Published:Updated:

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 23

பாரதி தம்பி, படம்: தி.விஜய்

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 23

பாரதி தம்பி, படம்: தி.விஜய்

Published:Updated:

பிள்ளையை பள்ளியில் சேர்ப்பதுடன் பெற்றோரின் கடமை முடிந்துவிடுவதும் இல்லை; பணி நியமன ஆணை வாங்கியதும் ஆசிரியரின் கடமை முடிந்துவிடுவதும் இல்லை. இரு தரப்பினருமே தங்களை நவீன கால அறிவுடன் புதுப்பித்துக்கொண்டு, உயிர்த் துடிப்புடன் இயங்க வேண்டும். அப்போதுதான் அடுத்த தலைமுறையை மனிதநேயர்களாக, மகத்தான மனிதர்களாக, அறிவாளிகளாக, சமூக அக்கறை உடையவர்களாக உருவாக்க முடியும். அதற்கு பாடப் புத்தகத்தைத் தாண்டிய கல்வியை, மாணவர்கள் மட்டும் அல்ல... பெற்றோர்களும் ஆசிரியர்களும் நிச்சயம் பெற வேண்டும்.

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 23

ச.மாடசாமி, ஓய்வுபெற்ற பேராசிரியர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வகுப்பறையில் ஆசிரியர்களின் அதிகாரம் மறைந்து, மாணவர்களை மையப்படுத்தும் வகுப்பறை வேண்டும் எனத் தொடர்ந்து எழுதியும் இயங்கியும் வருபவர்.

''எனது இப்போதைய கவலை எல்லாம், நம் வகுப்பறைகளில் பல வகையான பேதங்கள் அதிகரித்துள்ளதைப் பற்றிதான். பார்ப்பதற்கு ஒரே வகுப்பறைபோல தோன்றினாலும், ஒவ்வொரு வகுப்பறைக்குள்ளும் மற்றோர் உள் வகுப்பறை இருக்கிறது. சாதி, மதம், பால், நிறம், தோற்றம், வசதி, பிரதேசம்... எனப் பல அம்சங்கள் அதில் மறைந்துள்ளன. கறுப்பு நிறம் காரணமாக பள்ளிகளில் நடந்த புறக்கணிப்பைச் சொல்லி அழுத ஆசிரியைகளையும் மாணவிகளையும் பல கூட்டங்களில் சந்தித்திருக்கிறேன். கிராமத்துத் தோற்றத்தைப் பார்த்ததுமே 'இவன்லாம் என்னத்த கெமிஸ்ட்ரி படிக்கப் போறான்’ என முடிவுகட்டும் மேதாவிகளையும் கல்லூரிகளில் பார்த்திருக்கிறேன்.

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 23

சமச்சீர்க் கல்வி தொடங்கப்பட்ட நேரத்தில், ஆறாம் வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில், குறிப்பிட்ட ஒரு சாதியினர் கொண்டாடும் தமிழ்நாட்டுத் தலைவர் வரலாறு ஒன்று சேர்க்கப்பட்டிருந்தது. பாடப் புத்தகங்களுக்கான வரவேற்பு குறித்து மதிப்பிட சில பள்ளிகளுக்குச் சென்றபோது, அதிர்ச்சி காத்திருந்தது. ஓர் அரசுப் பள்ளியின் வகுப்பறையில் எந்த மாணவரின் புத்தகத்திலும் அந்தப் பாடம் இல்லை. புத்தகம் வாங்கிய அன்றே அந்தப் பாடத்தைக் கிழித்துவிட்டார்கள். இந்தக் கோபம் குறித்து, பாடத்திட்டக் குழுவுக்கு எதுவும் தெரியுமா? 10 வயதுக்குப் பிறகு, பிள்ளைகள் உள் வகுப்பறைகளை உருவாக்கிக் கொள்கிறார்கள் என உளவியலாளர்கள் கருதுகின்றனர். 'நாங்கள் கிளாஸ்ல ஆம்பளப் பசங்களோட பேச மாட்டோம்’ என எட்டு வயதுச் சிறுமி பேசுவதை சமீபத்தில் கேட்டேன். வகுப்பறைகளின் இத்தகைய ஆபத்தான பிளவுகளை பொதுவாக ஆசிரியர்கள் கவனிப்பதும் இல்லை; அதைச் சமப்படுத்த முயல்வதும் இல்லை. ஆபத்து இல்லாத சிறு குறும்புகளைக் கவனித்து, கொதித்துப் போகிறார்கள்!''

இரா.நடராசன்,தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்.

குழந்தைகளின் கல்வி உரிமை குறித்தும், பாடத்திட்டம் குறித்தும் பரந்த தளத்தில் இயங்கிவருபவர்.

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 23

''குழந்தைகள் எல்லா காலத்திலும் பாடப் புத்தகங்களை வெறுப்பது ஏன்? நமது கல்விச் சூழலில் குழந்தையைவிடப் பாடப் புத்தகங்களே முக்கியம் என்ற நிலை இருக்கிறது. கற்றல் சூழலில் கற்பவர்தான் முதன்மையானவர் என்பதை நாம் புரிந்துகொள்ளவே இல்லை. ஒரு குழந்தை, புத்தகங்களை எடுக்காமல் பள்ளிக்குச் சென்றால், கிடைக்கும் தண்டனையும் அவமானமும் மிக அதிகம். இதனால் குழந்தைக்கு தன்னையும் அறியாமல் புத்தகங்கள் மீது வெறுப்பு வருகிறது. இன்னொன்று, நமது பாடப் புத்தகங்களின் அதிகார மொழி, குழந்தைகளை அச்சுறுத்துகிறது. 'எனக்கு எல்லாம் தெரியும். நான் சொல்வதை நீ கேள்’ என்ற தோரணையில், குழந்தைகளின் மண்டையைத் திறந்து உள்ளே பாடங்களைத் திணிக்க முற்படுகிறோம். அங்கு கேள்விக்கே இடம் இல்லை. குழந்தைப் பருவத்தில் எண்ணற்ற கேள்விகள் பிறக்கும். நமது பள்ளிகளோ, கேள்வி கேட்கும் மாணவர்களைக் கைகட்டி, வாய் பொத்தி உட்காரவைக்கின்றன. அதேபோல வகுப்பில் ஆசிரியர் எப்படி எந்த நேரமும் பேசிக்கொண்டே இருக்கிறாரோ, அதுபோல பாடப் புத்தகங்களில் பக்கம் பக்கமாக எழுதித் தள்ளுகின்றனர். எதை எடுத்தாலும் மூன்று பக்கம், நான்கு பக்கம் எழுதினால், அதை குழந்தைகள் எப்படிப் படிக்கும்? தற்போது விதவிதமான கற்றல் முறைகள் வந்துவிட்டன. தொலைக்காட்சி, இணையம், செல்போன்... என குழந்தையின் பார்வைபடும் இடங்களில் எல்லாம் நவீனக் கருவிகள் ஆக்கிரமித்து உள்ளன. இவற்றைப் புறக்கணித்துவிட்டு, வழக்கம்போல பக்கம் பக்கமாக ஒப்பிக்கச் சொன்னால், அது காலத்தால் பின்நோக்கி நகர்த்தும் செயல். குழந்தைகள் மகிழ்ச்சியுடன் மனம் விரும்பி எதைச் செய்கிறார்களோ, அதன் வழியே கற்பித்தலை நிகழ்த்த வேண்டும். குழந்தையின் கையில் செல்போனைக் கொடுங்கள். எவ்வளவு ஆர்வத்துடனும் வேகத்துடனும் அதை ஆராய்ந்து கற்றுக்கொள்கிறது என்பதைப் பாருங்கள். தொலைக்காட்சியில் கார்ட்டூன் சேனல்களைப் போட்டுக்காட்டுங்கள்; வடிவேலு காமெடி சீன்களைக் காட்டுங்கள். முழு ஈடுபாட்டுடன் ரசித்துப் பார்ப்பார்கள். இப்படி அவர்களின் ஆர்வம் எங்கு குவிகிறதோ, அதன் வழியே கற்றுத்தர வேண்டும். ஆனால், இத்தகைய நவீன வடிவங்கள் எதையும் நமது வகுப்பறையின் உள்ளே அனுமதிப்பதுகூட இல்லை!''

