Published:Updated:

வனத்தை காப்பவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது? அரசின் கவனத்துக்கு..!

வனத்தை காப்பவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது? அரசின் கவனத்துக்கு..!
வனத்தை காப்பவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது? அரசின் கவனத்துக்கு..!

வனத்தை காப்பவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது? அரசின் கவனத்துக்கு..!

வானிலிருந்து பொழிகிற  மழை  காடுகளை வந்தடைகிறது. மரக்கிளைகளில்  இருந்து சிறு  சிறு துளியாய் நிலப்பரப்பை வந்தடைகிறது. நிலத்தை ஈரமாக்குகிற  அந்த ஒரு துளி  நீர்தான் அந்த ஒட்டு மொத்த காட்டுக்குமான ஆதாரம். ஒரு துளி நீரில் துளிர்த்து செழித்து  வாழ்கிற காட்டை நம்பி காடுகளுக்கு உள்ளேயும் வெளியேயும் ஓராயிரம் ஜீவன்களின் வாழ்க்கை இருந்துக் கொண்டே இருக்கிறது. அப்படியான  காடுகளை பாதுகாக்கவும் காடுகளுக்கு  உள்ளே இருக்கிற ஜீவன்களை  பாதுகாக்கவும் சிலர் வாழ்ந்துக்  கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கைக்காக வனம் கடப்பவர்கள், வனத்திலேயே கிடப்பவர்கள் பற்றிய அவர்களின் கதைகள் அவ்வளவாக எங்கும் சொல்லப்படவில்லை. சில விஷயங்களை  அவ்வளவு எளிதில்  சொல்லிவிடவும் முடிவதில்லை.

வனத்துறையின் கடை நிலை ஊழியர்களுக்கு பெயர் வேட்டை தடுப்புக் காவலர்கள். தமிழ்நாட்டில் பதினேழு மாவட்டங்களில் இருக்கிற காடுகளில்  வேட்டை தடுப்புக் காவலர்கள் தங்களின் பணிகளை செய்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள காடுகளுக்குள் சென்று  மரம் வெட்டி கடத்துவது, விலங்குகள் வேட்டையாடுவது, கள்ள சாராயம் காய்ச்சுவது என காடுகளுக்குள்  சமூக விரோத செயல்கள் எதுவும்  நடைபெறாமல் காடுகளை காப்பதுதான்  இவர்களது வேலை. வனம்  தாண்டும் விலங்குகளை மீண்டும் வனத்திற்குள் விரட்டுவது, ஆபத்தில் சிக்குகிற விலங்குகளை மீட்பது என வனத்திற்கு வெளியேவும் இவர்களின் வேலை தொடர்கிறது.  வனத்துறையில் வனத்துறை அதிகாரி, வன காப்பாளர்கள், வனக்காவலர், வன அலுவலர்கள்  என இருந்தாலும் காடுகள் குறித்த அனைத்து தகவல்களையும் விரல்  நுனியில்  வைத்திருப்பவர்கள் வேட்டை தடுப்புக் காவலர்கள்தான். மழை, வெயில், குளிர் என எல்லா காலநிலைகளிலும் காடுகளுக்குள் ரோந்து செல்கிறவர்களுக்கு ஆயுதங்கள் என எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை. அட்டைகளின் தொல்லை விலங்குகளின் அச்சுறுத்தல் என எதைப்  பற்றிய கவலைகளும் இல்லாமல் பணி  செய்கிறவர்களை வனத்துறை எந்த நேரத்திலும் முன்னிறுத்தியதே இல்லை. காரணம் வேட்டை தடுப்புக் காவலர்கள் இப்போது வரை ஒப்பந்த தொழிலாளர்களாகத்தான் பணி  புரிந்து வருகிறார்கள்.

இது குறித்து தென்தமிழகத்தில்  வேட்டை தடுப்புக் காவலராக இருக்கும் ஒருவரிடம் பேசியதில் “பத்து வருசமா நா இந்த வேலைய செஞ்சிட்டு வரேன். காடுகள் மேல இருந்த ஈர்ப்பு காரணமாகத்தான் இந்த வேலைக்கு வந்தேன். காட்டுக்குள்ள போனா திரும்பி வர அஞ்சு நாளுக்கு மேல ஆகும், பத்துல இருந்து பதினைஞ்சி கிலோமீட்டர் வர காட்டுக்குள்ள போக வேண்டி வரும். காலைல ஏழுமணிக்கு சாப்டுட்டு ஒரு வேல சாப்பாட்ட  கட்டி எடுத்துட்டு போயிடுவோம், பொழுது சாயிர  நேரத்துக்குள்ள பாதுகாப்பான இடத்துக்கு போய்டணும். நாலு நாளுக்கான உணவு பொருளை மூட்டையா கட்டி ஆளுக்கு ஒரு பொருளை எடுத்துக்குவோம்.  காட்டுக்குள்ள போனா எல்லா இடத்துலயும் தங்க முடியாது,  ஆத்து ஒரத்துலத்தான் தங்க முடியும், போற இடத்துல டென்ட், செட் எதுவும் எதிர்பாக்க முடியாது . பூச்சி, பாம்பு, தேளு, அட்டைனு நெறய பிரச்சனை இருக்கும். காட்டுவாசி மாதிரியான ஒரு வேலையைத்தான் பாத்துட்டு இருக்கோம், காட்டுக்குள்ள சமூக விரோத செயல் எதுவும் நடக்குதானு பாத்துட்டே இருக்கணும், பாதுகாப்புன்னு ஒரு விஷயம் எங்களுக்கு இது வரையும் இல்ல.

வேலை நேரத்துல ஏதாச்சும் விபத்து  நடந்தா அதற்கான காப்பீடுகளும் கொடுக்குறது   இல்ல.  பணி  நிரந்தரம் செய்ய சொல்லி இப்போ வரைக்கும் போராடிட்டுத்தான் இருக்கோம் ஆனா இது வரைக்கும் பண்ணல. 2008 வேலைக்கு சேரும் போது  2000 ரூபா சம்பளம், இப்போ 6750  இந்த வேலைய விட்டுட்டு இப்போ நான் வெளி வேலைக்கு போனா கூட என்னால 20000 சம்பாதிக்க முடியும். வீட்ல எல்லாரும் பத்து வருஷம் வாழ்க்கையை வேஸ்ட் பண்ணிட்டனு  சொல்லி திட்டுவாங்க. என்னை விட அதிக பிரச்சனைகளை சந்திக்க கூடியவர்கள்  இந்த வேலைல நெறய பேர் இருக்காங்க. எல்லாருமே காடு குறித்த ஆர்வத்தில் வந்தவங்கதான். காடுகளை நேசிப்பதாலதான் என்னால இவ்வளவு சிரமத்திலும்  தொடர்ந்து  வேலை செய்ய முடியுது.  எனக்கு இந்த வேலை பிடிச்சிருக்கு. காடு பிடிச்சிருக்கு.  இந்த வேலை நான் விரும்பிய  ஒரு வாழ்க்கையை  நிச்சயம் ஒருநாள்  எனக்கு தரும்.” என்கிறார்.


இருப்பதில் மிகவும் சிரமமான  இடமாக களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அமைந்திருக்கின்ற   கேரளா தமிழ்நாடு எல்லையை சொல்கிறார்கள்.  மலை உச்சியில் இருக்கிற எல்லையில்  பகல் இரவு என எல்லா நேரங்களிலும் மழை  பெய்யும் இந்த இடத்தில முகாம் அமைத்து காவலில் இருப்பது சவாலான விஷயமாக இருப்பதாக சொல்கிறார்கள்.  கவனிக்காமல் விடப்படுகிற இடங்களில் சமூக விரோதிகள் கஞ்சா செடியை பயிரிட்டு விடுகிறார்கள் என்கிறார் ஒரு காவலர். பதினைந்து வருடங்களுக்கு முன்பு வன அதிகாரிகள் வனம் சார்ந்த தகவல்களை  பெறுவதற்கு வன எல்லையோர இளைஞர்களை பயன்படுத்தி இருக்கிறார்கள். வேலை வாங்கி தருகிறேன் என்கிற பொய் வாக்குறுதியில் ஈர்க்கப்பட்ட இளைஞர்கள் இப்பணியில் சேர்ந்திருக்கிறார்கள். முதலில் இன்பார்மர் ஆக இருக்கிற இளைஞர்களுக்கு நாளடைவில் வன சீருடை கிடைப்பதால் கிடைத்த வேலையை அப்படியே தொடர்கிறார்கள். வேலை என்று வந்த பிறகுதான் அதில் இருக்கிற பிரச்சனைகள் தெரிய வருகிறது. வேலையே விட்டு வெளியேறிவிட முடியாத சூழலும் நிலவுகிறது. வேலையில் இருக்கும் போது  ஊர் சார்ந்த அநேக மக்கள் மீது வனம்  சார்ந்த நிகழ்வுகளில் நடவடிக்கை எடுத்து வெறுப்பை சம்பாதித்து வைத்திருக்கிறார்கள். “ஒரு நாள் வேலை இல்லாம இருக்கும் போது  உன்னை கவனிச்சிக்கிறேன்” என்கிற மிரட்டலுக்கு பயந்தும் வேலையை தொடர்கிறவர்களும் இருக்கிறார்கள்.

திருப்பூர் மாவட்டத்தில்  பதினைந்து வருடங்களாக இப்பணியில் இருக்கும் ஒரு காவலரிடம் பேசியதில் “ வனத்துறையில் சுற்று சூழல் காவலர்கள், யானை விரட்டும் காவலர்கள், புலிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கும் காவலர்கள், வனவிலங்குகளை கணக்கெடுக்கும் காவலர்கள், கம்பி இல்லா கருவி இயக்குனர், ஓட்டுநர், என வனத்துறையில் 75 சதவீத  காலியிடங்கள் இருக்கு.  இந்த காலியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதால் அனைத்து வேலைகளையும் வேட்டை தடுப்புக் காவலர்களே செய்யும் சூழல்தான் இங்க இருக்கு. காடுகளில் ஏற்படுகிற  தீ அணைப்பில் தொடங்கி  ஆள் போக முடியாத இடங்களில் இறந்து போகிற விலங்குகளுக்கு பிரேத பரிசோதனை செய்வது வரை அனைத்து வேலைகளையும் நாங்கதான் செய்கிறோம்.இறந்து போன விலங்கை உடற்கூறு செய்து கால்நடை மருத்துவர் சொல்கிற உடல்பகுதிகளை வெட்டி எடுத்துட்டு வந்துருவோம். காடுகளுக்குள் அத்து மீறி போய்  செய்கிற சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு எதிராக வழக்கு தொடுத்து ஜெயிலில் அடைக்கிற  வரை  அவர்களுக்கு காவலாக இருப்பதும் நாங்கதான். ஆனால் செய்தித்தாள்களிலோ அலுவலகம் தொடர்பான செய்திகளிலோ எங்களின்  பெயர் வரவே வராது, விடுமுறையில் இருக்கிற அதிகாரிகளின் பெயரில் வரும் போது  அவ்வளவு வெறுப்பா இருக்கும். மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகே சம்பளம் இப்போது 10000 உயர்த்தியிருக்கிறார்கள்”  என்கிறார்.

சில மாதங்களுக்கு முன்பு கோவையில் யானைத் தாக்கி படுகாயமடைந்த வேட்டை தடுப்புக் காவலருக்கு மருத்துவ  சிகிச்சைக்கு உதவி செய்யும் படி ஓய்வு பெற்ற  வன அலுவலர் ஒருவர்  பேஸ்புக்கில் பதிவு செய்திருந்தார். உதவிகள் கிடைத்து வேட்டை தடுப்புக்  காவலர் காயத்திலிருந்து மீண்டு வந்திருக்கிறார். அதே நாளில்  யானைத் தாக்கி உயிரிழந்த குடும்பத்திற்கு 4 லட்சம் வழங்கிய அரசு காயம்பட்ட காவலருக்கு எதுவும் செய்யவில்லை என்பதுதான் மிகப்பெரிய வேதனையாக இருக்கிறது.   இருக்கிற அனைத்து  இடர்பாடுகளையும் கடந்துதான் வேட்டைத்தடுப்பு காவலர்கள் பணி புரிந்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கேட்பதெல்லாம் பணி நிரந்தரமும் பாதுகாப்பும்தான்.  இயக்குனர்  ராஜு முருகன் இப்படி  எழுதி இருப்பார் “பசியைத் தீர்ப்பது ஒரே ஒரு கனிதான். ஆனால், அதற்காக நாம் கடப்பது ஒரு வனம்!”  என்று.  அந்த ஒரு வரி எல்லா மனிதர்களுக்கும் எல்லா வேலைகளுக்கும் எல்லா காலங்களிலும் பொருந்தி போவதுதான் விந்தையாக இருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு