'எனக்கு மட்டும் கோபம் வந்தா அவ்ளோதான்’, 'முணுக் குனா கோபம்’, 'கோபத்துல இருக்கும்போது அவ எதிர்ல யார் இருக்கானு கூட பார்க்க மாட்டா’  இப்படி கோபங்களில் பல வகை. கோபம் தவிர்த்து வாழ்வது இங்கு யாருக்கும் சாத்தியம் இல்லை. மனிதனாகப் பிறந்த எல்லோருக்கும் கோபம் வரும், வந்தே ஆக வேண்டும், அது இயல்பானதே!

கோபத்தில் இரு வகை உண்டு. 'கன்ஸ்ட்ரக்டிவ் ஆங்கர்' (constructive anger) எனப்படும் உருவாக்குதல் வகைக் கோபம். 'டிஸ்ட்ரக்டிவ் ஆங்கர்' (Destructive anger) எனப்படும் அழித்தல் வகைக் கோபம். இதில் முதலாவது, கட்டாயம் ஒவ்வொரு வருக்கும் இருக்க வேண்டிய கோபம். இரண்டாவது... கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டிய கோபம்.

தினமும் ஆங்காங்கே ஏதேனும் போராட்டம் நடப்பதைப் பார்த்திருப்போம். அதில் சில போராட்டங்கள் அமைதி யான முறையில் யாருக்கும் எந்தவித இடையூறும் இல்லாமல் நடைபெறும். இது, 'கன்ஸ்ட்ரக்டிவ் ஆங்கர்' வகை கோபத்தின் வெளிப்பாடு. அதுவே கணவன், மனைவி இடையே ஏற் படும் சின்ன சண்டைக்காக கோபத்தில் மொபைல்கள் உடைக்கப்படுவது, 'டிஸ்ட்ரக்டிவ் ஆங்கர்'   வகை கோபத்தின் வெளிப்பாடு. இப்போது இரண்டு வகை கோபத்்துக்கும் இடையேயான வித்தியாசத்தை உணருங்கள். முதல் வகை கோபத்தால் நியாயம் கிடைக்க வாய்ப்பு உண்டாகிறது. இரண்டாவது வகை கோபத்தால் தேவையற்ற பிரச்னைதான்  உருவாகிறது. அதனால்தான், இதை ஆங்கிலத்தில் 'danger' என்கிறோம். destructive - anger இந்த இரண்டு வார்த்தைகளில் முதல் வார்த்தையின் முதல் எழுத்தையும், இரண்டாவது வார்த்தையையும் இணைத்தால் danger' என்று வருவதை மனதில் ஏற்றிக்கொள்ளுங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆல் இஸ் வெல்! - 5

கோபத்தில் மூன்றாவதாக ஒரு வகை உண்டு. 'தன் உரிமை நிலைநாட்டல்' (Self assertion). உதாரணமாக, ஒரு ஹோட்டலுக்குச் சென்று  சாப்பிடுகிறோம். சட்னி கெட்டுப்போயிருக்கிறது. உடனே கோபம் கொண்டு ஹோட்டல் உரிமையாளரிடம் கேட்டுவிடுகிறோம். அதேபோல், திரையரங்கில்   டிக்கட்   வாங்க வரிசையில் நின்று  கொண்டிருக்கிறோம். ஒருவர் நடுவில் நுழைகிறார். உடனே கோபப்பட்டு அவரைத் தடுக்கிறோம். பின் அவர் வரிசையின் கடைசியில் போய் நிற்கிறார். இதுபோன்ற கோபங்கள் ஒருவரது உரிமை. இது அவசியமானதே.

'எனக்கு  'டிஸ்ட்ரக்டிவ் ஆங்கர்'தான் வருகிறது. கோபம் வந்தால் புத்தகங்களைக் கிழிக்கிறேன், பொருட்களை உடைக்கிறேன், யோசிக்காமல் யாரையும் பேசிவிடுகிறேன், கோபக்காரி என்று அனைவரிடமும் பெயர் வாங்குறேன். என்ன செய்வது?’ என்று கேட்கிறீர்களா? உங்கள் கோபம் தவறு என்று உணர்ந்துவிட்டாலே, அதை வென்றுவிடலாம். பசி எப்படி இயற்கையான, இயல்பான உணர்வோ... அது போலத்தான் கோபமும். அந்தக் கோபத்தை எப்படி திசை திருப்புகிறோம் என்பதில்தான் இருக்கிறது ஒருவரின் குணம்.

'கோபம் இயற்கையான விஷயம். இதை ஏன் கட்டுப்படுத்த வேண்டும்?' என்று சிலர் கேட்பார்கள். இதுவும்கூட உண்மைதான். இயற்கை என்பதற்காக அப்படியே விட்டால், கோபப்படுபவருக்கும்தான் ஆபத்து. எனவே, கோபத்தை திசை திருப்பினால் போதும். எப்படி?