பிரின்ஸ் கஜேந்திரபாபு, தனியார் பள்ளி தாளாளர்.

சமச்சீர்க் கல்வியின் அமலாக்கத்தில் உழைத்தவர். கல்வி சார்ந்த பிரச்னைகளில் அர்ப்பணிப்புடன் செயல்படுபவர்.

''ஒரு சமூகத்தில் பலவகையான கல்விமுறைகள் இருக்கும்போது, அது சமூக ஏற்றத்தாழ்வுகளை அதிகப்படுத்தி, நிரந்தரப்படுத்துகிறது. இதனால்தான் நாங்கள் 'எல்லோருக்கும் பொதுவான, சமத்துவமான கல்வி வேண்டும். அது தாய்மொழி வழியில் வேண்டும்’ எனக் கேட்டோம். அதுதான் சமச்சீர்க் கல்வி. தாய்மொழி வழிக் கல்வி எனக் கேட்கக் காரணம், தாய்மொழியில் படித்தவர்களால்தான் அறிவார்ந்த அறிஞர்களாக வர முடியும். சர் சி.வி.ராமனும், ராமானுஜனும் தாய்மொழி வழியில் கற்றவர்கள்தான். ஆனால், நம் நாட்டில் 30 ஆண்டு காலமாக அமலில் இருக்கும் ஆங்கில வழிக் கல்வியால் அப்படி ஒரு விஞ்ஞானியைக்கூட உருவாக்க முடியவில்லை. உருவானவர்கள் பலரும் சுயவளர்ச்சியை மட்டுமே இலக்காகக்கொண்டவர்கள்.

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 23

ஒரு சமூகத்தின் அறிவு வளர்ச்சிக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் தாய்மொழி வழிக் கல்விதான் உதவும். ஆங்கில வழிக் கல்வி என்பது வெறுமனே பொருளீட்டும் சந்தையில் உங்களை விற்றுக்கொள்வதற்கான ஏற்பாடு. ஆங்கில வழியில் மாணவர்கள் மனப்பாடம் செய்கிறார்கள். இதனால் மன அழுத்தத்துக்கு ஆட்படுகிறார்கள். கட்டணம் கட்டிப் படிக்கிறார்கள். புரியவில்லை என்பதால், பணம் கட்டி டியூஷன் செல்லவேண்டி இருக்கிறது; எரிச்சல் வருகிறது. 'நான் கஷ்டப்பட்டுப் படிச்சேன். இதன் பலன் எனக்குத்தான்’ என எண்ணுகின்றனர். இப்படி சுயநலனை ஒரு குணமாக மாற்றுகிறது ஆங்கில வழிக் கல்வி. இது மாறவேண்டும் என்றால், தாய்மொழி வழியில் கல்வித் தரப்பட வேண்டும். அத்தகைய உயரிய பொதுப் பள்ளிகள்தான் சமச்சீர்க் கல்விப் போராட்டங்களின் நோக்கம். ஆனால், நாம் நினைத்தது நடக்கவில்லை.

