியிலோ, தேநீரிலோ கலந்து சாப்பிட்டு வந்தனர். ஆனால், இப்போது சந்தையில் விற்கப்படும் சுக்ருலோஸ், சர்க்கரையில் இருந்தே பிரித்து எடுக்கப்படும் ஒரு செயற்கைச் சர்க்கரை. 'எவ்வளவு வெப்பத்திலும் எங்க கெமிக்கல் உடையாது; உருகாது; நீங்க கோகோ போட்டு சாக்லேட் செய்தாலும், கோழி அடித்துக் குழம்பு வைத்தாலும் ரெண்டு சிட்டிகை போட்டுக்கங்களேன்’ என இதன் வணிகம் விளம்பரம் செய்கிறது. 'எஃப்.டி.ஏ அனுமதி வேற இருக்கு’ என அட்டையில் குறிப்பிடுகிறார்கள். ஆனால், கொஞ்சம் வெளியே விசாரித்தால் கிடைக்கும் செய்திகள் அதிரவைக்கின்றன.

நலம் 360’  - 23

'119 டிகிரி வெப்பத்துக்கு மேல் சுக்ருலோஸ் உடையக்கூடும். டயாக்ஸின் மாதிரியான நச்சை வெளியிடக்கூடும்’ எனச் சில ஆய்வுகள் தொடர்ந்து சொல்கின்றன. நம் மக்களிடையே அதிகமாகப் புழங்கும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரத்தில் கொதிக்க வைக்கும்போது, இந்தச் செயற்கைச் சர்க்கரை, பிளாஸ்டிக்கில் இருந்து பிரியும் டயாக்ஸினைப்போல polychlorinated dibenzo-p-dioxins and dibenzofurans என்ற வேதிப்பொருளை உருவாக்கும் என ஓர் ஆய்வு பலமாக எச்சரிக்கிறது. '200 டிகிரிக்கு மேல்தான் இது வரக்கூடும். இல்லை... இல்லை 350 டிகிரிக்கு மேல் கொதிநிலை உயர வேண்டும்’ என இந்தச் செய்தி பற்றி சர்ச்சை நிலவினாலும், அப்படி உருவாகும் கெமிக்கல், நேரடியான புற்றுநோய்க் காரணி என்பதில் சந்தேகமே இல்லை. 'இந்தச் செயற்கை இனிப்புகள், சோதனை எலிகளில் ரத்தப் புற்றுநோயை உருவாக்குவதாக’ ஓர் இத்தாலிய ஆய்வை மேற்கோள் காட்டி எச்சரிக்கிறது, அமெரிக்கத் தன்னார்வ உணவுப் பொருள் ஆராய்ச்சி நிறுவனம் Center for science in public interest. இப்படி உணவுப்பொருட்கள் பற்றி சந்தேக சர்ச்சை எழுப்பினால் 'ஆய்வாளர்களின் சந்தேகங்களுக்கு ஆதாரம் இல்லை. அது pseud-oscience; வெற்றுக் கற்பனை’ என ஒதுக்குகிறது மேற்கத்திய (வணிக) அறிவியல் உலகம். இப்படித்தான் சூழலியலாளர் ரேச்சல் கார்சன் 'டி.டி.டி’ பற்றி முதலில் பேசியபோதும் அவர்கள் புறக்கணித்தனர். பின்னாளில் விஷயம் புரிந்ததும் 'குய்யோமுய்யோ’ எனக் கதறி 'டி.டி.டி-’யை உலகில் இருந்தே அகற்ற வேண்டும் எனத் தீர்மானம் போட்டார்கள். இதேபோல சர்ச்சைக்கு உள்ளான செயற்கை நிறமிகள் குறித்த விவாதங்கள் முதலில் நிராகரிக்கப்பட்டாலும், பிற்பாடு அபாயம் உணர்ந்து, அந்தப் பொருட்கள் பயன்பாட்டில் இருந்து விலக்கப்பட்டன. 'உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே’ என உணவுக்கான ஊற்றுக்கண்ணைத் தெளிவாகக் காட்டியது நம் சமூகம். அந்த நிலமும் நீரும் அறியாதது, இந்தச் செயற்கை ரசாயனம்!  

 நமது முந்தைய தலைமுறையில் அநேகமாக யாருக்கும் ஓட்ஸ் தெரியாது. சில குதிரை முதலாளிகளைத் தவிர ஒரு நூற்றாண்டுக்கு முன்னர், அமெரிக்காவிலும் ஓட்ஸ் பெருவாரியாகத் தெரியாது. ஆனால், உலக உணவுச் சந்தையில் ஓட்ஸுக்கு இன்று கொஞ்சம் உசத்தியான இடம். காரணம், ஐரோப்பிய உணவு வணிக ஜாம்பவான்கள். எங்கிருந்து வந்தது இந்த ஓட்ஸ்? ரஷியா, கனடா, ஜெர்மனி, பின்லாந்து, ஆஸ்திரேலியா முதலான நாடுகளில் குளிரைத் தாங்கி நின்று வளரும் பயிர்தான் ஓட்ஸ். இங்கே  தொடர் விளம்பரங்கள் காரணமாக, நம் வீட்டு மளிகைப்பட்டியலில் ஓட்ஸ் இடம்பிடிக்க, அண்ணாச்சி கடை ரேக்குகளில் அடுக்கிவைத்துவிட்டார்கள். 'டயட்ல நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட். ஷுகர் வரக் கூடாதுனு காலையில் ஓட்ஸ் கஞ்சி, சாயந்திரம் ஓட்ஸ் பிஸ்கட்தான் சாப்பிடுறேன்’ எனச் சொல்வதுதான் இப்போதைய நகர நாகரிகம். குறிப்பாக, குண்டு அம்மணிகள் 'ஓட்ஸினால் ஒல்லி ஆகலாம்’ எனப் பகல்கனவு காண்கிறார்கள். ஓட்ஸில் கூடுதல் புரதமும், பீட்டா டி குளுக்கானும் இருப்பது உண்மைதான். ஆனால், ஓட்ஸ் எனப்படுவது விளைந்து, கதிர் அறுத்து, உமி நீக்கி நேராக நம்மிடம் சேர்ப்பிக்கப்படும் பொருள் அல்ல. கதிர் அறுத்த பின்னர், தோல் நீக்கி, அதிலுள்ள கொழுப்பு அமிலங்களைச் செயல் இழக்க 100 டிகிரி நீராவியில் வேகவைத்து, உலர்த்தி, அசுர வேகத்தில் ஓடும் இயந்திரத்துக்கு இடையே விட்டு நசுக்கி, அவலாக்கி... பிறகு வீடு வந்து சேரும் வரை ஈரம் இழந்து, கெட்டுவிடாமல், கட்டியாகாமல் இருக்க சில ரசாயனங்கள் சேர்க்கப்பட்டே நம் உணவு மேஜைக்கு வருகிறது.

நலம் 360’  - 23

'அட... நாம அரிசியையும் புழுங்கல் அரிசி ஆக்குவதற்கு, அப்படித்தானே செய்றோம்?’ என உங்களுக்கு கேள்வி எழலாம். ஆனால், நாம் நேரடியாக நெல்லை வேகவைப்பதால் அதன் மூலம் உமியின் நற்குணங்களை அரிசிக்குள் கொண்டுவந்துவிடுகிறோம். ஆனால், ஓட்ஸ் தயாரிப்பில் நிலைமை தலைகீழ். உமி நீக்கிய ஓட்ஸ் தானியம்தான் (OATS GROATS) நேரடியாக வேகவைக்கப்படுகிறது. ஆனால், அந்தத் தொழில்நுட்பத்தில் கொடுக்கப்படும் வெப்ப அழுத்தத்தால் ஓட்ஸின் கூடுதல் புரதமும், கூடவே ஒட்டியிருக்கும் பீட்டா டி குளுக்கானும் அப்படியே இருக்குமா... சிதையுமா என்பது யாருக்கும் தெரியாது. தெரிந்தாலும் பெரிதாகப் பேச மாட்டார்கள். ஏனென்றால், ஓட்ஸின் இன்றைய இந்திய வணிகம் 5 மில்லியன் டாலருக்கும் அதிகம்!

இத்தனை செய்முறை சோதனைகளைத் தாண்டி  நம் தட்டில் பரிமாறப்படும் ஓட்ஸ் மூலம், 'ஒரு வேளைக்கு 1.4 கிராம் அளவு பீட்டா டி குளுக்கான் கிடைக்கும்’ என இந்தியாவில் மிகப்பெரிய அளவில் வணிகம் செய்யும் நிறுவனம் கணக்கிட்டுள்ளது. அந்த 1.4 கிராம் அளவு பீட்டா டி குளுக்கானுக்கு இணையான பீட்டா மானானை ஒரு ஸ்பூன் வெந்தயம் மூலம் பெற முடியும். கூடுதலாக, இந்த பீட்டா மானானால், சர்க்கரைக்கு, ரத்தக்கொதிப்புக்கு, பெண்களின் மாதவிடாய்ப் பிரச்னைக்கு நிவாரணம் அளிக்கும் பக்கபலனும் உண்டு. பால் கொடுக்கும் தாய்க்குப் பாதுகாப்பும் அளிக்கும். அயல்நாட்டில் இருந்து குளிரில் விளைவித்து, அடித்து, வேகவைத்து, துவைத்து, தட்டையாக்கி, பலதும் தெளித்து வந்துசேரும் ஓட்ஸ் அவ்வளவு உசத்தி கிடையாது. இன்னுமொரு முக்கியமான விஷயம்,  ஓட்ஸை ஒருபோதும் தாமிரபரணி நதிக் கரையிலோ, காவிரி நதிக் கரையிலோ வளர்க்க முடியாது. பூட்டான் எல்லையோர இமாலயப் பகுதியில் மட்டும் கொஞ்சம் விளைவதாகச் சொல்கிறார்கள். அதனால் இப்போதைக்கு 6,000 டன் ஓட்ஸை ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்கிறோம். நம்மிடையே இதைவிட மேலான சத்துக்கள் பொதிந்த பல சிறு தானியங்கள் இருக்க அதைவிடுத்து, இந்த வெளிநாட்டுத் தானியம் அவசியமா?

நலம் 360’  - 23

சர்க்கரை வியாதிக்காரரையும், அது எப்போது வருமோ எனப் பய வியாதியில் உள்ளவரையும் சுண்டி இழுக்கும் இன்னொரு விஷயம் உடற்பயிற்சி உபகரணங்கள். அந்த அயல்தேசத்தவர்கள் மகாபலிபுர சுற்றுலாவுக்கு வந்தவர்களா அல்லது அர்னால்டுடன் சண்டை போட்ட கும்பல் நடிகர்களா எனத் தெரியவில்லை. ஆனால், கொஞ்சம் கட்டுமஸ்தான அந்த ஆண்களும் பெண்களும் எந்த நேரமும் கயிறு, கம்பி, சைக்கிள், ஸ்கூட்டர், தட்டுமுட்டு சாமான்களோடு தொலைக்காட்சியில் கூவிக்கூவி உடற்பயிற்சி உபகரணங்களை விற்கிறார்கள். நாமும் அப்படி சிக்ஸ்பேக் எடுத்து ஷுகர் வராத இறுகிய உடம்பைப் பெறலாம் என அந்தப் பொருட்களை வாங்கினால், பர்ஸின் எடையைத்தான் கணிசமாக இழப்போம். உணர்ச்சிவசப்பட்டு அந்த உடற்பயிற்சி சாதனங்களை வாங்கி வீட்டில் ஈரத்துண்டு காயப்போடத்தான் பலரும் பயன்படுத்துகிறோம். சரியான பயிற்சியாளர் துணை இல்லாமல் அவற்றைப் பயன்படுத்துவதே முதல் ஆபத்து. தவறான இயக்கங்கள் சுளுக்கு முதல் முதுகுத்தண்டு தட்டு விலகல் வரை சிக்கல் உண்டாக்கலாம்!  

அதேபோல் யோகா! மூச்சுப் பயிற்சியின் முழுமையோ, தத்துவப் புரிதலோ எதுவும் இல்லாமல், பளிச் குர்தா, பழைய தாடி வைத்துக்கொண்டு உடலை மட்டும் வளைத்து, 'இம்யூனிட்டி 10-வது கிளாஸில் வரும்; 20-ம் கிளாஸில் ஷுகர் குறையும். ஞானம் கடைசி கிளாஸில் கண்டிப்பாக வந்துடும்’ என நடத்தப்படும் யோகா வகுப்புகளுக்குச் சென்று கூடுதலாக டென்ஷனை ஏற்றிக்கொள்கிறது ஒரு கூட்டம். நடைப் பயிற்சி, சரியான புரிதலுடன்கூடிய யோகாசன மூச்சுப் பயிற்சி இரண்டும்தான் சர்க்கரை நோயைத் தடுக்கும் அல்லது தாமதிக்கவைக்கும் என்பது ஆராய்ச்சி மற்றும் அனுபவம் கற்றுத்தந்த பாடம்!

சர்க்கரை நோய் உருவாக்கியுள்ள பயத்தில் சந்தையில் குபுகுபுவென ஏக விஷயங்கள் குவிந்துகொண்டிருக்கின்றன. சர்க்கரை வியாதிக்கு என சிறப்புச் சாப்பாடு, சிறப்புக் குளிர்பானம், செருப்பு, பனியன், சட்டை என ஆரம்பித்து, ஷுகர் மருத்துவமனை, ஷுகர் இன்ஷூரன்ஸ், ஷுகர் மளிகைக் கடை, ஷுகர் துணிக் கடை, ஷுகர் சாமியார் வரை பல வியாபாரங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. இவை ஒவ்வொன்றையும் வாங்கிக் குவிப்பதால், பணம் குறையும்; ஷுகர் குறையாது. சர்க்கரை நோய் வராமல் இருக்க, வந்த சர்க்கரை எப்போதும் கட்டுப்பாட்டிலேயே இருக்கத் தேவை, நோயைப் பற்றிய தெளிவும் தொடர்ச்சியான, முழுமையான, சந்தோஷமான மெனக்கெடல்களும் மட்டுமே!

- நலம் பரவும்...

சர்க்கரை நோய் வராமல் தடுக்கும் உணவு முறைகள்!

* குழந்தைப் பருவத்திலேயே வெள்ளைச் சர்க்கரை, வெள்ளை மைதாவில் செய்த பரோட்டா, நூடுல்ஸ் போன்றவை தவிர்க்கப்பட வேண்டும்.

* கருப்பட்டி காபி, தேன் கலந்த தேநீர் பருகலாம். பழச்சாறுகளில் சர்க்கரை, பழ சாலட்களில் கூடுதல் இனிப்பு சேர்ப்பது கூடாது.

* கோவைக்காய், பாகற்காய், வெந்தயம், வெங்காயம், முருங்கைக் கீரை, அகத்திக் கீரை ஆகியவை உணவுகளில் சிறுவயது முதலே அடிக்கடி சேர்க்கப்பட வேண்டும்.

* கட்டித் தயிர் சாதம், உருளைக்கிழங்குப் பொரியல், பால்பொருட்கள் கலந்த ஐஸ்க்ரீம், மில்க் ஷேக், மில்க் சாக்லேட்... இவற்றை குழந்தைப் பருவத்தில் அடிக்கடி கொடுப்பது எதிர்காலத்தில் சர்க்கரை நோயை வரவழைக்கும்.

* பழங்களில் மாம்பழம், சப்போட்டா, பலா, சீத்தா, காவன்டிஸ் வாழை இவற்றை சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையில் உள்ளவர்கள் (impaired glucose tolerance level) தவிர்ப்பது நலம்.

அடிப்படை உடற்பயிற்சிகள்!

நலம் 360’  - 23

* தினசரி 45 நிமிடங்களுக்கு வேகநடை, தொடர்ந்து 15 நிமிடங்களுக்கு பிராணாயாமப் பயிற்சி, அதன் பின் 20 நிமிடங்களுக்கு ஆசனங்கள், 15 நிமிடங்களுக்கு மனப் பரபரப்பை நீக்கும் தியானப் பயிற்சி ஆகியவை மிக அவசியம்.

* நீச்சல் பயிற்சி, உடற்பயிற்சி மையங்களில் பயிற்சியாளர் கற்றுக்கொடுக்கும் உபகரணப் பயிற்சிகள், களரிப் பயிற்சி, சீனத்தின் டாய்ச்சி நடனம்... இவை சர்க்கரை நோயைத் தள்ளிப்போடும்.