ஒவ்வொரு முறை கோபம் வரும்போதும் 5 ரூபாய், 10 ரூபாய் என உண்டியலில் போட்டு சேமித்து வையுங்கள். அந்த உண்டியல் நிரம்பியவுடன் அதை எடுத்து செலவு செய்யுங்கள். இதனால் கோபத்தின் திசை மேலதிகப் பிரச்னைகளை நோக்கிச் செல்லாமல், சேமிப்பு என்கிற நல்வழிக்கு மடை மாற்றப்பட்டிருப்பதையும், அந்நேரங்களில் எல்லாம் மனம் அமைதியடைவதையும் உணர்வீர்கள். கோபம் வரும் சமயத்தில் அந்தக் கோபத்துக்கான காரணம், காரணமானவர் குறித்து ஒரு நோட்டில் எழுதலாம். சிறிது நேர அமைதிக்குப் பிறகு, அதை படித்துப் பார்க்கலாம். அந்தக் கோபத்துக்கான காரணம் நியாயமானதாக இருந்தாலும், அந்தக் கோபம் அனர்த்தம் என்பது புரியும்.

ஆல் இஸ் வெல்! - 5

அதேபோல் குழந்தைக்கு கோபம் வரும்போதும், ஏதேனும் எழுத, வரையச் சொல்லுங் கள். அல்லது எதையாவது கையில் கொடுத்து படிக்கச் சொல்லுங்கள் அல்லது விளையாட்டுப் பொருள் கொடுத்து விளையாடச் சொல்லுங்கள். இதனால் அதன் கோபம் மேலும் வளராமல் நல்ல திசையில் பயணப்படும். இன்னும் இசை கேட்பது, பைக் எடுத்துக்கொண்டு ரவுண்ட் செல்வது, காய்கறிகளை நறுக்குவது, கந்தசஷ்டி கவசம் படிப்பது என கோபத்தை திசை திருப்புவதற்கான வழிகளை உங்கள் விருப்பம் போல தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

நம்மில் 100க்கு 95 பேர் தங்களது கோபத்தை சரியான வழியில் திசை திருப்புவது கிடையாது. அதுதான் பலவித பிரச்னைகளுக்கு அடிப்படைக் காரணம்.

மொத்தத்தில், கோபம் இயல்பானதே. ஆனால் அது உருவாக்குதல் வகைக் கோபமாக இல்லாமல், அழித்தல் வகைக் கோபமாக இருந்தால், அதை திசை திருப்பும் வழி அறிவது அவசியம்.

அடுத்த முறை கோபம் வரும்போது என்ன செய்யப் போகிறீர்கள்... இசையா, சமையலா, வாசிப்பா, எழுத்தா?!

- ரிலாக்ஸ்...

தொகுப்பு: சா.வடிவரசு

கோபம்... பாதிப்பு யாருக்கு?!

• ஒருவர் கோபத்தில் இருக்கும்போது, அந்தக் கோபத்துக் காக அவரைத் திட்டுவதோ, தண்டனை கொடுப்பதோ அவரின் கோபத்தை மேலும் தீவிர நிலைக்கு எடுத்துச் செல்லுமே தவிர, சமாதானப்படுத்தாது.

•  கோபம் வந்தால் தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற கூற்று உண்மையானதே. காரணம், தண்ணீர் குடிப்பதால் மூளைக்கு ஆக்ஸிஜன் சென்று, உடனடியாக அமைதி நிலையை உருவாக்கும்.

•  சிறிது நேரம் அமைதியான இடத்தில் அமர்ந்து சிந்தித்துப் பாருங்கள்... ஒருவர் கோபப்படுவதால் அவரும் சரி, அவரைச் சுற்றியுள்ளவர்களும் சரி... ஏதேனும் ஒருவகை யில் பாதிக்கப்படுகிறார்கள் என்பது புரியும்.

•  கோபத்தால் தலைவலி தொடங்கி வயிற்றுவலி, மன அழுத்தம், பதற்றம், வேலையில் கவனமின்மை, மறதி என விளைவுகள் பல!

•  உங்களின் கோபத்தை அனைவரும் தொடர்ந்து ஏற்பார்கள் என்பது கிடையாது. உறவுகளேகூட உங்களின் கட்டுப்படுத்த முடியாத கோபத்தால் உங்களை விட்டு விலகலாம். அலுவலகத்தில் உங்கள் கோப கூச்சலுக்கு எதிர்ப்புகள் கிளம்பலாம். அடிக்கடி கோபத்தை வெளிப்படுத்தினால், 'அவ எப்பப் பார்த்தாலும் அப்படித் தான் கத்துவா, கண்டுக்காதே’ என்று, உங்களின் கோபம் மதிப்பிழந்தும் போகலாம்.

குழந்தைக்கு கோபத்தைக் கற்றுத் தராதீர்கள்!

ரண்டாவது படிக்கும் குழந்தை, கோபத்தில் அறைக்கு சென்று தாழிட்டுக்கொள்வதற்கும், எட்டாவது படிக்கும் பையன், கோபத்தில் வீட்டில் உள்ள மாத்திரைகளை எடுத்துச் சாப்பிடுவதற்கும் காரணம், பெற்றோர்களே! அவர்கள் கோபம் வரும்போது செய்வதைக் கவனிக்கும் குழந்தைகள், தங்களுக்கும் கோபம் வரும்போதே அதையே பின்பற்றுகிறார்கள். எனவே அடுத்த முறை, 'கோபம் வந்தா ரிமோட்டை தூக்கி உடைக்கிறான்’ என்று பையனை குற்றம் சொல்வதற்கு முன், நீங்கள் உடைத்த ரிமோட், மொபைல்களின் எண்ணிக்கையை மனதில் கொண்டு வந்து பாருங்கள்.  கோபத்தைக் கற்றுக் கொடுக்காதீர்கள் குழந்தைக்கு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism