Published:Updated:

பள்ளிகள், உங்கள் குழந்தை சரியான நேரத்தில் சிறுநீர் கழிக்க அனுமதியளிக்கின்றனவா? #GoodParenting

பள்ளிகள், உங்கள் குழந்தை சரியான நேரத்தில் சிறுநீர் கழிக்க அனுமதியளிக்கின்றனவா? #GoodParenting
பள்ளிகள், உங்கள் குழந்தை சரியான நேரத்தில் சிறுநீர் கழிக்க அனுமதியளிக்கின்றனவா? #GoodParenting

பள்ளிகள், உங்கள் குழந்தை சரியான நேரத்தில் சிறுநீர் கழிக்க அனுமதியளிக்கின்றனவா? #GoodParenting

உங்கள் வீட்டில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் இருக்கின்றனரா... அப்படியெனில், இந்தக் கட்டுரையை நீங்கள் அவசியம் வாசிக்க வேண்டும். 

சிறுவர்களிடம் பேசிக்கொண்டிருக்கையில் பள்ளி, வகுப்பறைப் பற்றி நிறையக் கேள்விகளை எழுப்புவேன். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. குழந்தைகள் நம்மிடம் ஒரு விஷயத்தை மறைக்கிறார்கள் என்றால், தொடர்ந்து அவர்களால் அதை மறைக்க இயலாது. விளையாடும் மகிழ்ச்சியில் உண்மையைக் கூறிவிடுவர். அதற்கு நாம் அவர்களைச் சுவாரஸ்யமாகக் கேள்விகள் கேட்பது மிக முக்கியம். நாம் கொஞ்சம் யோசித்துகேட்டாலும், பிள்ளைகள் புத்திசாலியாக நம்மை மடக்கி எதிர்க்கேள்வி கேட்க, வெகு நேரமாகாது.

 கடந்த இரண்டு மாதங்களாகப் பல்வேறு குழந்தைகளிடம் பேசியபோது கிடைத்த செய்திகள் அதிர்ச்சியானதாக இருக்கின்றன. அவற்றில் மிக முக்கியமானது பள்ளியில் சரியான நேரத்துக்குக் குழந்தைகளுக்குச் சிறுநீர் கழிக்க அனுமதி மறுக்கப்படுவதுதான். பெரும்பாலும் ஐந்து வகுப்புகளுக்குக் கீழே உள்ள மாணவர்களே இத்துயரத்துக்கு ஆளாகின்றனர். எல்.கே.ஜி முதல் இரண்டு மூன்றாம் வகுப்பு வரை குழந்தைகளைக் கழிவறைக்கு அழைத்துச்சென்று ஆடைகளை அகற்றி சிறுநீர் கழிக்கச் செய்ய வேண்டும். பின், தண்ணீர் கொண்டு சுத்தம் செய்ய வைத்து மீண்டும் ஆடைகளை அணிவித்து வகுப்புக்குக் கொண்டு வந்து விடும் வரை எல்லாப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

இந்தப் பணிக்கான நபர்கள் பள்ளியில் நியமிக்கப்பட்டிருப்பார்கள். ஆனால், பல மாணவர்கள் கழிவறைக்குச் செல்ல சொல்வதால் பணியாளர்கள் சோம்பல்படுகின்றனர். மேலும், அப்பணிக்கு ஐம்பதுக்கு மேற்பட்டவர்களையே பல பள்ளிகள் பணியில் நியமிக்கின்றனர். அதனால், அவர்களின் இயலாமையும் சேர்ந்துகொள்கிறது. இதனால், குழந்தைகளைக் கழிவறைக்கு அழைத்துச் செல்வதில் சுணக்கம் ஏற்படுகிறது. சிறுநீர் வருவதாகக் கூறும் குழந்தைகளை அடக்கச் சொல்லப்படுகின்றனர்.

மிகச் சில பள்ளிகளில் கடும் சொற்களால் குழந்தைகளை உட்காரச் செய்கிறார்கள். இதனால் மற்ற பிள்ளைகள் தங்களுக்குச் சிறுநீர் வருவதைத் தெரிவிக்கக்கூட அஞ்சுகின்றனர். இன்னும் சில பள்ளிகள், சிறுநீர் கழித்த குழந்தைக்குச் சரியாகச் சுத்தம் செய்யாமல் அப்படியே ஆடையை மாட்டி விடுகின்றனர். இதனால், சிறுநீரில் இருக்கும் உப்புகள் படிந்து, வியாதிகள் பரவும் சூழல் உருவாகிறது. மேலும், பராமரிக்கப்படாத கழிவறைகளின் அசுத்தங்களால் நோய்க்கிருமிகள் குழந்தைகளின் சிறுநீரோடு கலந்து கை, கால்களில் ஒட்டிக்கொள்கிறது. சரியாகக் கையைச் சுத்தம் செய்யாமல், அதே கையை வாயில் வைப்பதாலும் சாப்பிடுவதாலும் தொற்று நோய்கள் ஏற்படுத்துகின்றன. சிறுநீர் கழித்தப்பின் குழந்தைகள் டிராயர், சாக்ஸ் பகுதிகளிலும் ஈரம் பரவச் செய்துகொள்கின்றனர். அதனால், அதன் பின்னான வகுப்பு நேரங்களில் ஈரத்தோடே உட்கார வேண்டியதாகி விடுகிறது. இதனால், குழந்தைகள் காய்ச்சல், ஜலதோசம், இருமல் உள்ளிட்டவற்றால் உடல் நலம் பாதிக்கப்படுகிறது. 

குழந்தைகள் பள்ளிக்குக் கொண்டுசெல்லும் தண்ணீர் பாட்டில்களை அப்படியே, வீட்டுக்குக் கொண்டுவருவதைப் பார்த்திருக்கலாம் அதற்கு முக்கியக் காரணம், 'தண்ணீரை நிறைய குடித்து, பாத் ரூம்க்கு அடிக்கடி போகிறியா?' எனச் சில ஆசிரியர்கள் கூறுவதே. உடலுக்குத் தேவையான அளவு நீர் குடிக்க வேண்டும் எனப் பாடம் நடத்திவிட்டு, நீரைக் குடிக்க விடாமல் செய்வது என்ன விதத்தில் நியாயமோ?

குழந்தைகளுடைய நலனில் போகிற போக்கில் ஆசிரியர்களும், பணியாளர்களும் செய்யும் தவற்றை, பலரும் பெரிதாக எடுத்துக் கொள்வதே இல்லை குழந்தைகள் வீட்டில் இருக்கும் வரை சுத்தமாக இருக்கிறார்கள்; ஒவ்வொரு முறையும் கைக் கழுவி விட்டுச் சாப்பிட வைக்கப்படுகிறார்கள்; கழிவறை சென்றுவந்ததும் கால் கழுவ, ஈரக்கால்களைத் துடைத்துவிட்டு வர பழக்கப்படுகிறார்கள். ஆனால் பள்ளிகளில் சாக்ஸ்களைக் கழட்டி கால் கழுவ வைக்க சாத்தியம் இல்லை குறைந்த பட்சம் அவற்றை நனைக்காமல் இருக்கவாவது பணியாளார்கள் உதவ வேண்டும். ஆனால், பெரும்பாலான பள்ளிகளில் இதற்கெல்லாம் பணியாளார்களுக்கு முறையான பயிற்சிகள் அளிக்கப்படுவதில்லை. அந்தப் பணியாளரைப் பார்த்தாலே பிள்ளைகளுக்குப் பயம் வரவேண்டும் என்றே பல பள்ளிகள் நினைக்கின்றன. அதனால், அவர்களான ஊதியமும் நிறைவான அளவில் அளிக்கப்படுவதில்லை. 

இந்தச் சிக்கலைச் சரிசெய்ய, பெற்றோர்களே முன் வர வேண்டும்.  

பெற்றோர் ஆசிரியர் கூட்டங்களில் இது பற்றிய கேள்விகளைப் பெற்றோர் எழுப்ப வேண்டும். பிள்ளைகள் தொடர்ந்து நோய்த் தொற்றுக்களால் பாதிக்கப்படுகிறார்கள் என்றால் பள்ளிக்கூடத்தின் செயல்களைக் கேட்டறியுங்கள். உங்கள் பிள்ளை படிக்கும் குழந்தைகள் பலருக்கு ஒரே விதமான நோய்த் தொற்று என்றால் பெற்றோர்கள் இணைந்து பள்ளியிடம் முறையிட தயங்க வேண்டாம். வகுப்பறைகளைப் போலக் கழிவறைகளைப் பார்வையிடுவதையும் தவறாதீர்கள்.

குழந்தைகளுக்குக் கல்வி முக்கியம். அதோடு அவர்களின் உடல்நிலையும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் அல்லவா! அதனால், அவர்களின் ஆரோக்கியத்தைச் சீர்குலைக்கும் விஷயங்களின் அடிப்படைக் காரணங்களைக் கண்டறிந்தும் அவற்றைச் சீர் செய்வோம். குறைவில்லா குழந்தை வளர்ப்பை மேற்கொள்வோம். 

அடுத்த கட்டுரைக்கு