Published:Updated:

வெள்ளைக்கார வித்தைக்காரன்!

KAVIYARASAN S

நிக் வேலண்டா... உயிரைப் பணயம் வைத்து செய்யும் 'டேர் டெவில், ஹை வயர்’ ஆர்ட்டிஸ்ட். கீழே  பாதுகாப்பு வலைகள் எதுவும் விரிக்கப்படாமல் உலகின் படாபடா உயர கட்டடங்களை இணைக்கும் கம்பியில் அனாயசமாக எந்தப் பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் நடக்கிறார் நிக். 35 வயதான நிக் வேலண்டாவை 'கிங் ஆஃப் வயர்’ என்று செல்லமாக அழைக்கிறார்கள் அமெரிக்கர்கள்.

வெள்ளைக்கார வித்தைக்காரன்!

அவர் குடும்பத்தின் பிரதான தொழிலே மரண விளையாட்டுதான். சர்க்கஸ் கலையைக் குலத்தொழிலாகக்கொண்ட இந்தக் குடும்பத்தின் ஏழாவது தலைமுறையைச் சேர்ந்தவர்தான் நிக்.

''என் இரண்டாவது வயதில் என் தாயார் டெலிலா வேலண்டா யாருக்கும் தெரியாமல் மொட்டைமாடியில் நடக்கப் பழக்கப்படுத்தினார். அதன்பிறகு இந்த சாகசத்தில் ஈடுபட்டு குடும்பத்தில் சிலர் இறந்து போனதால் படிப்பில் கவனம் செலுத்தினேன். ஆனாலும் என் படிப்புக் கனவைத் தகர்த்து எனக்குள் கிளைவிட ஆரம்பித்தது 'வேலண்டா’ குடும்பத்தின் சாகச ஜீன். 1998லிருந்து இன்றுவரை 9 முறை யாராலும் முறியடிக்கப்படாத உலக சாதனைகளைப் படைத்து இருக்கிறேன்'' என்கிறார். அதில் மிக முக்கியமானது நயாகரா நீர் வீழ்ச்சிக்கு குறுக்காகக் கயிற்றில் நடந்தது.

வெள்ளைக்கார வித்தைக்காரன்!

உலகின் ஆழமான மரணப் பள்ளத்தாக்காக வர்ணிக்கப்படும் அமெரிக்காவின் 'கேன்யன்’ பள்ளத்தாக்கை கம்பியில் கடந்து போனவருடம் சாதனை நிகழ்த்தி எல்லோரையும் திக்குமுக்காட வைத்தார் நிக்.  டிஸ்கவரி சேனல் சென்ற ஆண்டு ஜூன் 23ம் தேதி இதை நேரடி ஒளிபரப்பு செய்தது. 1,400 அடி தூரத்தை 22 நிமிடங்கள் 54 நொடிகளில் அந்த 5.1 செ.மீ பருமனுள்ள கம்பியில் கையில் 9 மீட்டர் நீளமுள்ள கம்பு ஒன்றால் பேலன்ஸ் செய்து நடந்து கடந்து சாதித்தார்.

வெள்ளைக்கார வித்தைக்காரன்!

அந்தச் சாதனையை நிறைவேற்றிய பிறகு இன்னொரு சாதனைக்கு தேதி குறித்தார். 'ஸ்கை ஸ்க்ரேபர் லைவ்’. நியூயார்க் நகரில் இருக்கும் கிறிஸ்லர் பில்டிங்குக்கும் எம்பையர் ஸ்டேட்ஸ் பில்டிங்குக்கும் நடுவே கயிறு கட்டி நடந்து காட்டுவதுதான் அது. ஏப்ரலில் தேதி குறிக்கப்பட்ட அந்த நிகழ்வுக்கு நியூயார்க் நகர போலீஸ் கமிஷனர் ரே கெல்லி அனுமதி அளிக்காததால், திட்டத்தை மாற்ற வேண்டிய சூழல் உருவானது. கடந்த நவம்பர் 2 அன்று டிஸ்கவரி சேனலின் ஸ்பான்ஸர்ஷிப்போடு சிகாகோ நகரில் இருக்கும் வில்லிஸ் டவர் என்ற கட்டடத்துக்கும் அருகில் உள்ள உயரமான கட்டடத்துக்கும் இடையே உள்ள தூரத்தைக் கடந்து சாதித்தார், இந்த முறை கண்களைக் கட்டிக்கொண்டு. இந்த 'கண்கட்டி வித்தை’யை உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 220 நாடுகளில் இருக்கும் டிஸ்கவரி சேனல் ரசிகர்கள் நேரடி ஒளிபரப்பில் கண்டுகளித்தார்கள்.

ஆத்தி!

ஆர்.சரண்