'சமச்சீர்க் கல்வி’ என்ற அழகான சொல்லாடலைப் பயன்படுத்தியவர்கள், வெறுமனே பொதுப் பாடத்திட்டத்தையும் பொதுத் தேர்வையும் மட்டும்தான் கொடுத்தார்கள். இது இரண்டையும் பொதுப் பள்ளி முறைமைக்கான முதல் படியாகக் கருதி நாம் அதை வரவேற்றோம். ஆனால், அத்துடன் அது தேங்கி நிற்கிறது. இப்போது நாம் எதிர்பார்ப்பது கட்டணம் இல்லா கட்டாயக் கல்வியை அனைவருக்கும் வழங்க வேண்டும் என்பதே. ஏனெனில், 2005-ம் ஆண்டில் இருந்து ஆண்டு ஒன்றுக்கு சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் கல்வி வரி கட்டிவருகிறோம். கல்விக்கு என வரி வசூல்செய்யும் ஏற்பாடு, முதலாளித்துவ நாடுகளில்கூட கிடையாது. அப்படி வரியும் கட்டிவிட்டு, குழந்தையின் கல்விக்கு எனத் தனிக் கட்டணம் ஒன்று நான் ஏன் செலுத்த வேண்டும்? ஆகவே, கட்டணம் இல்லாத கட்டாயக் கல்வியை தாய்மொழி வழியில் பொதுப் பள்ளிகள் மூலமாக அனைவருக்கும் வழங்க வேண்டும்!''

பிரபா கல்விமணி,ஓய்வுபெற்ற பேராசிரியர்.

கல்வி சார்ந்த தளங்களில் பல ஆண்டுகளாக இயங்கிவருபவர்.

''கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தமிழ்நாட்டுப் பள்ளிகளில் பணிபுரிய ஆசிரியர்கள் தகுதித் தேர்வு எழுத வேண்டும். இதேபோல கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா போன்ற மத்திய கல்வி வாரியப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு ஒன்று நடத்தப்பட்டது. இந்தத் தேர்வில் கலந்துகொண்டு எழுதுவதற்காக பல இடங்களில் பயிற்சி நிலையங்கள் செயல்பட்டன. அரசும் பயிற்சி கொடுத்தது. சமீபத்தில் இந்தத் தகுதித் தேர்வின் முடிவுகள் வெளிவந்துள்ளன. 70 சதவிகித கோச்சிங் சென்டர்களில் இருந்து ஒரு சென்டருக்கு ஒருவர்கூட தேர்ச்சி பெறவில்லை. நமது கல்வியின் தரம் எந்த அளவுக்கு உள்ளது என்பதற்கு இது சமீபத்திய ஆதாரம். தமிழ் வழிப் பள்ளிகளைத் தாழ்வாக மதித்து, மத்திய கல்வி வாரியப் பள்ளிகளைக் கொண்டாடுவோர், இந்தச் செய்தியைக் கவனத்தில்கொள்ள வேண்டும். அதே நேரம் ஆசிரியர்கள் ஏன் இப்படித் தேர்வுகளில் தோல்வியடைகிறார்கள் என்பதையும் ஆராய வேண்டும்.

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 23

2008-ம் ஆண்டு நடந்த ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வில் தமிழ்நாட்டில் இருந்து 202 பேர் தேர்வுசெய்யப்பட்டனர். ஆனால், ஆந்திராவில் இருந்து 1,697 பேர் தேர்வு ஆனார்கள்.  2013-14ம் ஆண்டில் இதே ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வில் ஆந்திராவில் இருந்து 3,600-க்கும் மேற்பட்டவர்கள் தேர்வாகி உள்ள நிலையில், தமிழ்நாட்டில் இருந்து தேர்வு ஆனவர்கள் வெறும் 450 பேர் மட்டுமே. ஐ.ஐ.டி மட்டும் அல்ல, அகில இந்திய நுழைவுத் தேர்வுகள் அனைத்திலும் தமிழ்நாட்டு மாணவர்களால் பெரிய அளவில் வெற்றிபெற முடியவில்லை. இந்த நிலை ஏன்? இதுபோன்ற அகில இந்திய நுழைவுத் தேர்வுகளில் ப்ளஸ் ஒன்-னில் இருந்து பாதிக் கேள்விகளும், ப்ளஸ் டூ-வில் இருந்து பாதிக் கேள்விகளும் கேட்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் பெரும்பாலான பள்ளிகளில் ப்ளஸ் ஒன் பாடமே நடத்தப்படுவது இல்லை. இதனால்தான் இந்த நிலை. அரசு, முதலில் ஒவ்வொரு பள்ளியிலும் ப்ளஸ் ஒன் பாடம் நடத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.

ஆசிரியர்களுக்குத் தகுதித் தேர்வு முறை கொண்டுவந்த பிறகு, மாநிலம் முழுவதும் பல இடங்களில் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. அதைப்போல தற்போது 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலும் நடைமுறையில் உள்ள சி.சி.இ முறையை 10-ம் வகுப்புக்கும் நீட்டித்து, ப்ளஸ் ஒன் மற்றும் ப்ளஸ் டூ வகுப்புகளுக்கு செமஸ்டர் முறையைக் கொண்டுவந்தால், நாமக்கல் கோழிப்பண்ணைப் பள்ளிகளை அடுத்த ஆண்டே இழுத்து மூடிவிடலாம்!''

ச.சீ.இராஜகோபாலன்,ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்.

தமிழகப் பள்ளிக் கல்வியின் உள்ளடக்கம் குறித்தும் கல்வி தனியார்மயம் குறித்தும் நீண்ட காலமாக எழுதி வருபவர்.

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 23

''ஒரு திட்டத்தின் நோக்கம் நிறைவேற்றப்பட்டதா என்பதை உறுதிசெய்ய, தொடர் மதிப்பீடு தேவை. அந்த வகையில் 'கல்வி’ என்ற திட்டத்தின் நோக்கத்தை உறுதிசெய்ய தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதை எழுதுபவர்கள் மாணவர்கள் என்றாலும் ஆசிரியர், மாணவர், கல்வி அலுவலர், அரசு ஆகிய அனைவருமே இதன் பங்கேற்பாளர்கள்தான். தேர்வின் முடிவுகளுக்கு அனைவருமே பொறுப்பேற்க வேண்டும். மாணவர்களை மட்டும் பொறுப்பாளி ஆக்க முடியாது. தேர்வு என்பது, மாணவனின் கற்கும் திறனை மட்டும் சோதிக்கவில்லை; ஆசிரியரின் கற்பிக்கும் திறனையும் சோதிக்கிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பு, கடலூருக்கு அருகில் உள்ள ஒரு பள்ளி மாணவர்கள், மேல்நிலைப் பொதுத் தேர்வை எழுதினார்கள். கணிதத் தேர்வில் அனைத்து மாணவர்களும், 'பிப்ரவரி மாதம்தான் எங்களுக்குக் கணக்கு ஆசிரியர் நியமிக்கப்பட்டார். அவர் அணிகள், அணிக்கோவைகள் பாடம் மட்டும்தான் நடத்தினார். அதில் நான் பெறும் மதிப்பெண்படி மொத்த விடைத்தாளுக்கும் மதிப்பெண் வழங்க வேண்டுகிறோம்’ என எழுதியிருந்தனர். அணிகள், அணிக்கோவைகள் பகுதியில் இருந்து கேட்ட கேள்விகளுக்குக் கிட்டத்தட்ட எல்லா மாணவர்களுமே சரியான விடை எழுதியிருந்தனர். ஆக, மாணவர்களின் கற்றலில் குறைபாடு இல்லை. ஆசிரியரின் கற்பித்தலும் சிறப்பாகவே இருந்துள்ளது. ஆசிரியரை நியமிக்காத கல்வி அலுவலரும் அரசும்தான் இதன் பொறுப்பாளிகள். அவர்கள்தான் தண்டிக்கப்பட வேண்டும். மாறாக, தண்டிக்கப்பட்டதோ மாணவர்கள். இது என்ன நியாயம்?''

- பாடம் படிப்போம்